'நாற்காலி இல்லாததும் ஒரு வீடா?' எங்கள் வீட்டில் இப்படித்
திடீரென்று எல்லோருக்கும் தோன்றிவிட்டது.அவ்வளவுதான்; குடும்ப
'அஜெண்டா'வில் வைக்கப்பட்டு இந்த விஷயத்தில் விவாதம் தொடங்கியது.
முதல் நாள் எங்கள் வீட்டுக்கு ஒரு குடும்ப நண்பர் விஜயம் செய்தார். அவர் ஒரு சப்ஜட்ஜ். வந்தவர்
நம்மைப் போல்வேட்டி சட்டை போட்டுக்கொண்டு வரப்படாதோ? சூட்டும் பூட்டுமாக
வந்து சேர்ந்தார். எங்கள் வீட்டில் முக்காலிதான்உண்டு. அதன் உயரமே முக்கால்
அடிதான். எங்கள் பாட்டி தயிர் கடையும்போது அதிலேதான் உட்கார்ந்து
கொள்வாள்,அவளுக்கு பாரியான உடம்பு. எங்கள் தாத்தா தச்சனிடம் சொல்லி அதைக்
கொஞ்சம் அகலமாகவே செய்யச்சொல்லியிருந்தார்.
சப்ஜட்ஜுக்கும்
கொஞ்சம் பாரியான உடம்புதான். வேறு ஆசனங்கள் எங்கள் வீட்டில் இல்லாததால்
அதைத்தான்அவருக்கு கொண்டுவந்து போட்டோம். அவர் அதன் விளிம்பில் ஒரு கையை
ஊன்றிக்கொண்டு உட்காரப் போனார்.இந்த முக்காலியில் ஒரு சனியன் என்னவென்றhல்
அதன் கால்களுக்கு நேராக இல்லாமல் பக்கத்தில் பாரம்அமுங்கினால் தட்டிவிடும்!
நாங்கள் எத்தனையோ தரம் உறியில் வைத்திருக்கும் நெய்யைத்
திருட்டுத்தனமாகஎடுத்துத் தின்பதற்கு முக்காலி போட்டு ஏறும் போது
அஜாக்கிரதையினால் பலதரம் கீழே விழுந்திருக்கிறோம். பாவம்,இந்த சப்ஜட்ஜும்
இப்பொழுது கீழே விழப்போகிறாரே என்று நினைத்து, அவரை எச்சரிக்கை செய்ய
நாங்கள் வாயைத்திறப்பதற்கும் அவர் தொபுகடீர் என்று கீழே விழுந்து
உருளுவதற்கும் சரியாக இருந்தது. நான், என் தம்பி, கடைக்குட்டித்தங்கை
மூவருக்கும் சிரிப்பு தாங்க முடியவில்லை. புழக்கடைத் தோட்டத்தைப் பார்க்க
ஓடினோம். சிரிப்புஅமரும்போதெல்லாம் என் தங்கை அந்த சப்ஜட்ஜ் மாதிரியே கையை
ஊன்றிக் கீழே உருண்டு விழுந்து காண்பிப்பாள்.பின்னும் கொஞ்சம் எங்கள்
சிரிப்பு நீளும்.
எங்கள்
சிரிப்புக்கெல்லாம் முக்கிய காரணம் அவர் கீழே விழும் போது பார்த்தும்
எங்கள் பெற்றோர்கள், தாங்கள்விருந்தாளிக்கு முன்னாள் சிரித்துவிடக்கூடாதே
என்று வந்த சிரிப்பை அடக்கிக் கொண்டதை நினைத்துத்தான்!
ஆக,
நாங்கள் எல்லாருக்கும் சேர்த்துச் சிரித்துவிட்டு வீட்டுக்குள் பூனைபோல்
அடி எடுத்து வைத்து நுழைந்துபார்த்தபோது அந்தப் பாரியான உடம்புள்ள
விருந்தாளியை காணவில்லை. அந்த முக்காலியையும் காணவில்லை. 'அதை அவர் கையோடு
கொண்டு போயிருப்பாரோ?' என்று என் தங்கை என்னிடம் கேட்டாள்.
இந்த
நிகழ்ச்சிக்குப் பின்னரே, எங்கள் வீட்டில் எப்படியாவது ஒரு நாற்காலி
செய்துவிடுவது என்ற முடிவுஎடுக்கப்பட்டது. இந்த நாற்காலி செய்வதில் ஒரு
நடைமுறைக் கஷ்டம் என்ன என்றால், முதலில் பார்வைக்கு எங்கள்ஊரில் ஒரு
நாற்காலி கூடக் கிடையாது; அதோடு நாற்காலி செய்யத் தெரிந்த தச்சனும் இல்லை.
'நகரத்தில்
செய்து விற்கும் நாற்காலியை வாங்கிக்கொண்டு வந்துவிட்டால் போச்சு' என்று
எங்கள் பெத்தண்ணா ஒருயோசனையை முன் வைத்தான். அது உறுதியாக இராது என்று
நிராகரித்துவிட்டார் எங்கள் அப்பா.
பக்கத்தில் ஒரு
ஊரில் கெட்டிக்காரத் தச்சன் ஒருவன் இருப்பதாகவும் அவன் செய்யாத நாற்காலிகளே
கிடையாதுஎன்றும், கவர்னரே வந்து அவன் செய்த நாற்காலிகளைப் பார்த்து மெச்சி
இருக்கிறார் என்றும் எங்கள் அத்தைசொன்னாள்.
அத்தை
சொன்னதிலுள்ள இரண்டாவது வாக்கியத்தைக் கேட்டதும் அம்மா அவளை, 'ஆமா, இவ
ரொம்பக் கண்டா'என்கிற மாதிரிப் பார்த்துவிட்டு முகத்தைத்
திருப்பிக்கொண்டாள்.
அப்பா வேலையாளைக் கூப்பிட்டு,
அந்தத் தச்சனுடைய ஊருக்கு அவனை அனுப்பிவிட்டு எங்களோடு வந்துஉட்கார்ந்தார்.
இப்போது, நாற்காலியை எந்த மரத்தில் செய்யலாம் என்பது பற்றி விவாதம் நடந்து
கொண்டிருந்தது.
"தேக்கு மரத்தில் தான் செய்ய
வேண்டும். அதுதான் தூக்க வைக்க லேசாகவும் அதே சமயத்தில்
உறுதியாகவும்இருக்கும்" என்றாள் பாட்டி, தன்னுடைய நீட்டிய கால்களைத் தடவி
விட்டுக் கொண்டே. (பாட்டிக்குத் தன்னுடையகால்களின் மீது மிகுந்த பிரியம்.
சதா அவற்றைத் தடவிவிட்டுக் கொண்டே இருப்பாள்!)
இந்தச்
சமயத்தில் எங்கள் தாய் மாமனார் எங்கள் வீட்டுக்குள் வந்தார். எங்கள்
பெத்தண்ணா ஓடிபோய் அந்தமுக்காலியைத் தூக்கிக்கொண்டு வந்தான். சிறிதுநேரம்
வீடே கொல்லென்று சிரித்து ஓய்ந்தது.
மாமனார் எங்கள்
வீட்டுக்கு வந்தால் அவருக்கென்று உட்காரு வதற்கு அவரே ஒரு இடத்தைத்
தேர்ந்தெடுத்துவைத்திருக்கிறார். தலை போனாலும் அந்த இடத்தில்தான் அவர்
உட்காருவார். பட்டக சாலையின் தெற்குஓரத்திலுள்ள சுவரை ஒட்டியுள்ள ஒரு
தூணில் சாய்ந்துதான் உட்காருவார். உட்கார்ந்ததும் முதல் காரியமாகத்
தம்குடுமியை அவிழ்த்து ஒருதரம் தட்டித் தலையைச் சொறிந்து கொடுத்துத்
திரும்பவும் குடுமியை இறுக்கிக்கட்டிக்கொண்டு விடுவார். இது அவர் தவறாமல்
செய்கிற காரியம். இப்படிச் செய்து விட்டு அவர் தம்மையொட்டியுள்ளதரையைச்
சுற்றிலும் பார்ப் பார். "தலையிலிருந்து துட்டு ஒன்றும் கிழே விழுந்ததாகத்
தெரிய வில்லை" என்று அண்ணாஅவரைப் பார்த்து எக்கண்டமாகச் சொல்லிச்
சிரிப்பான்.
அவர் எங்கள் வீட்டுக்கு வரும்போதெல்லாம்
இப்படிக் காகித பாணங்களினால் துளைத்தெடுக்கப்படுவார்! 'சம்பந்திக்காரர்கள்;
நீங்கள் பார்த்து என்னைக் கேலி செய்யாவிட்டால் வேறு யார் செய்வார்கள்'
என்கிற மாதிரிதிறக்காமல் கல்லுப்பிள்ளையார் மாதிரி அவர் பாட்டுக்கு
உட்கார்ந்து புன்னகையோடு இருப்பார். எங்களுடைய ஏடாகிப்பேச்சுக்களின் காரம்
அதிகமாகும்போது மட்டும் அம்மா எங்களைப் பார்த்து ஒரு பொய் அதட்டுப் போடு
வாள். அந்தஅதட்டிடு வாக்கியத்தின் கடைசி வார்த்தை "கழுதைகளா" என்று
முடியும்.
மாமனார் வந்து உட்கார்ந்ததும், அம்மா
எழுந்திருந்து அடுப்படிக்கு அவசரமாய்ப் போனாள். அவளைத்
தொடர்ந்துஆட்டுக்குட்டியைப் போல் அப்பாவும் பின்னால் போனார்.
கொஞ்ச
நேரத்துக்கெல்லாம் ஆளோடி வழியாக அம்மா கையில் வெள்ளித் தம்ளரில் காயமிட்ட
மோரைஎடுத்துக்கொண்டு நடந்து வர, அம்மாவுக்குப் பின்னால் அப்பா அவளுக்குத்
தெரியாமல் எங்களுக்கு மட்டும் தெரியும்படிவலிப்புக் காட்டிக்கொண்டே அவள்
நடந்துவருகிற மாதிரியே வெறுங்கையைத் தம்ளர் ஏந்துகிற
மாதிரிபிடித்துக்கொண்டு நடந்து வந்தார்! அவர் அப்படி நடந்து வந்தது, 'அவா
அண்ணா வந்திருக்கானாம்; ரொம்ப அக்கறையாமோர் கொண்டுபோய்க் கொடுக்கிறதைப்
பாரு' என்று சொல்லு கிறது மாதிரி இருந்தது.
மோரும் பெருங்காயத்தின் மணமும், நாங்களும் இப்பொழுதே மோர் சாப்பிடணும் போல் இருந்தது.
மாமனார்
பெரும்பாலும் எங்கள் வீட்டுக்கு வருகிறது மோர் சாப்பிடத்தான் என்று
நினைப்போம். அந்தப் பசுமாட்டின்மோர் அவ்வளவு திவ்வியமாய் இருக்கும். அதோடு
எங்கள் மாமனார் எங்கள் ஊரிலேயே பெரிய கஞ்சாம்பத்தி.அதாவது, ஈயாத லோபி என்று
நினைப்பு எங்களுக்கு.
இந்தப் பசுவை அவர் தம்முடைய
தங்கைக்காகக் கன்னாவரம் போய்த் தாமே நேராக வாங்கிக்கொண்டு வந்தார்.
இந்தக்காராம்பசுவின் கன்றுக்குட்டியின் பேரில் என் தம்பிக்கும் குட்டித்
தங்கைக்கும் தணியாத ஆசை. வீட்டைவிட்டுப்போகும்போதும் வீட்டுக்குள்
வரும்போதும் மாமனார் பசுவை ஒரு சுற்றிச் சுற்றி வந்து அதைத் தடவிக்கொடுத்து
(தன்கண்ணே எங்கே பட்டு விடுமோ என்ற பயம்!) இரண்டு வார்த்தை சிக்கனமாகப்
புகழ்ந்து விட்டுத்தான் போவார். 'பால்வற்றியதும் பசுவை அவர் தம்மு டைய
வீட்டுக்குக் கொண்டுபோய் விடுவார். கன்றுக்குட்டியும் பசுவோடு
போய்விடும்'என்ற பெரிய பயம் என் சிறிய உடன் பிறப்புகளுக்கு.
பின்னால்
ஏற்படப் போகிற இந்தப் பிரிவு அவர்களுக்குக் கன்றுக்குட்டியின் மெல்
பிரீதியையும் மாமனாரின் பேரில்அதிகமான கசப்பையும் உண்டுபண்ணி விட்டது. அவர்
ருசித்து மோரைச் சாப்பிடும்போது இந்தச் சின்னஞ்சிறுசுகள்தங்களுடைய பார்வை
யாலேயே அவரைக் குத்துவார்கள்; கிள்ளுவார்கள்!
நாற்காலி
விவாதத்தில் மாமனாரும் அக்கறை காட்டினார். தமக்கும் ஒரு நாற்காலி செய்ய
வேண்டுமென்று பிரியம்இருப்பதாகத் தெரிவித்தார். எங்களுக்கும் ஒரு துணை
கிடைத்தது மாதிரி ஆயிற்று.
வேப்ப மரத்தில் செய்வது
நல்லது என்றும், அதில் உட்கார்ந்தால் உடம்புக்கு குளிர்ச்சி என்றும்,
மூலவியாதி கிட்டநாடாது என்றும் மாமனார் சொன்னார். வேப்பமரத்தைப்பற்றிப்
பிரஸ்தாபித்தும் அப்பா மாமனாரை ஆச்சரியத்தோடுகூடிய திருட்டு முழியால்
கவனித்தார். எங்கள் மந்தைப் புஞ்சையில் நீண்ட நாள் நின்று வைரம் பாய்ந்த
ஒருவேப்பமரத்தை வெட்டி ஆறப்போட வேண்டுமென்று முந்தாநாள் தான் எங்கள்
பண்ணைக்காரனிடம் அப்பாசொல்லிக்கொண்டு இருந்தார்.
பெத்தண்ணா
சொன்னான், "பூவரசங் கட்டையில் செய்தால் ரொம்ப நன்றாக இருக்கும். அது கண்
இறுக்கமுள்ள மரம்.நுண்மையாகவும் பளபளப்பாகவும் இருக்கும்; உறுதியுங்கூட"
என்றhன்
அக்கா சொன்னாள், "இதுகளெல்லாம் வெளிர்
நிறத்திலுள்ள வைகள். பார்க்கவே சகிக்காது. கொஞ்சநாள் போனால்இதுகள் மேல்;
நமக்கு ஒரு வெறுப்பே உண்டாகிவிடும். நான் சொல்லு கிறேன், செங்கரும்பு
நிறத்திலோ அல்லதுஎள்ளுப் பிண்ணாக்கு மாதிரி கறுப்பு நிறத்திலோ இருக்கிற
மரத்தில்தான் செய்வது நல்லது; அப்புறம் உங்கள் இஷடம்."பளிச்சென்று எங்கள்
கண்களுக்கு முன்னால் கண்ணாடி போல் மின்னும் பளபளப்பான கறுப்பு நிறத்தில்
கடைந்தெடுத்தமுன்னத்தங் கால்களுடனும், சாய்வுக்கு ஏற்றபடி வளைந்த, சோம்பல்
முறிப்பது போலுள்ள பின்னத்தங் கால்களுடனும்ஒரு சுகாசனம் தோன்றி மறைந்தது.
எல்லாருக்குமே
அவள் சொன்னது சரி என்று பட்டது. ஆக எங்களுக்கு ஒன்றும், எங்கள் மாமனார்
வீட்டுக்கு ஒன்றுமாகஇரண்டு நாற்காலிகள் செய்ய உடனே ஏற்பாடு செய்யப்பட்டது.
இரண்டு
நாற்காலிகளும் எங்கள் வீட்டில் வந்து இறங்கியபோது அதில் எந்த நாற்காலியை
வைத்துக்கொண்டு எந்தநாற்காலியை மாமனார் வீட்டுக்குக் கொடுத்தனுப்புவது
என்று எங்களுக்குத் தெரியவில்லை. ஒன்றைப் பார்த்தால்மற்றதைப் பார்க்க வேண்
டாம். அப்படி ராமர் லெச்சுமணர் மாதிரி இருந்தது. ஒன்றை வைத்துக்கொண்டு
மாமனார்வீட்டுக்கு ஒன்றைக் கொடுத்தனுப் பினோம். கொடுத்தனுப்பியதுதான் நல்ல
நாற்காலியோ என்று ஒரு சந்தேகம்.
ஒவ்வொருத்தராய்
உட்கார்ந்து பார்த்தோம். எழுந்திருக்க மனசே இல்லை. அடுத்தவர்களும்
உட்கார்ந்துபார்க்கவேண்டுமே என்பதற் காக எழுந்திருக்க வேண்டியிருந்தது.
பெத்தண்ணா உட்கார்ந்து பார்த்தான். ஆ…ஹா என்றுரசித்துச் சொன்னான். இரண்டு
கைகளா லும் நாற்காலியின் கைகளைத் தேய்த்தான். சப்பணம் போட்டு
உட்கார்ந்துபார்த்தான். "இதுக்கு ஒரு உறை தைத்துப் போட்டு விட வேணும்.
இல்லையென்றால் அழுக்காகிவிடும்" என்று அக்காசொன்னாள்.
குட்டித்
தங்கைக்கும் தம்பிப் பயலுக்கும் அடிக்கடி சண்டை வரும், "நீ அப்போப்
பிடிச்சி உட்கார்ந்துகிட்டே இருக்கியே?எழுந்திருடா, நான் உக்காரணும் இப்போ"
என்று அவனைப் பார்த்துக் கத்துவாள். "ஐயோ, இப்பத்தானே
உட்கார்ந்தேன்;பாரம்மா இவளை" என்று சொல்லுவான், அழ ஆரம்பிக்கப் போகும்
முகத்தைப் போல் வைத்துக்கொண்டு.
தீ மாதிரி
பரவிவிட்டது ஊருக்குள், எங்கள் வீட்டிற்கு நாற்காலி வந்த விஷயம்.
குழந்தைகளும் பெரியவர்களும் பெருங்கூட்டமாக வந்து வந்து பார்த்துவிட்டுப்
போனார்கள். சிலர் தடவிப் பார்த்தார்கள். சிலர் உட்கார்ந்தே பார்த்தார்கள்.
ஒருகிழவனார் வந்து நாற்காலியைத் தூக்கிப் பார்த்தார். "நல்ல கனம்,
உறுதியாகச் செய்திருக்கிறான்" என்று தச்சனைப்பாராட்டினார்.
கொஞ்ச நாள் ஆயிற்று.
ஒரு
நாள் ராத்திரி ரெண்டு மணி இருக்கும். யாரோ வந்து கதவைத் தட்டினார்கள். உள்
திண்ணையில் படுத்திருந்தபெத்தண்ணா போய் கதவைத் திறந்தான். ஊருக்குள் யாரோ
ஒரு முக்கியமான பிரமுகர் இப்பொழுதுதான் இறந்துபோய்விட்டாரென்றும் நாற்காலி
வேண்டுமென்றும் கேட்டு எடுத்துக்கொண்டு போனார்கள்.
இறந்துபோன
ஆசாமி எங்களுக்கும் வேண்டியவர் ஆனதால் நாங்கள் யாவரும் குடும்பத்தோடு போய்
துட்டியில்கலந்துகொண் டோம். துட்டி வீட்டில் போய் பார்த்தால்...? எங்கள்
வீட்டு நாற்காலியில் தான் இறந்துபோன அந்தப்'பிரமுகரை' உட்கார்த்தி
வைத்திருந்தார்கள்.
இதற்குமுன் எங்கள் ஊரில் இறந்து
போனவர்களைத் தரையில் தான் உட்கார்த்தி வைப்பார்கள். உரலைப் படுக்கவைத்துஅது
உருண்டுவிடாமல் அண்டை கொடுத்து, ஒரு கோணிச் சாக்கில் வரகு வைக்கோலைத்
திணித்து, அதைப்பாட்டுவசத்தில் உரலின் மேல் சாத்தி, அந்தச் சாய்மான
திண்டுவில் இறந்துபோனவரை, சாய்ந்துஉட்கார்ந்திருப்பதுபோல் வைப்பார்கள்.
இந்த
நாற்காலியில் உட்காரவைக்கும் புதுமோஸ்தரை எங்கள் ஊர்க்காரர்கள் எந்த ஊரில்
போய் பார்த்துவிட்டுவந்தார்களோ? எங்கள் வீட்டு நாற்காலிக்குப் பிடித்தது
வினை. (தரை டிக்கெட்டிலிருந்து நாற்காலிக்கு வந்துவிட்டார்கள்)
அந்தவீட்டு
'விசேஷம்' முடிந்து நாற்காலியை எங்கள் வீட்டு முன்தொழுவில் கொண்டுவந்து
போட்டுவிட்டுபோனார்கள். அந்த நாற்காலியைப் பார்க்கவே எங்கள் வீட்டுக்
குழந்தைகள் பயப்பட்டன. வேலைக்காரனை கூப்பிட்டுஅதைக் கிணற்றடிக்குக்
கொண்டுபோய் வைக்கோலால் தேய்த்துத் தேய்த்துப் பெரிய வாளிக்கு ஒரு பதினைந்து
வாளிதண்ணீர்விட்டுக் கழுவி, திரும்பவும் கொண்டுவந்து முன் தொழுவத்தில்
போட்டோம். பலநாள் ஆகியும் அதில் உட்காரஒருவருக்கும் தைரியம் இல்லை. அதை
எப்படித் திரும்பவும் பழக்கத்துக்குக் கொண்டு வருவது என்றும் தெரியவில்லை.
ஒரு
நாள் நல்ல வேளையாக எங்கள் வீட்டுக்கு ஒரு விருந்தாளி வந்தார். அந்த
நாற்காலியை எடுத்துக்கொண்டு வந்துஅவருக்குப் போடச் சொன்னோம். அவரோ,
"பரவாயில்லை, நான் சும்மா இப்படி உட்கார்ந்து கொள்கிறேன்"
என்றுஜமக்காளத்தைப் பார்த்துப் போனார். எங்களுக்கு ஒரே பயம், அவர் எங்கே
கீழே உட்கார்ந்து விடுவாரோ என்று.குடும்பத்தோடு அவரை வற்புறுத்தி நாற்காலி
யில் உட்கார வைத்தோம். அவர் உட்கார்ந்த உடனே சின்னத் தம்பியும்குட்டித்
தங்கையும் புழக்கடைத் தோட்டத்தைப் பார்த்து ஓடினார்கள். மத்தியில் வந்து
நாற்காலியில் உட்கார்ந்தவருக்குஎன்ன ஆச்சு என்று எட்டியும் பார்த்துக்
கொள்வார்கள்!
மறுநாள் எங்கள் வீட்டுக்கு வந்த ஒரு
உள்ளூர்க் கிழவனார் தற்செயலாகவே வந்து நாற்காலியில் உட்கார்ந்துஎங்களுக்கு
மேலும் ஆறுதல் தந்தார். ('இப்போதே அவர் அந்த நாற்காலியில் உட்கார்ந்து
பார்த்துக் கொள்கிறார்!' என்றுபெத்தண்ணா என் காதில் மட்டும் படும்படியாகச்
சொன்னான்.)
இப்படியாக, அந்த நாற்காலியைப்
'பழக்கி'னோம். முதலில் வீட்டிலுள்ள பெரியவர்கள் உட்கார்ந்தோம்.
குழந்தைகளுக்குஇன்னும் பயம் தெளியவில்லை. "கொஞ்சம் உட்காரேண்டா நீ முதலில்"
என்று கெஞ்சுவாள், குட்டித் தங்கை தம்பிப்பயலைப் பார்த்து. "ஏன் நீ
உட்காருவதுதானே?" என்பான் அவன் வெடுக்கென்று.
எங்கள்
வீட்டுக்கு வந்திருந்த பக்கத்துத் தெரு சுகந்தி தன்னுடைய ஒரு வயசுத்
தம்பிப் பாப்பாவைக் கொண்டுவந்துஉட்காரவைத்தாள், அந்த நாற்காலியில்.
அதிலிருந்துதான் எங்கள் வீட்டுக் குழந்தைகளும் பயமில்லாமல்
உட்காரஆரம்பித்தார்கள்.
திரும்பவும் ஒரு நாள்
ராத்திரி, யாரோ இறந்துபோய்விட்டார்கள் என்று நாற்காலியை
தூக்கிக்கொண்டுபோய்விட்டார்கள் இப்படி அடிக்கடி நடந்தது.
நாற்காலியை
வருத்தத்தோடுதான் கொடுத்தனுப்புவோம். வந்து கேட்கும் இழவு
வீட்டுக்காரர்கள் எங்கள் துக்கத்தைவேறு மாதிரி அர்த்தப்படுத்திக்
கொள்வார்கள். தங்களவர்கள் இறந்து போன செய்தியைக் கேட்டுத்தான்
இவர்கள்வருத்தம் அடைகிறார்கள் போலிருக்கிறது என்று நினைத்துக்கொள்வார்கள்!
தூக்கம்
கலைந்த எரிச்சல் வேறு. "செத்துத் தொலைகிறவர்கள் ஏன்தான் இப்படி அகாலத்தில்
சாகிறார்களோதெரியவில்லை?" என்று அக்கா ஒருநாள் சொன்னாள்.
"நல்ல நாற்காலி செய்தோமடா நாம்; செத்துப்போன ஊர்க் காரன்கள் உட்காருவதற்காக, சே!" என்றுஅலுத்துக்கொண்டான் அண்ணன்.
"நாற்காலி செய்யக் கொடுத்த நேரப் பலன்" என்றாள் அத்தை.
பெத்தண்ணா ஒரு நாள் ஒரு யோசனை செய்தான். அதை நாங்கள் இருவர் மட்டிலும் தனியாக வைத்துக் கொண்டோம்.
ஒரு நாள் அம்மா என்னை ஏதோ காரியமாக மாமனாரின் வீட்டுக்குப் போய்வரும்படி சொன்னாள்.
நான்
அவருடைய வீட்டுக்குள் நுழைந்தபோது மாமனார் நாற் காலியில் அமர்க்களமாய்
உட்கார்ந்து வெற்றிலைபோட்டுக் கொண் டிருந்தார். அவர் வெற்றிலை போடுவதைப்
பார்த்துக்கொண் டிருப்பதே சுவாராஸ்யமானபொழுதுபோக்கு. தினமும் தேய்த்துத்
துடைத்த தங்க நிறத்தில் பளபளவென்றிருக்கும் சாண் அகலம், முழ நீளம்,
நாலுவிரல் உயரம் கொண்ட வெற்றிலைச் செல்லத்தை, 'நோகுமோ நோகாதோ' என்று
அவ்வளவு மெல்லப் பக்குவ மாகத்திறந்து, பூஜைப் பெட்டியிலிருந்து சாமான்களை
எடுத்து வைக்கிற பதனத்தில் ஒவ்வொன்றாக எடுத்து வெளியில்வைப்பார்.
வெற்றிலையை நன்றாகத் துடைப்பாரே தவிர, காம்பு களைக் கிள்ளும் வழக்கம்
அவரிடம் கிடையாது. (அவ்வளவு சிக்கனம்!) சில சமயம் மொறசல் வெற்றிலை
அகப்பட்டுவிட்டால் மட்டும் இலையின் முதுகிலுள்ளநரம்புகளை உரிப்பார்.
அப்பொழுது நமக்கு, "முத்தப்பனைப் பிடிச்சு முதுகுத்தோலை உறிச்சி பச்சை
வெண்ணையைத்தடவி...." என்ற வெற்றிலையைப் பற்றிய அழிப் பாங்கதைப் பாடல்
ஞாபகத்துக்கு வரும்.
களிப்பாக்கை எடுத்து முதலில்
முகர்ந்து பார்ப்பார். அப்படி முகர்ந்து பார்த்துவிட்டால் 'சொக்கு'
ஏற்படாதாம். அடுத்துஅந்தப் பாக்கை ஊதுவார்; அதிலுள்ள கண்ணுக்குத் தெரியாத
பாக்குப் புழுக்கள் போகவேண்டாமா அதற்காக,ஆரம்பத்தில் மெதுவாக ஆரம்பிக்கும்
இந்த முகர்ந்து பார்த்தலும் ஊதலும் வரவர வேகமாகி ஒரு நாலைந்து
தடவைமூக்குக்கும் வாய்க்குமாக, கை மேலும் கீழும் உம் உஷ், உம் உஷ் என்ற
சத்தத்துடன் சுத்தமாகி டபக்கென்று வாய்க்குள்சென்றுவிடும்.
ஒருவர்
உபயோகிக்கும் அவருடைய சுண்ணாம்பு டப்பியைப் பார்த்தாலே அவருடைய
சுத்தத்தைப் பற்றித்தெரிந்துவிடும். மாமனார் இதிலெல்லாம் மன்னன். விரலில்
மிஞ்சிய சுண்ணாம்பைக் கூட வீணாக மற்றப்பொருள்களின் மேல் தடவமாட்டார்.
அவருடைய சுண்ணாம்பு டப்பியை எடுத்துக் கண்ணில் ஒற்றிக் கொள்ளலாம்.பதினைந்து
வருஷத்துக்கு முன் வாங்கிய எவரெடி டார்ச் லைட் இன்னும் புத்தம் புதுசாக
இப்போதுதான் கடையிலிருந்து வாங்கிக்கொண்டு வந்ததோ என்று நினைக்கும்படியாக
உபயோகத்தில் இருக்கிறது அவரிடம். அதோடு சேர்த்துவாங்கிய எங்கள் வீட்டு
டார்ச் லைட் சொட்டு விழுந்து நெளிசலாகி மஞ்சள் கலரில் பார்க்கப் பரிதாபமாக,
சாகப் போகும்நீண்ட நாள் நோயாளி யைப் போல் காட்சியளிக்கிறது.
நாற்காலியை
அவர் தவிர அந்த வீட்டில் யாரும் உபயோகிக்கக் கூடாது. காலையில்
எழுந்திருந்ததும் முதல் காரியமாகஅதைத் துடைத்து வைப்பார். ஓர்
இடத்திலிருந்து அதை இன்னோர் இடத் துக்குத் தாமே மெதுவாக
எடுத்துக்கொண்டுபோய்ச் சத்தமில்லாமல் தண்ணீர் நிறைந்த மண்பானையை இறக்கி
வைப்பது போல் அவ்வளவு மெதுவாக வைப்பார்.
மாமனார்
என்னைக் கண்டதும், "வரவேணும் மாப்பிள்ளைவாள்" என்று கூறி வரவேற்றார்.
"கொஞ்சம் வெற்றிலைபோடலாமோ?" என்று என்னைக் கேட்டுவிட்டுப் பதிலும் அவரே
சொன்னார்: "படிக்கிற பிள்ளை வெற்றிலை போட்டால்கோழி முட்டும்!"
அம்மா சொல்லியனுப்பிய தகவலை அவரிடம் சொல்லிவிட்டு வீடு திரும்பினேன்.
ராத்திரி அகாலத்தில் கதவு தட்டும் சத்தம் கேட்டது. வீட்டில் எல்லாம் அயர்ந்த தூக்கம். நான் பெத்தண்ணாவைஎழுப்பினேன்.
நாற்காலிக்காக
வந்த ஒரு இழவு வீட்டுக்காரர்கள் வெளியில் நின்றுக்கொண்டிருந்தார்கள்.
பெத்தண்ணா அவர்களைத்தெருப்பக்கம் அழைத்துக்கொண்டு போனான். நானும் போனேன்.
வந்த விஷ யத்தை அவர்கள் சொல்லி முடித்ததும்பெத்தண்ணா அவர்களிடம் நிதானமாகப்
பதில் சொன்னான்.
"நாற்காலிதானே? அது எங்கள் மாமனார்
வீட்டில் இருக்கிறது அங்கே போய்க் கேளுங்கள், தருவார். நாங்கள்சொன்னதாகச்
சொல்ல வேண்டாம். இப்படிக் காரியங்களுக்கு இல்லை என்று சொல்ல முடியுமா?
அங்கேகிடைக்காவிட்டால் நேரே இங்கே வாருங்கள்; அப்புறம் பார்த்துக்கொள்வோம்"
என்று பேசி அவர் களை அனுப்பிவிட்டு,வீட்டுக்குள் வந்து இருவரும்
சப்தமில்லாமல் சிரித்தோம்.
அப்பா தூக்கச் சடைவோடு படுக்கையில் புரண்டுகொண்டே, " யார் வந்தது?" என்று கேட்டார்.
"வேலை என்ன? பிணையலுக்கு மாடுகள் வேணுமாம்" என்றான் பெத்தண்ணா.
துப்பட்டியை இழுத்துப் போர்த்திக்கொண்டு மறுபுறம் திரும்பிப் படுத்துக்கொண்டார் அப்பா.
இப்பொழுது மாமனார் காட்டில் பெய்து கொண்டிருந்தது மழை!
ரொம்ப
நாள் கழித்து, நான் மாமனாரின் வீட்டுக்கு ஒரு நாள் போனபோது அவர் தரையில்
உட்கார்ந்து வெற்றிலைபோட்டுக் கொண்டிருந்தார். வழக்கமான சிரிப்புடனும்
பேச்சுடனும் என்னை வரவேற்றார்.
"என்ன இப்படிக் கீழே?
நாற்காலி எங்கே?" சுற்று முற்றும் கவனித்தேன். வெற்றிலையின் முதுகில்
சுண்ணாம்பைத்தடவிக் கொண்டே என்னை ஆழ்ந்து பார்த்துப் புன்னகை செய்தார்.
பின்பு அமைதியாக, "அந்தக் காரியத்துக்கே அந்தநாற்காலியை வைத்துக்
கொள்ளும்படி நான் கொடுத்துவிட்டேன். அதுக்கும் ஒன்று வேண்டியதுதானே?"
என்றார்.
எனக்கு என்ன சொல்வதென்று தெரியவில்லை.
வீட்டுக்குத் திரும்பி வரும்போது இந்தச் செய்தியைச் சொல்லப்பெத்தண்ணா விடம்
வேகமாக விரைந்தேன். ஆனால் வரவர என்னுடைய வேகம் குறைந்து தன் நடையாயிற்று.
*****
நன்றி - மதுரைத்திட்டம்
No comments:
Post a Comment