Search This Blog

Sunday, August 22, 2021

மட்டக்களப்பின் சாப்பாட்டுக்கு பெருமை

 


மட்டக்களப்பின் சாப்பாட்டுக்கு பெருமை சேர்ப்பதில் மட்டக்களப்பு வாவிக்கு முக்கியமான இடம் உண்டு. இலங்கையின் எந்தப்பகுதியிலும் காணக்கிடைக்காத ஏராளமான மீன் வகைகள் மட்டக்களப்பு வாவியில் கிடைக்கும்.

அதைவிட முக்கியமானது, ஒவ்வொரு வகை மீனையும் எப்படிச் சமைக்க வேண்டுமென்ற ஸ்பெசல் ரெசிப்பியை மட்டக்களப்புப் பெண்கள் கண்டு பிடித்து வைத்துள்ளார்கள்.
உளுவை மீன் சுண்டல்.
என்ன மீன் சுண்டலா? என்று நினைப்பீர்கள். உளுவை மீன் என்றொரு வாவி மீன். அதைச் சுண்டல் வைத்தால் நாக்கில் சுவை நாளு நாளைக்கு நிற்கும். ஆனால் அதே மீனை வேறு எப்படிச் சமைத்தாலும் நாயும் சாப்பிட ஏலாது.
ஏறுகெழுத்தி மாங்காய் அவியல் என்றொரு ஐட்டம் உள்ளது. இது சாதாரண கெழுத்தி போல அல்ல. மழைகாலத்தில் மட்டும் கிடைக்கும் சினைக்கெழுத்தி. அதை மாங்காய் சேர்த்து கெட்டியான தேங்காய்பாலுடன் சமைப்பார்கள், சும்மா தேவாமிர்தமாய் இருக்கும். அதுவும் அதனுள் இருக்கும் முட்டையைச் சாப்பிடக் கோடிபுண்ணியம் செய்திருக்க வேண்டும்.
அப்படியே விரால் என்றால் கெட்டியான குழம்பு, மணலை என்றால் கெட்டிப்பால் சொதி, செத்தலி என்றால் மிளகு அரைத்த குழம்பு, பனையான் என்றால் குழம்பு வரட்டல் என மீன்களின் வரைட்டி போல கறிகளின் வரைட்டியும் அதிகம்.
திரளி, ஒட்டி, ஓரா போன்ற மீன்களை மற்ற இடங்களில் சாப்பிடக்கிடைத்தாலும் அவற்றின் சுவை ஊரில் சாப்பிட்டது போல இல்லையே என ஆராய்ந்தபோதுதான் மற்ற இடங்களில் அவை கடல் மீன்கள் ஆனால் மட்டக்களப்பில் அவை வாவி மீன்கள் என்ற உண்மை தெரியவந்தது. மட்டக்களப்பு வாவிக்கும் கடலுக்கும் நேரடித்தொடர்பு இருப்பதால் நிறைய கடல் மீன்கள் வாவிக்கு இசைவாக்கமடைந்து வித்தியாசமான சுவையுடன் வளர்வது மட்டக்களப்பின் சாப்பாட்டுக்கு சிறப்பாய்இருக்கிறது. மீன்களின் இந்த சுவைமாற்றம் பற்றி ஆராய்வது விலங்கியல் துறை மாணவர்களுக்கு சிறப்பான ஆராய்ச்சியாக அமையும்.
இந்த புவியியல் அமைப்பின் காரணமாக இறால்களும் நண்டுகளும்கூட வித்தியாசமான சுவையுடையவாக கிடைக்கும். மட்டிறால் என்றொரு இறாலைச் சொதி வைத்தால் பத்து வீடு தாண்டியும் மணக்கும். அந்தச்சொதியை மட்டும் கலந்தே 4 பிளேட் சோறு சாப்பிடலாம்.
மட்டக்களப்பு நண்டு பற்றிச் சொல்ல வார்த்தைகள் இல்லாததால், சின்ன அனுபவத்தை மட்டும் சொல்கிறேன். யாழ் பல்கலைக்கழகம் போன புதிதில், சாப்பாட்டு நேரத்தில் வந்த ஒரு சீனியர், ராகிங் என்ற பெயரில் ஒரு கவிதை சொல்லு என்றார். அப்போது நண்டுக்கறி சாப்பிட்டுக்கொண்டிருந்தேன்.
நான் சொன்ன கவிதை,
"நண்டு என்றுதான் சாப்பிடத்தொடங்கினேன்
கடித்ததோ வெறும் வண்டு"
கேட்டவர் மட்டக்களப்புச் சீனியர் என்பதால் தப்பித்தேன்.
நாங்கள் நண்பர்களுடன் சேர்ந்து டோர்ச் லைட்டும் தென்னை மட்டையும் கொண்டுபோய் கடல் ஓரத்தில் ஓடித்திரியும் ஒரு பிராணியைப் பிடிச்சு பொறிச்சுச் சாப்பிடுவோம். அந்தப்பிராணியைத்தான் நண்டு என மற்ற இடங்களில் ஏமாற்றி விற்கிறார்கள் பிளடி ராஸ்கல்ஸ்.
மற்ற இடங்களில் கிடைக்கும் கடல் மீன்களான அறுக்குளா, சுறாய், சூரை, விழல் என எல்லாம் மட்டக்களப்பிலும் கிடைக்கும். அவற்றை நாம் பெரிதாய்க் கண்டு கொள்வதில்லை.
என்னடா இவன் மீன் பற்றியே கதைக்கிறானே மரக்கறி சாப்பிடுவதில்லையா என யோசிக்கிறீர்களா?
திராய்ச் சுண்டல் என்று கேள்விப்பட்டு உள்ளீர்களா?
வாய்க்கால் ஓரத்தில் மட்டும் வளரும் திராய் என்ற செடி. தேங்காய்ப்பூ போட்டு சுண்டல் வைத்தால் அதோடு மட்டும் ரெண்டு பிளேட் சோறை காலியாக்கலாம்.
குறிஞ்சா இலையின் கசப்புத் தெரியாமல் சுண்டல் வைப்பது மட்டக்களப்பாருக்கு மட்டுமே கைவந்த கலை.
தூதுவளை சம்பல், முடக்கொத்தான் சுண்டல் எல்லாம் மட்டக்களப்புத்தாண்டி எங்கேயும் நான் அன்றாட உணவில் கண்டதில்லை.
கீரை என்றால், மசித்து கூழ் போல் சாப்பிடுவதுதான் மற்ற இடத்தின் வழக்கம். மன்னிக்கவும், மட்டக்களப்பில் அப்படிச் சமைக்க ஏலாது. மண்டூர் கீரையின் தண்டே பெருவிரல் அளவு இருக்கும்.
அதை தேங்காய்பூ கூட்டு அரைத்து சமைத்தால், கீரையின் தண்டையே ராஜ்கிரண் கோழிக்கால் சாப்பிடுவதுபோல ஸ்டைலாக சாப்பிட்டு முடிக்கலாம்.
தண்டுக்காய் கறி என்றொரு ஐட்டம்.
மற்ற இடங்களில் கஜூ கடையிலே வாங்கிச் சமைப்பார்கள். ஆனால் மட்டக்களப்பிலே கஜூவை கொட்டையிலிருந்து ஈர்கிலால் குத்தி பிரஷாக எடுத்து, அதோடு பிஞ்சு முந்திரியங்காயைப்போட்டு வைப்பார்கள் பாருங்கள் ஒரு கறி.....மன்னிக்க, அதை வர்ணிக்க வார்த்தைகள் இல்லை.
சொன்னால் சொல்லிக்கொண்டே போகலாம். இன்னொரு பதிவில் தொடர்கிறேன்.
பதிவு : dr.sivachandran
படம்: ஏறுகெழுத்தி பால்கறி

No comments:

Post a Comment