Search This Blog

Friday, June 3, 2011

தமிழ் அமுதம்!

தமிழ் அமுதம்! 

“எண்ணும் எழுத்தும் கண்ணெனத் தகும்” என ஓளவையாரும், “எண் என்ப ஏனை எழுத்தென்ப இரண்டும் கண் என்ப வாழும் உயிர்க்கு” என திருவள்ளுவரும் எண்களின் முக்கியத்துவத்தை தங்கள் பாடல்களில் குறித்துக் காட்டியுள்ளனர்.

உலகின் பல மொழிகளுக்கு சொந்தமாக எண்கள் எதுவுமே இருந்ததில்லை. ஆரம்ப காலத்தில் பல மொழிபேசும் மக்கள் எண்களைப் பற்றி தெளிவான கருத்தோட்டம் இல்லாதவர்களாகவே வாழ்ந்துவந்தனர். இன்று உலகம் முழுவதும் பயன்பாட்டில் உள்ள இந்து அராபிய எண்களின் அறிமுகத்துக்குப் பின்னரே எண்கள் பற்றிய மிகத் தெளிவான வரையறைகள் வகுக்கப்பட்டன. இந்த இந்து அராபிய எண்களின் தோற்றுவாய் தமிழ்தான் என்பதை தெரிந்துகொள்ளும்போது ஏற்படும் மகிழ்சி மட்டற்றது.

ஆதிகாலம் முதல் தமிழ் மக்களிடையே எண்கள், கணிதம், கால-நேர அவவைகள் பற்றி தெளிவான அறிவு நிரம்பியிருந்தது. சங்கநூல்களில் இந்த எண் அளவைகள் பற்றி பலப் பல குறிப்புகள் காணப்படுகின்றன. கணியன் பூங்குன்றனார், கணக்காயன் தத்தனார், மதுரைக் கணக்காயனார், கணியாதனார் என்ற சங்ககால புலவர்களின் பெயர்களே இவற்றுக்கு சாட்சி எனலாம். தொல்காப்பியம் முதல் அகநானூறு, புறநானூறு என சங்கநூல்களில் எல்லாம் கணிதம் பற்றியும் எண்கள் பற்றியும் ஏராளமான சொற்கள் ஆங்காங்கு விரவிக்கிடக்கின்றன.

திருவள்ளுவர் திருக்குறளில் ஒன்று என 11 இடங்களிலும், இரண்டை 10 இடங்களிலும், நான்கை 11 இடங்களிலும், ஐந்தை 14 இடங்களிலும், ஆறு என்ற எண்ணை ஒரு இடத்திலும், ஏழு என 7 இடங்களிலும், எட்டு, பத்து, ஆயிரம் என்பவற்றை ஒவ்வொரு குறள்களிலும், கோடியை 7 இடங்களிலும், பாதியை (அரை) ஒரு இடத்திலும், காற்பாகம் (கால்) என ஒரு குறளிலும் எழுதியுள்ளார்.

“ஒரூ கை, இரூ கை மாஅல் ! முக் கை முனிவ! நாற் கை அண்ணல்!
ஐங் கைம் மைந்த! அறு கை நெடு வேள்! எழு கையாள! எண் கை ஏந்தல்!
ஒன்பதிற்றுத் தடக் கை மன் பேராள! பதிற்றுக் கை மதவலி! நூற்றுக் கை ஆற்றல்!
ஆயிரம் விரித்த கைம் மாய மள்ள! பதினாயிரம் கை முதுமொழி முதல்வ!
நூறாயிரம் கை ஆறு அறி கடவுள்! அனைத்தும் அல்ல பல அடுக்கல் ஆம்பல்
இனைத்து என எண் வரம்பு அறியா யாக்கையை!” என பரிபாடலில் (3/ 34-45) தமிழ் எண்கள் 1-10 வரைக்கும் வரிசையாக கூறப்பட்டு தொடர்ந்து 100, 1000, 10000, 100000 என 100000000000000 எனும் எண் (ஆம்பல் - hundred trillion) வரை விபரிக்கப்படுவதை காணலாம். அதே பரிபாடலில்

“ஒரு நிழல் ஆக்கிய ஏமத்தை மாதேர்
பாழ் என, கால் என, பாகு என, ஒன்று என,
இரண்டு என, மூன்று என, நான்கு என, ஐந்து என,
ஆறு என, ஏழு என, எட்டு என, தொண்டு என,
நால்வகை ஊழி எண் நவிற்றும் சிறப்பினை” என வரும் பரிபாடலின் (3/ 76-80) அடிகளால் தமிழ் எண்கள் 0, 1/4, ½, 1, 2, 3, 4, 5, 6, 7, 8, 9 என வரிசைப்பபடுத்திக் காட்டப்படுகின்றன. மேலும் தொண்டு மற்றும் ஒன்பதிற்று எனும் சொற்களும் இலக்கம் ஒன்பதை குறிக்கவே சமகாலத்தில் பயன்படுத்தப்பட்டன என்பது புலனாகும்.

இவற்றிலிருந்து கிறிஸ்துவுக்கு முற்பட்ட காலத்திலேயே தமிழ் எண்கள் வழக்கில் இருந்ததை நாம் அறியமுடிகிறது. தற்போது நாம் பூச்சியம் என்று சொல்வதன் திருத்தமான தமிழ் சொல் பாழ் ஆகும். பாழ் என்றால் எதுவுமற்ற வெறுமை என அர்த்தம். பாழ் என்ற தமிழ் சொல்லிலிருந்தே ழகர உச்சரிப்பு இல்லாமையால் பூஜ்யம் என்கின்ற வடமொழி சொல் (பாழ்-அம்… பாழ்ச்-அம்… பூஜ்அம்..)  தோன்றிற்று. என்பர். பாழ் என்பதற்கு தமிழில் சுழி எனவும் வேறொரு சொல் குறிக்கப்படுவதுண்டு. சுழி என்றால் சுழிக்கப்பட்ட வெற்று வளையம் என பொருள்படும். இதிலிருந்தே சூன்யம் என வடமொழி சொல் தோன்றியது என்பர். சூன்யம் என்பதிலிருந்தே அராபியமொழியூடாக ஐரோப்பிய மொழிகளுக்கு “Cyber” என்பதுவும், “Zero” என்பதுவும் தோற்றம் பெற்றன.

தமிழில் ஒன்று என்று அழகாக நாம் உச்சரிக்கும் சொல்தான் இன்றைய ஆங்கிலத்தில் “One” என மாற்றம் பெற்றுள்ளதை நாம் அறிந்துகொள்ளலாம். இது நேரடியாக தமிழிலிருந்து அரபுக்கு சென்று (ஒ-அ-ஹித் uâhid – அரபு மொழி) அங்கிருந்து ஐரோப்பியர்களிடையே நுழைந்தது. இதுபோலவே இரண்டு என்பதும் அரேபியர்கள் ஊடாக (இத்-னாதான்  ithnatân - அரபு மொழி) ஐரோப்பாவை அடைந்து முடிவில் ஆங்கிலத்தில் Two என வடிவம் பெற்றது.

இரண்டு (துளிர்) – துவி (வடமொழி) – Two (ஆங்கிலம்)
மூன்று (திரி) - திரி (வடமொழி) -  – Three (ஆங்கிலம்)
நான்கு (சட்டகம்) -சதுர் /சார் (வடமொழி) – பார் /அர் பார் (அரபுமொழி)– Four (ஆங்கிலம்)
ஐந்து – பஞ்ச (வடமொழி) – Five (ஆங்கிலம்)
ஆறு - ஷஷ்ர (வடமொழிக்கு மொழிபெயர்த்ததால்) – Six (ஆங்கிலம்)
ஏழு - ஸப்த (வடமொழிக்கு மொழிபெயர்த்ததால்) - Seven (ஆங்கிலம்)
எட்டு  - அட்ட (வடமொழி) - Eight (ஆங்கிலம்)
ஒன்பது (தொண்டு) – நவ (வடமொழிக்கு மொழிபெயர்த்ததால்) – Nine (ஆங்கிலம்)
பத்து (பல்து / பஃது) – தச (வடமொழிக்கு மொழிபெயர்த்ததால்) – Ten (ஆங்கிலம்)

தமிழ் எண்கள் பிறமொழிகளில் உச்சரிக்கப்படும் விதத்தை பார்க்கும்போது அவை இரண்டு விதமாக அந்த மொழிகளுக்கு போய்ச் சேர்ந்திருப்பதை நாம் காணலாம். ஒன்று நேரடி தமிழ் உச்சரிப்பு திரிபடைந்து பிறமொழிகளில் அவர்களது உச்சரிப்புக்கு ஏற்ற வகையில் மாற்றமுற்ற வடிவம். மற்றையது எண்களுக்குரிய தமிழ் சொல்லில் அர்த்தத்தை நேரடியாக பிற மொழிக்கு மொழிபெயர்ப்பு செய்ததன் விளைவாக தோற்றம் பெற்ற எண் பெயர்கள் ஆகும். இவ்வாறான சொற் பிறப்புகள் பொதுவாக அனைத்து மொழிகளிலும் காணப்படுகின்றன.

தமிழிலும், வடமொழியிலும் பல சொற்கள் பொதுவான உச்சரிப்பு, மற்றும் பொருள் விளக்கத்துடன் காணப்படுகின்றன. எந்த மொழியிலிருந்து எந்த சொல், எந்த மொழிக்கு இரவல் பெறப்பட்டது என்பதுவும் அறியமுடியாததொன்றாகவே இருந்துவருகிறது. இது இவ்விரு மொழிகளும் ஒரே மூலத்திருந்து அல்லது ஓரே மக்கள் கூட்டத்திலிருந்து தோற்றம் பெற்று இரு வேறு கிளைகளாக வளர்ச்சியுற்றதையே காட்டி நிற்கின்றது எனலாம். எனினும் மொழி அமைப்புகள், மொழி தோற்றுவாய், இனத் தோற்றுவாய் என்பவற்றை அடிப்படையாக வைத்து ஆய்வு செய்த பல அறிஞர்களினதும் கருத்து தமிழே முதலில் தோன்றிய மொழி என்பதாகும். சிந்துவெளி மக்கள் பயன்படுத்தியது தமிழின் தொன்மை வடிவத்தையே எனவும், பின்னாளில் உள் நுழைந்த ஆரியர்கள் கலப்பால் வடமொழி தோற்றம் பெற்றது எனவும் தமிழ் ஆய்வாளர்கள் பலரும் தெரிவிக்கின்றனர்.






No comments:

Post a Comment