Search This Blog

Monday, October 27, 2014

கல்யாண்ஜி கவிதைகள்


அந்நியமற்ற நதி

1. நீ வருவதற்காக 
காத்திருந்த நேரத்தில்தான் vd
பளிங்கு போல் 
அசையாதிருந்த தெப்பக்குளம் 
பார்க்க ஆரம்பித்தேன். 
தலைகீழாய் வரைந்து கொண்ட 
பிம்பங்களுடன்  
தண்ணீர் என் பார்வையை 
வாங்கிக் கொண்டது முற்றிலும்; 
உன்னை எதிர்பார்ப்பதையே 
மறந்து விட்ட ஒரு கணத்தில் 
உன்னுடைய கைக்கல் பட்டு 
உடைந்தது 
கண்ணாடிக்குளம். 
நீ வந்திருக்க வேண்டாம் 
இப்போது.

2.தினசரி வழக்கமாகிவிட்டது 
தபால்பெட்டியைத் 
திறந்துபார்த்துவிட்டு 
வீட்டுக்குள் நுழைவது. 
இரண்டு நாட்களாகவே 
எந்தக் கடிதமும் இல்லாத 
ஏமாற்றம். 
இன்று எப்படியோ 
என்று பார்க்கையில் 
அசைவற்று இருந்தது 
ஒரு சின்னஞ்சிறு 
இறகு மட்டும் 
எந்தப் பறவைஎழுதியிருக்கும் 
இந்தக் கடிதத்தை.

3.அடிக்கடி பார்க்க முடிகிறது 
யானையைக் கூட 
மாதக் கணக்காயிற்று 
மண்புழுவைப் பார்த்து.

4.பத்திரத்துக்கு 
முந்தின இரவில் போட்டதை 
அணைக்க விட்டுப் போயிருக்கலாம். 
திங்கட்கிழமை முதல்பஸ் பிடித்து 
வேலைபார்க்க வெளீயூர் போகிற 
அப்பாவை வழி அனுப்பிய மகள் 
அடுப்பில் பால் பொங்க 
ஓடிப்போயிருக்கலாம் 
அயத்துப் போய். 
அதிகாலையில் 
வாசல் தெளிக்க ஏற்றி 
'கோலம் நல்லா வந்த ' 
நிறைவில் 
குதுகலமாக மறந்து 
போயிருக்கலாம். 
புதிதாக புழங்கும் 
விருந்தினர் யாரோ 
விசிறிக்கு அழுத்திய பொத்தானில் 
வெளியே இந்த 
விளக்கு எரிவது தெரியாமல் 
அறைக்குள் இருக்கலாம். 
உச்சி வெய்யிலில் 
தெருவில் போகிற எனக்கு 
உறுத்திக் கொண்டிருக்கிறது 
ஒரு வெளிச்சத்தில் 
இன்னொரு வெளிச்சம் தோற்பது.
'அந்நியமற்ற நதி ' தொகுப்பிலிருந்து.


இன்னொரு கேலிசித்திரம்

காலம் என் கேலிச்சித்திரத்தை DSC_0033
வரைந்துவிட்டது 
உயரத்தையும் 
முன்பற்க்களின் இடைவெளியையும்  
நிச்சயம் கணக்கில் எடுக்கும் 
என்று நினைத்திருந்தேன் 
எடுக்கவில்லை 
என் கூர்மையற்ற மூக்கைக்கூட 
அது பொருட்படுத்தக் காணோம் 
கனத்த கண்ணாடியின்றியும் 
முகத்தின் சாயல் 
பிடிப்பட்டிருந்தது 
அதன் கோடுகளுக்குள் 
என் உடல் மொழியனைத்தும் அடங்கியிருந்தன 
என் சித்திரத்தை விட 
என் கேலிச்சித்திரத்தை ரசிக்க முடிகிறது 
எனினும் 
என்னுடைய எந்த அடையாளத்தை 
அது ஒளித்துவைதிருக்கிறது தன்னிடம் 
என்ற புதிரை 
என்னால் விடுவிக்க முடியவில்லை 
அதற்குள் வரையப்பட்டுவிடுகிறது 
அடுத்த நாளில் 
இன்னொரு கேலிச் சித்திரம்…
***** 
நன்றி: கல்யாண்ஜி கவிதைகள், ஆழி பதிப்பகம்

No comments:

Post a Comment