அனுமன் வளர வளர அற்புதங்கள் பல செய்தார். பிறகு அவருக்கு ராமபிரானின் அறிமுகம் கிடைத்தது. சீதையை மீட்க அனுமன் மிகப்பெரும் உதவியாக இருந்தார். நாடு திரும்பிய ராமன், அனுமனை அழைத்து, "உலகில் உனக்கு நிகர் யாரும் இல்லை.
அத்தகைய ஆற்றல் மிகுந்தவன் நீ, அசோக வனத்தில் சீதையைக் கண்டு வந்து நற்செய்தி சொல்லி சோகத்தில் ஆழ்ந்திருந்த என்னை மகிழ்வித்ததற்கு நான் என்ன செய்யப் போகிறேன்... பரந்த தோளை உடையவனே! என்னை ஆலிங் கனம் செய்து கொள்" என்றபடி தன் மார்பை அனுமனுக்குக் கொடுத்தார். அனுமன் தலை குனிந்து பணிவுடன் நின்றார்.
ராமன் அனுமனுக்கு உயர்ந்த மாலைகளையும், பட்டாடைகளையும், யானைகளையும், குதிரைகளையும் பரிசாக வழங்கினார். முடிசூட்டு விழா முடிந்ததும் அனைவரும் தத்தம் ஊருக்குச் செல்ல ராமனிடம் விடை பெற்றுக் கொண்டனர். பல ஆண்டுகள் ஆட்சி செய்த பின்னர் ராமாவதார நோக்கம் நிறைவேறியதும் ராமன் சராசரங்களை ஏற்றிக் கொண்டு சென்றார்.
ஆனால் அனுமன் மட்டும் அங்கு போக விரும்பவில்லை. ராம சத்தம் உலகில் நடமாடும் வரையில் தான் உயிருடனிருந்து ராம கதாகாலட்சேபங்களை ஆனந்தமாய்க் கேட்டு அனுபவித்துக் கொண்டிருக்க அனுமதி வேண்டினார். "அப்படியே ஆகட்டும் என ராமனும் அருள் செய்தார். ராமனிடம் விடைபெற்று அமைதியான சூழ்நிலையில் ராம தியானத்தைச் செய்ய அனுமன் இமயமலையை அடைந்தார்.
இன்றும் அனுமன் ராம தியானத்திலும் ராமநாம சங்கீர்த்தனத்திலும் ஆழ்ந்து ஆனந்தப்பட்டு சிரஞ்சிவியாய் வாழ்ந்து கொண்டிருக்கிறார். அனுமனை மனத்தில் நினைப்பவர்கள் இம்மையில் சர்வ காரிய சித்தி பெற்று ஆரோக்கிய பலத்துடன் வாழ்வதுடன் மறுமையில் ராமன் அருளால் முக்தியும் அடைவர் என்பது பக்தர்களின் நம்பிக்கையாக உள்ளது.
உடல் வலிமைக்கு உருவமாக அனுமன் கருதப்படுகின்றார். உடல் வலிமையை பெருக்க விரும்புபவர்கள் அனுமனை வழிபட்டால் பலன் கிடைக்கும். மார்கழி மாத அமாவாசை அன்று அனுமன் ஜெயந்தியாக கொண்டாடுகிறார்கள்.
எனவே வரும் ஞாயிற்றுக்கிழமை பளிங்குபோல் களங்கமற்ற மனமுடையவனும், பொன்னிறமுடையவனும், கரங்கூப்பி வணங்கிக் கொண்டிருப்பனும், குண்டலங்களால் ஒளிவிடும் முகத்தை உடையவனுமாகிய, அஞ்சனை மைந்தன் அனுமனை வழிபட்டால், மக்கள்பேறு, புகழ், கல்வி, செல்வம் போன்றன பெறலாம்.
No comments:
Post a Comment