Search This Blog

Thursday, May 5, 2011

முட்டையிட்டுப் பாலூட்டும் உயிரினம்

முட்டையிட்டுப் பாலூட்டும் உயிரினம்



சிறிய வவ்வால்
ஆஸ்திரேலியன் ஈஸ்ட் கோஸ்ட் பிரீடெய்ல் மைக்ரோபேட் எனப்படும் வவ்வால் இனம்தான் உலகின் மிகச் சிறிய வவ்வால் இனம். மூன்று செண்டி மீட்டர் நீளமும், எட்டு கிராம் எடையும் கொண்ட இந்த வவ்வால் இனத்தின் பிடித்த உணவு புழுக்களே. இவை பறக்கும் போது மோத் என்கிற வண்ணத்துப் பூச்சி போலிருப்பதால் இதை மோத் என்றும் சிலர் அழைக்கின்றனர்.

பெரிய முட்டையிடும் பறவை

பறவை இனங்களில் மிகப்பெரிய முட்டையிடுவது நெருப்புக் கோழிதான். இதன் முட்டையின் அளவு 7 x 6 அங்குலம். 1400 கிராம் வரை எடையிருக்கும். கிவி பறவை நெருப்புக் கோழிக்கு அடுத்தபடியாக பெரிய முட்டையிடக் கூடியது. மிகச் சிறிய முட்டையிடும் பறவை ஹம்மிங் பேர்ட்.

ராஜநாகம்

பாம்புகளில் மிகவும் பயங்கரமானது ராஜநாகம்தான். இது இருக்கும் இடத்தில் வேறு குட்டிப் பாம்புகள் எதுவும் வசிக்க முடியாது. அவற்றைப் பிடித்து விழுங்கிவிடும். பெண் ராஜநாகம் இலைகளைப் பரப்பி அதன் மீது முட்டையிட்டு அடை காக்கும். அப்படி அடைகாக்கும் சூழ்நிலையில் சுமார் 2 கிலோமீட்டர் தூரம் வரை வேறு உயிரினத்தை அப்பகுதிக்குள் நுழைய விடாது. ஒரே நேரத்தில் 20 முதல் 30 முட்டைகள் வரை பொறிக்கும். அவை பிறக்கும் போதே விசத்தன்மையுடன்தான் பிறக்கின்றன. நன்றாக வளர்ந்த ராஜநாகத்தின் விசம் எடுக்கப்பட்டு, ஒரு குறிப்பிட்ட அளவு குதிரையின் உடலுக்குள் செலுத்தப்படுவதன் மூலம் குதிரைகள் ஆண்டிபயாடீஸ் எனும் எதிர்ப்பு சக்தியைத் தன்னுள் உருவாக்கிக் கொள்ளும். பின்னர் அந்த குதிரைகளிடமிருந்து சிறிதளவு பிளாஸ்மா எடுத்து விசமுறிவு மருந்து தயாரிக்கப்படுகிறது.

பாண்டா கரடி

சீனாவின் தென்கிழக்கு மாகாணமான சிசூயானில் உள்ள மூங்கில் காடுகளில்தான் பாண்டா இனக் கரடிகள் வாழ்ந்து வந்தன. பாண்டா இனக் கரடிகளின் முக்கிய உணவு மூங்கில்தான். இங்கு மூங்கில் காடுகள் அழிந்து வருவதால் உணவில்லாமல் பாண்டா இனக்கரடிகளும் அழிந்து கொண்டிருக்கின்றன. தற்போது இவற்றை பாதுகாக்க சீனா அதற்கென ஒரு ஆய்வு மையம் அமைத்து அங்கு அவைகளை வளர்த்து வருகின்றன.

முட்டையிட்டு பாலூட்டும் உயிரினம்

முட்டையிட்டுக் குஞ்சு பொறித்துப் பின் பாலூட்டும் இரண்டு அபூர்வ உயிரினங்களில் ஒன்று பிளாடிபஸ். இது வாத்து போன்ற மூக்கும், பீவர் பிராணியின் உடல் வால் அமைப்பின் கலவையான பிளாடிபஸ் 12 முதல் 18 அடி நீளம் வரி வலரும். நீர் நிறைந்த பகுதிகளில் வசிக்கும் பிளாடிபஸ்ஸின் விருப்பமான உணவு பூச்சிகளும் சிறு மீன்களும்தான்.

கோலா கரடி

கோலா கரடிகள் யூகலிப்டஸ் மர இலைகளின் நீர்ச்சத்தை எடுத்துக் கொள்வதால் அவற்றிற்குத் தாகம் எடுப்பதில்லை. அதனால் அவை நீரும் அருந்துவதில்லை. கங்காரு தன் குட்டிகளைச் சுமப்பது போல் கோலா கரடியும் வயிற்றுப் பையுள்ள ஒரு பிராணி. பிறந்த ஏழு மாதத்திற்குக் கோலா கரடிகள் தன் குட்டிகளை வயிற்றிலேயே சுமக்கின்றன.

காட் மீன்

அட்லாண்டிக் மகா சமுத்திரத்தில் காட் எனும் மீன் இனம் உள்ளது. இந்த மீன் இனம் ஒரு தடவைக்கு சுமார் அறுபது லட்சம் முட்டைகள் வரை இடுமென்றாலும் முட்டை பொறிந்து மீன் குஞ்சாகி உயிர் வாழ்வது நான்கு அல்லது ஐந்துதான். மீன் இடும் அத்தனை முட்டைகளும் மீன்களானால் அட்லாண்டிக் சமுத்திரமே மீன் மயமாகி கடல் நீர் நிலத்தில் புகுந்துவிடும்.

கடற்குதிரை

கடலில் வாழும் உயிரினங்களில் கடற்குதிரைகள் மட்டுமே நிற்கும் போது தன் வாலையே பற்றிக் கொண்டு நிற்கின்றன. ஆண் கடற்குதிரைகளுக்குத் தனியாக அதன் வயிற்றில் ஒரு பை உண்டு. அதன் மூலம் பெண் கடற்குதிரைகள் இடும் முட்டையை இந்த ஆண் கடற்குதிரைகள் அடைகாக்கின்றன. கடற்குதிரைகள் நீண்ட நாக்கை ஒரு ஸ்ட்ரா போல் பயன்படுத்தி கடல் நீரை உறிஞ்சுகின்றன. இப்படி உறிஞ்சும் கடல்நீரிலுள்ள மெல்லிய நுண்செடிகள் உயிரினங்களை மட்டுமே உட்கொண்டு விட்டு கடல்நீரைத் துப்பி விடுகின்றன.

வெட்டுக்கிளி

பாம்புகள் தங்கள் மேல்தோலை உரித்து புதுத் தோலை உருவாக்கிக் கொள்வது போல் வெட்டுக்கிளிகள் தங்கள் உடல் கூட்டை அடிக்கடி உடைத்துக் கொள்ளும். அவைகள் தங்கள் உடல் கூட்டை உடைத்துக் கொண்டால்தான் அவைகளால் வளர முடியும். அவைகளின் பழைய கூடுகள் உடைந்தவுடன் புதிய கூடுகள் வளர ஆரம்பித்து விடும். பழைய கூட்டினால் எந்தப் பயனுமில்லாததால் அவற்றை உதறி விடும்.
-தொகுப்பு: கணேஷ் அரவிந்த்.

கண்ணதாசனின் நகைச்சுவைகள்

 கண்ணதாசனின் நகைச்சுவைகள்
"நன்கொடை என்பது என்ன?"
"வாங்குகிறவனை நன்றாக ஆக்குவது. கொடுப்பவனை None  ஆக ஆக்குவது."
*********
"ஒரு பிரபல நடிகையின் தாய் பொதுத் தேர்தலில் ஓட்டுப் போட முடிவதில்லை"
"ஏன்?"
"ஓட்டுப் போடும் வயது இன்னும் வரவில்லை"
*********
"கலியுகத்தில் கண்ணன் என்னென்ன நட்க்குமென்று சொன்னபோது மற்றுமொரு கருத்தையும் சொல்லியிருக்கிறான்"

"அதுவென்ன மற்றுமொரு கருத்து?"

"நடிகையின் பாட்டி அந்த நடிகைக்கே மகளாக நடிப்பாள்"
*********
"காந்தியைப் போல் எல்லோரும் வாழ்ந்தால் எப்படி இருக்கும்?"

"கடலை வியாபாரம் நன்றாக நடக்கும்."
*********
"பைத்தியக்கார ஆஸ்பத்திரியிலுள்ள பலரை விசாரித்ததில்..."

"எப்படி பைத்தியமானார்கள்?"

"சினிமா நடிகைகளை மேக்கப்பில்லாமல் பார்த்ததினால்"

மருத்துவ நகைச்சுவைகள்

மருத்துவ நகைச்சுவைகள்
                                                                                               - தேனி.எஸ்.மாரியப்பன்.
திருப்தியாக சாகலாம்!
நோயாளியிடம் டாக்டர், "உங்கள் நோயை முழுமையாகக் குணப்படுத்தி விட்டேன்" என்றார்.
"இனி ஆபத்து இல்லையா டாக்டர், நான் பிழைத்துக் கொள்வேனா?" என்றார் நோயாளி.
"நிச்சயமாகச் சொல்ல முடியாது. சாவதற்கு முன்பு நோய் குணமாகி விட்டது. செத்தாலும் திருப்தியாகச் சாகலாம். அவ்வளவுதான்" என்றார் டாக்டர்.
மாத்திரை உங்களுக்குத்தான்
ஒரு பெண் தன் கணவனை ஆஸ்பத்திரியில் சேர்த்திருந்தாள். ஒரு வாரம் தங்கி தன் கணவனைக் கவனித்து வந்தாள். டிஸ்சார்ஜ் ஆகி வீட்டுக்குப் போக வேண்டிய நேரம் வந்தது. டாக்டர் அந்தப் பெண்ணை அழைத்து இப்படிச் சொன்னார்.
"உங்கள் கணவருக்கு மிகவும் ஓய்வு தேவை. இந்த தூக்க மாத்திரையைப் பயன்படுத்துங்கள்." என்றார்.
அவள், "மாத்திரையை எப்போது கொடுக்க வேண்டும்?" என்று டாக்டரைக் கேட்டாள்.
அதற்கு டாக்டர், "இந்தத் தூக்க மாத்திரை அவருக்கில்லை, உங்களுக்குத்தான். உங்கள் கணவர் நல்ல ஓய்வு எடுக்கவும் விரைவில் குணமாகவும் இதுதான் ஒரே வழி" என்றார்.
டாக்டருக்குத் தெரியாதா?
ஒருவன் உயரமான ஏணியிலிருந்து கீழே விழுந்து விட்டான். அவனை வீட்டுக்குள் தூக்கிச் சென்றார்கள். சிறிது நேரத்தில் டாக்டர் வந்து பரிசோதித்து விட்டு, "இறந்து விட்டான்" என்று சொன்னார்.
அடிபட்டவன் கண் விழித்துப் பார்த்துக் கொண்டே, "டாக்டர்... நான் உயிருடன்தான் இருக்கிறேன்" என்றான்.
அருகிலிருந்த அவனுடைய மனைவி, "பேசாமல் இருங்க... டாக்டருக்குத் தெரியாததா உங்களுக்குத் தெரிந்துவிடப் போகிறது" என்றாள்.
விசிட்டிங் பீஸ் எவ்வளவு?
ஒருவன் நடுராத்திரியில் சென்று டாக்டர் வீட்டுக் கதவைத் தட்டுகிறான். 
டாக்டர் எழுந்து "என்ன வேண்டும்?" என்று கேட்கிறார்.
வந்தவனோ ஒரு முகவரியைக் காட்டி, "இந்த இடத்திற்கு வர வேண்டும் மிகவும் அவசரம்" என்கிறான்.
டாக்டரும் காரை எடுத்துக் கொண்டு அந்த ஆளுடன் குறிப்பிட்ட ஊருக்குச் செல்கிறார்.
ஊர் வந்ததும் டாக்டரை அழைத்து வந்தவன் காரிலிருந்து இறங்கினான். டாக்டரைப் பார்த்து, "உங்களது விசிட்டிங் பீஸ் எவ்வளவு?" என்றான்.
டாக்டர்,"ஐம்பது ரூபாய்" என்றார்.
உடனே அவன் ஐம்பது ரூபாயை எடுத்துக் கொடுத்து விட்டு, "மிகவும் நன்றி டாக்டர். அங்கேயிருந்து இங்கே வர டாக்ஸிக்காரன் நூறு ரூபாய் கேட்டான்" என்றான்..

காந்திஜியின் நகைச்சுவை

காந்திஜியின் நகைச்சுவை
                                                                                               - தேனி.எஸ்.மாரியப்பன்.
ஒலிபெருக்கிக்காரரின் குடை
காந்தியடிகள் பொதுக்கூட்டம் ஒன்றில் பேசிக் கொண்டிருந்தார். அப்பொழுது திடீரென்று மழை பெய்தது. மழையைப் பொருட்படுத்தாமல் மக்கள் நனைந்து கொண்டே காந்தியின் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.
அப்போது ஒருவர் குடையை விரித்து காந்தியின் தலைக்கு மேலே பிடித்தார். இதைக் கண்ட காந்தி, "மக்கள் எல்லாம் நனையும் போது எனக்கு மட்டும் எதற்குக் குடை?" என்று கேட்டார்.
குடை பிடிப்பவரோ காந்தியின் சொல்லைக் கேட்கவில்லை. தொடர்ந்து குடையைப் பிடித்துக் கொண்டே இருந்தார். 
உடனே காந்தி கூட்டத்தினரைப் பார்த்து சிரித்துக் கொண்டே , "இவர் குடை பிடிப்பதைப் பார்த்தால் ஒலிபெருக்கிக்குச் சொந்தக்காரராக இருப்பார் போலிருக்கிறது. அதனால்தான் ஒலிபெருக்கி நனையாமல் இருக்க குடை பிடித்துக் கொண்டிருக்கிறார்." என்றார்.
இதைக் கேட்ட கூட்டத்தினர் அனைவரும் பலமாகச் சிரித்தனர்.
எனக்குப் பயன்படக் கூடியது.
காந்திஜி லண்டனில் நடந்த இரண்டாவது வட்டமேஜை மாநாட்டில் கலந்து கொள்ள கப்பலில் பயணம் செய்து கொண்டிருந்தார். ஆங்கிலேயர் ஒருவரும் அதே கப்பலில் பயணம் செய்தார்.
பயணத்தின் போது காந்திஜியை அவர் அடிக்கடி கிண்டல் செய்து கொண்டு வந்தார் அவர். காந்தியடிகளோ இதைக் கொஞ்சம் கூட கண்டு கொள்ளவில்லை. வெறுத்துப் போன ஆசாமி, காந்தியை நக்கலடித்து சில கவிதைகளை எழுதினார். அதை காந்தியிடம் கொடுத்து,"படித்துப் பாருங்கள்" என்றார்.
கவிதைகளைப் படித்து ஆசாமியின் நக்கலைப் புரிந்து கொண்டார். ஆனாலும் அது குறித்து கவலைப்படவில்லை.
மறுநாள் காலை அந்த ஆசாமி காந்தியடிகளைப் பார்க்க வந்தார். காந்திஜியிடம் ,"என் கவிதைகள் எப்படி? பயனுள்ளதாக இருந்திருக்குமே?" என்று நமட்டுச் சிரிப்புடன் கேட்டார்.
காந்தியடிகள் சிரித்துக் கொண்டே "ஓ..! தாங்கள் கொடுத்த கவிதைகளை ஒன்று விடாமல் படித்தேன். அதில் எஅன்க்குப் பயன்படக்கூடிய அம்சத்தை எடுத்துப் பத்திரப்படுத்தி வைத்திருக்கிறேன்." என்று கூறி அந்தக் காகிதத்தில் குத்தியிருந்த குண்டூசியை எடுத்துக் காட்டினார். நீங்கள் கொடுத்ததில் இதுதான் எனக்குப் பயன்படக் கூடியது."என்றார்.
அந்த ஆங்கிலேயரின் முகத்தில் ஈயாடவில்லை.
நீர்வீழ்ச்சியை விட பெரியது.

காந்தியடிகள் ஒருமுறை கர்நாடக மாநிலத்திற்குச் சென்றிருந்தார். அப்போது அங்கிருந்த சிலர் காந்திஜியிடம், "ஜோக் நீர் வீழ்ச்சியைப் பார்க்க வருகிறீர்களா?" என்று கேட்டனர்.
அந்த அன்பர்களிம் அழைப்பைத் தட்டிக் கழிக்க விரும்பாத காந்தியடிகள்,"நீங்கள் மழையைப் பார்த்திருக்கிறீர்கள் அல்லவா? நன்கு கவனித்திருக்கிறீர்களா? வானத்திலிருந்து வருகிறது. வானிலுள்ள கருமேகங்களிலிருந்து வருகிறது. நீர்வீழ்ச்சி மலையிலிருந்து அல்லவா விழுகிறது. மலையை விட உயர்ந்த இடத்திலிருந்து வருகிறது மழை. அதற்கு இணை அதுவேதான். அதற்கு அடுத்தல்லவா நீர் வீழ்ச்சி எல்லாம்..."என்று அவர்களைச் சிரிக்க வைத்தார். சிந்திக்கவும் வைத்தார்.

ஆன்மீகவாதிகள் நகைச்சுவை

 ஆன்மீகவாதிகள் நகைச்சுவை
-டி.எஸ்.பத்மநாபன்.
பேயைப் பார்த்ததில்லை.
சுவாமி சின்மயானந்தா ஒருமுறை சென்னையில் கீத ஞான யக்ஞம் நடத்துவதற்குச் சரியான இடத்தைத் தேடிக் கொண்டிருந்தார்.
அந்தணர்கள் வசமிருந்த பலகோவில்கள் அவருக்கு இடம் கொடுக்க மறுத்தன. அப்போது அவரது சீடர் அவரிடம் ஓடி வந்தார். "ஒரு இசுலாம் இனத்தவர் தனது இடத்தைக் கொடுக்கிறேன்" என்று சொல்கிறார், "ஆனால்" என்று தயங்கியவாறே, "அந்த இடம் பேய் இருக்கும் இடமாம்" என்று சொன்னார்.
சுவாமி உடனே," அதனாலென்ன, நான் இன்னும் பேயைப் பார்த்ததே இல்லை. ஒரு நல்ல சந்தர்ப்பம்" என்றார்.
யாருக்கு யார் தரிசனம்?

ரமண மகரிஷி ஒருமுறை வழக்கம்போல அருணாச்சல மலையை வலம் வந்து கொண்டிருந்தார்.
அவரிடம் பற்றுதல் கொண்ட ஒருவர் அவர் பின்னாலேயே வேகமாக ஓடிவந்து ரமண மகரிஷியின் முன்னால் நின்று, "நான் உங்கள் தரிசனத்திற்காக ஏங்கிக் கொண்டிருந்தேன். இன்று நீங்கள் தரிசனம் கொடுத்துவிட்டீர்கள்"என்று மகிழ்ச்சியோடு சொன்னார்.
ரமண மகரிஷி உடனே, " நான் எங்கே தரிசனம் கொடுத்தேன்? நீங்கள்தானே என் முன்னால் வந்து நின்று எனக்கு தரிசனம் கொடுத்தீர்கள்" என்று சொன்னார்.
ஆசிக்கு எவ்வளவு தூரம்?
ஒருமுறை அமெரிக்க பக்தர்கள் சிலர் ரமண மகரிஷியைத் தரிசிக்கச் சென்றார்கள். கூட்டம் அதிகமாக இருந்ததால் அவர்கள் பின் வரிசையில் இருந்தார்கள்.
அவர்கள் மகரிஷியிடம் அவரது அருளைப் பெற முன்னால் வந்து அமரலாமா? என்று கேட்டார்கள்.

மகரிஷி, " நீங்கள் முன்னால் வந்து அமர்வதில் எனக்கு ஒன்றும் ஆட்சேபனை இல்லை. ஆனால் எனது அருள் தூரத்தைப் பொருத்தது அல்ல, நீங்கள் பக்கத்தில் இருந்தாலும் தூரத்தில் இருந்தாலும் என் ஆசி இருக்கும்." என்று சொன்னார்.
அருள் கிடைக்கக் கோர்ட்டுக்குப் போகலாமோ?
சில பக்தர்கள் மகரிஷியை அவர்கள் தலைமேல் அவரது கையை வைத்து ஆசீர்வதித்தால் பூரண அருள் கிடைக்கும்' என்று சொன்னார்கள்.
மகரிஷி உடனே," இது என்ன வேடிக்கையாய் இருக்கிறது- இன்னும் கொஞ்சம் போனால் என்னை அருள் தரச் சொல்லி பத்திரத்தில் எழுதி வாங்குவீர்கள் போலிருக்கிறது- அப்படி அருள் கிடைக்காவிட்டால் கோர்ட்டுக்குக் கூட என்னை இழுப்பீர்களோ என்னவோ" என்றார்.
நல்ல டாக்டரைப் பார்க்க...
சுவாமி தயானந்த சரஸ்வதி ஒருமுறை இந்தக் கதையைச் சொன்னார்.
சாகப் போகும் நிலையிலிருந்த மூன்று பேரிடம் டாக்டர் "அவர்களுடைய கடைசி ஆசை என்ன?" என்று கேட்டார்.
அதற்கு முதலாமவன் சொன்னான், "தான் பாதிரியாரிடம் பாவ மன்னிப்புக் மன்னிப்புக் கேட்க விரும்புவதாக"
இரண்டாவதாக இருந்தவர் "தன்னுடைய குடும்பத்தவர்க்ள் அனைவரையும் சந்திக்க விரும்புவதாகச் சொன்னார்.
மூன்றாவது ஆளோ நான் வேறு ஒரு நல்ல டாக்டரைப் பார்க்க விரும்புகிறேன்" என்று சொன்னார்.
கீதையைக் கேட்க ஒருவர்
படித்த பண்டிதர் ஒருவர் காஞ்சிபரமாச்சாரியாரிடம் தான் கீதையைக் கரைத்துக் குடித்திருப்பதாக பீற்றிக் கொண்டிருந்தார்.
சுவாமிகள் அவரிடம் அங்குள்ள கோவில் ஒன்றில் அவரால் பத்துநாட்கள் கீதை உபன்னியாசம் செய்ய முடியுமா? என்று கேட்டார். அந்தப்

பண்டிதரும் சம்மதிக்க உபன்னியாசம் நடந்தது. முதல் நாள் நல்ல கூட்டம் வந்தது.
இரண்டாம் நாள், மூன்றாம் நாள் என்று நாள் செல்லச் செல்லக் கூட்டமும் குறைந்து கொண்டே வந்தது.
அவர் பரமாச்சாரியாரிடம் ," என்ன ஊர் இது? முதல் நாள் 50பேர் வந்தார்கள். இரண்டாம் நாள் 25 பேர். பிறகோ இரண்டே பேர்தான் வந்தார்கள்- யாருக்குமே கீதையைக் கேட்க ஆசையில்லை போலிருக்கிறது" என்று அலுத்துக் கொண்டார்.
பரமாச்சாரியார் ஒரு புன்முறுவலுடன், " ஏன் வருத்தப் படுகிறீர்கள்? கண்ணன்

கீதையைச் சொன்ன போது அதைக் கேட்க ஒரே ஒருவர்தானே இருந்தார்" என்று சொன்னார்.

அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள்

அறிஞர் அண்ணாவின் நகைச்சுவைகள்
-கணேஷ் அரவிந்த்.
சிலுவையும் சீடர்களும்
ஒரு முறை சட்டமன்றத்தில் - அப்போது நிதியமைச்சராக இருந்த சி.சுப்ரமணியம் பாராளுமன்றத் தேர்தலில் போட்டியிட்டு டில்லி செல்வதாக இருந்ததால் அவரைப் பாராட்டி வாழ்த்திப் பேசினார். கழக உறுப்பினர் ஒருவர் சி.சுப்ரமணியத்தை இயேசு பெருமானோடு ஒப்பிட்டு வெகுவாகப் புகழ்ந்து பாராட்டினார்.

குறுக்கிட்ட சுப்ரமணியம் இயேசுநாதரைப் போல் சிலுவையில் அறையாமல் இருந்ததால் சரி என்றார்.

இயேசு நாதருடைய சீடர்தான் அவரைக் காட்டிக்கொடுத்தார் என்று உடனே எழுந்துக் கூறினார் அண்ணா!
அவையில் சிரிப்பொலி எழுந்தது.

உங்கள் கட்சிக்காரர்களால்தான் நீங்கள் எதிர்பார்க்கின்ற தொந்தரவு ஏற்படலாமே தவிர எங்களால் அல்ல என்பதை இவ்வளவு அழகாக நகைச்சுவையுடன் அண்ணா குறிப்பிட்டார்.
சம்பந்தி சண்டையா?

சட்டமன்றத்தில் வினாயகம் என்பவர் எழுந்து, “
மிருகக்காட்சி சாலையில் நான் கொடுத்த ஆண் புலிக்குட்டியை  சரியாகக் கண்காணிப்பதில்லை. ஆனால், எம்.ஜி.ஆர். கொடுத்த பெண் புலிக்குட்டி நன்றாக வளர்க்கப்படுகிறதே!” என்று புகார் கூறினார்.

உடனே அண்ணா, ”சம்பந்திகள் இருவரும் உட்கார்ந்து பேசி தீர்த்துக் கொள்ளுங்கள்” என்று பதில் கூறினார்.

புகார் கூறியவர் உட்பட அனைவரும் சிரித்தனர்.
புளியமரத்தின் சாதனை
பேரறிஞர் அண்ணா தமிழக மக்களின் நல்லாதரவைப் பெற்று, முதல்வராக வீற்றிருந்த சமயம், ”விலைவாசி குறைந்துள்ளது” என்று அண்ணாவும் உறுப்பினர்களும் கூறியதைக் கேட்ட எதிர்கட்சி உறுப்பினர் ஒருவர் கேலியாக - புளி விலை குறைந்துள்ளதே அது யார் சாதனை? என்று கேட்கிறார்.

அண்ணா அமைதியாக எழுந்து ”அது புளியமரத்தின் சாதனை” என்றார்

அவை சிரிப்பில் முழ்குகிறது! கேட்பவருக்கு எப்படி இருந்திருக்கும்?

ஊசி போட்டாச்சா?

அறிஞர் அண்ணா தோழர் இராசகோபால் என்பவரை அடிக்கடி கிண்டல் செய்து கொண்டேயிருப்பார். ஒரு சமயம் தோழர் இராசகோபால் அவர்கள் அண்ணாவிடம் வந்து தம்மை இரவு எலி ஒன்று கடித்து விட்டதாகக் கூறினார்.

அண்ணா அவர்கள் சிரித்துக் கொண்டே எலியா? உன்னையா? என்று கேட்டார்.

”ஆமாங்க! என்னைத்தான் எலி கடித்துவிட்டது!” என்று தோழர் இராசகோபால் இரக்கம் தோன்றக் கூறினார்.

”ஊசி போடனுமே! ஊசி போட்டாச்சா?” என்று அண்ணா கேட்க, உடனே இராசகோபால் இன்னும் போட்டுக்கலிங்க! என்று கூறினார்.
உடனே அண்ணா யாருக்கு ஊசி என்று இராசகோபாலைப் பார்த்துக் கேட்டார்.

எனக்குத்தான்! என்று இராசகோபால் அவசரமாகக் கூறினார்.

அண்ணா அவர்கள் சிர்த்துக்கொண்டே உனக்கல்ல! அந்த எலிக்கு ஊசி போட்டாச்சா என்றுதான் கேட்டேன்! என்றார்.

”எலிக்கு ஏன் ஊசி?” என்று இராசகோபால் கேட்க,
அதற்கு அண்ணா, அதனுடைய விஷம் உன்னைப் பாதிப்பதை விட, உன்னுடைய விஷம் அதனை அகிமாகப் பாதிக்கச் செய்திருக்கும்!” என்று சிரித்துக் கொண்டே கூறினார்.
நாட்கள் எண்ணப்படுகின்றன
ஒரு முறை சட்டமன்றத்தில் காங்கிரசுக் கட்சியைச் சேர்ந்த வினாயகம் என்பவர் அண்ணாவைப் பார்த்து, "Your Days are numbered"  (உங்களுடைய நாட்கள் எண்ணப்படுகின்றன) என்று கூறினார்.
அண்ணா அவர்கள் புன்முறுவல் பூத்த முகத்துடன் அமைதியாக எழுந்து, "My Steps are measured" (என்னுடைய காலடிகளை எடுத்து வைக்கிறேன்) என்றார்.
ஆட்டிறைச்சி மட்டும் வேண்டாம்
ஒரு முறை அறிஞர் அண்ணாவைப் பார்க்க சிலம்புச் செல்வர் ம.பொ.சி அண்ணா இல்லத்துக்கு வந்தார்.
 அண்ணா ம.பொ.சி.க்கு விருந்தளிக்க எண்ணி அசைவ உணவுக்குச் சொல்லி அனுப்பினார்.
உடனே ம.பொ.சி “ஆட்டு இறைச்சி மட்டும் வேண்டாம்.” என்றார்.
“எதற்கு? ” என்றார் அண்ணா.
 “டாக்டர் கொலஸ்ட்ரல் (கொழுப்பு) ஜாஸ்த்தியா இருக்குன்னுட்டார்” என்றார் சிலம்பு செல்வர்.
உடனே அண்ணா நகைச்சுவையாக ”அடடே, அந்த விஷயம் அவருக்கும் தெரிஞ்சு போச்சா? ” என்றார்.

வாரியார் பேச்சின் நகைச்சுவைகள்

 வாரியார் பேச்சின் நகைச்சுவைகள்
-கணேஷ் அரவிந்த்.
கடைசிப் பிள்ளை
கிருபானந்தவாரியார் பாரதம் சொல்லிக் கொண்டு இருந்தார். சகாதேவன் பற்றி சொல்ல வேண்டி வந்தது.
"சகாதேவன் கடைசிப் பிள்ளை. கடைக்குட்டி. அவன் சிறந்த ஞானி. பொதுவாகவே கடைக்குட்டிகள் ஞானியாக இருப்பார்கள். காரணம் அப்பனுக்கு ஞானம் வந்த பிறகு பிறக்கிறவன் கடைக்குட்டி பிள்ளை :) அல்லது இவன் பிறந்த பிறகு அப்பன் ஞானியாகி விடுவான். என்ன ஞானம் என்கிறீர்களா? இனி குழந்தை பெறவே கூடாது என்ற ஞானம்."

இவ்வாறு விளக்கிய வாரியார் கூட்டத்தினரை பார்த்து, " இங்கே யாராவது கடைக்குட்டிப் பிள்ளைகள் இருக்கிறீர்களா?" என்று கேட்டார். 10 அல்லது 15 சிறுமியர்கள் எழுந்து நின்று தாங்கள் கடைக்குட்டிகள் என்றார்கள்.

வாரியர் வாயைப் பொத்திக் கொண்டு சிரித்துவிட்டு. "உட்காருங்க! யார் எந்த விஷயத்தை முடிவு செய்றதுன்னு கிடையாதா? உங்களோட அம்மா அப்பா என்ன முடிவுல இருக்காங்களோ. வீட்டுக்குப் போய் உதை வாங்காதீங்க" என்றார்.
இறக்கை முளைக்குமா?

ஒரு சொற்பொழிவில் கிருபானந்த வாரியார் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, "ராம நாம மந்திரத்தை சொன்ன உடன், இறக்கைகள் வெட்டப்பட்ட சம்பாதியின் இறக்கைகள் மீண்டும் முளைத்தன'' என்றார்.
இதைக் கேட்டுக் கொண்டிருந்த ஒரு இளைஞன் குறுக்கிட்டு, வாரியாரிடம் ஒரு கேள்வி கேட்டான்.
"ஒரு கிளியின் இறக்கைகளை நான் வெட்டி விடுகிறேன். நீங்கள் ராம நாமத்தைச் சொல்லி அதற்கு இறக்கை முளைக்கச் செய்திடுங்கள், பார்ப்போம்'' என்றார்.
வாரியாரும் அதற்கு நகைச்சுவை ததும்பவே பதில் சொன்னார்.

"கிளிக்கு இறக்கை நிச்சயம் முளைக்கும். நான் சொன்னால் முளைக்குமா என்று தெரியாது. சித்துக்களை செய்தவர்கள் சொன்னால் கட்டாயம் முளைக்கும்'' என்றார்.
சொல்லின் செல்வர்

ஒரு ஊரில் கிருபானந்த வாரியார் சொற்பொழிவு ஆற்றிக் கொண்டிருந்தார். அவர் மிகுந்த சுவாரசியமாகப் பேசிக் கொண்டிருந்தபோது பாதியில் ஒவ்வொருவராக எழுந்து போய்க் கொண்டிருந்தனர்.
அவர்களைப் பார்த்து வாரியார் சொன்னார், ''ராமாயணத்தில் அனுமனை சொல்லின் செல்வர் என்று குறிப்பிடுவார்கள். இந்த ஊரிலும் சொல்லின் செல்வர்கள் பலர் இருப்பதைப் பார்க்கிறேன்.''என்றார்.
 போய்க்கொண்டிருந்தவர்கள் யாரை சொல்லப் போகிறார் என்று தெரிந்து கொள்ள ஆவலுடன் நின்றனர்.
வாரியார் தொடர்ந்தார், ''நான் நல்ல பல விஷயங்களைச் சொல்லின் அதைக் கேட்காமல் செல்பவரைத் தான் சொல்கிறேன் .''
தர்மத்துக்கு என் சொத்து

ஒரு ஊரில் மிகப் பெரிய செல்வந்தர் வாழ்ந்து வந்தார். ஆனால் அவர் மிகவும் கருமியாக கஞ்சத்தனத்துடன் வாழ்ந்து வந்தார்.

அந்த ஊரில் நடைபெறும் கோவில் சீரமைப்பு, பள்ளிக் கட்டடம் கட்டுதல், கிராம மேம்பாடு போன்ற பல நல்ல செயல்பாடுகளுக்காக ஊர் பொதுமக்கள் பலமுறை போய் கேட்டும் ஒரு பைசா கூட கொடுக்காதவர்.

தீடிரென படுக்கையில் விழுந்தவர் சாகும் தருவாயை அடைந்தார். உடனே ஊர் பொதுமக்களை அழைத்து "எனக்குப் பிறகு எனது சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கே!" என்றார்.
ஊர் மக்களுக்கெல்லாம் அதிர்ச்சி, ஆச்சரியம்.

உடனே அங்கிருந்த ஊர் முக்கிய பிரமுகர் செல்வந்தரிடம், "ஐயா! உங்கள் சொத்துக்கள் அனைத்தும் தருமத்திற்கு தர ஒப்புக் கொண்டதற்கு மிக்க நன்றி! இந்த சொத்துக்களை கல்வி வளர்ச்சிக்காக உபயோகிக்கலாமா? அல்லது மருத்துவமனை கட்ட உபயோகிக்கலாமா?" என்று கேட்டார்.

அதற்கு அந்த பெரியவர் "அட நீங்க ஒண்ணு, இந்த சொத்துக்கள் அனைத்தும் எனது மனைவி தருமம் என்கிற தருமாம்பாளுக்கே சொந்தம்” என சொன்னாராம்.
தொகுப்பு: கணேஷ் அரவிந்த்.

முதல் தொழில் அரசியல்!

முதல் தொழில் அரசியல்!

ஒரு பாதிரியார், ஒரு டாக்டர், ஓர் அரசியல்வாதி மூவரும் ஒருநாள் கூடிப் பேசிக் கொண்டிருந்த போது, யாருடைய தொழில் மிகவும் பழமையானது என ஒரு கேள்வி வந்தது.
"மனிதனின் முதல் செயலே பிரார்த்தனை செய்து கடவுளுக்கு தன் நன்றியைத் தெரிவித்ததாகும். எனவே என் தொழில்தான் பழமையானது!" என்றார் பாதிரியார்.
"சுத்த அபத்தம்! கடவுள் பெண்ணைப் படைப்பதற்காக ஆணின் உடம்பிலிருந்து ஒரு எலும்பை எடுத்தார். அதுவே முதல் செயல். எனது தொழில்தான் மிகப் பழமையான தொழில். கடவுள் பெண்ணைப் படைப்பதற்கு முன்பு உலகில் வெறும் கலவரம் மட்டும்தான் இருந்தது!" என்றார் டாக்டர்.
"சரியாகச் சொன்னீர்கள் டாக்டர்! உங்கள் வாதப்படி எனது தொழில்தான் பழமையான தொழில்" என்றார் அரசியல்வாதி.
"எப்படி?"
"கடவுளின் அறுவை சிகிச்சைக்கு முன்பு உலகில் வெறும் கலவரம்தான் இருந்தது என்று நீங்கள்தானே சொன்னீர்கள்? அந்தக் கலவரத்தை என்னைப் போன்ற அரசியல்வாதி தவிர, வேறு யார் உருவாக்கியிருக்க முடியும்? எனவே, என் தொழில்தான் மிகப் பழமையானது." என்றார் அரசியல்வாதி.
-ஓஷோ ரஜ்னீஷ் சொன்ன குட்டிக்கதை

மாவீரனின் கடைசி ஆசைகள்

மாவீரனின் கடைசி ஆசைகள்
மாவீரன் அலெக்ஸாண்டர் எல்லா நாடுகளையும் கைப்பற்றி விட்டு தாய்நாடு திரும்பும் வழியில் நோய்வாய்ப்பட்டார். பல மாதங்கள் ஆகியும் அவருக்கு அந்த நோய் தீரவில்லை. சாவு தன்னை நெருங்குவதை உணர்ந்தார் அவர்.
ஒருநாள் தன்னுடைய தலைமை வீரர்களை அழைத்து, "என்னுடைய சாவு நெருங்கி விட்டது. எனக்கு மூன்று ஆசைகள் உள்ளன. அவற்றை நீங்கள் கண்டிப்பாக நிறைவேற்றி வைக்க வேண்டும்" என்று கட்டளையிட்டார்.
அவர்களும் அவற்றை நிறைவேற்றுவதாக வாக்களித்தனர்.

முதல் விருப்பமாக, "என்னுடைய சவப்பெட்டியை எனக்கு சிகிச்சையளித்த மருத்துவர்கள் மட்டுமே தூக்கி வர வேண்டும்."

இரண்டாவது, 'என்னைப் புதைக்கும் இடத்திற்குச் செல்லும் வழியானது நான் சம்பாதித்து வைத்த, விலைமதிப்பற்ற கற்களால் அலங்காரம் செய்யப்பட வேண்டும்."

மூன்றாவதாக, "என் கைகள் இரண்டையும் சவப்பெட்டிக்கு வெளியில் தெரியுமாறு வைக்க வேண்டும்."

வீரர்களுக்கு இந்த ஆசைகள் வித்தியாசமாகத் தெரிந்தன. என்ன காரணமாக இருக்கும் என்று கேட்கப் பயந்தார்கள்.
அதில் ஒருவன் தைரியமாக முன்வந்து, "அரசே! நாங்கள் தங்கள் ஆசையைக் கண்டிப்பாக நிறைவேற்றுகிறோம். ஆனால், இதற்கான காரணத்தை தாங்கள் விளக்க வேண்டும்" என்று கேட்க, அலெக்ஸாண்டர் அதற்கு விளக்கமளித்தார்.
1. என்னுடைய சவப்பெட்டியை மருத்துவர்கள் தூக்கிச் செல்வதால், உலகில் உள்ள எல்லோரும் ஒரு விஷயத்தை அறிந்து கொள்வார்கள். மருத்துவர்களால் எந்த ஒரு நோயிலிருந்தும் ஒரு உயிரை நிரந்தரமாகக் காப்பாற்ற முடியாது. மரணத்தை அவர்களால் நிறுத்த முடியாது.

2. வாழ்க்கையில் எவ்வளவு பணமும், நாடுகளும், இன்ன பிற செல்வங்களும் சம்பாதித்தாலும், அவற்றை உன்னுடன் எடுத்துச் செல்ல முடியாது. அது சவக்குழி வரை மட்டும்தான்! மனிதர்கள் வீணாக அதன் பின்னால் செல்ல வேண்டாம் என்பதைத் தெரியப்படுத்துவதற்காக!

3. உலகையே வென்றவன் சாகும்போது கைகளில் ஒன்றுமில்லாதவனாகத்தான் இருக்கிறான் என்று அறிந்து கொள்வதற்காக…

Wednesday, May 4, 2011

துன்பத்திலிருந்து விடுபட முடியாதது ஏன்?

துன்பத்திலிருந்து விடுபட முடியாதது ஏன்?
பசி தாங்க முடியாத இரண்டு எலிகள் தாங்கள் ஒளிந்திருந்த வீட்டின் சமையல் அறைக்குள் புகுந்தன.
அங்கே ஒரு பெரிய பானை நிறைய பால் இருப்பதைக் கண்டன. ஆனால் அந்தப் பானை உயரமானதாக இருந்ததால் பாலைக் குடிக்க முடியாமல் திண்டாடின.
இதையடுத்து இரு எலிகளும் ஒரு முடிவுக்கு வந்தன. ஓர் எலியின் மீது இன்னோர் எலி ஏறி பாலைக் குடிப்பது என்றும், அதன் பிறகு கீழே உள்ள எலி மேல் ஏறி பாலைக் குடிக்கலாம் என திட்டமிட்டு, அதை செயல்படுத்தின.

அதன்படி மேலே உள்ள எலி பாலைக் குடித்த போது, கீழே இருந்த எலி கத்தியது:

"போதும்! நான் பால் குடிக்க வேண்டும்..."

கீழே இருந்த எலி போட்ட சத்தத்தை கேட்டு  மேலே இருந்த எலி மிரண்டு போய் பால் பானைக்குள் விழுந்து விட்டது.

இதைக் கண்ட கீழே இருந்த எலி, "நல்லது, இனி எனக்குத்தான் இந்தப் பானையிலிருக்கும் பால் அனைத்தும்" என்று நினைத்தது.

பிறகு அந்தப் பானையைச் சுற்றி சுற்றி வந்தது. ஆனால் மேலே ஏற முடியவில்லை. கடைசியில் பசியால் அது செத்துப் போய்விட்டது.
பால் பானைக்குள் விழுந்த எலி மேலே ஏறி வர முடியாமல் உயிரை விட்டது.
இப்படித்தான் துன்பத்திலிருந்து விடுபட ஒருவருக்குப் பிறரின் ஒத்துழைப்பு தேவையாக உள்ளது. ஆனால் அது சரியாக இல்லா விட்டால் இருவருக்குமே ஆபத்தாகி விடுகிறது.

உயில் எழுதுவதில் குழப்பம்.

உயில் எழுதுவதில் குழப்பம். 
முல்லாவின் நண்பர் ஒருவர் பெரிய பணக்காரர். அவர் வீட்டுக்கு முல்லா செல்லும் போதெல்லாம் பணக்காரர் தமது திரண்ட சொத்துக்களை தம் மக்களுக்கு எவ்வாறு பிரித்து உயில் எழுதி வைப்பது என்பது பற்றியே அடிக்கடி பேசிக் கொண்டிருப்பார்.

உயிலை எழுதுவதில் அவருக்கு எந்தச் சிக்கலும் இல்லை. ஆனால் தம்முடைய செல்வச் செருக்கினை மற்றவர்களுக்கு உணர்த்த வேண்டும் என்பதற்காகவே, யாரைக் கண்டாலும் உயிலைப் பற்றிப் பேச்செடுத்து மணிக்கணக்கில் அதைப் பற்றிப் பேசிக் கொண்டிருப்பார். அவருடைய பணச் செருக்கு முல்லாவுக்கு எரிச்சலாக இருக்கும்.
ஒருநாள் செல்வந்தர் முல்லாவைத் தேடிக் கொண்டு முல்லாவின் வீட்டுக்கு வந்தார். அப்போது முல்லா ஒரு தாளில் ஏதோ தீவிரமாக எழுதிக் கொண்டிருப்பதைக் கண்டார் அந்த செல்வந்தர்.

உடனே, "இவ்வளவு தீவிர சிந்தனையுடன் என்ன எழுதிக் கொண்டிருக்கிறீர்?" என்று கேட்டார்.

"நான் என் உயிலைத் தயாரித்துக் கொண்டிருக்கிறேன. இந்த உயிலைத் தயாரிப்பதில் ஒரே குழப்பம் சிக்கல் " என்றார் முல்லா.
"நீரும் உயில் எழுதுகிறீரா? உயில் எழுதும் அளவுக்கு உம்மிடம் சொத்தோ பணமோ ஏது? ஒன்றும் இல்லாத போது குழப்பமும் சிக்கலும் எங்கிருந்து வந்தது?" என்று செல்வந்தர் வியப்புடன் கேட்டார்.

"சொத்தோ, செல்வமோ இல்லாததால்தான் இந்த உயில் எழுதுவதில் சிக்கல். இல்லாத சொத்து அல்லது செல்வத்தை எவ்வாறு என் மக்களுக்குப் பிரித்துக் கொடுப்பது என்றுதான் எனக்கு சிறிதும் விளங்கவில்லை" என்று கூறியபடி சிரித்தார்
முல்லா.
தம்மை மட்டம் தட்டவே முல்லா இவ்வாறு கூறுகிறார் என்று உணர்ந்த செல்வந்தர் வெட்கத்துடன் தலை குனிந்தார். .

செய்நன்றி கொல்லலாமா?

செய்நன்றி கொல்லலாமா? 
சேவக்ராம் என்று ஒரு சாது இருந்தார். அவர் ஒரு வடமொழி வல்லுநர். ஒரு நாள் அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. அவரிடம் ஆயிரக்கணக்கில் தங்கக் காசுகள் இருந்தன. இருந்தாலும் அவரைப் பார்த்துக் கொள்ள ஒருவருமில்லை. எனவே அவர் துயரம் தாங்காது அழ ஆரம்பித்து விட்டார். வேங்கடாத்ரி என்னும் திருப்பதியிலிருந்து சேதுபந்தனம் எனப்படும் இராமேஸ்வரம் வரை பாதயாத்திரை சென்று கொண்டிருந்த நீல்கண்ட்வர்ணி வழியில் சேவக்ராமின் இந்த அவல நிலையை காண நேரிட்டது. அவர் சேவக்ராமிடம் சென்று “வருந்தாதீர்கள், நான் உங்களுக்கு வேண்டியதை செய்கிறேன்” என்று ஆறுதலாகக் கூறினார்.
அவ்வாறே தினமும் நீல்கண்ட் சேவக்ராமிற்காக வாழை இலைகளை கொண்டு படுக்கைகள் தயாரித்தார். சேவக்ராம் மலஜலம் கழித்து வீணாக்கிய துணிமணிகளைத் துவைத்துச் சுத்தம் செய்தார். அவருக்கு வேண்டிய சாப்பாட்டினைத் தயாரித்துக் கொடுத்தார். ஆனால் நீல்கண்ட் தனக்கு வேண்டிய உணவினை, தானே பிச்சை எடுப்பதன் மூலம் பெற்றுத் தயாரித்துக் கொண்டார். பல நேரங்களில் அவருக்கு பிச்சையாக எதுவும் கிடைக்காது. அப்போதெல்லாம் பட்டினியாகயிருந்து விடுவார். இவையெல்லாம் தெரிந்தும் சேவக்ராம் நீல்கண்டிற்குச் சாப்பிடுவதற்கு கொஞ்சம்கூட பணம் தரவில்லை, தன்கூட சாப்பிடுவதற்கும் அழைக்கவுமில்லை.
இவ்விதமாக நீல்கண்ட் சேவக்ராமிற்கு முன்போல நலம்பெற பணிவிடை செய்து வந்தார். நாளடைவில் சேவக்ராம் 750 கிராம் நெய் சாப்பிடுமளவிற்கு தேறியிருந்தார். ஆனால் அவர் 20 கிலோ எடையுள்ள சாமான்களை நீல்கண்டை தூக்கிவரச் செய்வார். அவருக்கு நீல்கண்ட் பற்றி அக்கறை எதுவுமில்லை. அவரது பெயர் தான் சேவக்ராம் தவிர, மற்றவர்களைத்தான் அவர் தனது பணியாளர்களாக்கிக் கொண்டார். நீல்கண்ட் மனதில் இந்த சேவக்ராம் நன்றி கெட்டவரென்று கருத்து தோன்றியது. உடனே அவரை விட்டுட்டு நீல்கண்ட்வர்ணி வெளியே வந்துவிட்டார்.
அதுதான் நீல்கண்ட்வர்ணிஸா அவர் சுயநலம் சிறிதுகூட இல்லாது அனைவருக்கும் அன்புடன் தொண்டாற்றினார். அவர் தன்னுடைய தேகநலத்துக்குகூட ஒன்றும் செய்து கொண்டதில்லை. மற்றவர்களுக்கு அன்புடன் தொண்டு செய்வது போதுமென்று வாழ்ந்தார். இந்த விலை மதிக்க முடியாத அரிய மனிதப்பிறவி அடைந்ததில் நாம் மிகவும் பேறுபெற்றவர்கள், நமக்கு இறைவன் அளித்துள்ள இத்தனை அரிய பேறுகளுக்கெல்லாம், இறைவனுக்கு நன்றி காட்டாமலும், சத்சங்க் என்ற கூட்டுவழிபாடு செய்யாது இருந்தாலும், நாமும் சேவக்ராம் போல செய்நன்றி கொன்றவர்களாவோம்.
-துளசிதாஸ் எஸ் ராஜகோபாலின் அருள்வாழ்வு மணிமாலையிலிருந்து
தொகுத்து வழங்கியவர்:
சந்தியா கிரிதர்.

எதற்கும் இருக்கலாம்... என்பதா?

எதற்கும் இருக்கலாம்... என்பதா?
ஒரு ஏழையான சீனக் குடியானவன், ஒரு அழகான கறுப்புக் குதிரை வைத்திருந்தான்.
ஊராருக்கு அந்தக் குதிரையின் மீது வியப்பு. அந்த ஊர் மன்னர் அந்தக் குதிரையைப் பற்றிக் கேள்விப்பட்டு அந்தக் குதிரைக்காக நிறையப் பணம் தருவதாகவும், அந்தக் குதிரையை தனக்கு விற்று விடுமாறும் அவனிடம் கேட்டார்.
அனால் அவன் சம்மதிக்கவில்லை.
ஊர்க்காரர்கள், “மன்னர் பெருந்தொகை கொடுக்க முன் வந்து நீ ஏற்கவில்லையே, நீ ஒரு முட்டாள்'' என்று விமரிசித்தனர்.
அதற்கு அவன், “இருக்கலாம்என்று சுருக்கமாகப் பதில் சொன்னான். சில நாளில் அக்குதிரை காணவில்லை.
ஊர்க்காரர்ளில் சிலர் அவனிடம், ''நீ பெருந்தொகையை இழந்தது எவ்வளவு பெரிய முட்டாள்தனம் என்பதை இப்போதாவது உணர்கிறாயா?'' என்று கேட்டனர்.
அப்போதும் அவன்,இருக்கலாம்என்றே பதில் கூறினான்.
சில நாட்களுக்குப் பிறகு, அந்தக் குதிரை மேலும் இருபது அழகிய கறுப்புக் குதிரைகளைக் காட்டிலிருந்து அழைத்து வந்தது. மக்கள், ''உன் குதிரையை விற்காதது உன் புத்திசாலித்தனம்,'' என்று பாராட்டினர்.
இதற்கும் குடியானவன், “இருக்கலாம்என்று கூறினான்.
அவனுடைய பையன் குதிரைகளுக்கு பயிற்சி கொடுத்துக் கொண்டிருக்கும் போது குதிரையிலிருந்து கீழே விழுந்து காலை உடைத்துக் கொண்டான்.
மக்கள், ''உன் பையனுக்கு அவ்வளவு விபரம் போதாது'' என்றனர்.
குடியானவன் வழக்கம் போலவே, “இருக்கலாம் என்றான்.
அப்போது சீனாவில் போர் வந்தது அதற்கு இளைஞர்களை ராணுவத்தில் சேரச் சொல்லிக் கட்டாயப் படுத்தினர். குடியானவன் மகன் மட்டும் கால் ஒடிந்திருந்தால் போருக்கு ஏற்றவனல்ல என்று விடப்பட்டான். மக்கள் குடியானவனிடம் சொல்லினர், ''நீ மிகவும் அதிர்ஷ்டசாலி. உன் பிள்ளை ராணுவத்தில் சேராமல் தப்பி விட்டான்.'' என்றனர்.
இப்போதும் அவன் சொன்னான்,இருக்கலாம்.
எதையும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற பக்குவம் அவனுக்கு இருக்கிறது. ஆனால் நம்மில் பலருக்கு...?

இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?

இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
பாத்ரா கிராமத்தில் போலாநாத் என்பவர் தனது மகன் மூல்ஜியிடம் “என் அருமை மகனே... நீ சிறுவன். இது ஓடியாடி விளையாடும் பருவம். கடவுளைக் கும்பிடும் வயது இல்லை கண்ணே...” என்று கூறினார்.
மூல்ஜி அவரிடம் “அப்படியென்றால், இறைவனை வணங்கத் தகுந்த வயது எது?” என்று கேட்டார்.
போலாநாத் “வயது முதிர்ந்த பின் இறைவனை வணங்குவது தகும்” என்று பதிலளித்தார்.
அதைக் கேட்ட மூல்ஜி, மறுவார்த்தை எதுவும் கூறாது வீட்டை விட்டு வெளியே போனார். போலாநாத்திற்கு மகிழ்ச்சி ஏற்பட்டது. மூல்ஜி தன் வயது நண்பர்களுடன் விளையாடப் போயிருக்கிறார் என்று அவர் நினைத்தார். ஆனால் நடந்ததோ வேறு மூல்ஜி அந்தக் கிராமத்தில் உள்ள வயதானவர்கள் உண்மையில் என்னதான் செய்து கொண்டிருக்கிறார்கள் என்று பார்க்கப் போனார்.
அங்கே கிராமத் திடலில் வயதானவர்கள் ஒன்றாகக்கூடி அமர்ந்து கொண்டு அரட்டை அடித்துக் கொண்டிருப்பதைப் பார்த்தார். ஒருவர் கூட தெய்வ வழிபாடு செய்து கொண்டிருப்பதைக் காண இயலவில்லை.
மாலையில் வீட்டிற்கு திரும்பிய மூல்ஜி, தன் தகப்பனாரிடம், “அப்பா கிராமத்திலிருக்கும் வயதானவர்களில் ஒருவர் கூட இறை வழிபாடு செய்யவில்லை. அவர்கள் வெட்டி அரட்டை அடித்துக் கொண்டு காலம் கழித்துக் கொண்டிருக்கிறார்கள். எனவே சின்ன வயதிலிருந்தே இறை வழிபாடு செய்வதுதான் சரியென்று எனக்குத் தோன்றுகிறது.” என்று விவரமாகக் கூறினார்.
அந்த மூல்ஜி யார் தெரியுமா? வேறு யாருமில்லை நமது குணாதீதானந்த் ஸ்வாமி. மூல்ஜி அனைவரிடமும் “பலமில்லாத கால்களால் நான் எப்படி ஆலயத்திற்கு நடந்து வருவேன்? என் பார்வை குறைந்த கண்களால் இறைவனைத் தரிசிக்கக் கூட இயலாது. வலுவிழந்த கைகளில் எதுவும் செய்ய இயலாது, நான் எவ்வாறு மாலை ஜபிப்பேன்? எவ்விதம் மற்றவர்க்குத் தொண்டு செய்வேன்? என்று வயதானபின் கூறுவதில் பயனில்லை. எனவே, இளமைப் பருவமே இறைவனை வழிபாடு செய்யத் தகுந்த வயது” என்று விளக்கமாகக் கூறினார்.
- திரு துளசிதாஸ் எஸ் ராஜகோபாலின் அருள்வாழ்வு மணிமாலையிலிருந்து
தொகுத்து வழங்கியவர்:
சந்தியா கிரிதர்.

தன் மகிழ்ச்சிக்குப் பிறருக்குத் தொல்லை தரலாமா?

தன் மகிழ்ச்சிக்குப் பிறருக்குத் தொல்லை தரலாமா?
ஒரு காலத்தில், லியோயாங், சீனத் தலைநகராக இருந்தது. அது மிகவும் பரபரப்பான நகரமாக இருந்தது.

எல்லாத் திசைகளிலிருந்தும் மக்கள் இந்த நகருக்கு வந்த வண்ணம் இருந்தனர். வியாபாரிகள் பட்டும் தேயிலையும் விற்க வந்தனர். மாணவர்கள் அரசுத் தேர்வு எழுதி, வாழ்வில் வெற்றி பெறும் கனவுகளோடு வந்தனர். பெற்றோர் குழந்தைகளுடன் சிங்க நடனம், நாட்டியம், உடற்பயிற்சி நிகழ்வு, பொம்மலாட்டம் என்று பல்வேறு நிகழ்வுகளைக் காண வந்தனர். விதவிதமான உணவு வகைகளை உண்டு மகிழ பலரும் வந்தனர்.

தலைநகரை அடைய பெரிய கதவுகள் இருந்தன. அந்தக் கதவுகளுக்கு முன் மிகப் பெரிய அகண்ட நதி ஒன்று இருந்தது. நதியைக் கடக்கப் பல படகுகள் இருந்தன. வண்ணமயமாய், பல்வேறு அலங்கார வளைவுகளுடன் அவை அமைக்கப்பட்டிருந்தன. மீன், வாத்து, சிங்க முகம் என்று படகுகள் பலவிதமாய் அனைவரையும் கவரும் விதத்தில் அலங்கரிக்கப்பட்டிருந்தன. நதியைக் கடக்க, மக்கள் இந்தப் படகுகளில் கூட்டம் கூட்டமாக ஏறிச் சென்றனர். குழந்தைகள் படகுகளில் பயணம் செய்யும் ஆர்வத்துடன் காத்துக் கிடந்தனர்.

படகில் செல்லும் போது, அனைவரும் அமைதியான நதியைக் கண்டு மகிழ்ந்தார்கள். அதன் அழகை ரசித்தார்கள். எடுத்து வந்த உணவுப் பொருட்களை உண்டார்கள்;. படகிலேயே விளையாட்டுக்கள் விளையாடினார்கள். பாடல்கள் பாடிச் சென்றார்கள்.
அமைதியாக ஓடிக் கொண்டிருந்த நதிக்கு அன்று ஏனோ ஆயிற்று. நதி அரசன் அமைதி குலைந்தது. கடுங்கோபத்துடன் எழுந்தான். மக்கள் அனைவரும் பயப்படும் வண்ணம் பெரிய அலைகளை எழுப்பினான். அந்த அலைகளில் படகுகள் மாட்டிக் கொண்டு தவித்தன. படகில் இருந்த பெரியவர்கள், குழந்தைகள் அனைவரும் அலறினர். தவிக்கும் மக்களைக் கண்டு, நதி அரசன் மிகவும் மகிழ்ந்தான். மேலும் மேலும் பெரிய அலைகளை உண்டாக்கிப் பெரும் தொல்லைகள் கொடுத்தான். நதி அரசனுக்கு அன்று செய்த செயல்கள் பெருமகிழ்ச்சி கொடுத்தது.

அதனால் அந்த நாள் முதல், மக்கள் அல்லல்படுவதைக் கண்டு ரசிக்க நதி அரசன் பெரிதும் விரும்ப ஆரம்பித்தான். தினம் பெரிய அலைகளை எழுப்பி விளையாட ஆரம்பித்தான்.

ஒரு நாள், ஒரு சிறுமி, படகிலிருந்து விழுந்து, நதியில் மூழ்கி, தவித்து, கஷ்டப்பட்டுக் கரையேறினாள். அந்த ஏழைச் சிறுமி அப்போது தின்று கொண்டிருந்த அரிசி உருண்டை நதியோடு சென்றது. அவளுடைய பூனையும் நதியில் விழுந்து சிக்கித் தவித்தது. அரிசி உருண்டை, பூனை இரண்டையும் இழந்த சிறுமி, ஓவென்று பெருங்குரலெடுத்து அழ ஆரம்பித்தாள். அவளது அழுகுரல் கருணை தெய்வம் குவான் யின்-னுக்கு கேட்டது. இனியும் நதியரசன் அட்டகாசம் மக்களைச் சேரக் கூடாது என்று முடிவு செய்து, உதவி செய்ய எண்ணினார்.

கருணை தெய்வம் சொர்க்கத்திலிருந்து இறங்கி வந்து, பெரும் அலைகளை எழுப்பிய வண்ணம் இருக்கும் நதிக்கரையை அடைந்தார். நதியை நோக்கி, "நதி அரசனே! நதி அரசனே! தயவு செய்து வெளியே வா. நான் உன்னோடு பேச வேண்டும்" என்றார்.

சுவையான உணவு உண்டு கொண்டிருந்த நதி அரசனுக்கு இந்தக் குரல் கேட்டது. வெறுப்புடன் எழுந்து, நீருக்கு வெளியே வந்தான்.

குவான் யின் முகம் மலர்ந்து, மிகவும் பணிவுடன், "நதி அரசனே.. மக்களுக்கு அல்லல் தரும் இந்தப் பெரிய அலைகளை எழுப்பாமல் நிறுத்த வேண்டும். அலைகள் பார்ப்பதற்கு வேண்டுமானால் அழகாக இருக்கலாம். ஆனால் எத்தனை பேர் அதில் மாட்டிக் கொண்டு தவிக்கிறார்கள் தெரியுமா?" என்று அமைதியாகக் கருணையோடு கேட்டார்.

"ஹா.. ஹா.. ஹா.. " என்று நதி அரசன் தன் தாடி குலுங்கச் சிரித்தான். "அழகிய பெண்ணே.. உனக்கு ஒன்று தெரியுமா? இந்த விளையாட்டு எனக்கு மிகவும் பிடித்திருக்கிறது. விழுவதைக் கண்டு சிரிக்காமல் இருப்பவரும் உண்டோ?" என்று தன் விருப்பத்தை எடுத்துக் கூறினான் நதி அரசன்.

இதைக் கேட்டு குவான் யின் பொறுமையாக இருக்க முயன்றார். வரும் கோபத்தை அடக்கிக் கொண்டு, "உன்னுடைய மகிழ்ச்சிக்காக அடுத்தவர்களை தவிக்க வைப்பது சரியா?" என்று கேட்டார்.

"ஹா.. ஹா.. ஹா.. எனக்கென்ன வந்தது. எனக்கு இது ரொம்பவும் பிடிக்கிறது!" என்று கூறி, நதி அரசன் கருணை தெய்வத்தின் வார்த்தைகளை ஏற்க மறுத்தான். தன்னுடைய சக்தி அனைத்தையும் வெளிக்காட்டத் துணிந்தான். இடி போன்று சிரித்து, மலையளவு உயரமான அலைகளை எழுப்பினான்.

குவான் யின்-னுக்கு நதி அரசனின் செயல் ஏமாற்றத்தைத் தந்தது. என்ன செய்வது என்று தெரியாமல் சொர்க்கத்திற்குத் திரும்பினார். வேறு ஏதேனும் வழி இருக்கிறதா என்று யோசிக்க ஆரம்பித்தார். அப்போது ஒரு யோசனை தோன்றியது.

திரும்பவும் மறு நாள் அதே இடத்திற்கு வந்தார். அழகிய பெண்ணாக மாறினார். மீன்காரப் பெண்ணின் உடையில், மீன் கூடையோடு நின்றார். நேரே சந்தைக்குச் சென்றார். மிகவும் கூட்டமான இடத்தில் தன் கூடையை வைத்தார். மீன்களைத் தரையில் பரப்பி வைத்தார். பெண் மிகவும் அழகாக இருந்ததாலும், மீன்கள் மிகவும் நன்றாக இருந்ததாலும், அவரைச் சுற்றி பலரும் கூட ஆரம்பித்தனர்.

எல்லோரும் மீனவப் பெண்ணைப் பார்க்க விரும்பினர். சிறிது நேரத்திலேயே அத்தனை மீன்களும் விற்றுப் போயின. இருந்தாலும் மக்கள் அவளைச் சுற்றி நின்றனர். அவளது அழகிய கண்களால் அனைவரையும் நோக்கி, "அன்பார்ந்த மக்களே! என்னிடம் இருந்த மீன்கள் விற்று விட்டன. அதனால் நாம் ஒரு விளையாட்டு விளையாடலாமா?" என்று கேட்டாள்.

கூட்டம் அமைதியாக இருந்தது.

பதில் வராதது கண்டு, அவளே தொடர்ந்து, "யார் என்னுடைய கூடையிலே அதிக பணத்தைப் போடுகிறார்களோ, அவர் என்னை மணக்கலாம். ஆனால் கூடையில் விழாத பணம் அத்தனையும் எனக்கு" என்று மீனவப் பெண் கூறினாள்.

கூட்டத்தில் அனைவரும் ஆரவாரம் செய்தனர்.

ஒரு இளைஞன் மீனவப் பெண்ணை சந்தேகத்துடன் பார்த்தான். "உன்னால் எப்படி அதிகப் பணம் போட்டவரைக் கண்டு பிடிக்க முடியும்?" என்று கேட்டான்.

மிகவும் கிழிந்த உடையோடு இருந்த இன்னொரு இளைஞன், "என்னிடமோ பணம் ஏதுமில்லை. அவளை மணக்க எனக்கு எந்த வாய்ப்பும் இல்லை" என்றான் ஆதங்கத்துடன்.

இன்னொருவன், "இந்தக் கூடை தான் பெரியதாக இருக்கிறதே.. எறியும் காசு எப்படி அதில் விழாமல் போகும்" என்று தன் பங்கிற்கு தன் கருத்தைக் கூறினான்.

அனைவரும் தங்கம், வெள்ளி, பித்தளை காசுகளை எடுத்து, மீனவப் பெண்ணின் கூடையில் எறிய ஆரம்பித்தனர். ஆனால் என்ன அதிசயம்! காசுகளுக்கு கண்கள் இருந்தன போலும். எந்தவொரு காசும் கூடைக்குள் சென்று விழவேயில்லை. அனைத்தும் கூடையைச் சுற்றியே விழுந்தன.

இருந்தாலும் ஆசை யாரை விட்டது? அழகிய பெண்ணை மணக்கும் ஆசையில் அனைவரும் காசுகளை எறிந்து முயன்றனர்.

வேண்டிய மட்டும் காசுகள் சேர்ந்தும் அதை அழகிய பாலம் கட்டக் கொடுத்தாள் மீனவப் பெண். ஒரு வருடத்தில் லியோயாங் நதியில் ஒரு அழகிய பாலம் கட்டப்பட்டது.

நதி அரசன் இன்னமும் பெரிய அலைகளை எழுப்பிய வண்ணமே இருந்தான். ஆனால், அதனால் மக்களுக்கு ஏதும் தொந்தரவு இருக்கவில்லை. தாத்தா, பாட்டி, பெற்றோர், குழந்தை, நாய், பூனை என்று அனைவரும் மகிழ்ச்சியுடன் இந்தப் பாலத்தில் நடந்து, நதியைக் கடந்தனர். இதைக் கண்டு கருணைக் கடவுள் குவான் யின் மகிழ்ச்சியுடன் சொர்க்கத்திற்குத் திரும்பினார்.
-சீன நாட்டுக் கதை
மொழிபெயர்ப்பு: சித்ரா சிவக்குமார், ஹாங்காங்.

ஒரு நாளில் ஞானம் பெற முடியுமா?

ஒரு நாளில் ஞானம் பெற முடியுமா?
ஒரு முறை எண்ணெய் வியாபாரி ஒருவர், குருதேவர் ராமகிருஷ்ண பரமஹம்சரைத் தரிசிப்பதற்காக வந்திருந்தார். அவர் நெடுநேரம் குருதேவரின் செயல்பாடுகளைப் பார்த்தபடியே பேசாமல் அமர்ந்திருந்தார்.
குருதேவரின் தீர்க்கமான பார்வை அவரின் மவுனத்தைக் கலைத்தது.
"குருதேவா! நான் எண்ணெய் வியாபாரம் செய்து வந்தேன். நல்ல முறையில் வியாபாரம் நடந்ததால் பெரும் பொருள் சேர்ந்தது. வயது ஏறஏற தெய்வ தரிசனம் பெற வேண்டும் என்ற ஆவல் எழுந்தது. சொத்துக்களை பிள்ளைகளுக்கு எழுதி வைத்துவிட்டு, வியாபாரத்தையும் அவர்களிடம் ஒப்படைத்தேன். பொருள், வியாபாரம் என்று அனைத்தையும் விட்ட பிறகும் தெய்வ தரிசனம் கிடைக்கவில்லையே ஏன்?'' என்று ஏக்கத்துடன் தெரிவித்தார்.
ராமகிருஷ்ணர் வியாபாரியைப் பார்த்து, " நீர் ஒரு வியாபாரி. நேற்று வரை வியாபாரத்தில் அக்கறை காட்டினீர்! உமக்குத் தெரியாத தொழில்நுட்பமா நான் சொல்லித் தரப்போகிறேன். நேற்று வரை கடையில் இருந்த எண்ணெய்க் குடத்தை எடுத்துக் கொள்வோம். அதில் இருந்த எண்ணெய்யை இன்று காலி செய்ததாக வைத்துக் கொள்ளுங்கள். அதில் இருந்த எண்ணெய் தான் போகுமே ஒழிய எண்ணெய் வாசனை அவ்வளவு எளிதில் போய் விடுமா?'' என்று பதில் கேள்வி கேட்டார்.
வியாபாரி, "குருவே! மன்னித்து விடுங்கள்! நான்தான் அவசரப்பட்டு விட்டேன். எண்ணெய்க் குடம் போலத தான் நானும் என்பதை மறந்துவிட டேன்! சொத்துக்களை வேண்டுமானால் பிள்ளைகளுக்கு எழுதி வைக்கலாம். ஆனால், அதிலிருந்து பற்றை அவ்வளவு எளிதில் போக்க முடியவில்லை. பிறவிக் குணம் ஒரே நாளில் மாறி ஞானம் வருவதில்லை என்ற உண்மையை உணர்ந்து விட்டேன்,'' என்று சொல்லி குருதேவரை வணங்கிச் சென்றார்.

நீண்ட ஆயுளுக்கு என்ன வழி?

நீண்ட ஆயுளுக்கு என்ன வழி?
ஒரு சம்சாரி எப்படிப்பட்ட வாழ்க்கை வாழ்ந்தால் அதிக ஆண்டுகள் வாழலாம் என்கிற கேள்வி அவன் மனதைத் துளைத்துக் கொண்டிருந்தது.
நூறாண்டுகள் வாழ்ந்த ஒருவரைப் போய்ப் பார்த்தான்.
அவரிடம், “அய்யா! நூறு ஆண்டுகள் வாழ்ந்து விட்டீர்களே எப்படி என்று சொல்லுங்களேன்?” என்று கேட்டான்.
அதற்கு அவர், “நான் மாமிசம் சாப்பிட மாட்டேன். குடிப்பழக்கம் என்னிடம் உண்டு அதனால் தான்!” என்று பதிலளித்தார்.
உள்ளறையிலிருந்து இலேசான இருமல் சத்தம் கேட்டது.
அங்கே இருமுவது யார்? என்று கேட்டார் சம்சாரி.

“எனது அண்ணன்தான்” என்றார் அந்த நூறாண்டு மனிதர்.
 “உங்களுக்கே வயது நூறாகிறது. உங்களுக்கு ஒரு அண்ணனா? அவரை நான் பார்க்க வேண்டுமே” என்றார் சம்சாரி.
அவரைப் பார்த்த சம்சாரி,  “அய்யா! உங்க தம்பி நூறு வருடம் வாழ்வதைப் பெருமையாக இருக்கிறது, ஆனால் அவருடைய அண்ணன் நீங்கள் அதைக் காட்டிலும் கூடுதலான் ஆண்டு வாழ்ந்து வருகிறீர்களே? எப்படி இத்தனை ஆண்டுகள் உங்களால் வாழ முடிகிறது?” என்று கேட்டார்.
“நான் தினமும் மாமிசம் சாப்பிடுவேன். குடிப்பழக்கம் எனக்கு இருப்பதால் தினமும் எனக்கு குடிக்காமல் இருக்க முடியாது” என்றார் அந்த நூறாண்டு மனிதரின் அண்ணன்.
சம்சாரிக்குத் தலையைச் சுற்றியது.
-நடிகர் ரஜினிகாந்த் சொன்ன குட்டிக்கதை
 

யார் முட்டாள்?

யார் முட்டாள்?
ஆற்றங்கரை ஓரமாக வந்து கொண்டிருந்த வழிப்போக்கன் ஒருவனுக்கு வைரக்கல் ஒன்று கண்ணில் பட்டது.
அது வைரம் என்று அறியாமல், விலை போகுமா என்ற சந்தேகத்துடன் கடைத்தெருவுக்கு எடுத்து வந்தான். அவன் கையில் வைரம் இருப்பதைப் பார்த்த வியாபாரி ஒருவன், இருபது ரூபாய்க்கு தன்னிடம் அதை விற்குமாறு கேட்டான்.
ஆனால் வழிபோக்கனோ பேரம் பேசித்தான் பார்ப்போமே என்ற எண்ணத்துடன் 25 ரூபாய் கேட்டான். ஐந்து ரூபாய் அதிகம் கொடுக்க விரும்பாத அந்த வியாபாரியும் 20 ரூபாய்க்கு பேரம் பேசினான். இதைக் கவனித்த மற்றொரு வியாபாரி 25 கொடுத்து அந்த வைரைத்தை வாங்கிக் கொண்டு சென்றான்.

ஆத்திரமடைந்த வியாபாரி அந்த வழிப்போக்கனை பார்த்து, “அட முட்டாளே! அதன் மதிப்பு பல ஆயிரம் பெரும். அறிவில்லாமல் விற்றுவிட்டாயே!” என்று திட்டினான்.

அதற்கு அவன், “அந்தக் கல்லுக்கு என்னுடைய மதிப்பு அவ்வளவுதான். ஆனால் அது வைரம், அதன் மதிப்பு தெரிந்தும் அதைத் தவறவிட்ட நீ தான் மிகப்பெரிய முட்டாள்” என்றான்.
சிலர் இப்படித்தான் உண்மையான மதிப்பு தெரிந்தும், கிடைத்ததை விட்டுவிட்டுத் தவிக்கிறார்கள்.

நம்பிக்கைதானே வாழ்க்கை!

நம்பிக்கைதானே வாழ்க்கை!
ஒரு காட்டில் இருந்த மூன்று மரங்கள் தங்களுடைய கனவுகளைப் பற்றி பேசிக் கொண்டிருந்தன.
முதல் மரம் சொல்லியது: "ஒருநாள் நான் ஒரு அழகான மரப்பேழை ஆகவேண்டும். விலையுயர்ந்த பொருள்களையும் செல்வங்களையும் என்னுள் வைத்திருக்க வேண்டும்".
இரண்டாவது மரம் சொல்லியது: "நான் ஒரு பலமான பெரிய கப்பலாக வேண்டும். அரசர்களையும் ராணிகளையும் சீற்றம் மிகுந்த கடலிலும் கூட பாதுகாப்பாக சுமந்து செல்ல வேண்டும்".
மூன்றாவது மரம் சொல்லியது: "நான் இந்தக் காட்டிலேயே உயர்ந்த மரமாக வளர வேண்டும். விண்ணை முட்டும் என் உயரத்தைப் பார்த்து கடவளுக்கு அருகில் நான் இருப்பதாக எண்ண வேண்டும்"
சில காலம் கழித்து மரங்களை வெட்டுவதற்காக தச்சர்கள் வந்தார்கள்.
முதல் மரத்தின் அருகில் வந்தவர்கள் "இது நல்ல பலமாக இருக்கிறது அதனால் இதை பெட்டிகள் செய்யும் தச்சனிடம் விற்றுவிடலாம்" என்றனர். மரத்திற்கும் தான் நினைத்தவாறே பேழையாகப் போவதை எண்ணி மகிழ்ச்சி.
இரண்டாம் மரத்திடம் வந்தவர்கள் "இது கப்பல் செய்ய ஏதுவாக இருக்கும். எனவே துறைமுகத்தில் விற்று விடலாம்" என்ற முடிவுக்கு வந்தனர். தான் ஆசைப் பட்டவாறே பெரிய கப்பலாகப் போகிறோம் என்று எண்ணி மகிழ்ந்தது மரம்.
மூன்றாம் மரத்தைக் கண்டவர்கள் "இதற்கு பெரிதாக எந்தத் தேவையும் இல்லை அதனால் இதை கிடங்கில் போட்டு விடலாம்" என்று வெட்டிச் சென்றனர்.

தச்சனிடம் வந்த முதலாவது மரம், தீவனப் பெட்டியாக செய்யப்பட்டு, தொழுவத்தில் வைக்கோல் வைக்கப் பயன்படுத்தப்பட்டது. துறைமுகத்திற்கு கொண்டு சென்ற இரண்டாவது மரம் சிறு மீன்பிடி படகாக செய்யப்பட்டது. மூன்றாவது மரத்தை வெட்டி கிடங்கில் போட்டனர். இவ்வாறு மூன்று மரங்களின் கனவுகளும் தகர்க்கப்பட்டன.

காலம் சென்றது. மரங்களும் தங்களது கனவுகளை மறந்து விட்டன. ஒரு தொழுவத்திற்கு ஒரு ஆணும் பெண்ணும் வந்தனர். அப்போது அந்த பெண் ஒரு குழந்தையை ஈன்றெடுத்தாள். அந்தக் குழந்தையை முதல் மரத்தால் செய்யப்பட்ட தீவனப் பெட்டியிலிருந்த வைக்கோலில் வைத்தனர். அந்த நிமிடமே முதல் மரம் உணர்ந்தது, 'செல்வங்களில் எல்லாம் பெரிய செல்வம் என்னுள் வைக்கப்பட்டு இருக்கிறது' என்று.

சில வருடங்கள் கழித்து இரண்டாவது மரத்திலான படகில் சில பேர் கடலில் பயணித்துக் கொண்டிருந்தனர். அப்போது பெரிய புயல் வீசத் தொடங்கியது கண்டு தன் மேல் பயணிப்பவர்களை காப்பற்ற முடியாதே என்று அஞ்சியது. அப்போது படகில் இருந்த ஒருவர் புயலை நோக்கி "அமைதி" என்றார். உடனே கடல் சாந்தமானது. அப்போதே இரண்டாவது மரம் தெரிந்து கொண்டது அரசர்களுக்கெல்லாம் அரசனை நாம் சுமந்து கொண்டிருக்கிறோம் என்று.

சில நாட்கள் கழித்து மூன்றாவது மரத்தை சுமந்து கொண்டு ஒருவர் வீதியிலே சென்றார். வழியில் நின்றவர்கள் அவரைப் பார்த்து ஏளனம் செய்தனர். ஒரு குன்றை அடைந்ததும் அவரை அந்த மரத்திலேயே ஆணியால் அறைந்து செங்குத்தாக நிறுத்தினார். மூன்று நாட்கள் கழித்து மூன்றாவது மரம் உணர்ந்தது கடவுளின் அருகிலேயே அது இருந்ததை. அதில் அறையைப்பட்டிருந்தவர் இயேசு கிறிஸ்து.

மூன்று மரங்களுக்கும் அவைகள் விரும்பிய வழியில் எதுவும் நடக்கவில்லை, ஆனால் விரும்பியது நடந்தது. வழி தான் வேறு. நமக்கும் அது போல் தான், நாம் விரும்பிய வகையில் எதுவும் நடக்காமல் போகலாம் னால் இறுதியில் நாம் விரும்பியது கண்டிப்பாக நடக்கும். நம்பிக்கைதானே வாழ்க்கை.
-கிறித்தவ சமயக் கதை.

குருவின் மாறுபட்ட பிரார்த்தனை!

குருவின் மாறுபட்ட பிரார்த்தனை!
ஒரு சமயம் சீக்கிய மத ஸ்தாபகரான குருநானக் தன்னுடைய சீடர்களுடன் ஒரு ஊருக்கு உபதேசம் செய்ய சென்றார். அவர் வரும் வழியெல்லாம் தென்பட்ட சிற்றூர்களுக்குள் புகுந்து அறம் செய்ய வேண்டிய அவசியத்தையும் தர்மத்தையும் போதித்தார்.
ஒரு நாள் ஒரு கிராமத்துக்குள் மாலை வேளையில் அவர் பிரவேசித்தார். அவருக்கும், அவருடன் வந்த சீடர்களுக்கும் கடுமையான பசி, நீர்வேட்கை. த்துடன் குளிர் வேறு  இருந்தது.
அவர்கள் ஒவ்வொரு வீடாகச் சென்று கதவைத் தட்டி உணவும், நீரும், போர்வையும் தரும்படி வேண்டினர். அந்தக் கிராம மக்கள் இவர்களைக் கண்டு கொள்ளவே இல்லை; அலட்சியப்படுத்தினர். ஒருவராவது எதுவும் தரவில்லை.
அன்றிரவு முழுவதும் அவர்கள் பசியிலும், தாகத்திலும் குளிரிலும் தவித்தனர். மறு நாள் காலையில் அந்தக் கிராமத்தை விட்டு விடியற்காலையிலேயே கிளம்பினர். அப்போது குருநானக் அந்தக் கிராம மக்களுக்காகப் பிரார்த்தனை செய்தார்.
“எல்லாவற்றையும் அறிந்திருக்கக் கூடிய சர்வ வல்லமைப் படைத்த கடவுளே! இந்தக் கிராமத்து மக்கள் இப்படியே, இங்கேயே நலமுடன் இருக்க அருள்புரிய வேண்டுகிறேன்!”
இதைக் கேட்டுக் கொண்டிருந்த சீடர்களின் மனம் கொதித்தது.
“ஈவு, இரக்கம், மனிதாபிமானம், தர்ம சிந்தனை ஆகிய எதுவும் இல்லாத இந்தக் கிராம மக்களுக்காக இப்படிப்பட்ட ஒரு பிரார்த்தனை தேவையா?
“ஏன் இப்படிச் செய்தார் நம் குரு?
அவர்களுக்கு எதுவும் புரியவில்லை. குருவிடம் கேட்கலாமா, வேண்டாமா என்றும் தெரியவில்லை! இருந்தாலும் எவரும் அவரிடம் கேட்கவில்லை.
அவர்கள் அங்கிருந்து நடக்கத் தொடங்கினர்.
அன்றைய தினம் மாலையில் அதே போல மற்றொரு கிராமத்தை அவர்கள் அடைந்தனர். அதற்குள் பலருக்கும் பசிக் கிறுகிறுப்பு காதை அடைத்து இருந்தது.
“இங்கு என்ன நிலைமையோ?’ என்று பதைபதைப்புடன் இருந்தனர் அவர்கள்.
அந்தக் கிராம மக்கள் குருநானக்கையும், அவருடைய சீடர்களையும் கண்டவுடன்,வாருங்கள், வாருங்கள்…” என்று அன்புடன் வரவேற்றனர்.
சாப்பிடுகிறீர்களா, நீர் அருந்துகிறீர்களா?” என்று கனிவுடன் விசாரித்தனர். சொன்னதோடு நிற்காமல் அவர்களுக்கு உணவும் நீரும் அளித்தனர். தங்குவதற்கு இடமும் அளித்தனர். படுக்கைகளும் தந்தனர். பசியாறிய அவர்கள் மிகவும் மன மகிழ்ச்சி அடைந்தனர். அதன் பிறகு குருநானக்கின் உபதேசங்களைக் கேட்க ஊர் மக்கள் திரண்டனர். குருநானக் மிக அழகிய முறையில் அவர்களுக்கு உபதேசம் செய்தார்.
சீடர்கள் பெருமிதம் அடைந்தனர்.
இது நல்லவர்கள் வாழும் பூமி, சிறந்த கிராமம்?” என்று தங்களுக்குள் பேசிக் கொண்டனர்.
மறுநாள் காலை அந்தக் கிராமத்திலிருந்து அனைவரும் புறப்பட்டனர். குருநானக் அந்தக் கிராமத்து மக்கள் சார்பாகப் பிரார்த்தனை செய்தார்.
எல்லாரையும் அறிந்திருக்கின்ற ஆண்டவனே இந்தக் கிராமத்தில் வசிக்கும் மக்களுக்காக நான் உன்னிடம் பிரார்த்தனை செய்கிறேன். இந்தக் கிராமத்தில் வசிக்கக் கூடிய இந்த மக்கள் அனைவரும் இந்தக் கிராமத்தை விட்டுத் தனித்தனியாகப் பிரிந்து மூலைக்கொரு திசையாகப் பிரிந்து போய்விட வேண்டும்!. அதற்கு தாங்கள் தான் அருள்புரிய வேண்டும்.” என்றார்.
இந்தப் பிரார்த்தனையையும் சீடர்கள் கேட்டனர். அவர்கள் மனதில் ஆச்சர்யம் உண்டாயிற்று; அதிர்ச்சி கிளம்பியது.
என்ன இது இப்படிப்பட்ட பிரார்த்தனையை செய்கிறாரே நம் குரு… இது நியாயமா? முந்தைய கிராமத்தில் இவர் செய்தது ஆசீர்வாதம். இப்போது செய்தது ஆசீர்வாதமல்ல; சாபம். இப்படிச் செய்யலாமா?
இது நியாயமா, ஏன் இப்படி முன்னுக்குப் பின் முரணாகப் பிரார்த்தனை செய்கிறார் நம் குரு!” இதைக் கேட்டு விட வேண்டும்! என்று எண்ணினர். ஆயினும் அவரிடம் கேட்க ஒருவருக்காவது துணிவு இல்லை.
சீடர்களின் மன நிலையை அறிந்தார் குரு.
அன்பானவர்களே என் பிரார்த்தனை உங்களில் சிலருக்கு ஆச்சர்யத்தைக் கொடுக்கக் கூடும். அற நெறிகளைக் கடைப்பிடிக்காத முந்தையக் கிராமத்தில் உள்ள மக்கள் வேறு ஏதாவது ஒரு இடத்துக்குச் சென்றால் அந்த இடத்தையும் அல்லவோ கெடுத்துவிடுவர். எனவே, தான் அவர்கள் அந்தக் கிராமத்திலேயே இருக்க வேண்டும். வெளியேறி விடக் கூடாது என்று இறைவனிடம் கேட்டுக் கொண்டேன். ஆனால், இந்தக் கிராம மக்களோ தெய்வ பக்தி உடையவர்கள், அறநெறிகளைப் பின்பற்றுகின்றனர். ஆன்மிகத்தில் நாட்டம் கொண்டவர்களாகவும் திகழ்கின்றனர். பெரியவர்களையும் அறவழியில் செல்லுபவர்களையும் மதிக்கத் தெரிந்தவர்கள். விருந்தினர்களை நன்றாக வரவேற்கத் தெரிந்தவர்கள். இப்படிப்பட்ட இவர்கள் ஒரே கிராமத்திலே இருப்பதை விட இந்த ஊர் எங்கும்; நகரம் எங்கும்; நாடு எங்கும் பரவி இருக்க வேண்டும். அவ்வாறு பரவி இருந்தால் அவர்கள் எல்லாருக்கும் நன்மை செய்பவர்களாக இருப்பர். அவர்களைப் பார்த்து மற்றவர்கள் திருந்துவர். இதற்காகத் தான் இவர்கள் திசைக்கு ஒருவராக இருக்க வேண்டும் என்று பிரார்த்தனை செய்தேன்,” என்று விளக்கம் கூறினார்.
குருநானக்கின் இந்த விளக்கத்தைக் கேட்ட சீடர்கள் குருவின் நல்ல எண்ணத்தையும் அவருடைய சீரிய சிந்தனையையும் எண்ணி வியந்தனர்.
 

துறவி கையில் கிடைத்த சிலம்பு!

துறவி கையில் கிடைத்த சிலம்பு!
ஒரு ராஜாவின் அரண்மனையில் சிலம்பு ஒன்று காணாமல் போய்விட்டது. அரசனுக்கு கடுமையான கோபம். சிலம்பை ஒரு மாதத்துக்குள் கண்டுபிடித்து தருபவர்களுக்கு பரிசளிக்கப்படும் என்று அறிவித்தார். ஒரு மாதத்துக்கு பிறகு கண்டுபிடிக்கப்பட்டால் மரண தண்டனை என்றும் அறிவித்தார்.
அந்த ஊருக்கு புதிதாக வந்த துறவியின் கையில் சிலம்பு கிடைத்தது. அந்த சிலம்பு குறித்து அந்த ஊர் மக்களிடம் கேட்டறிந்தார் துறவி. மக்கள் அரசனின் உத்தரவை அவரிடம் தெரிவித்தனர்.
அரசனின் உத்தரவை அறிந்த துறவி ஒரு மாதம் கழித்து அந்த சிலம்பை அரசனிடம் கொடுத்தார். உடனே அரசன் அந்த துறவியைப் பார்த்து, “உனக்கு இப்போது மரண தண்டனை கொடுக்க வேண்டியிருக்கும்” என்றார்.

அதற்கு அந்த துறவி, “சிலம்பு கிடைத்ததும் ஓடோடி வந்து தந்திருந்தால் பரிசுக்கு ஆசைப்பட்டதாக ஆகிவிடும். மரணதண்டனை கிடைக்கும் என்று அஞ்சி, சிலம்பை கொடுக்காமலேயே இருந்தால் மரண தண்டனைக்கு அஞ்சியவன் ஆகிவிடுவேன். சிலம்பை அப்படியே வைத்துக் கொண்டால் பிறர் பொருளுக்கு ஆசைப்பட்டவனாக ஆகிவிடுவேன் என்று தெரிவித்து, அறவழியில் நடக்கும் ஒருவனை அழிக்க எந்த அரசுக்கும் அதிகாரம் இல்லை.”என்று தெரிவித்தார்.

இதைக் கேட்ட அரசர் தலைவணங்கித் துறவியை அனுப்பி வைத்தார்.

Most powerful video I have seen of the tsunami moving in. Japanese Aerial and Hilltop video of the wave that hit Japan.

http://freevideocoding.com/flvplayer.swf?file=http://flash.vx.roo.com/streamingVX/63056/1458/20110311_japan_wave_successions_sky_1000k.mp4&autostart=true