சிலரை பார்த்தால் பொறாமையாக இருக்கும். அந்த அளவுக்கு எல்லாவற்றையும் திட்டமிட்டு செய்வார்கள். நேரத்தை விரையமாக்காமல் ஒவ்வொரு செயலையும் குறித்த நேரத்தில் முடித்து விடுவார்கள். இத்தகைய ஒழுங்கும், நேர்த்தியும் உங்களுடைய வாழ்க்கையிலும் வரவேண்டும் என்று விரும்பினால் அதற்கு கை கொடுப்பதற்காக டைம்ஸ்லாட் இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது. டூ டூ லிஸ்ட் என்று சொல்லப்படும் செய்ய வேண்டியவற்றை குறித்து வைத்துக் கொள்ள உதவும் வகையைச் சேர்ந்த இந்த தளம் தினசரி வேலைகளை அழகாக திட்டமிட்டுக் கொள்ள உதவுகிறது. மறதிக்கோ, சோம்பலுக்கோ இடம் இல்லாமல் அன்றாட செயல்களை திட்டமிட்டுக் கொள்ள விரும்புவோர்கள் இந்த தளத்தில் உறுப்பினரானால் அவர்களுக்கு என்று ஒரு அட்டவணை பக்கம் ஒதுக்கப்படுகிறது. மிக எளிதாக இருக்கும் அந்த பக்கம் காலையில் இருந்து துவங்குகிறது. ஒவ்வொருவரும் அன்றைய தினம் என்னென்ன வேலைகள் செய்ய வேண்டும் என்பதை இந்த அட்டவணையில் குறித்து வைத்துக் கொள்ளலாம். இந்த அட்டவணையில் ஒவ்வொரு மணி நேரமாக வேலைக்கான பகுதி ஒதுக்கப்பட்டுள்ளது. எனினும் அவரவர் தேவைக்கேற்ப இந்த கால அவகாசத்தை மாற்றிக் கொள்ளலாம். இவ்வாறு காலை முதல் இரவு வரையான பணிகளை இந்த அட்டவணையில் குறித்து வைத்துக் கொள்ளலாம். அன்றாட அலுவல்களை குறித்து வைத்துக் கொண்டு செயல்படுவது புதிய யுக்தி அல்ல என்றாலும், வழக்கமாக டைரியில் குறித்து வைத்துக் கொண்டு செயல்படுவது நடைமுறையில் ஒத்துவரக்கூடியதாக இருப்பதில்லை. அதற்கு மாறாக மிகவும் எளிதாக பயன்படுத்தக்கூடிய வகையில் இந்த இணைய அட்டவணை அமைந்துள்ளது. ஒவ்வொரு நாள் முடிவிலும் இந்த அட்டவணையைப் பார்த்து அந்த தினத்துக்கான அலுவல்களை செய்து விட்டோமா என்பதை அலசிப் பார்க்கலாம். இதே போல ஒவ்வொரு நாளும் காலையில் அன்றைய தினத்திற்கான பணிகளை திட்டமிட்டு செயல்படலாம். இந்த அட்டவணையில் நாள் காட்டியும் இணைக்கப்பட்டிருப்பது விசேஷமானது. இந்த நாள் காட்டியில் வரும் காலத்தில் செய்ய வேண்டிய வேலைகளையும் குறித்து வைக்கலாம். தொலைபேசி பில் கட்டுவதில் துவங்கி, வங்கி தவணையை செலுத்துவது வரை செய்ய வேண்டிய பணிகளை அந்த தினங்களில் குறித்துக் கொள்ளலாம். இதன் மூலம் இந்த அட்டவணையானது மிகச்சிறந்த நினைவூட்டல் சேவையாகவும் செயல்படும். நாள் காட்டியை ஒரு பார்வை பார்த்தால் எந்தெந்த தினத்தில் என்னென்ன செய்ய வேண்டும் என்பதை தெரிந்து கொண்டு விடலாம். இதே போலவே கடந்த வாரம் அல்லது அதற்கு முந்தைய மாதம் என்ன செய்து இருக்கிறோம் என்பதை அறிந்து கொள்ள விரும்பினால் நினைவுகளை புரட்டிப் பார்க்காமல் இந்த நாள் காட்டியை புரட்டிப் பார்த்தாலே போதும். இவ்வாறு கடந்த கால அலுவல்களின் சேமிப்பு கிடங்காகவும் இந்த அட்டவணை கை கொடுக்கிறது. மிக எளிமையான வடிவமைப்பும், சிக்கல் இல்லாத அட்டவணையுமே இந்த சேவையின் சிறப்பு அம்சமாக இருக்கிறது. அதிக குழப்பங்களுக்கு இடம் தராமல் ஒருவர் தனது அன்றாட வேலைகளை திட்டமிட்டுக் கொள்ள இந்த சேவை கை கொடுக்கிறது. வெற்றி பெற்ற மனிதர்களைப் போலவே தாங்களும் வாழ்க்கையை திட்டமிட்டு செயல்படுத்த வேண்டும் என்று நினைப்பவர்களும், செய்ய நினைத்தவற்றை சோம்பலால் செய்ய முடியாமல் போய் வருந்துபவர்களும் இந்த சேவையை பயன்படுத்திக் கொள்ளலாம். திட்டமிடுவதற்கு கை கொடுக்கக்கூடிய இணையதளங்கள் எண்ணற்றவை இருந்தாலும் அவற்றில் மிகவும் எளிமையான தளமாக இந்த டைம்ஸ்லாட் அமைந்துள்ளது. |
Search This Blog
Tuesday, July 12, 2011
திட்டமிட உதவும் இணையதளம்
Subscribe to:
Post Comments (Atom)
No comments:
Post a Comment