பகுத்தறிவுவாதிகள் என தங்களை தாங்களே அழைத்து கொள்ளும் நாத்திக வாதிகள் ஆலயம் சென்று இறைவனை தொழுவதும் நெஞ்சம் உருக வேண்டுதல் செய்வதும் முட்டாள் தனமான காரியம் என சொல்கிறார்கள். இன்னும் மறைக்காமல் உண்மையை உடைத்து சொன்னால் கடவுளை வணங்கும் அனைவருமே காட்டுமிராண்டிகள் என்பது அவர்களின் வாதம் .மொட்டை அடிப்பது, அலகு குத்துவது, சதையில் குத்தி தேர் இழுப்பது என்பது எல்லாம் மூடத்தனமானது. பகுத்தறிவு அற்றது என்று பலர் சொல்கிறார்கள். உண்மையில் இப்படி சொல்வது தான் பகுத்தறிவு இல்லாதது ஆகும்.
மனித உடலுக்கு அழகு தருவதில் மிக முக்கியமானது தலைக் கேசமாகும். கிளியோபாட்ரா கூட மொட்டை தலையாக இருந்தால் எவனும் சீண்ட மாட்டான். அழகு கொடுக்கின்ற முடியை முண்டகம் செய்வது என்றால் அதற்கொரு மன துணிச்சல் வேண்டும். கொசு கடிப்பதையே நம்மால் தாங்க முடிவதில்லை. ஆனால் உடலெங்கும் ஊசி குத்துவதையும் பெரிய கம்பியால் சதையை குத்துவதையும் ஒருவன் தாங்கி கொள்கிறான் என்றால் அதற்கு எத்தகைய மனத்துணிச்சல் வேண்டும்?
இதை தான் கடவுள் விரும்புகிறாரா? என்று சுலபமாக கேட்டு விடலாம்!!!
பதில் என்னவோ ஆம் அதையும் தாங்கும் மன பக்குவத்தை தான் கடவுள் வளர்க்க சொல்கிறார் என்பதாகும். நாத்திகவாதம் பகுத்தறிவு என்பதெல்லாம் இந்த சமுதாயத்திற்கு செய்துள்ளதை விட பல மடங்கு சேவைகளை பக்தி மார்க்கம் செய்துள்ளது. கடவுளை நம்புகிறவர்கள் அனைவருமே முட்டாள்கள் என நாத்திகன் நினைக்கிறான். இது அவனது
ஆணவத்தின் வெளிபாடு. பக்திமான் யாரையும் முட்டாள் என நினைப்பது இல்லை. கடவுள் படைப்பில் எல்லாவற்றிலுமே சக்தி இருக்கிறது என அவன் நம்புகிறான். அதனால் தான் நாத்திகர்களை விட ஆத்திகர்கள் அதிக சக்தி வாய்ந்த வர்களாக இருக்கிறார்கள்
ராமாயணத்தை போல பகவத் கீதையை போல் ஏன் பைபிள், கூர்-ஆனை போல் அழிக்க முடியாத கருத்து பெட்டகத்தை எந்த நாத்திகவாதியாலும் இன்று வரை படைக்க
முடிய வில்லை.அறிவியல் கண்டுபிடிப்புகளை உருவாக்கிய விஞ்ஞானிகள் எல்லோருமே நாத்திகர்கள் அல்லபக்திமான் என்று சொல்லி கொள்கிற வர்களை விட அதிக பக்திமான்கள் இந்த விஞ்ஞானிகள்.
அயல்நாட்டு உதாரணங்கள் கூட வேண்டாம். நம் உள்ளூர் உதாரணங்களே ஏராளமாக யிருக்கிறது. கவியரசு கண்ணதாசனால் நாத்திக வாதியாக இருந்த வரையில் எந்த உருப்படியான படைப்புகளையும் தர முடியவில்லை. நாத்திக செருப்புகளை கழற்றி விட்டு ஆத்திக சிறகுகளை பொருத்தி கொண்ட பிறகு தான் இலக்கிய வானில் ராஜாளி பறவை போல் பறக்க முடிந்தது.
நம்முடைய பிரம்மாண்டமான கோவில்களிலும் அவற்றில் காணப்படும் கலையழகு கொப்பளிக்கும் சிற்பங்களும் நாத்திகவாதம் தந்த கொடையல்ல. ஆன்மிகமாகும்.
வலது கன்னத்தில் அறைந்தால் இடது கன்னத்தை காட்டு என சொன்னது பொருள் முதல்வாதியான லெனின் அல்ல. மெய்பொருள் வாதியான இயேசு கிறிஸ்துவேயாகும்.
ஆட்சி அதிகாரம் கையில் இருந்தாலும் அரண்மனையில் வாழாமல் குடிசையில் வாழ்ந்தது மாசேதுங் அல்ல, முகமது நபியே ஆகும்.
பொன்னும் மண்ணும் ஒன்று தான் என வாழ்ந்தது இங்கர்சால் அல்ல. ராமகிருஷ்ண பரமஹம்சரே ஆகும்.
எனவே ஆன்மிகம் அறிவை மழுங்கடிக்கும் போதை பொருள் அல்ல.எல்லாவற்றின் மேலும் அன்பு செலுத்த கற்று கொடுக்கும் மெய்பொருள் பாதையாகும். பொய்யை மெய்யாக காட்டுவது தான் நாத்திகமும் பகுத்தறிவு வாதமும் ஆகும்.
No comments:
Post a Comment