Search This Blog

Tuesday, September 13, 2011

மலேசியத் தமிழ்ப்படைப்பிலக்கியங்களினூடாக வெளிப்படும் மலேசிய வரலாற்றுக் கூறுகள் என். செல்வராஜா, நூலகவியலாளர், லண்டன்

ஒரு இனத்தின் நீடித்த வாழ்வுக்கு அவ்வினம் பயன்படுத்தும் மொழி அதிமுக்கியமான பங்கை வகிக்கின்றது. ஒரு இனம் தான் பயணித்துவந்த நீண்ட வரலாற்றுப்பாதையை அடுத்த தலைமுறைக்குக் காட்டிச்செல்ல அம்மொழியின் வழியான இலக்கியம் மிக முக்கியமானதாகும். தமிழ் இனத்தின் செழுமைமிக்க வரலாற்றை, அவ்வினம் காலாதிகாலமாகப் பயணித்து வந்த கடந்த கால வரலாற்றின் ஒவ்வொரு திருப்புமுனையினையும் தமிழ் இலக்கியங்கள் அவ்வப்போது பதிந்து வைத்ததால்தான் இன்று நாம் எமது இனத்தின் பெருமைமிக்க பண்பாட்டினை, எதிர்கண்ட அழிவுகளை, வசந்தகால நினைவுகளை சந்ததி சந்ததியாக அறிந்து சுவைக்கவும், பெருமிதம் கொள்ளவும் எதிர்காலத்தைத் திட்டமிடவும் முடிகின்றது.

அன்று முச்சங்கம் அமைத்துத் தமிழை வளர்த்த எம் முன்னோருக்கு தமிழர் வரலாற்றை எழுத்தில் பதிந்து வைப்பதில் சிக்கனம் தேவைப்பட்டது. நாம் காணும் கல்வெட்டுகளிலும், ஏடுகளிலும், மரப்பட்டைகளிலும் பக்கம் பக்கமாக வரலாற்றை எழுத முடியாத நிலை அன்றிருந்தது. ஆதலினால் செய்யுள் இலக்கியம் நீண்டகாலம் நிலைத்திருந்தது. செவிவழியாக மனனஞ்செய்து தலைமுறைகளுக்குக் கடத்தப்பட்ட நாட்டாரியல் இலக்கியங்கள் கூட பாடல்களாகவே இருந்திருக்கின்றன. சுருங்கச்சொல்லி விளங்கவைக்கவேண்டிய தேவை பண்டைய தமிழ் இலக்கியப் படைப்பாளிகளுக்கு இருந்துள்ளது. கடுகைத் துளைத்து ஏழ்கடலைப் புகுத்தும் வல்லமை படைத்ததாக நாம் கருதும் திருக்குறள் இதற்கு உதாரணமாகின்றது.

இந்நிலை பின்னாளில் பத்திரிக்கைத்தாளின் அறிமுகத்தின் பின்னர் முற்றாக மாறியது. உரைநடை இலக்கியம் வீறுகொண்டு எழுந்தது. கதைகள், கட்டுரைகள், நாவல்கள் என்று விரிந்த நம் இலக்கியப் பரப்பில் உலகளாவிய நமது தமிழின் வரலாறும், அவனது காலத்தைய உலக வரலாறும் நன்கு பதியப்படலாயிற்று.

மலேசிய இலக்கிய பரப்பிலும் இத்தகைய வரலாற்றுப் படிமங்களை நாம் ஆங்காங்கே காணக்கூடியதாக உள்ளன. உலக வரலாற்றின் பாதையில் ஏற்பட்ட பல திருப்புமுனைகளை அக்காலக்கட்டத்தில் வாழ்ந்த தமிழன் எவ்வாறு கடந்தான் என்பதை அறிந்துகொள்ளச் சமகால மலேசியத் தமிழ் இலக்கியங்கள் சில எமக்கு உதவுகின்றன. மலாயாத் தமிழர்கள் சம்பந்தப்பட்ட வரலாற்றுப் பதிவுகளைக்கொண்டு அண்மைக்காலத்தில் வெளிவந்துள்ள ஆக்க இலக்கிய படைப்புக்கள் சிலவற்றை அறிமுகப்படுத்துவதே இக்கட்டுரையின் பிரதான நோக்கமாகின்றது.

தமிழகத்திலிருந்து ஆங்கிலேயர்களால் மலாயாவுக்கு கொண்டு செல்லப்பட்ட ஏழைத் தமிழ்க் குடும்பம் ஒன்றின் வாரிசாக மலாயா ஜொகூர் மாநிலம், பத்துபகாட் நகரில் 27.05.1927-ல் பிறந்தவர் பிரிட்டிஷ் மலாயா சக்திமோகன் என்பவர். ஜொகூர் மாநிலத்தில் முதலாவது பொதுத் தொழிலாளர் சங்கத்தை நிறுவியவர் இவர். தந்தை பெரியார், அறிஞர் அண்ணா போன்றோரின் திராவிட இயக்கக் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு மலாயாவில் திராவிடர் கழகத்தை முன்நின்று அமைத்தவர்களுள் இவரும் ஒருவர். 1946-ல் இவரது தீவிர ஊடகப்பணிகளால் வெகுண்ட பிரிட்டிஷ் ஏகாதிபத்தியத்துக்கு எதிராகச் செயற்பட்டுத் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த மலாயா சாம்பசிவமும், தொழிற்சங்கப் போராட்டங்களால் பிரிட்டிஷ் அரசுக்குத் தலையிடி கொடுத்ததால் கைத்துப்பாக்கி வைத்திருந்தார் என்ற குற்றச்சாட்டின்பேரில் அவர்களால் தூக்கிலிடப்பட்ட கணபதியும் வாழ்ந்திருந்தார்கள்.

மலாயா சக்திமோகன் கடல் கடந்த தமிழன் (மலேசியா : ராணி செந்தாமரை பதிப்பகம், கோலாலம்பூர், 1வது பதிப்பு, 2001. 172 பக்கம்) என்ற அரியதொரு ஆவணத்தை எழுதியுள்ளார். இந்நூலில் தனது அரசியல் பணிகளைப் பதிவு செய்வதுடன் தூக்கிலிடப்பட்ட தியாகி கணபதியின் போராட்ட வரலாற்றையும் இணைத்துத் தமது மனப்பதிவுகளைத் தொகுத்திருக்கின்றார். 50 ஆண்டுகளுக்கு முன்னர் மலாயாத் தோட்டத் தொழிலாளர்களின் உரிமைகளுக்காகப் போராடியதால் அன்றைய மலாயாவில் பிரிட்டிஷ் அரசினால் தூக்கிலிடப்பட்ட தொழிற்சங்கவாதி கணபதியின் இறுதிக்கட்டப் போராட்டத்தையும் அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையைத் தடுத்திட இந்தியாவில் அறிஞர் அண்ணா முதலானோரினால் மேற்கொள்ளப்பட்ட ஊடக முயற்சிகளையும் இதில் ஆவணப்படுத்தியுள்ளார். மலாசியாவில் ஒரு தமிழ்ப் போராளியின் வாழ்வைக் கூறும் அரியதொரு வரலாற்று நூல் இதுவாகும்.

இந்நூலின் நான்காம் பக்கத்திலுள்ள எச்சரிக்கைக் குறிப்பு எனது கண்ணையும் கருத்தையும் இழுத்துப் பிடித்து நிறுத்தியது. “இந்த வரலாற்று நூலைப் படிப்பதற்கு முன், கவனம், எச்சரிக்கை நினைவிலிருக்கட்டும். இந்த வரலாற்று நூலைப் படிப்பதற்கு முன் கீழ்கண்ட எச்சரிக்கை வேண்டுகோளை உங்கள் மனதில் இறுக்கி பதிய வைத்துக் கொள்ள கேட்டுக் கொள்கிறேன். இந்த வரலாற்று நூலில் பிரிட்டிஷ் மலாயாவில் நெருக்கடி காலத்தில் நிகழ்ந்த வரலாற்றைப் பற்றி விளங்கப்பட்டுள்ளது. இதற்கும் இன்றைய சுதந்திர ஐக்கிய சுதேசி மலாசியாவிற்கும் எந்தவித சம்பந்தமுமில்லை என்பதை மனதில் இறுக்கி பதிய வைத்துக்கொண்டு தொடர்ந்து படிக்க கனிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.” என்ற எச்சரிக்கைக் கூற்று இந்த நூலில் “சுதந்திர ஐக்கிய சுதேசி மலேசியாவில்” சொல்லப்படாததொரு செய்தியைக் கூறுவதாக அமைகின்றது.

கோலாலங்காட் ரெங்கசாமி 27.9.1930-ல் சிலாங்கூர் மாநிலத்தில் கோலாலங்கட் என்ற இடத்தில் பிறந்தவர். ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியரான இவர் 1950 முதல் ஓயாமல் எழுதி வரும் மலேசிய படைப்பாளி. சிறுகதைகள், நாவல்கள், மேடை, வானொலி நாடகங்கள் பலவற்றை இவர் எழுதியுள்ள போதிலும் இவரது புதியதோர் உலகம், லங்காட் நதிக்கரை, நினைவுச் சின்னம் ஆகிய மூன்று நூல்களுமே இவரைப் பற்றி புலம் பெயர்ந்த தமிழர் வாழும் ஐரோப்பிய நாடுகளிலும் பேசவைத்துள்ளதெனலாம்.

புதியதோர் உலகம் என்ற இவரது நூல் ஒரு வரலாற்று நாவலாகும். (Selangor: A.Rangasamy, No.21, Jalan 6, Taman Telok, 42500, Telok Panglima Garang Kuala Langat, 1வது பதிப்பு, 1993. 300 பக்கம்). 1942-ல் ஜப்பானியர் ஆட்சியில் மலேசியர்களின் வாழ்வியலை இந்நாவல் படம்பிடித்துக் காட்டுகின்றது. இரண்டாவது உலகப்போரில் மலாயா நாட்டில் ஆங்கிலேயர்களால் அநாதைகளாகக் கைவிடப்பட்ட தமிழ்த் தோட்டத் தொழிலாளர்கள் பட்ட துன்பங்கள் எண்ணிலடங்காதவை. அந்த வரலாற்றினை இந்நாவல் மீள்தரிசனம் செய்கின்றது. ஜப்பானியரின் ஆட்சியின் போது மலாயாத் தோட்டப்புற மக்கள் பட்ட இன்னல்களையும், இங்கிருந்து சயாம் (தாய்லாந்து) நாட்டுக்கு ரயில்பாதை அமைக்கவென வலுக்கட்டாயமாக, ஆட்டுமந்தையைப் போல பார ஊர்திகளில் இட்டுச் செல்லப்பட்டு அந்த மரண ரயில்பாதையில், நிரந்தரமாகத் துயில்கொள்ளச் செய்த துயரச் சம்பவங்கள் இந்நாவலில் விரிவாக எடுத்துச்சொல்லப்பட்டுள்ளன.

தாய்லாந்து ரயில்பாதையில் தமிழனின் உடலும்தான் உரமாகியிருக்கின்றது என்ற செய்தி பலருக்கும் புதியதாகும். சயாம் மரண ரயில் பாதை அமைப்பின் வரலாற்றுச் சோகத்தை மற்றொரு கோணத்தில் சொல்வதாகவே இவரது நினைவுச் சின்னம் என்ற நாவலும் அமைந்துள்ளது.(சிலாங்கூர் டாருல் ஏசான்: A.Rengasamy, 21, Jln 6, Tmn Telok, 42500 Telok Panglima Garang, 1வது பதிப்பு 2005. 537 பக்கம்) மரண இரயில்வே என்று வரலாற்றாசிரியர்களால் அழைக்கப்பட்ட சயாம்-பர்மா இரயில் பாதை அமைப்பில் வலுக்கட்டாயமாக ஜப்பானிய ஆக்கிரமிப்பாளர்களால் ஈடுபடுத்தப்பட்டு, ஆதரவின்றி அநியாயமாய், அந்நிய மண்ணிலே அநாதைகளாகப் பலியாகி, சயாம் காடுகளில் ஆழ்துயில் கொண்டுவிட்ட ஆயிரமாயிரம் மலாயாத் தமிழர்களின் மறக்கப்பட்ட துயரம் தேய்ந்த வரலாறு இந்நாவலிலும் விரிகின்றது. இந்நாவலின் வரலாற்று நிகழ்வுகளை நேரில் அனுபவித்து இன்றும் உயிர் வாழ்ந்து வரும் எண்மரின் தகவல்களின் அடிப்படையில் இந்நாவல் உயிர் பெற்றுள்ளதை பின்னிணைப்பில் அறியமுடிகின்றது. இதனால் நாவலில் உயிரோட்டம் மிகுந்துள்ளது. மேலும் உலகத்தமிழர்களின் வாசிப்பினை இலகுவாக்கும் வகையில் வட்டாரச் சொற்களுக்கானதொரு சிறு அகராதியும் இந்த நாவலில் காணப்படுகின்றது. இதனால் பிரதேசப் பாகுபாடற்று அனைத்துத் தமிழ் வாசகர்களும் இந்நாவலுடன் ஐக்கியமாக இது உதவுகின்றது.

அ.ரெங்கசாமியின் அண்மைக்கால நாவலாக வெளிவந்துள்ளது லங்காட் நதிக்கரை (சிலாங்கூர்: மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம். 73B, Jln SG3/10, Taman Sri Gombak, 68100, Batu Caves, 1வது பதிப்பு, நவம்பர் 2006. 112 பக்கம்) என்ற நாவலாகும். மலேசியத் தமிழ் எழுத்தாளர் சங்கம், ஆஸ்ட்ரோ வானவில் தொலைக்காட்சி, தேசிய தோட்டத் தொழிலாளர் சங்கம் ஆகியன இணைந்து நடத்திய நாவல் போட்டியில் முதன்மைப் பரிசான பி.பி.நாராயணனன் விருது பெற்ற நாவல் இதுவாகும். மலேசியத் தமிழர்களின் வரலாற்றினைப் பகைப்புலமாகக் கொண்டு எழுதப்பட்ட இவரது நான்காவது நாவல் இதுவென்று குறிப்பிடப்பட்டுள்ளது. மலாயாத் தமிழர்கள் ஆங்கிலேயர்களின் தோட்டங்களில் மட்டுமல்லாது கம்பம் எனப்படும் கிராமப்புறங்களிலும் கூடத் தனித்தனிக் கூட்டங்களாக ஒரு காலத்தில் வாழ்ந்திருக்கின்றனர் என்பதனை லங்காட் நதிக்கரை என்ற நாவல் பதிவு செய்கின்றது. மலாயா விடுதலைப்படை எனப்படும் கம்யூனிஸ்ட் படையின் இருவாரமே இடம்பெற்ற ஆட்சியில் அப்பாவிகளான மலாயாத் தமிழர்கள் சந்தித்த இக்கட்டானதும் இருதலைக்கொள்ளி எறும்பின் நிலைமையை ஒத்ததுமான வாழ்க்கையை இக்கதை சுவையாக கூறுகின்றது.

தொடர்ந்து மலாயாக் கம்யூனிஸ்ட்களின் கலவரத்தில், அவசரகால சட்டத்தில் ஊரடங்குச் சட்டத்தின் பிடியில் சிக்குண்டு மலேசியத் தமிழர்கள் அனுபவித்த கட்டுப்பாடுகளையும் இடர்களையும் இயன்றவரை வரலாற்று உண்மைகளோடு இந்நாவலில் ஆசிரியர் பதிவு செய்துள்ளார். சுமார் எழுபது ஆண்டுகளுக்கு முன்பிருந்த மண் மணம் பேச்சுவழக்கினூடே அழகாக இந்நாவலில் எடுத்தாளப்பட்டுள்ளன. இதை வாசித்து முடித்த போது 1987களில் இலங்கையின் தமிழ்ப்பகுதிகளுக்குள் சமாதானத் தூதுவர்களாக வந்திறங்கிய இந்திய இராணுவத்தின் இரும்புப் பிடியில் மூச்சுத்திணறிய எமது ஈழத்தமிழர்களின் இரு ஆண்டுகால உணர்வுகள் ஆங்காங்கே நினைவில் எழுந்து நீண்ட நேரம் நிலைத்திருந்தது. கோலாலங்காட் ரெங்கசாமியின் இமயத் தியாகம் என்ற நாவல் நேதாஜி என்ற விடுதலை வீரன் சுபாஷ் சந்திரபோசின் பிரித்தானிய ஆட்சிக்கு எதிரான விடுதலைப்போர் பற்றிக் குறிப்பிடுகின்றது. (தமிழ்நாடு: இளங்கோ நூலகம், 4-பி, காந்தி சாலை, கள்ளக்குறிச்சி, விழுப்புரம் மாவட்டம், 1வது பதிப்பு, டிசம்பர் 2006. 376 பக்கம், ISBN:983-42587-2-0)

மலாயாத் தமிழர்கள் அனுபவித்த சோக வரலாறுகளினூடாக சில வீரவரலாறுகளையும் நாம் இனம்காணமுடிகின்றது. 1941-ல் நடந்தது காப்பார் கலகம் எனப்படும் தோட்டத் தொழிலாளர் புரட்சி. இப்புரட்சியில் துப்பாக்கி ஏந்திய காவல் ஏந்திய காவல்துறையயும் இராணுவத்தையும் முன்நிறுத்திக் கலவரத்தை அடக்க முனைந்தது ஆங்கிலேய ஏகாதிபத்திய அரசு. இவ்வடக்குமுறையை தமிழர்கள் அஞ்சாது எதிர்த்து நின்று போராடினார்கள். பலர் உயிர்த் தியாகமும் செய்தனர் என்பது ஒரு வீர வரலாறு. 1943-ல் மாவீரர் நேதாஜியின் தலைமையில் இந்திய விடுதலைக்காய் இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்து இம்பால் வரை சென்று போராடி இருக்கின்றனர் தமிழ் மறவர்கள். இது இரண்டாவது வீர வரலாறு. இப்போர் பற்றிய நினைவு நூல்கள் ஒரு சிலவே வெளிவந்துள்ளபோதிலும், இந்நூல் வித்தியாசமான முறையில் நாவலாக அதை சுவாரஸ்யமாக்கியுள்ளது. இரண்டாம் உலகப் போரில் ஜப்பானின் தென்கிழக்காசிய வெற்றியில் தொடங்குகின்றது இந்த வரலாற்று நாவல். இந்தியச் சுதந்திரம் சங்கம், இந்திய தேசிய இராணுவத்தின் தோற்றம், நேதாஜியின் தலைமைத்துவம், பர்மிய, இந்திய வடகிழக்குப் போர்முனை, தமிழ் போர் வீரர்களின் தியாகம், என வரலாற்றுப் பின்னனியில் ஏராளமான தகவல்களுடன் ஒரு தமிழனின் பார்வையில் விரிகிறது இந்நாவல். கடும் உழைப்பில் ஏராளமான முன்னாள் Indian National Army (I.N.A.) வீரர்களைச் சந்தித்தும் வரலாற்றுத் தரவுகளைத் திரட்டியும் இந்நூலை கலையமைதியுடன் உருவாக்கியுள்ளார் கோலலங்காட் ரெங்கசாமி. மலேசிய ரப்பர் தோட்டங்களில் வாழ்ந்திருந்த தமிழ்க்குல ஆண்களும், பெண்களும் சீருடை அணிந்து துப்பாக்கி ஏந்தி போர்முனைக்குச் சென்று போராடினார்கள். அதில் பலர் உயிர்த்த தியாகமும் செய்தனர். இதுவே இமயத் தியாகம் என்ற வரலாற்று நாவலாகக் கருக்கொண்டது.

இவ்வேளையில் சிங்கை மா.இளங்கண்ணன் என்ற படைப்பாளி சிங்கப்பூரிலிருந்து எழுதிய நாவலான வைகறைப் பூக்கள் பற்றியும் இங்கு குறிப்பிடப்படுவதும் பயனுள்ளதாகும். (சிங்கப்பூர்: நூல் வெளியீட்டுக் குழு, இந்தியர் பண்பாட்டு நிகழ்ச்சி ஏற்பாட்டுக்குழு, 1வது பதிப்பு, ஏப்ரல் 1990.208 பக்கம்) சிங்கப்பூரின் தமிழ் தினசரியான தமிழ் முரசில் தொடராக வெளிவந்த இந்நாவல், இந்திய விடுதலைப் போராட்டக் காலத்தை மீள்நினைவூட்டுகின்றது. இமயத் தியாகம் நாவல் குறிப்பிட்டது போன்றே, சிங்கப்பூரில் இந்திய தேசிய இராணுவத்தின் செயல்கள் குறித்தும் இரண்டாம் உலகப்போர் குறித்தும் வரலாற்றுப் பின்னனியில் வைகறை பூக்கள் எழுத்ப்பட்டுள்ளது. சிங்கப்பூரில் 1990 மார்ச் 25 முதல் ஏப்ரல் 21 வரை இந்தியர் பண்பாட்டு மாதம் கொண்டாடப்பட்டது. இது சிங்கப்பூரின் உருவாக்கத்தில் 25வது ஆண்டு நிறைவினையொட்டி நடத்தப்பட்டது. அவ்வேளையில் அதை நினைவு கூறும் முகமாக சிங்கப்பூரின் கலை இலக்கிய சமூகவியல் வரலாற்றை பதிவாக்கும் வகையில் 25 தமிழ் நூல்கள் வெளியிடப்பட்டன. வைகறைப் பூக்கள் அவற்றிலொன்று.

கோலலங்காட் ரெங்கசாமி போன்றே மற்றொரு மலேசிய எழுத்தாளரும் சயாம் மரண ஊயில்பாதை அமைப்புப் பற்றிய வரலாற்றுப் பதிவினை அடிப்படையாகக் கொண்ட நாவல் ஒன்றினை எழுதியுள்ளார். ஆர். சண்முகம் 6.7.1935-ல் பிறந்தவர். இவரும் ஓய்வுபெற்ற ஆசிரியர். 1950 முதல் எழுதிவரும் முன்னனி எழுத்தாளர். 300க்கும் மேற்பட்ட சிறுகதைகள், 7 தொடர்க்கதைகள், மற்றும் கட்டுரைகளை இவர் எழுதியுள்ளார். மயில், சாந்தி, தினமுரசு இதழ்களிலும் இவர் பணியாற்றியுள்ளார். லண்டன் முரசு நடத்திய உலகச் சிறுகதைப் போட்டியிலும் முதற்பரிசினைப் பெற்றவர். சயாம் மரண ரயில் என்ற தலைப்பில் ஆர். சண்முகம் எழுதிய நாவல் ஜப்பானியர் காலத்து மலாயா வரலாற்றில் பதியப்பட்ட கொடூரமான, குருதிதோய்ந்த, அந்த இருண்ட காலக்கட்டத்தை இங்கு மீள்பதிவுக்குள்ளாக்குகின்றது. (கோலாலம்பூர் 51200: ஜெயபக்தி பதிப்பகம், 28&30 Wisma Jaya Bakti, Jln Cenderuh Dua, Batu 4, Jalan Ipoh, 1வது பதிப்பு, 1993. 436 பக்கம், ISBN: 967-900-454-6).

ஜப்பானியர் பர்மாவை சயாம் (தாய்லாந்து) வழியாக மலாயாவுடன் இணைக்கும் இரயில் பாதை அமைக்கும் திட்டத்தில் ஏராளமான மலேசியத் தமிழர்களை ஈடுபடுத்தினர். இந்த இரயில்பாதை அமைப்பில் 51000 போர்க்கைதிகளும் 100 000 ஆசிய கட்டாயத் தொழிலாளர்களும் ஈடுபடுத்தப்பட்டார்கள் என்று குறிப்பிடப்படுகின்றது. பயங்கரக் காட்டின் நடுவே முடியாது தொடரும் இரயில் பாதைகளில் தங்கள் வாழ்வை முடித்துக்கொண்ட லட்சக்கணக்கான மக்களின் மரண ஓலம் இந்நாவலின் வரிகளுக்கிடையே இனத்தின் வலியாக இழையோடிக்கிடக்கின்றன. இதில் பலியானவர்களில் தமிழர்களே அதிகம். உணவு, மருந்து, இல்லாமல் இந்த இரயில்பாதை அமைப்பில் பலர் இறந்தனர். 1942 நவம்பர் முதல் 1943 அக்டோ பர் வரை நடந்த இந்தக் கொடுரத்தின் பதிவு இந்த நாவலாகும்.

மலேசியத் தமிழ் படைப்பிலக்கியங்களில், பிரித்தானிய ஆட்சிக்கு முன் காலத்தைய மன்னர் வரலாறுகளும் ஆங்காங்கே பதிவாகியுள்ளன. ஆடும் மஞ்சள் ஊஞ்சல் என்ற குறுநாவல், ப.சந்திரகாந்தம் அவர்களால் எழுதப்பட்டது. (கோலாலம்பூர்: கலை இலக்கிய பண்ணை, 1வது பதிப்பு அக்டோபர் 1985. 96 பக்கம்) இந்தக் குறுநாவலில் மலேசிய மாநிலங்களில் ஒன்றான மலாக்கா வரலாறு பின்னனியாகத் தரப்பட்டு, அக்கு ஆட்சி செய்த முதல் தமிழ் மன்னர் பரமேஸ்வரன் முதல் பின்னாளில் ஆட்சி செய்த சுல்தான் அஹ்மாட் ஷா வரை ஒன்பது சுல்தான்களைப் பற்றிய வரலாறு பேசப்படுகின்றது. பல வெற்றிகளைப் பெற்று மலாக்காவை விரிவுபடுத்தித் தானே எட்டாவது சுல்தானாக முடிசூட்டிக் கொண்ட சுல்தான் மஹ்மாட் ஷா இந்நூலில் கதாநாயகனாக கணிப்பு பெறுகின்றார். மேலும் நான்கு சுல்தான்களிடம் 42 ஆண்டுகள் முதலமைச்சராக பணியாற்றிய துன் பேரா, தளபதியாக விளங்கி நாட்டை விரிவுபடுத்திய வீரர் ஹங் துவா ஆகியோரும் முக்கிய பாத்திரங்களாகின்றனர்.

பெண்ணழகில் மயங்கும் சுல்தான் மஹ்மாட் ஷாவின் பலவீனமும் அதனால் விளையும் குழப்பங்கள், அரசியல் சூழ்ச்சிகள், கொள்ளைகள் என்பன சுவையாகக் கதையை நகர்த்துகின்றன. கி.பி.1511-ல் போர்த்துக்கேயர் மலாக்காவைக் கைப்பற்றுவதுடன் குறுநாவல் நிறைவுபெறுகின்றது. மலேசிய வரலாற்றில் மலாக்கா தமிழர்களுக்கு முக்கியமானதாகும். இன்றும் அங்கு நினைவுச் சின்னங்களாக மலாக்காச் செட்டிகளால் அமைக்கப்பட்டிருக்கும் பாக்குவெட்டி, வெற்றிலைத் தட்டம், கமுகம் குலை (பாக்கு) போன்றனவும் மலாக்காச் செட்டிகளால் பராமரிக்கப்பட்ட புராதன சைவ ஆலயமும், இன்று இஸ்லாமிய மதத்தவரைப் பெரும்பங்கினராகக் கொண்ட மலாயாப் பெருநிலப்பரப்பில் ஒரு காலத்தில் தமிழரின் ஆதிக்கமும் இருந்துள்ளமைக்குச் சான்றாக அமைகின்றன.

மலேசியப் படைப்பாளி ப.சந்திரகாந்தம் 28.2.1941-ல் பிறந்தவர். 1960 முதல் மலேசிய இலக்கியத்தில் தொடர்ந்து எழுதிவருபவர். 100க்கு மேற்பட்ட சிறுகதைகள், 9 தொடர்கதைகள், 600க்கும் மேற்பட்ட வானொலி நாடகங்கள் என இவரது படைப்புகள் பட்டியலாக நீளும். மலேசிய சிங்கப்பூர் வானொலிகளில் இவரது நாடகங்கள் பல ஒலிபரப்பாகியுள்ளன. பள்ளி ஆசிரியராகவும், பத்திரிக்கைத் துணை ஆசிரியராகவும், வானொலி எழுத்தாளராகவும், நிகழ்ச்சித் தயாரிப்பாளராகவும் பணியாற்றியவர் இவர். ப.சந்திரகாந்தம் போன்றே பினாங்குத் தீவில் வாழும் சு.கமலாவும் குறிப்பிடத்தகுந்தவர். 14.1.1960-ல் பிறந்த இவர் 1982 முதல் எழுதிவருகிறார். உங்கள் குரல் இதழின் துணை ஆசிரியராகப் பணியாற்றிய இவர் மலாய் மொழியிலும் பரிச்சயம் மிக்கவர். இவரது படைப்புக்கள் மலாய் மொழியிலும் வெளிவந்துள்ளன. தீ மலர் என்ற பெயரில் சு.கமலா எழுதிய நூலையும் இங்கு குறிப்பிடுவது பொருத்தமாக இருக்கும். (பினாங்கு10400 : அன்பானந்தன் இலக்கிய பரிசு வாரியம், 59, சியாம் ரோடு. 1வது பதிப்பு, 1987. 100 பக்கம்).

மலேசிய வரலாற்றில் நிகழ்ந்த குறிப்பாக மலாக்கா மன்னர்களின் (1403-1511) ஆட்சியில் நிகழ்ந்தவற்றை அடிப்படையாகக் கொண்ட வரலாற்றுக் குறுநாவல் இதுவாகும். இக்காலக்கட்டத்தில் மலாக்காவை ஆட்சிபுரிந்த மன்னன் மஹ்முட் ஷாவை நாயகனாகக்கொண்டு பின்னப்பட்ட கதை. சா.ஆ.அன்பானந்தான் இலக்கிய வாரியம் நடத்திய நாவல் போட்டியில் பரிசு பெற்ற கதை இது.

மலேசியத் தமிழரின் நூற்றாண்டுகால வாழ்வின் சுவடுகளைப் பதிவு செய்துள்ள ஆக்க இலக்கியங்கள் பல இன்று மலேசிய இலக்கிய வெளியீடுகளுள் காணப்படுகின்றன. கட்டுரையின் நீட்சி கருதி இவை பற்றி இங்கு குறிப்பிடப்படவில்லை. மலேசியத் தமிழர் பார்வையில் பதிவுசெய்யப்பட்ட குறிப்பிடத்தக்க நூல்களாக இங்கு நான் எடுத்துக்காட்டியவை தவிர்த்து பிற நூல்களும் அங்கு இருக்கக்கூடும். ஜனரஞ்சக இந்தியத் தமிழ் இலக்கியங்கள் கொண்டுவந்து குவிக்கப்படும் அளவுக்கு தரமான மலேசியத் தமிழ் இலக்கியங்கள் இலங்கையையும், தமிழர் புலம் பெயர்ந்து வாழும் ஐரோப்பிய நாடுகளையும் எட்டுவதில்லை என்பது வருத்தத்திற்குறிய செய்தியாகும். இந்த குறைப்பாட்டிற்கு மலேசிய தமிழ் படைப்பாளிகளும் ஓரளவு பொறுப்பானவர்களே. தமது படைப்புகள் தமது வேரோடிய தமிழகத்து மண்ணையும் அங்கு கொழுவீற்றிருக்கும் தமிழகத்தின் படைப்பிலக்கிய ஜாம்பவான்களையும் சென்றடைந்தாலே தமக்குப் பிறவிப்பெரும்பயன் கிட்டிவிட்டதாகக் கருதும் மலேசியப் படைப்பாளிகள் தமது படைப்புகள் உலகெங்கும் பரந்து வாழும் தமிழ் உறவுகளை அடையவேண்டும் என்று கருதுவதில்லை. தமது அண்டைநாடான இலங்கையின் சந்தை வாய்ப்பினை இதுவரை பெற்றுக்கொள்ள அவர்கள் முனையாததற்கான காரணம் அவர்களே அறிவர். இவர்களைக் கைதூக்கிவிடத் தமிழகம் தயாராயில்லை.

இந்நிலையில், மலேசியத் தமிழ்ப் படைப்புலகச் சூழலை விளங்கிக்கொள்ள எமக்கு இக்கட்டுரை ஓரளவாவது உதவும் என்று நம்பலாம்.

1 comment:

  1. வணக்கம் ஐயா, மலாயா சக்திமோகன் கடல் கடந்த தமிழன் மற்றும் புதியதோர் உலகம் போன்ற வரலாற்று நாவல்கள் எங்கு கிடைக்கும். தங்களிடம் பிரதி ஏதும் உள்ளதா? படிக்க ஆவலாய் உள்ளது ஐயா..

    ReplyDelete