Search This Blog

Saturday, May 28, 2011

Green Zone - பச்சைவனமும் பாலைவனமும் ....

Green Zone - பச்சைவனமும் பாலைவனமும் ....


green_zone_xlg
இல்லாத பேரழிவு ஆயுதங்களைத் தேட நியமிக்கப்பட்டு இருக்கும் அமெரிக்க ராணுவ குழு ஒன்றின் தலைவன் ராய் மில்லர்.தனக்கு கொடுக்கப்படும் தகவல்களை நம்பி,தனது உயிரையும் தனது குழு ஆட்களது உயிரையும் பணயம் வைத்து,ஆயுதங்களை தேடும் வீரன்.தொடர்ச்சியாக தான் செல்லும் இடங்களில் எல்லாம் எந்த ஒரு ஆயுதமும் கிடைக்காமல் போக,தனக்கு கொடுக்கப்படும் தகவல்களை சந்தேகப்படுகிறான்.
ஆனால்,மேலிடத்தில் தகவல்களின் நம்பகத்தன்மை பற்றி அவன் கேள்வி எழுப்பும் போது, எப்போதும் ஒலிக்கும் அதிகாரத்தின் ஆணவக்குரல் அவனை அடக்க முயல்கிறது.கொடுக்கப்படும் தகவல்களைக் கொண்டு,அவனுக்கு அளிக்கப்படும் வேலைகளை செய்வது மட்டுமே அவனது பணி என்றும்,அதன் ஸ்திரத்தன்மை பற்றிய ஆராய்ச்சி அவனது வேலை இல்லை என்றும் கூறப்படுகிறது.
உடனிருக்கும் வீரர்களின் மனோநிலையும்,கொடுத்த வேலையை செய்துவிட்டு சீக்கிரம் உயிரோடு ஊர் போய் சேர வேண்டும் என்பதாக இருக்கும்போது,பல உயிர்களை பணயம் வைத்து,பற்பல சேதங்களுக்கும் அடிகோலிய ஆதார தகவலான பேரழிவு ஆயுதங்களின் இருப்பு குறித்த உண்மையை கண்டறிய வேட்கை கொண்டு அலைகிறான்.
இந்நிலையில் இவனது மனக்குமுறல்களை நேரில் காணும் CIA ஏஜென்ட் மார்டின் பிரவுன் அவனை சந்தித்து அவன் தேடுவதற்காக தரப்பட்டு இருக்கும் அடுத்த இடத்திலும் எதுவும் கிடையாது என்றும்,ஆயுதங்கள குறித்த தேடலில் எதுவுமே கிடைக்காமல் போவதன் பின்னர் ஏதோ மர்மம் இருக்கிறது என்றும் கூறி,ஏதாவது தெரிய வந்தால் தன்னை தொடர்பு கொள்ளக் கூறுகிறார்.
ஒரு நாள்,தனக்குக் கிடைத்த உருப்படாத,பொய் நிறைந்த தகவலை ஆராயும் பணியில் மில்லர்  ஓரிடத்தில் இருக்கும் போது,அங்கே வரும் ப்ரெட்டி என அழைத்துக்கொள்ளும் ஒரு ஈராக்கியன் அங்கே வந்து,சிறிது தூரத்தில் உள்ள ஒரு வீட்டில் சதாமின் ஆதரவாளர்கள் சிலர் சந்தித்ததை கண்டதாக கூறுகிறான்.வீரர்கள் பலர் இது ஒரு சூழ்ச்சியாக இருக்கலாம் என்று பயந்தாலும்,உண்மையை அறிய விரும்பும் வேட்கை,மில்லரை அந்த வீட்டை சென்று தாக்கவும்,அங்கே சிலரை பிடிக்கவும் உந்துகிறது.மேலும்,தப்பியோடிய சிலரில், அதிமுக்கியமான ஜெனரல் அல் ராவியும் ஒருவன் என தெரிய வருகிறது.அவனை பிடித்தால்,பேரழிவு ஆயுதங்களை பற்றிய உண்மை தெரிய வரும் என்று மில்லர்,அவனை தேட விழைகிறான்.
ஆனால்,அவன் கைப்பற்றிய ஆட்களை அவனிடம் இருந்து பறித்து செல்கிறது ஒரு Special Forces குழு.உண்மையை மறைக்க ஏதோ சதி நடக்கிறது என சந்தேகப்படும் மில்லர்,தனக்கு உதவக்கூடிய பிரவுனை சந்திக்க செல்கிறான்.அல் ராவியை பிடித்து, அவனிடம் இருந்து உண்மையை கண்டுபிடிக்க உதவ வேண்டும் என்றும், அவனது உதவியுடன் ஒரு ஈராக் அரசு; மக்களால் தேர்ந்தெடுக்கப்படும் ஈராக் அரசு அமைய வேண்டும் என்றும், அதற்கு மில்லர் ராவியை பிடித்து வர வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கிறான்.
இதற்கிடையே, அல் ராவியின் எண்ணமும் அவ்வாறே இருக்கிறது.அமெரிக்க அரசு தன்னுடன் பேச விளையும் பட்சத்தில்,சமாதானம் பேசுவது என்றும்,இல்லையெனில் மொத்த ராணுவத்தையும் சேர்த்து போராடுவது என்பது அவனது எண்ணம்.
ஆனால்,பச்சை வளையம் எனப்படும் Green Zone இல் இருக்கும் கிளார்க் பவுண்ட்ஸ்டோன் என்னும் பெண்டகன் சிறப்பு தகவல் அதிகாரி (Pentagon Special Intelligence Unit) அதை விரும்பவில்லை.அமெரிக்க படைக்கு உள்நோக்கத்தோடு தவறான தகவல்களை கொடுப்பது இவனே!இவனது விருப்பம், ஒரு முக்கிய உண்மையை வெளியிடக்கூடிய அல் ராவியை எப்படியேனும் கொல்லவேண்டும் என்பதே!அதனை நடத்த Special Forces அணியை உபயோகித்து,அவர்களை அல் ராவியை கண்டுபிடித்து கொல்ல அவன்  ஆணையிட,ஆரம்பமாகிறது பரபர ஆட்டம். இரு அணிகளும், அல் ராவியை தேடி அலைய பரபரப்பு பற்றிக் கொள்கிறது.குறிப்பாக, கடைசி சில நிமிடங்களில் தெரியும் அனல், பார்வையாளனது துடிப்பை எகிற வைப்பதாக இருக்கிறது.மேட் டேமன் வழக்கம் போல பின்னி இருக்கிறார்.
ஆனால்,இது சாதாரண ஆக்சன் படம் மட்டுமல்ல. பரபரப்புக்கு ஊடே, பென்டகன் அதிகாரிகளின் நரித்தனம்,உண்மையை வெளிபடுத்த வேண்டிய பத்திரிக்கையாளர்கள் புகழுக்கும், முதலில் தகவல் கொடுத்தார் என்ற பெயருக்காகவும் அலைவது,போர்க் கைதிகள் நடத்தப்படும் விதம்,பெண்டகனுக்கும் CIA அதிகாரிக்குமான யுத்தம்,அமெரிக்க அரசின் ஆதிக்க வெறி,இதற்கு நேர்மாறாக ராணுவ வீரர்களின் பதட்டம்,பயம்,வீடு திரும்ப வேண்டுமென்ற ஆசை,போருக்கு பின்னான ஈராக்கின் பரிதாப நிலை,மக்களின் தண்ணீர் பிரச்சனை என்ற பல விசயங்களை தெள்ளென காட்டுகிறது.ஒரு இயக்குனராக Paul Greengrass இன் வெற்றி,இத்தகைய ஒரு பரபர கதையைக் கொடுத்தது மட்டுமல்லாது,அதில் அவர் கலந்திருக்கும் human element உம் தான்.படத்தின் ஒரே குறை,கேமரா அசைவுகள்.ஒரிஜினாலிட்டி தருகிறேன் பேர்வழி என்று கேமராவை அசைத்து அசைத்து படம் எடுப்பது இப்போது ஒரு பேஷன் ஆகிவிட்டது.ஆனால்,பரபர ஆக்சன் காட்சிகளுக்கும்,விறுவிறுப்பான எடிட்டிங்கிற்கும் இடையில் சிக்கி இந்த குறை காணாமலே போவது உண்மை.
green_zone_50109_medium1-300x267 இப்படத்தில் என்னை மிகக் கவர்ந்தது இதில் வரும் ஈராக்கிய ப்ரெட்டி கதாப்பாத்திரம்.தகவல் கொடுத்து உதவ வந்து,மொழிபெயர்ப்பாளனாகி, உண்மை குறித்தான தேடலில் கடைசி வரை மில்லருக்கு உதவும்,தானும் உண்மையை தேடும்,ஒரு கதாபாத்திரம்.இக்கதாப்பாத்திரம், ஒட்டுமொத்த ஈராக்கிய மக்களின் மொத்த உருவாக உருவாக்கப்பட்டு இருக்கிறது.அதிலும்,இந்த பாத்திரத்தின் வசனங்கள் கத்திக் கூர்மை.
நிகழும் சண்டையை கண்டு பயந்து ஓடும் பிரெட்டியை விரட்டி பிடிக்கும் போது அவனை மில்லர் சந்தேகப்பட்ட,அப்போது “இன்னும் என்ன செய்ய வேண்டும்?நீங்கள் என்னை நம்ப இன்னும் என்ன செய்ய வேண்டும்?” என்று கொதிப்பதும்,
நீ செய்த உதவிக்கு சன்மானம் பெற்றுத்தர ஏற்பாடு செய்கிறேன் என்று மில்லர் சொல்லும் போது, “இதை பணத்திற்காக செய்தேன் என்று நினைத்தாயா? தண்ணி இல்லாது,மின்சாரம் இல்லாது மக்கள் இருக்கும் நிலையில் நான் இதை பணத்திற்காக செய்தேன் என்று நினைத்தாயா? இதை எனது நாட்டிக்காக,எனக்காக செய்தேன்.Whatever you want to do it here, I want it more than you want it.” என்று பொருமவதாகட்டும்,
கடைசி கட்டத்தில் “இங்கே என்ன நடக்க வேண்டும் என்று தீர்மானிக்க வேண்டியது நீங்கள் அல்ல (It is not for you (America) to decide what happens here.) “ என்று சீறுவதும் என்று அமெரிக்க அரசின் சட்டையை பிடித்து இந்த பாத்திரம் கேட்கும் கேள்விகள், பதில் சொல்ல முடியாதவை.இந்த பாத்திரத்தில்  பெரும்பாலான இராக்கிய மக்களின் உணர்வுகளை வாழ்ந்து காட்டியருக்கும் நடிகர் Khalid Abdalla வு ஒரு ஜே!
தன்னுடைய அதிகார வெறிக்கும், எரிபொருள் தாகத்திற்க்கும் பிற நாடுகளின் மேல் படை எடுத்த அமெரிக்காவிற்கு ஈராக் நாட்டு மக்கள் தண்ணீர் தாகத்தில் தவிப்பது தெரிந்திருக்க நியாயமில்லை தான்.68 சதவிகித மக்கள் குடிக்கத் தகுந்த தண்ணீரை பெற முடியாது இருந்தார்கள் என்று இணையம் சொல்கிறது.இப்போது கொஞ்சம் கொஞ்சமாக வெளியேறுவதாக அறிவித்து இருந்தாலும்,ஈராக்கிய மக்களும்,அமெரிக்க மக்களும் இந்தப் போரை மறக்க மாட்டார்கள்.
Green Zone[2010]DvDrip[Eng]-FXG.avi_snapshot_00.18.05_[2010.11.21_23.48.36]Green Zone[2010]DvDrip[Eng]-FXG.avi_snapshot_01.44.56_[2010.11.21_23.51.03]



வெளியே மக்கள் தண்ணீருக்காக போராட, கிரீன் ஜோன் வளையத்தில் பென்டகன் அதிகாரிகள் நீச்சல் குளத்தில் கும்மாளம் அடிக்கும் காட்சி வாழைப்பழத்தில் ஏற்றிய ஊசி.கடைசியில் காட்டப்படும் எண்ணைக் கிணறுகள் காட்சியும் அவ்வாறே முகத்தில் அறைகிறது!
படத்தின் கடைசியில் “நீ என்ன செய்திருக்கிறாய் என்று உனக்கு தெரியுமா? அடுத்த முறை நம் உதவி தேவை என்றால் மக்கள் நம்மை நம்புவார்கள் என்று நினைக்கிறாயா? “ என்ற மில்லரின் கேள்விக்கு, கிளார்க் சொல்லும் பதில் “We are not turning back. We Won! “
ஆட்சியின் முகம் மாறினாலும்,மாறாதவை அதிகாரத்தின் கைகள்!

No comments:

Post a Comment