Search This Blog

Tuesday, June 8, 2021

ரசவாத வேதை!!



































நேரம் கிடைக்கும்போது பண்டைய சீன இலக்கியங்களை ஆய்வு செய்துகொண்டிருந்தேன். அப்போது அதில் ஒரு சுவாரசியமான விஷயத்தைக் கண்ணுற்றேன். தாழ் உலோகங்களைப் பொன்னாக வேதிக்கச் செய்யும் முறையைப் பற்றி கிபி.4-5 ஆம் நூற்றாண்டில் கொஹங் என்ற சீன ரசவாத வல்லுநர் யு-யங்-ஸாசூ என்ற நூலில் உரைத்துள்ளார். பாரத கண்டத்திலிருந்து சென்ற ஓர் இளவரசன் அப்போதைய சீனப் பேரரசருக்குப் பரிசாகக் கொடுப்பதற்காகத் தன்னுடன் பஞ்ச-சோ-ஷூய் என்ற திரவத்தை எடுத்துச் சென்றான் என்ற குறிப்பு உள்ளது. அதை விஷ-நீர் என்று பேச்சு வழக்கில் மொழிபெயர்த்துச் சொல்லலாம்.
இது இளமையை நீட்டிக்கும் கற்பம், தாழ் உலோகத்தை தங்கமாய் மாற்றவல்ல சக்தி படைத்தது. இந்த நீர்/திரவமானது மலைகளில், அங்குள்ள குழிப்பாறை கிணறுகளில் சேமிக்கப் பட்டிருப்பதையும் எடுத்துச் சொல்கிறான். அந்த விஷ மூலிகை திரவத்தில் மரம், தங்கம், இரும்பு, மாமிசம் என எதைப் போட்டாலும் அதைக் கரைத்துவிடும் ஆற்றல் பெற்றது என்று மன்னருக்கு விளக்குவதாய்க் குறிப்பு உள்ளது. அவன் அதைக் கற்பாறை (stone flask) குடுவையில் வைத்து எடுத்துச் சென்றான் என்றும், அதற்கு மாற்றாக முற்றிய பெரிய அளவு பாகற்காய்கூடு குடுவையிலும் சேமித்து வைக்கலாம் என்பது தெரிகிறது. அந்தத் திரவமானது மஞ்சள் சிவப்பு கருப்பு என மூன்று வண்ணங்களில் உள்ளதாகவும், ஒன்றோடொன்று கலக்கும்போது வெவ்வேறு நிறங்களில் திரவத் தைலங்கள் கிடைக்கும் என்று அந்த சீன நூல் சொல்கிறது.
இரும்பு, செம்பு போன்ற உலோகங்கள் மீது குறிப்பிட்ட விகிதாசார அளவில் இந்தத் திரவத்தைக் கொஞ்சம் பூசி, புடம் போட்டால் அது பத்தரை/ பன்னிரண்டு மாற்றுப் பொன்னாக மாறும். சீனர்கள் மெல்லிய சிவந்த நிற தங்கத்தை விரும்பியதாகவும், பாரதத்தில் அது மஞ்சள் உலோகமாக இருந்தாலே மதிப்பு மிக்கது என்றும் உரைக்கிறது. செம்பு:வெள்ளி:தங்கம் என்பதை 10:1:1 என்ற விழுக்காடு அளவில் அலோகமாக மாற்றியபின் மேற்கண்ட திரவத்தைப் பூசி வேதிக்கச் செய்யவேண்டும் என்பது ரசவாத முறை. இந்த ஆலோகத்தைப் புடம் போடும்போது செம்பு ஆக்ஸைடு உருவாகி அது அந்த மூலிகை ரசாயன திரவத்தில் பேதித்து இறுதியில் அதற்கு முதலில் சேர்த்த தங்கத்தின் நிறப்பூச்சு வந்திடும். இதில் ருதந்தி (எ) அழுகண்ணி மூலிகைதான் உலோகம் பேதிக்கும் நிகழ்வை எற்படுத்துகிறது.
நம் சித்த நூல்களில் உரைக்கப்படும் விஷயம்தான் இது என்றாலும் அது சீனத்திலும் கையாளப்பட்டது என்பது ஒத்துப் போகிறது. "வாதம் கெட்டால் மருந்துக்கு ஆகும்" என்பது பழமொழி. அதாவது ரசவாதம் முயன்று அதில் தங்கம் கிடைக்கவில்லை என்றால் அந்த வஸ்துக்கள் வீணாகாமல் கற்பமருந்துக்கு உபயோகப்படும் என்பதாகும்.
மேலே சொல்லப்பட்ட மலைப்பகுதிகள் சதுரகிரி. திரவம் உள்ள அந்தக் குழிப்பாறைகள்தான் காலாங்கிநாதர் சேமித்து வைத்த தைலக் கிணறு. இதை இன்றும் பிலாவடிக் கருப்புசாமி காவல் செய்வதாகப் போகர் சொல்லியுள்ளார். அந்த இளவரசன் நம் பல்லவ வம்சத்தவனாகவும் இருக்கலாம்.
- எஸ்.சந்திரசேகர்

சித்தர்களின் குரல்.

No comments:

Post a Comment