Search This Blog

Friday, July 8, 2011

நீங்கள் கடவுளை நேரில் பார்க்க ஆசையா? - மிகத் தீவிர ஆன்மீக தேடல் உள்ளவர்களுக்கு



இதை இதை இதைதான் நான் எதிர் பார்த்தேன் , என்று உங்களை திக்கு முக்காட வைக்கப் போகும் கட்டுரை. மிகத் தீவிர ஆன்மீக தேடல் இருப்பவர்களுக்கு இந்த கட்டுரை ஒரு புதையல் ... படித்துப் பாருங்கள். அண்ணாமலையானின் அருள் உங்களுக்கு கிடைக்கட்டும். படித்த பிறகு உங்கள் கருத்துக்களை அனுப்பி வைத்தால் , மகிழ்ச்சி யடைவேன்.. இந்த கட்டுரையை நீங்கள் உங்களால் முடிந்தவரை உங்கள் நண்பர்களுக்கு , தெரிந்தவர்களுக்கு அனுப்பி வையுங்கள். சிவன் அருள் எங்கும் வலுவடையட்டும்..!! உலகில் சுபிட்சம் நிலவட்டும்.. !! உங்களுக்கு ஆத்ம திருப்தி கிடைக்கட்டும்..

சென்ற அமாவாசைக்கு முந்தைய ஒரு ஞாயிற்றுக் கிழமை திருவண்ணாமலை கிரிவலம் சென்று இருந்தேன். சாதாரண நாட்களில் செல்லும்போது , மூலவரையும், அஷ்ட லிங்கங்களையும் - மனதுக்குத் திருப்தி ஏற்படும் வரையில் தரிசிக்கலாம். கூட்ட நெரிசல் இருக்காது. பஸ்சுக்காக ஓடும் கூட்டம் இருக்காது. ஒரு சாதுவான திருவண்ணாமலையை  பார்க்க முடிகிறது. இதையெல்லாம் விட முக்கியமான விஷயம், கிரிவலம் செல்லும்போது சள சள பேச்சோ, சினிமா பாடல்களை மொபைலில் கேட்டுக்கொண்டோ வரும் கூட்டம் இருக்காது.

இந்த முறை சென்றபோது , ஒரு ஆச்ச்சரியமூட்டக் கூடிய சம்பவம் நடந்தது.

 ராகு கால நேரத்தில் அம்மன் சந்நிதிக்கு அருகில், நவ கிரகங்களுக்கு அருகில் வெளியில் அமர்ந்து லலிதா சகஸ்ர நாமம் முழுவதும் படித்து விட்டு , ஆறு மணிக்கு மேல் கிரிவலம் செல்ல ஆரம்பித்தேன். இந்திர லிங்கம், அக்னி லிங்கம் தரிசனம் முடித்து விட்டு , இரவு நேரம் சுமார் 8 மணி அளவில் எம லிங்கம் வந்து தரிசனம் செய்ய ஆரம்பித்தேன். அப்போது அங்கு இருந்த சாமியார் ஒருவர் என்னை அழைத்தார். கிரிவலம் செல்கிறீர்களா? உங்களுக்கு விருப்பம் இருந்தால் கொஞ்ச நேரம் பேசிவிட்டு செல்லுங்களேன் என்று கேட்டார்...

அண்ணாமலையில் பிச்சை எடுப்பவர்களும் அதிகம். அவர்களும் காவி தான் கட்டி இருப்பார்கள். ஆனால் , நான் சொல்வது சாமியார். இறை தேடல் எப்பொழுதும் இருப்பதற்காக காவி கட்டியவர். அவர்களுக்கு காவி ஒரு அடையாளம் மட்டுமே. சட்டென்று , போலீஸ் காரர் யாரும் சந்தேகப்படக் கூடாது என்பதற்காக மட்டுமே. இவர்கள் ஒரு நாளும் பிச்சை எடுப்பதில்லை. தானாகவே இவர்களை தேடி எல்லாம் வருகிறது. இதை ஒதுக்காமல் ஏற்றுக் கொள்கிறார்கள். வெள்ளை வேஷ்டி கட்டிக் கொண்டு தினமும் காடுகளில் சுற்றிக் கொண்டு இருந்தால், போலீஸ் சந்தேகப்படும் தானே?.. இவரைப் பார்க்கும்போதே , முகத்தில் நல்ல தேஜஸ் , களை சொட்டியது.

என்ன , மலை சுற்ற ஆரம்பிக்கும்போதே யாருடனும் பேச வேண்டாம் என்று நினைத்தீர்களோ.. ? நான் தான் உங்களை தொந்தரவு செய்கிறேன் போலே .. என்று ஆரம்பித்தார்... சிலரைப் பார்த்தால் , பேசலாம் என்று தோன்றும். அதிகம் யாரிடமும் பேசுவதில்லை. உங்களைப் பார்த்ததும் பேசலாம் என்று தோன்றியது என்றார். பேச்சில் அவ்வளவு மரியாதை , நாகரீகம் தெரிந்தது.

சுமார் ஒன்றரை மணி நேரம் பேச்சு நீண்டது. ஆச்சரியம்.. அற்புதம் ! நான் எதிர்பாராத சந்திப்பு. ஏராளமான தகவல்கள் , நான் நீண்ட நாட்களாக என் மனத்தைக் குடைந்து கொண்டு இருந்த விஷயங்களுக்கு - பதில் கிடைக்க வேண்டும் என்பதற்காகவே நடந்த சந்திப்பு போலே தோன்றியது.

அவருக்கு வயது சுமார் 65 க்கும் மேல் இருக்கும் . அந்த காலத்திலேயே  B .E . முடித்தவராம். அண்ணாமலை வந்து 25 வருடங்களுக்கு மேல் ஆகி விட்டது என்றார். ரிஷி மூலம் பற்றி அதிகம் கேட்ககூடாது என்பதால் நானும் அதிகம் அவரைப் பற்றி இன்னும் அதிகமாக கேட்கவில்லை.

நான்கு முறைக்கு மேல் அமர்நாத் யாத்திரை சென்று வந்துள்ளார்.  சரி, அதில் என்ன விசேஷம் என்கிறீர்களா  ? நான்கு முறையும் அண்ணாமலை யிலிருந்து  பாத யாத்திரையாம். காஷ்மீர் வரை நடந்தே..!! அம்மாடி..!! வெல வெலத்துப் போய் விட்டேன். எப்பேர்ப் பட்ட மகானின் தரிசனம் கிடைத்துள்ளது ? அவர்  பகிர்ந்து கொண்ட விஷயங்கள் ஒவ்வொன்றும் பொக்கிஷங்கள் . மிக தீவிர  சிவ தீட்சை மேற்கொண்டு உள்ளாராம். ஒரு பழைய நாடிக் குறிப்பு ஒன்றிலிருந்து - சில மந்திரங்களை எடுத்துக் கொண்டு , மனம் ஒருமித்து - ஜெபம் மேற்கொள்ளுகிறார். சிவ தீட்சை பற்றி நான் கூகுளில் தேடியபோது கிடைத்த தகவல்களை கீழே உங்களிடம் பகிர்ந்து கொள்கிறேன். இதை ஏற்கனவே நான் கேள்விப் பட்டிருந்ததால் , அவரிடம் இதை குரு மூலமாக மட்டும் தான் உபதேசம் பெற்றுத் தான் ஜெபிக்க வேண்டுமா என்று கேட்டேன். உங்கள் குரு நாதர் எங்கு இருக்கிறார் என்று கேட்டேன்.
 
அண்ணாமலையை , அகத்தியரை விடவா உங்களுக்கு பெரிய குருநாதர் கிடைக்க போகிறார். நீங்கள் முதல் படி எடுத்து வையுங்கள். அடுத்து அடுத்து உங்களை அதுவே வழி நடத்தும் என்றார்.

எனக்கு என்னவோ , அந்த துறவியை சாமானியராக நினைக்க முடியவில்லை. அந்த ஈசனின் அற்புதம் , அவர் எனக்கு உணர்த்த வேண்டிய செய்திகள் என்றே தோன்றியது.

எனக்கு இரவில் கிரிவலம் செல்ல வேண்டியது இருந்ததால் , நேரமாகி விட்டதால் ,அவரிடம் விடை பெற்று - கிரிவலத்தை தொடர்ந்தேன்.. அடுத்த முறை வரும்போது மீண்டும் சந்திக்கலாம் என்றார். எந்த இடத்தில் , எப்போது என்று நான் கேட்கவில்லை ... அவருக்கு நான் வரும்போது உணர முடியும் என்று எனக்கு நம்பிக்கை இருந்தது.

ஒன்பதரை மணிக்கு மீண்டும் கிரிவலம் தொடர்ந்தேன்.  தசாங்க வாசனை என்னுடன் தொடர்ந்து கிரிவலம் முடிக்கும் வரை வந்ததை உணர முடிந்தது.  நானும் கொஞ்சம் பாக்கியசாலிதான் போல.. !

சரி ,சிவ தீட்சை என்றால் என்ன என்று பார்ப்போம்..!

சித்தர்களின் தலையாய சித்தர்,  அந்த பரம்பொருளின் பிரியத்துக்குரிய - அகத்திய மாமுனி, பாமரனும் தகுதி இருந்தால் இறைவனை அடையலாம் என்பதற்காக , பகிர்ந்துகொண்ட தேவ ரகசியம்.. சித்த ரகசியம் இவை.
இவற்றை உணர்ந்து சித்தியடைந்தவர்களுக்கு ஞானம் பெருகும், பாவம் விலகும் என்கிறார்.மேலும் ஆதி சித்தனான சிவனின் பாத தரிசனம் கிடைக்குமாம்.இந்த தீட்சைகளை நற்குமரனான முருக பெருமான் தனக்கு அருளியதாகவும் கூறுகிறார்.

அகத்தியர் அருளியவை முப்பத்தி இரண்டு சிவ தீட்சைகள்.  குருவிடம் இருந்து பெறப்படும் உபதேசங்களில் முதன்மையானது இந்த சிவ தீட்சைகள்தான்.இந்த தீட்சைகளை முறையாக குருவின் மூலமாய் பெற்று செபிக்க தீட்சைகள் சித்திக்கும் என்கிறார் அகத்தியர்.

அகத்தியர் அருளிய மந்திரங்களை செபிக்கும் போது குறிப்பிட்ட மந்திரங்களுக்கு முன்னர் “ஓம்” என்கிற பிரணவத்தினையும் சேர்த்தே செபிக்க வேண்டுமென தெளிவாக கூறியிருக்கிறார். சில மந்திரங்கள் ஓம் என்று துவங்கினால் கூட அதற்கு முன்னர் இன்னொரு ஓம் சேர்த்து இரு முறை ஓமென செபித்தே மந்திரம் சொல்ல வேண்டும்.எனவே மந்திரம் எப்படி இருந்தாலும் துவக்கத்தில் பிரணவமந்திரத்துடனே அகத்தியர் அருளிய அனைத்து மந்திரங்களையும் செபிக்க வேண்டும்.

சிவதீட்சையில் முப்பத்தி இரண்டு மந்திரங்கள். இவை ஒவ்வொன்றுக்கும் தனித்துவமான பலன்கள். நமக்கு தேவையான மந்திரத்தை மட்டும் சொல்லி பலன் பெற்றுக் கொள்ளலாமே  என்று நினைக்க வேண்டாம். இந்த முப்பத்தி இரண்டு மந்திரங்களும் ஒவ்வொரு படிநிலையாக கருதப் படுகிறது.ஒவ்வொரு நிலையாக பூரணத்துவம் பெற்று மந்திரம் சித்தியடைந்த பலனை உணர்ந்த பின்னரே அடுத்த நிலைக்கு முன்னேறிச் செல்லுதல் வேண்டும்.
http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRLyQUPdhsWathHL4b5zE6IzQNoH6RHQccuTz73sCv5c5uGhWdl7A


"ஸ்ரீம் அம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க முதல் தீட்சை சித்தியாகும். அப்போது இறைவனின் திருக்காட்சியைக் காணலாம் என்கிறார். காட்சியைக் காணும் போது தேகமெல்லாம் வேர்த்துப் போகும். ஆனால் இந்தக் காட்சி கண் மாயை அல்ல, இதைக் கண்டு தேறுவதே முதல் தீட்சையாகும் என்கிறார் அகத்தியர்.

"ஆம் ஓம் ஹரீம் ரீம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க இரண்டாவது தீட்சை சித்தியாகும். அப்போது மூச்சு உள்ளடங்குவதுடன் , முக்தியும், சக்தியும் சித்தியாகும் என்கிறார்.

"குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம்" என்ற மந்திரத்தினை லட்சம் முறை செபிக்க மூன்றாவது தீட்சை சித்தியாகும். அப்போது சந்திரனை போல தேகம் ஒளிவீசும் என்கிறார்.

"ஸ்ரீங் அங் உங்" என்று லட்சம் முறை செபிக்க நான்காவது தீட்சை சித்தியாகும். அப்போது மோட்சமும், தேவதைகள் உனக்கு பணியும் தன்மையும் ஏற்படும் என்கிறார்.

"யங் வங் றீங்" என்று லட்சம் முறை செபிக்க ஐந்தாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேவதைகள் ஒரு சட்டையைத் தரும். அதை அணிந்துகொள் என்கிறார்.

"சங் ரங் உம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க ஆறாவது தீட்சை சித்தியாகும். அப்போது தேகத்தில் வாசம் வீசும். அத்துடன் தேகசுத்தியும் சித்திக்கும் என்கிறார்.

"இங் ரங் அவ்வு" லட்சம் முறை செபிக்க, மானை கையில் ஏந்தி இருக்கும் சிவன் அருகில் இருப்பார். வானவர்கள் மகிழ்ச்சியுடன் வா வா என்று அழைப்பார்கள் என்கிறார்.

"மங் றீங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க ஆனந்தம் உண்டாகும். அத்துடன் தேவர்கள் வந்து உன்னுடன் இணைவார்கள் என்கிறார்.

"வங் கிலியும் சிங் அம் ஐம்" என்று லட்சம் முறை செபிக்க உன் வினைகள் எல்லாம் தீர்ந்து உடல் கல்லைப் போல் உறுதிபெறும்.இவ்வாறு ஒன்பதாவது தீட்சை சித்தியாகும் என்கிறார்.

"வம் வும் அம் இம்" என்று லட்சம் முறை செபித்தால் தேகம் பொன் போல ஆகும். இவை இனிதான பத்தாவது சிவதீட்சை ஆகும் என்கிறார்.

"மங் றீங் றீங்" என்று லட்சம் முறை செபிக்க பதினோராவது தீட்சை சித்திக்கும். பாதி மதியை சடையில் அணிந்த சிவபெருமானின் திருவடியைப் பணிந்து என்றென்றும் தொண்டனாய் இருப்பாய் செய்துபார் என்கிறார்.

கற்பம் உண்டு நிலைத்தவர்க்கு சிவபெருமானின் ஒருமுகமான தற்புருசமே இது. "வம் ஆம் நம்" என்று லட்சம் உரு செபிக்க சித்தியாகும். கெவுன மார்க்கம் செலல ஏதுவாக சட்டை ஒன்றும் கிடைக்கும் அதை அணிந்தால் கெவுன சித்தி கிடைக்கும் என்கிறார்.

அறிவுத் தெளிவுடன் "ஊம் ஆம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் வச்சிர தேகமாகும். எமன் கூட அருகில் வர மாட்டான்.இவ்வாறு பதின்மூன்றாவது தீட்சை சித்திக்கும் என்கிறார்.

"றம் றூம் ஸ்ரீம் அவ்வு" என்று லட்சம் முறை செபிக்க பதின்நான்காவது தீட்சை சித்தியாகும். சாயுட்சய பதம் பெறுவார் என்கிறார் .


"ஸ்ரீம் றீம் றீம் ஓம்" என்று லட்சம் முறை செபிக்க தேகம் கல்போலாகும். தேர்ந்துபார். என்ன அற்புதம் சிவ சிவா நாதவிந்து கட்டிப்போகும்.இதுவே பதினைந்தாவது தீட்சை ஆகும். இவைகளை ஆய்ந்தறிந்தவர்களுக்குப் பதினாறாம் தீட்சையைச் சொல்கிறேன் கேள் என்று தொடர்கிறார்.

"சங் இங் றங்" என்று லட்சம் முறை செபிக்க மாந்தளிர் போல் தேகமுள்ள மனோன்மணித் தாய் தன் இருகரம் நீட்டியபடியே மகனே என வருவாள். அவள் வரும் போதே அவளைப் பணிந்துகொள் என்கிறார் அகத்தியர்.இதுவே பதினாறாவது தீட்சையாகும்.

"றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம்" என்று லட்சம் முறை செபிக்க காய்ப்பான நரையும் இல்லை. திரையும் இல்லை. கற்பத்தை உண்ண சுருக்கான வழி. வழியறியாதவர்கள் உன்னை ஏய்த்து விடுவார்கள். அவர்களின் ஏய்ப்புக்கு நீ ஆளாகிவிடாதே என்கிறார்.மேலும் இது ஒரு நல்வாய்ப்பு என்கிறார் அகத்தியர். இதுவே பதினேழாம் சிவதீட்சையாகும்.


"சங் சிங் ரா ரா" என்று லட்சம் முறை செபிக்க சட்டை போகும். இது ஈஸ்வரியாளின் தீட்சை என்கிறார். இது பதினெட்டாவது தீட்சையாகும்.

"திரிநேத்திராயா வா வா" என்று விருப்பமுடன் லட்சம் முறை செபிக்க பத்தொன்பதாவது தீட்சை சித்தியாகும்.இந்த தீட்சை சட்டையை தள்ளும் என்கிறார்.

"ஸ்ரீங்காரதேவாய நமா" என்று லட்சம் முறை செபிக்க தொட்டதெல்லாம் சித்தியாகும்.இது இருபதாவது சிவதீட்சையாகும்.


"இங் அங் றங்" என்று லட்சம் முறை செபிக்க எட்டுத் திசையையும் வெல்லலாம்.இதுவே இருபத்தியொன்றாவது சிவதீட்சையாகும்.

"அரி அரி ஓம்" என்று என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி இரண்டாவது சிவதீட்சை சித்தியாகும்.


"ரா ரா ரா றீம் றீம்" என்று லட்சம் முறை செபிக்க இருபத்தி மூன்றாவது சிவதீட்சை சித்தியாகும்.

குணமாகவும் மறைவாகவும் "லீ லீ லீ அரஹர றீ றீ றி" என்று லட்சம் முறை செபித்து வாழ்த்துவாய் என்கிறார் அகத்தியர்.

இருபத்தி ஐந்தாவது தீட்சையைக்கேள். கெவுனம் ஓடவென்றால் இதைக்கேள். "ஏ ஏ ஏ ஊ ஊ ஊ" என்று லட்சம் முறை செபிக்க இந்த தீட்சை சித்தியாகும் என்கிறார்.

இருபத்து ஆறாவது தீட்சையைக்கேள், இது மாதாவின் தீட்சை இது, "இஷயா இஷயா ஓம்" என்று லட்சம் முறை செபிக்க மௌனம் சித்தியாகும் என்கிறார்.

இருபத்தி ஏழாவது தீட்சையைக்கேள். இத்தீட்சையில் நீயே சிவனாவாய். அதைச் சொல்கிறேன். "ஓம் சிவாய சிவா றீங்" என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.

இருபத்தி எட்டாவது தீட்சையைக்கேள். "சிவ ஓம் சிவாய நம" என்று லட்சம் முறை செபிக்க உலகத்தில் பூரிப்பான புகழ் உண்டாகும் என்கிறார் அகத்தியர்.

இருபத்தி ஒன்பதாவது தீட்சையைக்கேள். இது போற்றுதற்குரிய புகழ் கிடைக்கும். அதற்கு "சவ்வும் மவ்வும்" என்று லட்சம் முறை செபிக்க வேண்டும் என்கிறார்.

முப்பதாவது தீட்சையைக்கேள். "மங் சங் கங்" என்று லட்சம் உரு செபிக்க
உன் தேகம் ஒருநாளும் அழியாது. அகம் மகிழ நரையும் இல்லை திரையும் இல்லை. யுகம் வரைக்கும் உன் தேகத்தை நிலைநிறுத்தும், "ஸ்ரீம் றீம்" என்று ஓதுவாய் லட்சம் உரு இது முப்பத்தியொன்றாம் தீட்சை என்கிறார்.

முப்பத்து இரண்டாந் தீட்சைகேள். "நங் கிலி சிங் கிலி" என்று லட்சம் உரு செபிக்க கோடி காலம் வரை இறவாமலிருத்தும் மற்றுமுள்ள காலமனைத்தும் வாழ்த்தி தோத்திரங்கள் செய்து கொள்வாய். கொன்றாலும் வாள் கொண்டு வெட்டிப்போட்டாலும் வெட்டுப்பட்ட இடம் சற்றும் குறையாமல் ஒட்டிக்கொள்ளும் என்கிறார்.

நாடியிலிருந்த பாடல் அப்படியே.. சில வார்த்தைகள் புரியவில்லையே என்று கவலைப்படாதீர்கள். உங்கள் வேலை முதல் படியில் கால் வைப்பது மட்டுமே. மீதியை அந்த சிவம் பார்த்துக் கொள்ளும்...
=================================================
"தயவான தீட்சைவிதிக் காதிகாப்பு
தான்பாட வாராய்ந்து தெளிந்துபார்த்து
செயலான முப்பதி ரெண்டுதீட்சை
சித்தி செய்த பேர்க்கெல்லாம் ஞானம்சித்தி
சுகமான பாவவினை அற்றுப்போகும்
சோதிசிவ பாதமதைக் காணலாகும்
நயமாக எந்தனுக்கு உபதேசித்த
நற்குமரன் திருவருளே தீட்ட்சைக்காப்பு"


"தீட்சையிலே முதற்தீட்சை சிவதீட்சைதான்
ஸ்ரீம் அம் ஓம் யென் றுலட்சம் ஜெபித்துவோதக்
காட்சிபெறத் தேகமெல்லாம் வியர்வை காணும்
கண்மாய்கை இல்லையடா கண்டுதேறு
ஆச்சுதடா சிவதீட்சை ரெண்டுங்கேளு
ஆம் ஓம் ஹரீம் ரீம் யென்று நீயும்
மூச்சடா உள்ளடங்கும் லட்சமோத
முத்தியுண்டாஞ் சத்தியுண்டாஞ் சித்தியாமே."


"சித்தியாஞ் சிவதீட்சை மூன்றுகேளு
செப்புவேன் குறோம் ஸ்ரீம் றீம் றீம் நம் யென்று லட்சம்
பத்தியாய்ச் செய்துவர மோட்சமாகும்
பாணுவைப்போற் தேகமெல்லாம் ஒளியுமாகும்
துத்தியஞ்செய் சிவதீட்சை நாலுகேளு
துடியுடனே ஸ்ரீங் அங் உங் கென்று
முத்திபெற லட்சமுருச் செபித்தாற்சித்தி
மோட்சமய்யா தேவதைகள் பணியுந்தானே."


"பணிந்துதான் சிவதீட்சை அஞ்சுங்கேளு
பண்பாக யங் வங் றீங் றுந்தான்
துணிந்தோது லட்சமுருச் செபித்தாற்சித்தி
தொண்டுசெய்வார் தேவதைகள் சட்டைக்கும்
அணிந்துகொள்வாய் சிவதீட்சை ஆறுங்கேளு
அன்புடனே சங் ரங் உம் ஆம் என்றுலட்சம்
குனிந்துநிமிர் தேகமதில் வாசம் வீசும்
குணமாகுந் தெகசித்தி சுருக்குத்தானே."




"தானேசெய் சிவதழுட்சை ஏழுநீயும்
சந்தோஸ மாய்ஓது இங் ரங் அவ்வு மென்றுலட்சம்
மானேந்தும் ஈசுவரனும் அருகில் நிற்பார்
வானவர்கள் மகிழ்வாக வாவென்பார்கள்
நானென்ற தீட்சையெட்டும் உற்றுக்கேளு
நன்றாக மங் றீங் ரா ரா வென் றுலட்சம்
ஆனந்த முண்டாகுந் தேவர்வந்து
அன்பாக உனைச்சேர்ந்து அணைவார்பாரே."


"உனைச் சேர்வார் சித்தர்களுஞ் சிவனார் தீட்சை
உன்பதுதான் வங் கிலியும் சிங் அம் ஐம் என்றுலட்சம்
வினையொழிந்து என்தேகம் கல்போலாகும்
மெய்யான சட்டையொன்று தள்ளிப்போடும்
தினந்துதிக்கும் சிவதீட்சை பத்தைத்தானுஞ்
செப்பார்கள் செப்புகிறென் வம் வும் அம் இம் என்று
எனைப்போலே சொல்வார்கள் தேகம் பொன்னாம்
இனிதான சிவதீட்சை ஓதினேனே."


"ஓதியதோர் சிவதீட்சை பதினொன்றுந்தான்
உரைக்கின்றேன் மங் றீங் றீங் கென்று லட்சம்
பாதிமதி சடைக்கணிந்த சிவனார்பாதம்
பணிந்து தொண்ட னாய் இருப்பாய் செய்துபாரு
நீதிபெறும் பன்னிரெண்டாஞ சத்திதீட்சை
நிலைத்தவர்க்குத் தற்புருசம் வம் ஆம் நம் என் றுலட்சம்
சந்தித்துச் செபித்திடவே சித்தியாகும்
சட்டையொன்று தள்ளுமடா கெவுனமாமே."


"ஆமப்பா சத்திபதி மூன்றாந் தீட்சை
அறிவுடனே ஊம் ஆம் என்றே லட்சம்
நாமப்பா செபித்திடவே வச்சிரதேகம்
நமனும்இவன் கிட்டவந்து அணுகான் பாரு
ஊமப்பா பதினாலாஞ் சத்தி தீட்சை
உண்மையாம் றம் றூம் ஸ்ரீம் அவ்வு மென்று
தாமப்பா லட்சமுரு செபித்தாற்சித்தி
சாயுட்சய பதம்பெறுவார் சார்ந்துகேளே!"


"சார்ந்துகேள் பதினைந்தாஞ் சத்திதீட்சை
தயவாக ஸ்ரீம் றீம் றீம் ஓம் என்று லட்சம்
தேர்நது பார் தேகமுந்தான் கல்போலாகும்
சிவசிவா நாதவிந்து கட்டிப்போகும்
ஆய்ந்தவர்க்குப் பதினாறாந் தீட்சை கேளு
அப்பனே சங் இங் றங் கென்றே லட்சம்
மாந்தளிர்போல் தேகமுள்ள மனோன்மணியாள்
வருவாளே மகனென்று பணிந்து கொள்ளே."




"வாய்ப்பான பதினேழாஞ் சிவதீட்சை
வழுத்துவேன் றீங் றீங் ஸ்ரீம் ஸ்ரீம் என்றே லட்சம்
காய்ப்பான நரைதிரையும் இல்லையில்லை
கற்பமதை உண்டிடவே சுருக்குமெத்த
ஏய்ப்பார்கள் ஏய்ப்புக்குள் அகப்படாதே
ஈஸ்வரியாள் தீட்ரைச பதினெட்டுங்கேளு
தீய்ப்பான சங் சிங் ரா ரா வென்று
செபித்திடுநீ லட்சமுரு சட்டைபோமே."


"சட்டைதள்ளும் பத்தொன்பதாந் தீட்சை தன்னை
தான்கேளு திரிநேத்திராயா வா வா வென்று
இட்டமுடன் லட்சமுரு செபித்தாற்சித்தி
இருபதாஞ் தீட்சையது ஸ்ரீங்கார தேவாயநமா வென்று
தொட்டதுவே லட்சத்திற்கு சித்தியாகும்
சொல்லுவேன் மூவேழு தீட்சை கேளு
அட்டதிசை வெல்லுமடா இங் அங் றங் கென்றுந்தான்
ஐநான்கு தீட்சைரெண்டும் அறையக் கேளே."


"அரையக்கேள் அரிஅரி ஓம் என்றுவோத
அப்பனே லட்சத்திற் சித்தியாகும்
முறையாக இருபத்து மூன்றாந் தீட்ரைச
மொழிந்திடுவாய் ரா ரா றீம் றீம் என்று
குறையாமற் செய்துவிடு சித்தியாகும்
குணமாக மூவெட்டுத் தீட்சை கேளு
மறைவாக லீ லீ லீ அரஹர றீ றி என்று
வாழ்த்துவாய் லட்சமுரு கெவுனிப்பாயே."


"கெவுனமது ஒடவென்றால் ஐயைந்து தீட்சை
கேளு நீ ஏ ஏ ஏ ஊ ஊ ஊ வென்று லட்சம்
மவனமது சித்தியப்பா இருப்பதாறில்
மாதாவின் தீட்சையது இஷாய இஷாய ஓம்என்று லட்சம்
சிவனாகும் இருபத்தேழ் தீட்சை தன்னில்
செப்புவேன் ஓம்சிவாய சிவா றீங் கென்று லட்சம்
புவனமதில் இருபத்தி யெட்டாந் தீட்சை
பூரிப்பாய் சிவஓம் சிவாயநமவெனப் புகழுண்டாமே."


"புகழுண்டாம் இருபத்தி ஒன்பதாந் தீட்சை
போற்றுவாய் சவ்வும் மவ்வும் என்று லட்சம்
நெகிளாது அய்யாறு தீட்சையப்பா
நிலைத்தவர்க்கு மங் சங் கங் கென்று லட்சம்
அகமகிழ உன்தேகம் ஒருநாளுங் தான்
அழியாது நரைதிரையும் இல்லையில்லை
உகம்வறைக்கும் இருத்துமடா முப்பதொன்று
ஓதுவாய் ஸ்ரீம் றீம் கென்று தானே."


"என்றுதான் லட்சமுரு செபித்தாற் சித்தி
இறவாமல் இருத்துமடா கோடிகாலம்
நன்றுகாண் முப்பத்தி ரெண்டாந் திட்சை
நங் கிலி சிங் கிலி என்றே லட்சம்
மன்றுள்ள காலம்வரை இரு;ததுந்தேகம்
வாழ்;த்திநீ தோத்திரங்கள் செய்துகொள்வாய்
கொன்றாலும் வாள்கொண்டு வெட்டினாலும்
குறையாமல் வாள்வெட்டுப் பொருந்துந்தானே."


Read more: http://www.livingextra.com/2011/07/blog-post_08.html#ixzz1RVHeHX3m

No comments:

Post a Comment