Search This Blog

Friday, March 6, 2015

பிரம்மமுனி அருளிய இஞ்சி லேகியம்


அவலேஹம் என்கிற சமஸ்க்ருதச் சொல்லே மருவி 'லேகியம்' என்றானது. தமிழில் இதனை இளகல் அல்லது இளகம் என்று அழைப்பர். பொதுவில் லேகியம் என்பவை கெட்டியான குழம்பு போல இல்லாமல் சற்றே இறுகிய நீர்ம நிலையில் இருக்கும்.
இவ்வாறு நீர்ம நிலையில் தயார் செய்யப்படும் லேகிய வகைகளில் ஒன்றான "இஞ்சி லேகியம்" தயாரிக்கும் முறையினை இன்றைய பதிவில் பார்க்க இருக்கிறோம். இந்த தகவல் பிரம்மமுனி அருளிய “பிரம்மமுனி வைத்திய சாரம்” எனும் நூலில் இருந்து சேகரிக்கப் பட்டது.

சொல்லவே இஞ்சி லேகியத்தைக் கேளு
தோல்போக்கிப் பலம்பத்து நிறுத்துக் கொண்டு
பல்லவே பழச்சாற்றில் லாட்டி மைபோல்
மைந்தனே சட்டியிலே இட்டுக் கொள்ளே
அல்லவே சீரகமுமிள கோடே லமும்
அதிமதுரந் திப்பிலியும் கோஷ்டமூலம்
கல்லவே வாலுழுவை தாளிச்சப் பத்திரியுங்
கடுகொடு கொத்தமல்லி சித்திர மூலம்

பல்லவே சிங்கியொடு குரோசாணி ஓமம்
அப்பனே வகைவகைக்கு அரைப்பலம் தூக்கே
தூக்கியே கரிசாலை பூவரசம்பட்டை சாற்றால்
துவளையரைத்து முன்மருந்தோ டொக்கச் சேரு
ஊக்கமாம் பிரண்டையது மோரிலுப் பிட்டு
ஊறி உலர்த்திடித்து ஒருபலமே போடு
ஆக்கவே வங்காள சர்க்கரை யப்பா
அதில்பாதி போட்டபின்னே நெய்யை வாரே
நெய்வார்த்து லேகியமாய் பண்ணிக் கொண்டு
நேரமொரு பாக்களவு அந்திசந்தி கொள்ளு
பொய்யல்ல பித்தவாய்வு உஷ்ண காந்தி
பிரட்டல் சத்திவலி குன்மம் பித்தகுன்மம்
மெய்யான அஸ்திசுரம் சன்னி தோசம்
வீறான எரிகுன்மம் சீரண வாதஞ்
செய்யவே உப்பீசமும் அரோசிகமுந் தீரும்
தீவனமாம் பசியறிந்து சீராய்க் கொள்ளே
தோல் நீக்கிய இஞ்சி பத்துப்பலம் நிறுத்து எடுத்து, அதனைக் கல்வத்தில் இட்டு எலுமிச்சம் பழச் சாறுவிட்டு நன்கு மைபோல் அரைத்து அதனை ஒரு மண் சட்டியில் சேகரித்துக் கொள்ள வேண்டுமாம். பின்னர் சீரகம், மிளகு, ஏலம், அதிமதுரம், திப்பிலி, கோஷ்ட மூலம், வாலுழுவை, தாளிச்சப்பத்திரி, கடுகு, கொத்தமல்லி, சித்திரமூலம், கற்கடக சிங்கி, குரோசாணி, ஓமம் ஆகியவற்றை வகைக்கு அரைப் பலம் எடுத்துச் சேர்த்து கல்வத்தில் இட்டு கரிசாலை, பூவரசம் பட்டை ஆகியவற்றின் சாறுவிட்டு மெழுகு பதத்தில் அரைத்து எடுத்து இஞ்சி சேகரித்த மண் சட்டியில் இதனையும் சேர்த்துக் கலந்து கொள்ள வேண்டுமாம்.
மோரில் உப்புப் போட்டு கலந்து அதில் பிரண்டையை சிறுதுண்டுகளாக அரிந்து ஊறப்போட்டு நன்கு காயவைத்து எடுத்து *சூரணமாக செய்து கொள்ள வேண்டுமாம். இந்த சூரணத்தில் ஒருபலம் எடுத்து முன்னர் மருந்துக் கலவை சேகரித்த மண்சட்டியில் இட்டு அதனுடன் சம அளவில் வங்காள சர்க்கரை சேர்த்துக் கொள்ள வேண்டுமாம். அத்துடன் அளவாக நெய் சேர்த்து லேகியமாக தயார் செய்து எடுத்து சேமித்துக் கொள்ள வேண்டுமாம்.
இந்த லேகியத்தில் கொட்டைப்பாக்களவு எடுத்து காலை மாலை என இரு வேளையும் ஏழு நாட்கள் தொடர்ந்து உண்டுவர பித்த வாய்வு சம்பந்தமான கோளாறுகள் நீங்கி குணமாகுமாம். அத்துடன் பித்த வாய்வு, உஷ்ண காந்தி, புரட்டல், வாந்தி, வலிகுன்மம், சீரணவாதம் (செரியாமை), உப்பிசம், ருசியின்மை ஆகியவை குணமாகும் என்கிறார்.
மருந்துண்ணும் ஏழு நாளும் பத்தியமாக பசிக்கும் போது பசியின் தன்மை அறிந்து உண்ண வேண்டும் என்கிறார்.
*சூரணம் - ஈரமானவைகளை காய வைத்தும், காயந்தவைகளை சுத்தமாக்கியும், வறுக்க வேண்டியவைகளை வறுத்தும் இடித்தோ அரைத்தோ பொடியாக்கி சலித்து எடுத்துக் கொள்வது.

No comments:

Post a Comment