Search This Blog

Saturday, May 28, 2011

City of God

City of God


புதுப்பேட்டை, பட்டியல் போன்ற நல்ல Gangster படங்கள் வரும்போது தவறாமல் உச்சரிக்கப்படும் படம் City of God அவற்றில் இந்தப் படத்தின் பாதிப்பு நிச்சயம் உண்டு.

ஓரிருவர் தவிர ஏனையோர் பதின்மூன்று வயதிற்குட்பட்ட சிறுவர்கள் கும்பல். எல்லோர் கைகளிலும் துப்பாக்கிகள். கோழி ஒன்றைத் துப்பாகியால் சுட்டபடி துரத்திச் செல்கிறார்கள். எதிர்பாராமல் அந்தவழியே வரும் இருவரை மடக்கிப் பிடிக்கச்சொல்ல, அவர்களும் தயாராக, திடீரென சுடத் தயாராகிறது சிறுவர் கூட்டம். இருவரும் குழப்பத்துடன் பின்னால் திரும்பிப் பார்க்க, குறிவைத்தபடி போலீஸ்.


- இப்படித்தான் ஆரம்பமாகிறது படம்.

பிரேசிலின் மிகப் பெரும் கேளிக்கை நகரான ரியோ டீ ஜெனிரோ வைச் சுற்றியுள்ள ஏராளமான சேரிப்புறங்களில் ஒன்றில் நடக்கும் நிகழ்வுகளைச் சொல்லும் படம். கொள்ளை, கொலை, சிறு வயதிலேயே போதைப் பொருள் பழக்கம் எல்லாமே அங்கு சாதாரணமானவை. போதைப் பொருள் கடத்துபவர்களாக பத்து வயதிற்குட்பட்ட சிறுவர்கள். வழிப்பறி, வன்முறை, உதைபந்தாட்டம் எல்லாம் அப்பகுதி மக்களின் வாழ்வின் அங்கமாக.

சில பிரதான பாத்திரங்களின் ஊடாக சொல்லப்பட்டிருக்கும் ஒரு ஊரின் கதை.


இளைஞர்களான சாகி, கூஸ், கிளிப்பர் உடன் மோட்டல் ஒன்றைக் கொள்ளையடிக்கச் செல்லும் பத்துவயதிற்குட்பட்ட சிறுவன் லில் டைஸ், விதிகளை மீறி, பெரியவர்களுக்கு தெரியாமல் அங்குள்ளவர்களை சுட்டுக் கொல்கிறான். போலீஸ் தேட...கிளிப்பர் சேரியை விட்டு செல்ல, சாகி போலீசாலும், கூஸ் சிறுவன் லில் டைஸ் ஆலும் கொல்லப்பட, ஏரியாவின் அடுத்த் தலைமுறை ரவுடி ஆகிறான் சிறுவன் லில் டைஸ் வளர்ந்தபின் தனது பெயரை லில்சீ என மாற்றிக்கொள்கிறான்.

லில்சீ - சிறுவயது முதலே நண்பனான பின்னியுடன் சேர்ந்து, ஏரியாவிலுள்ள போதைப்பொருள் டீலர்களை சுட்டுத்தள்ளி, மிகப்பெரிய மார்க்கெட்டைத் தன்வசப்படுத்தியுள்ளவன். கொடூரமானவன். தற்போதைய கவலை - நண்பன் பின்னி பிரிந்து செல்வதாக முடிவெடுத்தது. நண்பனைப் பிரியவும் மனமின்றி, அவனது விருப்பத்துக்கு மறுப்பும் சொல்லமுடியாமல் குழம்பிய நிலையில் இருக்கிறான்.

பின்னி - இவனது சொல்லை மட்டுமே லில்சீ கேட்பான். லில்சீக்கு பெரிதும் உறுதுணையாக இருப்பவன்.எல்லோரோடும் சுமுகமாக அனுசரித்துப் போகின்றவன்.
இப்போது - இந்த வாழ்க்கையை விட்டு, ஒரு பண்ணையில் தனது காதலி அன்ஜெலிகாவோடு அமைதியாக வாழ ஆசைப்படுகிறான்.

ரொக்கட் - கூசின் தம்பி. ஒரு புகைப்படக் கலைஞனாக பத்திரிகையில் சேர்ந்து புகழ் பெறவேண்டுமென்பதே இவன் லட்சியம்.
ஆசை - ஒரு காமெரா சொந்தமாக வாங்குவது. அதற்காக நண்பனின் துணையோடு, அண்ணனின் துப்பாக்கியை எடுத்துக் கொண்டு, கொள்ளையடிக்க திட்டமிட்டு,பாதியில்  முயற்சியைக் கைவிட்டவன்.

நொக்கவுட் நெட் - கொலை, போதை, கொள்ளை என்பவற்றுடன் எந்த சம்பந்தமும் இல்லாதவன். அமைதியும், அன்பும் மட்டுமே முக்கியம் எனக்கூறுகிறான். பேரூந்து நடத்துனராக வேலை செய்கிறான். 
ஒருமுறை லில்சீயால் தாக்கப்பட்டிருக்கிறான். ஒரு காதலி இருக்கிறாள்.

காரட் - மிகப்பெரிய போதைப்பொருள் டீலர். இவனுக்கும் லில்சீக்கும் ஒத்து வருவதில்லை.பின்னியின் தலையீட்டினால்,லில்சீயினால் கொல்லப்படாமல் இருக்கிறான். எப்போதும் இவனுக்கு லில்சீ எதிரி.

பிளாக்கி - இவனும் ஒரு போதைப் பொருள் டீலர். இவனது மார்க்கெட், தங்குமிடம் எல்லாவற்றையும் லில்சீ பறித்துக் கொள்கிறான். காரட்டுடன் தொடர்பில் இருக்கிறான்.
தற்போது - லில்சீ மீது அடங்காத கோபத்துடன், அவனைப் பழிவாங்க ஒரு சந்தர்ப்பத்தை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருக்கிறான்.


பின்னிக்கு ஒரு பெரிய பிரிவுபசாரப் பார்ட்டி பெரியதோர் ஹோட்டலில். அநேகமாக ஏரியாவிலுள்ள எல்லோரும் கலந்து கொள்கின்றனர். தன்னை எல்லோரும் உதாசீனப் படுத்துவதாக எண்ணிக்குழம்பும் பெண்கள் பக்கமே போகாத லில்சீ, ஒரு பெண்ணைத் தன்னுடன் ஆட அழைக்க, அவள் மறுக்கிறாள்.அந்தப் பெண் நொக்கவுட் நெட்டின் காதலி என்று தெரிந்ததும் பலர் முன்னிலையில் அவனை அவமானப்படுத்துகிறான் லில்சீ.

அதேநேரம் பின்னி, ரொக்கட்டுக்கு ஒரு காமெராவைப்பரிசளிக்கிறான். லில்சீயைக் கொல்வதற்காக மறைந்து காத்திருக்கிறான் பிளாக்கி.ரொக்கட்டிடமிருந்து லில்சீ காமெராவைப்பறிக்க,அவனுடன் வாக்குவாதப்படுகிறான் பின்னி.மின்னிக் கொண்டிருக்கும் டிஸ்கோ லைட்டில், தவறுதலாக பின்னியைச் சுட்டுவிடுகிறான் பிளாக்கி. பின்னி உடனே இறந்துவிட, கதறுகிறான் லில்சீ.


காரட் தான் கொலைக்குக் காரணமென்று அவனைக் கொல்ல முடிவு செய்கிறான் லில்சீ.

தகவல் சொல்ல வரும் பிளாக்கியை 'அநியாயமாக ஒரு Coolest Guy யைக் கொன்று விட்டாய்' எனக்கூறி, கொல்கிறான் காரட். வழியில் நொக்கவுட் நெட்டை காதலியுடன் பார்க்கும் லில்சீ அவன் முன்னிலையில் காதலியைக் கொல்கிறான். திடீரென்று, நொக்கவுட் நெட்டையும் கொல்ல முடிவு செய்து அவன் வீட்டுக்கு செல்ல, அவனைக் காப்பாற்றும் முயற்சியில் அவன் தம்பியும் கொல்லப்படுகிறான். லில்சீயை பழிவாங்க முடிவு செய்யும் நொக்கவுட் நெட் 'அப்பாவிகளைக் கொல்லக் கூடாது' என்ற கோரிக்கையுடன் காரட்டுடன் இணைந்து கொள்ள, ஆரம்பமாகிறது ஒரு பெரும் Gang War!

முடிவில் என்னவாகிறது?


- ஒரு கதாபாத்திரத்தையும் முதன்மைப் படுத்தாமல் அவர்களின் பார்வையிலும்,  FlashBack இலும் படம் நகர்கிறது.

- பெரும்பாலான இறுதிக் காட்சிகள் அவற்றைப் படம்பிடிக்கும் பத்திரிகையில் வேலைக்குச் சேர்ந்திருக்கும் ரொக்கட்டின் பார்வையில் பதிவாகிறது.

- சில இடங்களில் Documentary Film போலவுள்ள அதே சமயம் விறுவிறுப்பாகவும் செல்கிறது.

- கதை சொல்லும் style, camera நகரும் விதம் எல்லாம் வித்தியாசமான அனுபவம்.

இயக்கம் - Fernando Meirelles
மொழி - Portuguese
நாடு - Brazil
BAFTA உள்ளிட்ட பல விருதுகளை வென்றது. நான்கு Academy உள்ளிட்ட பல விருதுகளுக்குப் பரிந்துரைக்கப்பட்டது.

No comments:

Post a Comment