Search This Blog

Thursday, December 29, 2011

தமிழ்மொழி

தமிழ்மொழியானது 2400 ஆண்டுகளுக்கு முன்பே எழுத்தின் படஎழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து ஆகிய மூன்று நிலைகளையும் கடந்து வரியெழுத்து நிலையாகிய நான்காவது நிலையை அடைந்திருந்தது. இதனை தொல்காப்பியம் எமக்கு அறியத்தருகின்றது என கடந்த இதழில் எழுதியிருந்தேன். அதற்கு, தமிழ் 2400 ஆண்டுகளுக்கு முன்பே வரியெழுத்து நிலையை அடைந்திருந்தது என்று எப்படி உங்களால் எழுதமுடியும்? படஎழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து என்பன என்ன? என்றும் சிலர் கேட்டிருந்தார்கள். ஆதலால் தொல்காப்பியத்தின் காலத்தை சற்று ஆராய்வோம்.

1. இன்று இருக்கும் தமிழ் நூல்களிலே காலத்தால் பழமையானது தொல்காப்பியம். இது உலக மொழிகளில் கிடைக்கக்கூடிய இலக்கணநூல்களிலே பழமையானதுமாகும். தொல்காப்பியர் இடைச்சங்ககாலப் புலவர். இவருடன் படித்த பனம்பாரனார் தொல்காப்பியப் பாயிரத்தைப் (முகவுரையை) பாடியுள்ளார். அதில் தமிழ்மொழி பேசப்பட்ட நிலத்தின் எல்லைகளை குறித்துள்ளார். “வடவேங்கடம் தென்குமரி ஆயிடை தமிழ் கூறும் நல் உலகம்” இதில் பனம்பாரனார் தமிழ்மொழி பேசப்படும் நாடு என்று கூறாமல் தமிழ்மொழி பேசப்படும் உலகம் என்றும் கூறியிருப்பதை கவனத்தில் கொள்ளவேண்டும். ஒரு நாடு உலகம் ஆகாது. பல நாடுகள் சேர்ந்ததே உலகம். எனவே பனம்பாரனார் சொல்லிய நில எல்லைக்குள் தமிழ்மொழி பேசப்பட்ட பல நாடுகள் இருந்திருக்கின்றன. அவரின் கருத்திற்கு துணைசேர்ப்பது போல் தொல்காப்பியரும் “இயற்சொல் தாமே செந்தமிழ் நிலத்து வழக்கொடு சிவணி” அதாவது இயற்சொல் செந்தமிழ் பேசப்படும் நிலத்தில் வழங்கும் சொல்லாய் இருப்பதே ஆகும். இதில் செந்தமிழ் நிலத்து என்று சொன்னவர் திசைச்சொல்லை கூறுமிடத்தில் “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும்” எனப் பிரித்துக் காட்டுகின்றார். “செந்தமிழ் சேர்ந்த பன்னிரு நிலத்தும் தம்குறிப்பினவே திசைச்சொற் கிளவி” அதாவது தமிழ்கூறும் உலகைச் சூழ்ந்துள்ள செந்தமிழ் கலந்த வேற்றுமொழிகள் பேசப்படும் நாட்டுச்சொற்கள் தமிழிலே வந்து வழங்கும் போது அவை திசைச்சொற்கள் எனப்படும்.

இதனால் தொல்காப்பியர் காலத்தில் செந்தமிழ் நிலமும் அதைச்சூழ செந்தமிழ் சேர்ந்த பன்னிரெண்டு நிலமும் இருந்தது தெரியவருகின்றது. ஒர் இடத்திற்கு எல்லை கூறும்போது நான்கு திசைகளில் எல்லை கூறுவார்கள். ஆனால் பனம்பாரனாரோ தமிழ்கூறும் நல்லுலகிற்கு வடவேங்கடம் தென்குமரி என இரண்டு எல்லைகளையே கூறியுள்ளார். அது ஏன்?

தொல்காப்பிய உரையாசிரியரான இளம்பூரணர் “கடல் கொள்வதன் முன்பு பிறநாடு உண்மையின் தெற்கும் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் பிறநாடு இன்மையின் கூறப்படாவாயின என இதற்கு விளக்கம் தந்துள்ளார்”. வட வேங்கடத்திற்கு வடக்கே பிறநாடு இருப்பது போல கடல் கோளின் முன்னர் குமரிக்குத் தெற்கேயும் பிறநாடு இருந்ததால் எல்லை கூறப்பட்டது. கிழக்கும் மேற்கும் கடலாதலால் எல்லை கூறவில்லை. இவர் கருத்தின்படி பனம்பாரனாரும் தொல்காப்பியரும் குமரி கடல்கோளால் அழியுமுன் வாழ்ந்தவர்கள் ஆகின்றனர்.

2. தொல்காப்பியத்தின் இன்னொரு உரையாசிரியரான பேராசிரியரும் தமது தொல்காப்பிய உரையில் “பனம்பாரனார்”, “வடவேங்கடம்”, தென்குமாரி எனக் குமரியாற்றினை எல்லையாகக் கூறி பாயிரம் செய்தமை கடலகத்துப் பட்டுக் குமரியாறும் பனைநாட்டோடு கெடுவதற்கு முன்னையது” எனக் கூறியுள்ளார்.

பனம்பாரனார் தென்குமரி என்றதை பேராசிரியர் குமரியாறு என தெளிவுபடுத்தியுள்ளார். அந்நாளில் குமரியாறு இருந்த உண்மையை Òகுமரியம் பெருந்துறை அயிரை மாந்தி” என்று புறநானூற்றில் பிசிராந்தையார் சொல்லி இருப்பதால் நாமறியலாம்.

அயிரை என்பது ஒருவகை மீன். இந்த அயிரை மீன் ஆற்றுநீரிலே வாழும். கடல் நீரில் வாழாது. எனவே இப்பாடலில் பிசிராந்தையார் சொன்ன குமரியம் பெருந்துறை இன்று தமிழ்நாட்டில் உள்ள கன்னியாகுமரி அல்ல. இன்றைய குமரிமுனை மூன்று பக்கமும் கடலால் சூழப்பட்டது. ஆதலால் குமரியம் பெருந்துறை குமாரியாற்றங் கரையில் இருந்திருக்கின்றது. பெருந்துறை என்பதால் அது ஒரு துறைமுகமாகும். தமிழரின் போக்குவரத்து குமரியாற்றில் நடந்தது என்ற உண்மையை இது எடுத்துக் காட்டுகின்றது.

இந்த குமரிப்பெருந்துறையை பின்னாளில் வந்த பௌத்த பாளி நூல்கள் மகாதித்த என்கின்றன. அதனை நாம் மாதோட்டம் என்கிறோம். மனித நாகரீகமே ஆற்றங்கரைகளிலே தான் வளர்ந்தது. பழந்தமிழர் நாகரீகமும் குமரியாற்றங்கரையில் உருவானது என்பதை இது காட்டுகின்றது.

தொல்காப்பியப் பாயிரம் பாடிய பனம்பாரனாரே குறுந்தொகையில் “ஆரவாரித்து எழுந்த கடல், ஏறி மிதித்ததால் நீரினிடையே மலையின் உச்சி அசைந்ததை”, “ஆர்கலி மிதித்த நீர்திகழ் சிலம்பில் கூரசைந் தனையை” எனக் கூறியுள்ளார். ஆதலால் அவர் காலத்தில் கடல்கோள் ஒன்று நடந்திருக்க வேண்டும். அதைப் பார்த்த பின் அந்த உண்மையை இவ்வரிகளில் அவர் பதிவு செய்திருக்கலாம்.

தெற்கே குமரி கடல்கோளால் அழிந்ததை மார்க்கண்டேயர் புராணமும் கூறுகின்றது. “அயம்பது நவமஸ் தேஷாம் த்விப சாகர ஸம்வ்ருத குமாராக்யா பாரிக்யாதோ த்வீபோயம் தஷிணோத்ர” பல நாடுகளை அழித்த மாபெரும் கடல்கோள் சொலமன் அரசனின் காலத்திற்கு 300 வருடங்களுக்கு முன் நடந்தது. The Anchor Bible Dictionary அது நடந்த காலத்தை கி.மு 1250 இந்த கடல்கோள் நடந்த காலத்திற்கு தொல்காப்பியர் காலம் சாரிவருமா என்பது ஆராயப்பட வேண்டிய விடயம்.

5. தொல்காப்பியரை பனம்பாரனார் தொல்காப்பிய பாயிரத்தில் “ஐந்திரம் நிறைந்த தொல்காப்பியன்” எனப் புகழ்ந்துள்ளார். ஐந்திரம் என்பது தொல்காப்பியர் படித்த பழந்தமிழ் இலக்கண நூல். அந்த ஐந்திரத்தை மயன் எழுதினான். ஐந்திரம் பாணினீயம் எனும் வடமொழி இலக்கணத்திற்கு முந்தியது. பாணினீயத்தை எழுதிய பாணினியின் காலம் கி.மு 4ம் நூற்றாண்டாகும். சிலர் இந்திரனால் எழுதப்பட்டது ஐந்திரம் என்பர். அது பிழையான கருத்தாகும். இந்திரன் எழுதிய வடமொழி இலக்கண நூல் இந்திரம்.

6. சமணம், பௌத்தம் எனும் இரு மதக் கொள்கைகளும் தமிழ் நிலத்தில் பரவியதற்கு ஆதாரமாக இருக்கும் கல்வெட்டுக்களும் நூல்களும் கி.மு 3ம் நூற்றாண்டைச் சேர்ந்தவையாகும். தொல்காப்பியத்தில் சமண, பௌத்த மதக்கொள்கைகள் பற்றிய குறிப்புகள் எதுவும் இல்லை. எனவே இவ்விரு சமயமும் தமிழ்நிலத்தில் பரவ முன்னரே தொல்காப்பியம் எழுதப்பட்டது எனக்கொள்ளலே பெருந்தும். மேற்கூறிய ஆதாரங்கள் யாவும் தொல்காப்பியர் காலத்தை கி.மு 4ம் நூற்றாண்டிற்கு முன்பே கொண்டு செல்கின்றன.


அடுத்து படஎழுத்து, கருத்தெழுத்து, அசையெழுத்து என்றால் என்ன? என்பதைப் பார்ப்போம். மனிதன் தனது எண்ணங்களை மற்றவர்களுக்கு வெளிப்படுத்த உருவங்களை படமாகக் கீறினான். அதனை உருவ எழுத்து என்றும் படஎழுத்தென்றும் கூறுவர். படஎழுத்தில் உள்ள உருவம் அதன் பெயரைச் குறிக்காமல் ஒரு கருத்தைச் சொல்லின் அது கருத்தெழுத்து எனப்படும். அதாவது “புகைத்தல் தடைசெய்யப்பட்டுள்ளது (No Smoking)” என்பதற்கு நாம் பாவிக்கும் அடையாளத்தை போன்றதே கருத்தெழுத்து. இந்த எழுத்துக்களுக்கு ஒலி இல்லை.

அசையெழுத்து என்பது கூட்டெழுத்தாகும். க்+அ எனும் இரு எழுத்துக்கள் கூட்டாகச் சேர்ந்து க எனும் எழுத்தை உருவாக்கும். அதுபோன்றதே அசையெழுத்து. தமிழிலிலுள்ள உயிர்மெய் எழுத்துக்களை அசையெழுத்து என்றும் கூறலாம். தமிழில் உள்ள சொற்களில் எழுத்து என்னும் சொல் மிகவும் சுவையான கருத்தாழம் உள்ள சொல்லாகும். எழுத்து என்றால் என்ன? எழுப்பப்படுவதா? எழுதப்படுவதா? எழுத்தை நாம் உச்சரிக்கும் போது எழுப்பப்படுவதாகவும் அதை எழுதும் பொழுது எழுதப்படுவதாகவும் அமைந்துள்ளது. எழுத்தின் ஓசை எழுப்பப்படும் பொழுது ஒலிவடிவத்தையும் அது எழுதப்படும் பொழுது வரிவடிவத்தையும் எழுத்து பெறுகின்றது. எனவே ஒலிவடிவம், வரிவடிவம் இரண்டையும் பெற்று விளங்குவதே எழுத்தாகும்.

தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே தமிழ் எழுத்துகள் ஒலிவடிவத்தை பெற்றுவிட்டன. அவரது காலத்திற்கு முன்பு வாழ்ந்த தமிழ்புலவர்கள் எழுத்தின் ஒலிக்கு கால வரையறையும் செய்திருந்தனர். தொல்காப்பியர் அதனை “அ இ உ எ ஒ என்னும் அப்பால் ஐந்தும் ஓரளபு இசைக்குங் குற்றெழுத்து என்ப “நீட்டம் வேண்டின் அவ்வள புடைய கூட்டி எழுஉதல் என்மனார் புலவர்” எனக்கூறுவதால் அறியலாம்.

அ இ உ எ ஒ என்ற ஐந்தையும் ஒரு மாத்திரை ஒலிக்கும் குற்றெழுத்துக்கள் என்று சொல்வர் எனவும் (இசைக்கும் – ஒலிக்கும்) நீண்டஒலி வேண்டும் மானால் அந்த அளவுக்கு எழுத்துக்களை கூட்டி அவ்வொலியை உண்டாக்குக என்று புலவர் கூறுவரெனவும் குறிப்பிட்டுள்ளார். தமிழ் எழுத்துகள் தொல்காப்பியர் காலத்திற்கு முன்பே வரிவடிவத்தையும் பெற்றுவிட்டதால் ஒரு சில எழுத்துகளுக்கு மட்டுமே வரிவடிவு கூறியுள்ளார். அதனாலேயே போன இதழில் வரியெழுத்து வடிவாக இருந்த தமிழ்மொழிக்கே தொல்காப்பியர் இலக்கணம் வகுத்துள்ளார் என எழுதினேன்.

நன்றி - ஆம்பல் இணைய சஞ்சிகை -இலண்டன்

No comments:

Post a Comment