இவர் வாழ்ந்த காளம் 1858-1937 தாவரங்களுக்கும் உயிர் உண்டு என்ற உண்மையை உலகுக்கு வெளிப்படுத்திய இந்திய அறிவியலாளர்.
போஸ் என்ற பெயரால் நன்கு அறிமுகமான இவர் 1859ஆம் ஆண்டு நவம்பர் 30ஆம் நாள் இன்றைய பங்களாதேஷில், டாக்கா நகருக்கு அருகில் ஃபரீத்பூர் மாவட்டத்தை சேர்ந்த மைமென்சிங் என்ற ஊரில் பிறந்தார்.
போஸ் தமது துவக்கக் கல்வியைத் தூய சேவியர் உயர்நிலைப் பள்ளியில் பெற்றார். பின்னர் தமது கல்வியைக் கொல்கத்தா, கேம்பிரிட்ஜ, லண்டன் ஆகிய இடங்களில் தொடர்ந்தார்.
1885இல் கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் இயற்பியல் துறையில் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தார்; தமது பெரும்பாலான கண்டுபிடிப்புகளுக்கான ஆய்வுகளை, போஸ் இக்கல்லூரியில் தான் மேற்கொண்டார்.
கொல்கத்தா மாநிலக்கல்லூரியில் ஜகதீஷ் சந்திர போஸுக்கு இயற்பியல் துறையில் விரிவுரையாளர் வேலை கிடைத்தது;
ஆனால் ஊதியத்தைப் பொறுத்தவரை ஆங்கிலேயர்களுக்குக் கொடுப்பதில் 2/3 பங்கு மட்டுமே கொடுக்கப்பட்டது. இந்தியர்கள் அறிவியல் துறையில் பின்தங்கியவர்கள், அதனால் அவர்கள் முழு ஊதியம் பெறத் தகுதியற்றவர்கள் என்று அப்போது காரணம் கூறப்பட்டது.
ஆனால் போஸ் தமது அறிவுக்கூர்மையால் கல்லுரி நிர்வாகத்தினர் போற்றிப் பாராட்டும்படிப் பணியாற்றினார்; திருப்தியடைந்த கல்லூரி நிர்வாகம் போஸுக்கும் முழு ஊதியம் வழங்க ஆணையிட்டதோடு,
ஏற்கனவே பணியாற்றிய காலத்திற்குத் தரவேண்டிய நிலுவைத் தொகையையும் வழங்க ஆணையிட்டது.
அவ்வாறு தரப்பட்ட நிலுவைத் தொகையைக் கொண்டு போஸ் ஓர் அறிவியல் ஆய்வுக்கூடத்தை நிறுவினார்; அங்கு தாவரவியல், இயற்பியல் துறைகளில் பல்வேறு ஆய்வுகளை மேற்கொண்டார். அடிப்படையில் இயற்பியல் அறிஞரான அவர் ரேடியோ அலைகளில் மிகுதியும் ஆய்வு நடத்தினார்.
மார்க்கோனிக்கு முன்னரே கம்பியில்லா ஒலிபரப்பு அமைப்பினை போஸ் கண்டுபிடித்தார்; இருப்பினும் அஃது அறிவியல் உலகினரால் கவனிக்கப் படாமல் போய்விட்டது.
மிகக் குறைந்த அலை நீளமுடைய நுண்ணலைகளை உருவாக்கும் ஓர் எந்திரத்தை இவ்வுலகில் முதன் முதலில் வடிவமைத்த பெருமை போஸ் அவர்களையே சாரும்.
மூலக்கூறுகளின் பண்புகளில் மேற்கொண்ட ஆய்வின் மூலம் புதியதோர் ஒளிப்படக் கோட்பாட்டை (photographic theory) அவர் உருவாக்கினார். கணிப்பொறி அறிவியலின் துவக்க கால ஆய்வாளர்களில் போஸும் அடங்குவார். உலகின் மிகச் சிறந்த அறிவியல் ஆய்வாளர்களில்/சிந்தனையாளர்களில் போஸ் அவர்களுக்கு ஓரு சிறப்பான இடம் உண்டு.
போஸ் மிகச் சிறந்த இரு நூல்களை இயற்றி உலகப்புகழ் பெற்றார். உயிரினங்களின் மற்றும் உயிரற்றவைகளின் துலங்கல் தன்மை (Response in the Living and Non-Living) என்பது ஒரு நூல்;
தாவரங்களின் நரம்புச் செயலமைவு (The Nervous Mechanism of Plants) என்பது மற்றொரு நூல்.
இவ்விரு நூல்களின் வாயிலாக வெப்பம், குளிர், ஒலி, ஒளி ஆகிய புறத்தூண்டுதல்கள் மனிதர்களையும், பிற விலங்கினங்களையும் எவ்வாறு பாதிக்கின்றனவோ அவ்வாறே தாவரங்களையும் பாதிக்கின்றன என்பதை நிரூபித்தார்.
மேலும் பரிசோதனை ஒன்றையும் போஸ் செய்து காட்டினார். புரோமைட் (Bromide) என்ற நச்சுத் தனிமத்தை எலி ஒன்றுக்கு ஊசி மூலம் செலுத்தப்பட்டது; தாவரம் ஒன்றுக்கும் ஊசி மூலம் செலுத்தப்பட்டது;
எலி, தாவரம் ஆகிய இரண்டும் சாவின் விளிம்பில் போராடியதைக் கண்டு அறிவியல் உலகம் போஸ் அவர்களின் ஆராய்ச்சியை ஆரவாரத்துடன் கைதட்டிப் பாராட்டியது.
1915ஆம் ஆண்டு லண்டன் ராயல் கழகத்தில் போஸ் அவர்கள் “புறத்தூண்டுதல்களுக்குத் தாவரங்கள் எவ்வாறு பொறுமையுடன் நடந்து கொள்ளுகின்றன” என்பதைப் பற்றி ஒரு சொற்பொழிவு நிகழ்த்தினார்.
தாமே வடிவமைத்துத் தயாரித்த இந்தியக் கருவிகளின் துணைகொண்டு பல்வகையான செயல்முறை விளக்கங்களைச் செய்து காட்டினார்.
1920ஆம் ஆண்டு லண்டன் ராயல் கழகத்தின் உயர்நிலை உறுப்பினர் பதவியைப் பெற்றதன் மூலம் போஸ் அவர்கள் இந்திய அறிவியலுக்குப் பெருமை தேடித் தந்தார்
No comments:
Post a Comment