Search This Blog

Saturday, May 28, 2011

இயற்கையின் மடியில்- 2

இயற்கையின் மடியில்- 2
=========================
ட்ரெக்கிங் செல்பவர்களுக்கு ஒரு சவாலாக இருப்பது leeches எனப்படும் ரத்தம் குடிக்கும் அட்டைகள். என்ன தான் ஷூ, சாக்ஸ் எல்லாம் போட்டுக் கொண்டிருந்தாலும் எப்படியோ உள்ளே புகுந்து தோலில் ஒட்டிக் கொண்டு ஓட்டை போட்டு ரத்தம் குடித்து விடும். அட்டைகளில் (மற்ற புழுக்களைப் போலவே) ஆண் பெண் என்று தனியாக கிடையாது. எல்லாம் அர்த்த நாரி தான்..(ஆண் பெண் இரண்டு இனப்பெருக்க உறுப்புகளும் ஒரே அட்டையில் இருக்கும்.மனிதர்களிலும் இப்படி இருந்தால்? நினைக்கவே
பயமாக இருக்கிறது ) மனிதர்களின் உடலில் எப்படியோ ஒட்டிக் கொள்ளும் இவை முதலில் நமக்கு அனஸ்தீஸியா கொடுத்து விடுகின்றன. எனவே அட்டை கடிக்கிறது என்று நமக்குத் தெரியாது. பிறகு இன்ஜெக்ஷன் போடுவது மாதிரி நம் தோலைத் துளைத்து வேண்டிய மட்டும் ஜோராக ரத்தம் குடிக்கின்றன. மனித ரத்தத்திற்கு உள்ள ஒரு பண்பு
coagulation எனப்படும் வெளியே வந்தால் உறைந்து போய் விடும் தன்மை. இந்த அட்டைகள் இந்த உறைதலைத் தடை செய்யும் anti - coagulation agent ஆன ஹிருடின் என்ற வேதிப் பொருளை ரத்தத்தில் கலந்து விடுகின்றன. எனவே சூடான ரத்தம் எந்தத் தடையும் இல்லாமல் அட்டைகளுக்கு விருந்தாகிறது. அட்டைகளின் எச்சிலில் உருவாகும் இந்த ஹிருடின் மருத்துவத்தில் மிகவும் பயன்படுகிறது. பிளாஸ்டிக் சர்ஜரிகளின் போது ரத்தக் குழாய்களை வெட்டி ஓட்டும் போது ரத்தம் உறைந்து விடாமல் இருக்க அட்டைகள் உதவுகின்றன. சில நாடுகளில் அட்டைகள் பியூட்டி பார்லர்களில் உபயோகப்படுத்தப்படுகின்றன. முகத்தில் அட்டையைக் கடிக்க விட்டு
ரத்த ஓட்டம் அதிகரிக்கப்பட்டு முகம் பிரகாசமாகிறதாம் . அட்டைகள் வாழ்க! மனிதனால் தான் யாருக்கு என்ன உபயோகம் என்று தெரியவில்லை. ரஜினி சொல்வது போல மீன் செத்தால் கருவாடு நீ செத்தால் வெறும் கூடு !

PEDICURE எனப்படும் பாதங்களை அழகு படுத்தும் கலையில் மீன்களை உபயோகிப்பது உங்களுக்குத் தெரிந்திருக்கலாம்.

BIRD WATCHING எனப்படும் பறவை வேடிக்கை பார்த்தலுக்கு அதிகாலையில் அழைத்துச் சென்றார்கள். நமக்கெல்லாம் ஒரு ஏழெட்டு பறவைகளுக்கு மேல் தெரிந்திருக்க அவ்வளவாக வாய்ப்பில்லை.
காக்காய், குருவி, குயில் , மயில் ,மைனா. புறா, கொக்கு இது மாதிரி.. அந்தக் காட்டில் மட்டும் நூற்றுக்கணக்கான வேறுபட்ட பறவை இனங்களை அடையாளம் காட்டினார்கள். Red vented bulbul Racket tailed Drongo (இதன் இறக்கை நீண்டு டென்னிஸ் பேட் மாதிரி இருக்குமாம்..படம்)Red-whiskered Bulbul என்றெல்லாம் இது வரை நாம் கேள்விப்படாத பெயர்கள். ஒரு பறவை brain fever -brain fever என்று (மூன்று ஸ்வரங்களில்)கத்துவது போல இருக்குமாம்..அதன் பெயர் BRAIN FEVER BIRD ..
Racket tailed Drongo



இன்னொரு பறவையைப் பற்றி சொன்னார்கள். அதன் பெயர் Lyre Bird ..(Australia) இதன் விசேஷம் என்னவென்றால் இது தன்னைச் சுற்றி கேட்கக்கூடிய இயற்கை மற்றும் செயற்கை ஒலிகளை அப்படியே
மிமிக்ரி செய்கிறது. பிற பறவைகளின் குரல், கேமராவின் ஷட்டர் ஒலி, ஆம்புலன்ஸ் சைரன், விமானத்தில் சப்தம், கிட்டார் ஒலி, சில சமயம் மனிதக் குரலைக் கூட மிமிக்ரி செய்கிறதாம். காட்டில் என்னவெல்லாம் நடந்தது என்று அறிந்து கொள்ள இந்தப் பறவையின் மிமிக்ரியை பயன்படுத்துகிறார்கள்.. தீவிரவாதிகள் சிலர் காட்டில் தங்கியிருந்து அவர்கள் பேசினால் அதைக் கூட இந்த பறவை மிமிக்ரி செய்யக் கூடும் என்பதால்.(படம்)
மிமிக்ரி மாஸ்டர்


கூண்டுக்குள் அடைத்து ஜோதிடம் பார்க்க வைக்கார்களே? எஸ்..கிளி..அதற்கு ஆங்கிலத்தில் என்ன? PARROT என்று சொன்னால் தவறு..அதன் பெயர் PARAKEET ..Parrot என்பது கொஞ்சம் பெரிய சைஸ் கிளி.இது இந்தியாவில் இல்லை.

காட்டுக்குள் அழைத்துச் சென்று காடுகளை எப்படி சர்வே செய்வது, மரத்தை அணைத்துக் கொண்டு அதன் அகலத்தைக் கணக்கிடுவது ,காடுகள் எந்த அளவு அடர்த்தியாக இருக்கின்றன என்று சொல்லும் Canopy யை எப்படி அளப்பது , GPS கருவியை எப்படி உபயோகப்படுத்துவது என்றெல்லாம் விளக்கினார்கள்.யானை போடும் லத்தியின் அளவை வைத்துக் கொண்டு அதன் வயதைக் கணக்கிட முடியுமாம். (யானையில் ஆசன துவாரம் அதற்கு வயது ஆக ஆக அதிகரித்துக் கொண்டே வருவதால் ) யானை லத்தியின் சுற்றளவு முப்பது செ.மீ ஆக இருந்தால் யானைக்கு வயது முப்பது..சிம்பிள் !

புலிகளை எப்படி சென்சஸ் செய்வது என்று விளக்கினார்கள். புலிகளிடம் ஒரு நோட்டை எடுத்துக் கொண்டு போய் 'உங்களுக்கு ரெண்டு பொண்டாட்டியா'? என்றெல்லாம் கேட்க முடியாது இல்லையா? மேலும் எல்லாப் புலிகளும் பார்பதற்கு ஒரே மாதிரி இருப்பதால் எப்படி கணக்கிடுவது?

பிரிட்டிஷ் காலத்தில் புலிகளை கொன்று எடுத்துக் கொண்டு வருபவர்களுக்கு பரிசுகள் தருவார்களாம். அந்தக் கணக்கின் படி பார்த்தால் இந்தியா சுதந்திரம் அடைந்த போது சுமார் நாற்பதாயிரம் புலிகள் இந்தியாவில் இருந்திருக்கலாம் என்று சொல்கிறார்கள். இந்தியா சுதந்திரம் அடைந்த புதிதில் பெங்களூர் பகுதியில் மாதத்தில் இரண்டு புலிகள் பிடிபடுமாம்..இது படிப்படியாகக் குறைந்து இந்திரா காந்தி காலத்தில் 2700 என்ற எண்ணிக்கைக்கு வந்து விட்டது. புலிகள் அழிந்து வருவதை உணர்ந்த இந்திரா காந்தி அதை இந்தியாவின் தேசிய விலங்காக அறிவித்து (1973 ) புலிகளைக் காப்பாற்ற
PROJECT TIGER என்ற திட்டத்தைத் தொடங்கினார்.இப்போது இந்தியாவில் வெறும் 1700 புலிகள் மட்டுமே உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

அந்தக் காலத்தில் புலிகளை PUG MARK எனப்படும் அதன் நகக் கீறல்களை வைத்துக் கொண்டு எண்ணினார்கள். 'இது என் ஏரியா, உள்ளே வராதே' என்று புலிகள் மரங்களில் ஆழமாகக் கீறும் அடையாளங்கள் அவை. புலிகள் பெரும்பாலும் தாங்கள் மார்க் செய்த பகுதிக்குள் மட்டும் வசிக்கும் என்பதால் அதை வைத்துக் கொண்டு புலிகளின் எண்ணிக்கையை கணக்கிடலாம். ஆனால் இந்த டெக்னிக் அவ்வளவு சரியானதல்ல என்கிறார்கள்.

புலிகளின் சென்சஸ் பெரும்பாலும் கோடைக்காலம் ,இலையுதிர் காலங்களில் செய்யப்படுகிறது. மழைக் காலங்களில் தாவரங்கள் அடர்ந்து வளர்ந்து புலிகளை மறைக்ககூடும் என்பதால்.

சில பேர் ஒரு புலி ஒரு நீர்நிலையில் இருபத்து நான்கு மணிநேரத்திற்கு ஒரு முறை மட்டுமே தண்ணீர் குடிக்க வரும் என்று நம்பினார்கள். மேலும் அது பெரும்பாலும் ஒரே நீர்நிலையில் மட்டுமே தண்ணீர் குடிக்குமாம்.கோடைக் காலத்தில் நீர்நிலைகளின் எண்ணிக்கை மிகக் குறைவாக இருப்பதால் அந்த நீர் நிலையை 24 மணிநேரத்திற்கு தொடர்ந்து கண்காணித்து எத்தனை புலிகள் வருகின்றன என்று கணக்கு போட்டார்கள்..ஆனால் இந்த டெக்னிக்கும் இப்போது தவறானது என்று நிரூபிக்கப்பட்டு விட்டது.

புலிகளின் பாத சுவடுகளை வைத்து கணக்கிடுவது இன்னொரு முறை. தெளிவான பாத சுவடு ஒன்று தென்பட்டால் அதில் மெழுகை ஊற்றி ஒரு படிவம் எடுத்துக் கொள்ள வேண்டியது. புலிகளின் பாத சுவடுகள் பெரும்பாலும் ஒன்றுக்கு ஒன்று வேறுபடும் என்பதால் இந்த முறை உபயோகப்படுத்தப் படுகிறது.

காடுகளை GRID எனப்படும் பாகங்களாகப் பிரித்துக் கொண்டு அதில் எத்தனை புலிகள் தட்டுப்படுகின்றன என்று எண்ணுவது இன்னொரு முறை.ஒரு GRID இல் இருக்கும் புலி இன்னொன்றுக்குப் போகாதா என்றால் சாதாரணமாகப் போகாது.மேலும் ஒவ்வொரு GRID டிலும் சர்வேயர்கள் ஒரே சமயத்தில் சென்சஸ் நடத்துவார்கள்.

இன்னொன்று CAMERA TRAP என்று அழைக்கப்படும் ஒரு முறை. புலிகள் அதிகம் நடமாடும் இடங்களில் நேர்க்கோட்டில் இரண்டு கேமராக்களை மாட்டி விட வேண்டியது. கேமராக்களுக்கு இடையே ஒரு மெல்லிய அகச் சிவப்பு ஒளி நேர்க்கோட்டில் போய்க் கொண்டிருக்கும்..புலி இடையே வந்தால் இந்த ஒளி சிறிது நேரம் மறைக்கப்பட்டு PHOTO ELECTRIC EFFECT எனப்படும் ஒளி மின் விளைவினால் கேமராக்கள் உடனே இயங்கி சர் சர் என்று புலியை பல கோணங்களில் படம் பிடித்துத் தள்ளும்..(புலியின் முழு உருவம் கிடைக்க வேண்டும் என்பதால்) மறுநாள் காலையில் கேமராக்கள் எடுக்கப்பட்டு புலியின் புகைப்படங்கள் ஒரு PATTERN MATCHING SOFTWARE க்கு அனுப்பப்படும். ஒவ்வொரு புலிக்கும் அதன் உடலில் உள்ள கோடுகள் வேறுபடும் என்பதால் கம்ப்யூட்டர் இரண்டும் ஒரே புலியா இல்லை வேறு வேறா என்று சொல்லி விடும்.


இத்தனை விஷயங்களையும் முடித்துக் கொண்டு திரும்பி வரும் போது முள்ளைய்யன கிரி என்று அழைக்கப்படும் மலைக்கு சென்றோம். Awesome ! இங்கே பாபா புட்டன கிரி அல்லது தத்த பீடம் என்று அழைக்கப்படும் ஒரு இடம் இருக்கிறது. அயோத்திக்கு அடுத்து சர்ச்சைக்கு பெயர் போன இடம். ஏனென்றால் இங்கே உள்ள கோயிலில் இந்துக்கள் முஸ்லிம்கள் இருவரும் வந்து வழிபடுகிறார்கள்.இங்கே வாழ்ந்த பக்கிரி ஒருவர் அல்லாவையும், தத்தாத்ரேயரையும் ஒருங்கே வழிபட்டு வந்தாராம். (நாங்கள் போன போது கலவரம் காரணமாக உள்ளே விடவில்லை) இங்கே வழியும் மாணிக்க தாரா என்ற அருவியில் குளித்து உடைகளை அங்கேயே விட்டு வர வேண்டும் என்ற ஒரு சாஸ்திரம் முஸ்லிம்களுக்கு இருக்கிறதாம். பழைய , கிழிந்த உடைகள் ஒரு சிகரமாக அங்கே குவிந்து கிடக்கின்றன. சிலர் அதை புகை போட்டு எரிக்க வேறு செய்கிறார்கள். சுற்றுச் சூழல் நலமிகள் இதை கவனித்தால் பரவாயில்லை.

ஓகே இனி இந்த கேம்பில் எடுத்த சில புகைப்படங்கள் கீழே:








முத்ரா

No comments:

Post a Comment