ஆலிலை மேல் பள்ளிகொண்ட பெருமாள் தன் நாபிக் கமலத்தில் இருந்து பிரம்மனைப் படைத்தார். அப்போது பிரம்மனுக்கு அகங்காரம் மேலிட்டது. அதே வேளையில் பகவானின் காதுகளில் இருந்து இரண்டு அசுரர்கள் வெளிப்பட்டார்கள். அகம்பாவம் பிடித்த பிரம்மனை அப்போதே கொல்ல முயன்றார் கள். பெருமாள் அவர்களைத் தடுத்து ''பிரம்மனைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கு வேண்டிய வரத்தை நானே தருகிறேன்'' என்றார்.
கொஞ்சம் இறங்கி வந்தால், அது தெய்வமாகவே இருந்தாலும் அலட்சியப்படுத்துவது என்பது அசுரர் களின் சுபாவம் போலிருக்கிறது. அசுரர்கள் அலட்சிய மாக, ''நீ என்ன எங்களுக்கு வரம் கொடுப்பது? நாங்கள் உனக்கே வரம் தருவோம்'' என்றார்கள்.
ஸ்வாமி சிரித்தார். ''அப்படியா? சரி! இப்படி அகங்காரம் கொண்ட நீங்கள் என்னால் வதம் செய்யப்பட வேண்டும். அதன் பிறகு ராட்சசர்களாகவே பிறக்க வேண்டும்'' என்றார்.
அசுரர்கள் திகைத்தார்கள். ''ஸ்வாமி! தாங்கள் இவ்வாறு எங்களுக்குத் தண்டனை அளிக்கக் கூடாது. தங்களோடு ஒரு மாத காலம் நாங்கள் சண்டையிட வேண்டும். அதன் பிறகு தங்களுடைய அருளினால் நாங்கள் ஸித்தி அடைய வேண்டும்'' என வேண்டினார்கள்.
அவர்கள் வேண்டியபடியே ஒரு மாத காலம் போரிட்டு, பிறகு அவர்களை வதைத்தார் பெருமாள். இறுதியில் மகாவிஷ்ணுவின் குணங்கள் எல்லாவற்றையும் உணர்ந்த அசுரர்கள், ''தெய்வமே! தங்கள் பரமபதத்தில் நாங்கள் நித்திய வாசம் செய்ய வேண்டும்'' என வேண்டிக் கொண்டனர். ஒரு மார்கழி மாதம், வளர்பிறை ஏகாதசியன்று (பரமபதத்தின்) வடக்கு நுழைவாயிலைத் திறந்த பகவான், அதன் வழியாக அசுரர்களை பரமபதத்தில் சேர்த்தார்.
அங்கே ஆதிசேஷன் மேல் இருக்கும் அனந்தனின் திவ்விய மங்கல வடிவம் கண்டு பரம ஆனந்தம் அடைந்தனர் அசுரர்கள்.
''ஸ்வாமி! பிரம்மா முதலான எல்லோருக்கும் பகவானான தங்களை அர்ச்சாவதாரமாக (விக்கிரக வடிவமாக)ப் பிரதிஷ்டை செய்து, மார்கழி மாத வளர்பிறை ஏகாதசி அன்று, தாங்கள் எங்களுக்குச் செய்த அனுக்கிரகத்தை உற்சவமாகக் கடைப்பிடிக்க வேண்டும். அன்று (கோயிலில்) வடக்கு நுழைவாயில் வழியாக வெளியே எழுந்தருளும் தங்களை தரிசிப்பவர்களும், தங்களுடன் வடக்கு நுழைவாயில் வழியே வெளியே வருபவர்களும், அவர்கள் எவ்வளவு பெரும் பாவிகளாக இருந்தாலும், மோட்சம் அடைய வேண்டும். இதுவே எங்கள் பிரார்த்தனை!'' என்று வேண்டினார்கள்.
''அப்படியே ஆகட்டும்!'' என அருள் புரிந்தார் அச்சுதன். 'வைகுண்ட ஏகாதசி அன்று வைகுண்டவாசனை தரிசிப்பவர்கள் அனைவருக்கும் மோட்சம் கிடைக்க வேண்டும்’ என நமக்காக அன்றே அசுரர்கள் வேண்டி இருக்கிறார்கள். ஒப்பில்லாத ஸ்வாமியும் அதற்கு ஒப்புதல் தந்திருக்கிறார்.
எனவே, வைகுண்ட ஏகாதசி தினத்தில் இல்லத்தில் விரதம் இருந்து வழிபடுவதுடன் பெருமாள் கோயில்களில் சொர்க்கவாசல் திறப்பு வைபவத்தில் கலந்துகொள்வதாலும், பெருமாளைத் தரிசித்து வழிபடுவதாலும் இம்மை செழிக்கும்; மறுமை சிறக்கும். சகல செளபாக்கியங்களும் ஸித்திக்கும்.
No comments:
Post a Comment