Search This Blog

Friday, March 27, 2015

நான் முஸ்லிம் இல்லை என்னை அவ்வாறு அழைக்க வேண்டாம்(முழுக்கட்டுரை)


தஸ்லிமா நஸ்ரின் அண்மையில் தி ஹிந்து(The Hindhu) ஆங்கில நாளிதளின் செய்தியாளர் சுவோஜித் பக்ஸியிக்கு வழங்கியிருந்த பேட்டி சர்வதேச அரங்கில் பலரது கவனத்தையும் ஈர்த்திருந்ததோடு, சர்வதேச ஊடகங்களிலும் பாரிய வாதிப் பிரதிவாதங்களைத் தோற்றுவித்து வருகின்றமையும் யாவரும் அறிந்ததே. குறித்த பேட்டியில் தஸ்லிமா நஸ்ரின், நாத்திகரான படுகொலை செய்யப்பட்ட அவிஜித் ராய் பற்றியும் பலதரப்பட்ட கருத்துக்களை முன்வைத்திருந்தார்.
தஸ்லிமா நஸ்ரின் என்பவர் யார்?
-----------------------------------------------------
தஸ்லிமா நஸ்ரின் வங்க தேசத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளர்களில் ஒருவராவார். 1994ஆம் ஆண்டு முதல் தான் எழுதிய லஜ்ஜா என்ற நாவலுக்காக இஸ்லாமிய அடிப்படைவாதிகளால் தொடர்ந்தேர்ச்சையான அச்சுறுத்தளுக்காளாகி வருகிறார். லஜ்ஜா என்பதன் தமிழ் பதம் அவமானம் என்பதாகும். இந்நூலில் இஸ்லாமிய ஷரீஆவுக்கு முரணான பல விடயங்களை குறிப்பிட்டு எழுதியிருந்தமையே இவ்வச்சுறுத்தலுக்கான முக்கிய காரணமாக கருதப்படுகிறது. இதனால் தனது குடியுரிமையை இழந்து சொந்த தேசத்தை விட்டு நாடுகடத்தப்பட்டார். குறிப்பிட்ட 20 வருடங்களில் இந்தியா, அமெரிக்கா, ஐரோப்பா உள்ளிட்ட நாடுகளில் குடிபெயர்ந்து வாழ்ந்து வருகிறார். வங்க தேசத்தின் இஸ்லாமிய பெண் சமூகத்தைச் சேர்ந்த பெண் எழுத்தாளரான தஸ்லிமா நஸ்ரின் இஸ்லாத்துக்கு மாற்றமான இழிநிலை கருத்துக்களை தனது நூலில் குறிப்பிட்டு எழுதியமையாலேயே இந்த நிலைக்கு ஆளாக்கப்பட்டுள்ளார்.
எழுத்தாளர் அவிஜித் ராய் என்பவர் யார்?
--------------------------------------------------------------
இவரும் தஸ்லிமா நஸ்ரினைப் போன்று வங்கதேச எழுத்தாளரே. கடந்த பெப்ரவரி மாதம் தனது சொந்த நாட்டில் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியொன்றுக்கு சென்ற வேளை இனம் தெரியாத குறிப்பிட்ட குழுவினரால் படுகொலை செய்யப்பட்டார். இவரும் இஸ்லாத்துக்கு முரணான கருத்துக்களை தெரிவித்து வந்த நிலையிலேயே இவ்வாறு சுட்டுக் கொள்ளப்பட்டிருந்தார்.
எழுத்தாளர் அவிஜித் ராய் 'இஸ்லாமியர்கள் தீவிரவாதம் மிக்கவர்கள்' என்ற ஒற்றைக் கோட்பாட்டில் தனது நாத்திக கருத்துக்களை தொடர்ந்தேர்ச்சையாக தனது வலைப்பூவில் எழுதி வந்தவர் என்பதோடு நாத்திகர்களின் எழுத்துக்களை பெரும்பாலான பத்திரிகைகள் புறக்கணிப்பதைத் தொடர்ந்து இவர் முக்த்- மோனா என்ற வலைப் பூவை ஏற்படுத்தினார். அதில் அனைத்து மதம் உட்பட, குறிப்பாக இஸ்லாம் மார்கத்தின் மத கோட்பாடுகள் குறித்து பல்வேறு பட்ட கேள்விகளை எழுப்பினார். அந்த வலைத்தளத்தில் பதிலளிக்கவும் இடம் அமைத்துக் கொடுக்கப்பட்டிருந்தது. அதில் அளிக்கப்பட்ட சகல பதில்களையும் ஒன்றினைத்து புத்தகங்களாகவும் வெளியிட்டிருந்தார்.
அவிஜித் ராய் ஒரு அறிவியல் எழுத்தாளர், சிந்தனையாளர், நாத்திகவாதி மற்றும் பகுத்தறிவை மாத்திரம் கொண்ட சிந்தனைகளைக் கொண்டவராக அறிப்பட்டிருந்தார். அவிஜித் ராய் அனைத்து விடயங்களையும் விவாதங்கள் மற்றும் அணுகுமுறையுடனும் தீர்வுகாண முற்பட்டார்.
இவரது படுகொலையை அடுத்தே இவர் பற்றிய அதிக பட்ச கருத்துக்களை தஸ்லிமா நஸ்ரின் தெரித்திருந்திருந்தார்.
வங்கதேசம் மொழி அடிப்படையான நாடா அல்லது மத அடிப்படையிலான நாடா?
-----------------------------------------------------------------
தஸ்லிமா நஸ்ரின் தி ஹிந்து (The Hindhu) ஆங்கில நாளிதளின் செய்தியாளர் சுவோஜித் பக்ஸியிக்கு வழங்கியிருந்த பேட்டியில் பல்வேறு பட்ட கருத்துக்களை தெரிவித்திருந்தார். 1980 ஆம் ஆண்டு காலப்பகுதியில் ஜெனரல் ஹூஸைன் முஹமது எர்ஷத் தலைமையிலான ஆட்சியின் போது வங்க தேசத்தை இஸ்லாமிய நாடாக பிரகடனம் செய்வதற்காக மத சார்பற்ற அரசியலமைப்பு சட்டம் கைவிடப்பட்டது.
தொடர்ந்து இஸ்லாமிய கலாசாரத்துக்கு மக்கள் தங்களை முழுமையாக மாற்றம் செய்து கொண்டிருந்தனர். அரசியலமைப்பு சட்டம் கைவிடப்பட முன் பெண்கள் புர்கா அணிவது அரிதாகவே இருந்தது. அந்த சமூகத்தின் சூழ்நிலை இப்போது முழுமையாக மாற்றமடைந்து விட்டது. பெண்கள் புர்கா அணிவதை அவர்கள் அவர்களுக்குப் பாதுகாப்பானதாகவே கருதுகிறார்கள்.
தஸ்லிமா நஸ்ரின் இந்த யாப்பு மாற்ற விடயத்தில் தெரிவித்த கருத்தின் பிரகாரம், அப்போது நான் எழுதிய நாத்திக சிந்தனைக் கருத்துக்கள் பத்திரிகைகளில் பிரபல்யமாக வெளியிடப்பட்டன. இப்போது அந்த நிலை இல்லை. புறக்கணிப்பு நிலையே மிஞ்சியிருக்கிறது. கருத்துச் சுதந்திரம் என்பது இப்போது அந்நிய சொல்லாகி விட்டது எனக் குறிப்பிட்ட பேட்டியில் தெரிவித்துள்ளார்.
மட்டுமன்றி, 1994 இல் தான் வங்க தேசத்தை விட்டு வெளியேற்றப்பட்ட போது ஒட்டு மொத்த சமூகமும் அமைதியாக இருந்தது. அப்போதே அவர்கள் குரல் எழுப்பியிருந்தால் இப்போது அவிஜித் ராய் போன்ற எழுத்தாளரை நாம் இழந்திருக்க மாட்டோம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.
வங்கதேசம் மத ரீதியான நாடா மொழி ரீதியான நாடா என்பதுதான் இப்போதைய பிரச்சினை. 1952 வரை வங்காள இஸ்லாமியர்கள், கிறிஸ்தவர்கள், இந்துக்கள், புத்த மதத்தினர் என அனைவரது விருப்பமும் தங்களது மொழி வங்காளமாக இருக்க வேண்டும் என்பதுதானே தவிர, உருது மொழிக்கு விருப்பம் கொள்ளவில்லை. பாகிஸ்தான் இராணுவத்துடன் சேர்ந்து எங்களது சுதந்திரத்துக்கு முட்டுக்கட்டையிட்டவர்களே தற்போது வங்கதேசத்தை இஸ்லாமியமயமாக்குகின்றனர். மதசார்பற்ற கல்வியே இந்த சமூகத்திற்கு தேவையே தவிர மதரஸாக்களின் போதனைகள் அல்ல. மதபிரிவினைவாதிகளின் இருப்பிடமாக வங்கதேசம் மாறுவதை நாம் ஒரு போதும் அனுமதிக்கக்கூடாது என்றார்.
உண்மையில் சொல்லப் போனால் மதரீதியான போதணைகளே மனிதனை இன்று வளப்படுத்திக் கொண்டிருக்கிறது. சீரான பாதையில் வழி நடாத்திக் கொண்டிருக்கிறது. இதில் மாற்றுக் கருத்தாடல்களுக்கு இடமில்லை. 1400 வருடங்களுக்கு முன்பே அல்குர்ஆனில் தெட்டத் தெளிவாக குறிப்பிடப்பட்டுள்ள பல விடயங்கள் இன்றைக்கு படிப்படியாக கண்டு பிடிக்கப்பட்டு அல்குர்ஆன் கூறியுள்ள விடயங்கள் அத்தனையும் உண்மை என்பதை நிரூபணம் செய்யும் வகையில் அமைந்திருக்கிறது. அதற்கு ஏகப்பட்ட அத்தாட்சிகளும் சான்றுகளும் இவ்வுலகில் பரந்Nது கிடக்கின்றன.
நான் ஒரு முஸ்லிம் இல்லை
---------------------------------------------------
தஸ்லிமா நஸ்ரின் வங்க தேசத்தின் இஸ்லாமிய பெண் சமூகத்தைச் சேர்ந்த எழுத்தாளர்களில் ஒருவராவார். தஸ்லிமா நஸ்ரினின் எழுத்துக்களில் இஸ்லாம் மார்க்கம் மேற்கத்திய சிந்தனையுடன் அமைந்திருப்பதாகவே பார்க்கப்படுகிறது. இது குறித்து தி ஹிந்து பத்திரிகையின் செய்தியாளர், உங்களுடைய எழத்துக்களில் இஸ்லாமியம் மேற்கத்திய சிந்தனை அடிப்படையில் இருப்பதாகவே பார்க்கப்படுகிறதே? இதற்காக மேற்கத்திய நாடுகள் உங்களுக்கு அழுத்தம் தருகிறதா என வினாத் தொடுத்தார்.
அதற்கு தஸ்லிமா நஸ்ரின் பின்வருமாறே பதிலளித்தார்.
இஸ்லாமியர்களுக்கு சுயசிந்தனை இருக்கக் கூடாதா? இஸ்லாமியத்தை அந்த மதத்தைச் சேர்ந்தவர்களே எதிர்க்கக் கூடாதா? மதத்தை விமர்சனம் செய்வதற்கு முஸ்லிம் அல்லாத அறிவு ஜீவிகள்தான் தகுதி படைத்தவர்களா? இதுவே முஸ்லிம்களுக்கு எதிரான ஒரு கூற்று என பதிலளித்துள்ளார்.
நான் அனைத்து மதங்களையும் எதிர்க்கிறேன். குஜராத்தில் இஸ்லாமியர்கள் கொள்ளப்பட்ட போதும் எதிர்த்தேன். இந்து மத சாமியார்களையும் எதிர்த்தேன். வங்கதேசத்தில் இந்துக்கள் மீது அடக்குமுறை நடந்த போதும் எதிர்த்தேன். கிறிஸ்தவர்கள் மீது பாகிஸ்தானில் தாக்குதல் நடாத்தப்பட்ட போதும் எதிர்த்தேன். 'பீகே', 'வாட்டர்', 'தி லாஸ்ட் டெம்டேஷன் ஆஃப் க்ரைஸ்ட்' போன்ற படங்களின் எதிர்ப்பையும் எதிர்த்தேன்.
அரசுதான் அடிப்படைவாதத்தை வலுப்படுத்துகிறது. மத வெறியர்கள் மீது நடவடிக்கை எடுக்காமல் என் மீது நடவடிக்கை எடுக்கிறது. அரசுதான் வீணாக என் மீது குறி வைக்கிறது என்று தஸ்லிமா நஸ்ரின் குறித்த பேட்டியில் இவற்றை தனது கருத்தாக முன்வைத்துள்ளார். மேலும், என்னை முஸ்லிம் என்று அழைக்காதீர்கள். நான் ஒரு முஸ்லிம் இல்லை. நான் ஒரு நாத்திகர் என்று குறிப்பிட்டுள்ளார்.
இஸ்லாமிய தீவிரவாதிகளை நியாயப்படுத்தினால் வங்கதேசம் மிகப்பெரிய அழிவை சந்திக்கும். இப்போது இருக்கும் நிலையில், இந்தப் பிரச்சினை தீரப் போவதாகத் தெரியவில்லை. எதிர்காலத்திலும் மென்மேலும் அதிகரிக்கும் என்றே தோன்றுகிறது எனத் தெரிவித்துள்ளார்.
எது எவ்வாறாயினும் தஸ்லிமா நஸ்ரின் எழுதிய லஜ்ஜா என்ற நாவல் இன்றும் கூட பல்வேறுபட்ட அதிர்வலைகளைத் தோற்றுவித்த வண்ணமே உள்ளது. அவரது எழுத்துக்கள் ஷரீஆவுக்குப் பொறுத்தமற்றதொன்றாகவே பார்க்கப்படுகிறது. லஜ்ஜா என்ற நாவல் பங்களாதேஷிலும், அதைத் தொடர்ந்து இலங்கையிலும் தடை செய்யப்பட்டது. இலங்கையின் பெண்ணிலைவாதி குமாரி ஜெயவர்தன இந்நாவலின் தடை நீக்கப்பட வேண்டும் என தெரிவித்திருந்தமையும் இங்கு சுட்டிக் காட்டத்தக்க ஒன்றாகும்.
இந்நாவலின் வருகையைத் தொடர்ந்து தஸ்லிமா நஸ்ரின் கொலை அச்சுறுத்தலுக்குள்ளாக்கப்பட்டார். இதைத் தொடர்ந்து சல்மான் ருஷ்டி, சுமித்சக்கரவத்தி, குந்தர் கிராஸ், முல்க்ராஜ் ஆனந்த், மரியா வர்கஸ் லோஸா போன்றோர் தஸ்லிமா நஸ்ரினுக்கு ஆதரவாகக் குரல் கொடுத்தனர். இவர்கள் தஸ்லிமா நஸ்ரினுக்கெதிரான கொலை மிரட்டலைக் கண்டித்த போதிலும் ஆஸ்கர் அலி என்ஜினியர் போன்ற இடதுசாரி இஸ்லாமியக் கோட்பாளர்கள், படைப்பாளி எனும் அளவில் தஸ்லிமாவின் இந்நாவல் குறித்த விமர்சனப் பார்வையை நிராகரிக்கவே செய்கிறார்கள்.
.
நசார் இஜாஸ்
27.03.2015

No comments:

Post a Comment