Search This Blog

Friday, July 15, 2011

மனிதனை விஞ்சிய சக்தி (பறக்கும் தட்டு என்ற ஒன்று இருக்கிறதா?)

அது 1088ஆம் ஆண்டின் இடைப்பட்ட பகுதி. சீன பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஷென் குயோ. இவர் சிறந்த ஒரு கண்டுபிடிப்பாளர். வித்தியாசமான பொருள், வித்தியாசமான உயிரிகள் இவற்றைப் பற்றியெல்லாம் தொகுத்து புத்தகமாக வெளியிடுவதுதான் இவரது வழக்கம். அந்த ஆண்டும் அப்படித்தான் ‘ட்ரீம் பூல்’ என்ற தலைப்பில் கட்டுரைத் தொகுப்பு ஒன்றை வெளியிட்டார். அந்த கட்டுரை ஏட்டில், ஒரு பக்கத்தில் சீனாவில் ஒரு கிராமப் பகுதியான ‘யாங்க்சௌ’ என்ற பகுதியைச் சேர்ந்த இரண்டு விவசாயிகள் - அன்ஹூய் மற்றும் ஜியாங்சு என்பவர்கள், தாங்கள் விவசாயப் பணியை மேற்கொண்டிருந்தபோது, வானத்தில் இருந்து தட்டு போன்ற ஒரு பெரிய பொருள் பறந்து வந்தது. அந்தப் பொருளில் இருந்த கதவுகள் திறக்கப்பட்டு, உள்ளேயிருந்து கண்கூசத்தக்க ஒளி பாய்ந்து வருவதைக் கண்டதாகவும் அதன் நிழல், பத்து மைல் தூரம் வரை நீண்டு இருந்ததாகவும் சொன்னதாக ஒரு கட்டுரையை எழுதியிருந்தார்.

இந்தக் கட்டுரை வெளிவந்ததும், வானியல் ஆராய்ச்சியாளர்களுக்கு ஷென் குயோ மீது கடுமையான எரிச்சல். ஷென் தேவையில்லாமல் மக்களை குழப்பத்தில் ஆழ்த்துகிறார் என்று குற்றம் சாட்டினர். ஆனால், இதுகுறித்து ஷென் எந்த பதில் விளக்கமும் அளிக்கவில்லை. தான் கூறியது எந்த விதத்திலும் தவறில்லை என்றே வாதிட்டார். இந்த சம்பவம் எல்லாம் நடந்தது 11 ஆம் நூற்றாண்டு.
ஆண்டுகள் உருண்டோடின. இது 1878ஆம் ஆண்டு. டெக்ஸாஸ் மாநிலம். வட அமெரிக்காவில் இருந்து வெளியாகும் ‘டென்னிசன்’ என்ற தினசரியில் பரபரப்பான செய்தி வெளியானது. ‘ஏ ஸ்ட்ரேன்ஜ் ஃபினோமினா’ (புதுமையான பெயர் தெரியாத உருவம்) என்ற தலைப்பில் ஒரு செய்தியை வெளியிட்டிருந்தது அந்தப் பத்திரிகை. அந்தச் செய்தியில் டெக்ஸாஸ் மாநிலத்தைச் சேர்ந்த விவசாயி ஜான் மார்ட்டின் என்பவர், வயலில் வேலை பார்த்துக் கொண்டிருந்தபோது, ஒரு பெரிய கரிய வட்ட வடிவ பறக்கும் பொருள் ஒன்றைக் கண்டதாகவும், அது பலூன் வடிவை ஒத்திருந்ததாகவும் தன் ஆச்சர்யத்தை வெளியிட்டிருந்தார்.
அடுத்து, 1904ஆம் ஆண்டு.அமெரிக்காவின் சரக்குக் கப்பல் சான்பிரான்ஸிஸ்கோவிலிருந்து 300 மைல்கள் மேற்கு முகமாக பயணித்துக்கொண்டிருந்தபோது, மூன்று பிரகாசமான முட்டை வடிவ மற்றும் வட்ட வடிவ பொருள்கள் வரிசையாக வேகமாக பறந்து சென்றதும், பின்னர் தன் போக்கை மாற்றிக்கொண்டதாகவும் தெரிவித்திருந்தார் அக்கப்பல் மாலுமி.
இதையடுத்து தொடர்ச்சியாக 1916ஆம் ஆண்டு, 1926 என்று ஒவ்வொருவரும் மாறி மாறி தாங்கள் ஒரு அதிசய பறக்கும் தட்டை கண்டதாக தொடர்ந்து ஊடகங்களில் செய்தி வெளியாகிக்கொண்டிருந்தது. இதன் உச்சக்கட்டமாக, இரண்டாம் உலகப்போர்க் காலத்தில் போர் விமானங்களை சில ஒளிப்பந்துகள் தொடர்ந்து பின்பற்றி வந்ததாகவும் செய்திகள் வெளியாயின. தொடர்ந்து 1942ஆம் ஆண்டு, அடையாளம் கண்டுபிடிக்க முடியாத வான்கலம் கலிபோர்னியா பகுதியில் லாஸ் ஏஞ்ஜெல்ஸ் மீது பறந்து வந்ததாகவும் செய்திகள் வெளியாகின.

சமீபத்தில், கடந்த மார்ச் 29ம் தேதி, வாஷிங்டன் நகரத்தில் கொலராடோ பகுதிக்கு மேலே முக்கோண வடிவில் சரியாக அடையாளம் உணர முடியாத ஒரு பறக்கும் உருவம் வானத்தில் பறந்து சென்றதாகவும், அதை புகைப்படம் எடுத்து வைத்துள்ளதாகவும் செய்தி வெளியிட்டிருந்தது, சர்வதேச முக்கிய செய்தி நிறுவனமான ஏ.என்.ஐ. அந்தப் பறக்கும் வாகனத்தின் ஒளி கண் கூசும் அளவுக்கு சிவப்பு நிறத்தில் இருந்ததாகவும், விமானம் செல்லும் போது ஏற்படும் சத்தத்தைப்போல எந்தச் சத்தமும் இல்லை. மிகவும் அமைதியாகவும் கண் இமைக்கும் நேரத்தில், வேகமாகவும் பறந்துசென்றதாகவும் அது குறிப்பிட்டுள்ளது. இந்தப் புகைப்படம் தற்போது சோதனைக் கட்டத்தில் உள்ளது. இந்த சோதனை முழுமையாக முடியும் பட்சத்தில், பறக்கும் தட்டு குறித்த உண்மையான தகவல் வெளிவரும் என்று நம்புகிறது, அறிவியல் உலகம்.
சரி; பறக்கும் தட்டு என்ற ஒன்று இருக்கிறதா? அப்படி ஒன்று இருந்தால், அதை இயக்குவது யார்? ஒளியின் வேகத்தில் பறந்து செல்லும் ஒரு வாகனத்தை உருவாக்கும் அளவுக்கு, மனிதனை விஞ்சிய சக்தி பிரபஞ்சத்தில் இருக்கிறதா என்றொரு கேள்வி.

ஏன் இருக்கக் கூடாது? சூரியக் குடும்பத்தில் ஆராய்ச்சியாளர்களின் கண்களில் புலப்படாத கோள்கள் இன்னும் பல ஆயிரம் உள்ளன. அவற்றோடு ஒப்பிடுகையில் பூமி மிக மிகச் சிறிய கோளாகத்தான் தோன்றுகிறது. செவ்வாயிலும், நிலவிலும்தான் மனிதன் வாழ்வதற்குத் தேவையான வசதிகள் குறித்து ஆராய்ச்சிகள் நடக்கின்றன. ஆனால், ஆராய்ச்சிக்குள் சிக்காத கோள்கள் ஒன்றில் மனிதனைவிட ஆற்றலிலும், அறிவிலும் விஞ்சிய உயிரிகள் ஏன் இருக்கக் கூடாது? அவற்றின் கண்டுபிடிப்பாகக் கூட இந்த பறக்கும் தட்டு இருக்கலாம் அல்லவா?
விடைதெரியாத அனைத்தையும் கற்பனை என்று ஒதுக்கிவிட முடியாது. அதுவும் ஒரு கட்டத்தில் நிஜமாய் உருவெடுக்கலாம். இன்று நாம் பார்த்து ரசித்த ‘அவதார்’ படத்தில் வரும் வேற்று கிரக மனிதர்கள், இன்னும் சில நூறு ஆண்டுகளில் நம் கண்ணுக்கு சகஜமாகத் தோன்றலாம். ஏனென்றால், கண்டுபிடிக்கும்வரைதான், அது கற்பனை!
Courtesy: அகிலன்@ Kalki

No comments:

Post a Comment