1950-கள் தொடங்கி 1980-கள் வரையிலான காலப் பகுதியில் திரையிசைப் பிரியர்களின் இதயங்களில் கொள்ளை கொண்ட பல பாடல்களை எழுதியவர், இலக்கிய எழுத்தாளர்.
குறைந்த அளவில் பாடல்கள் புனைந்தாலும் ரசிகர்கள் மனதில் நிறைந்த அளவில் முத்திரை பதித்த கவிஞர் இவர். திருவாரூர் மாவட்டம், மன்னார்குடி அருகிலுள்ள வேளுக்குடி கிராமத்தில் 1920-ஆம் ஆண்டு மே மாதம் 13-ஆம் திகதி பிறந்தவர் கு.மா.பாலசுப்பிரமணியம். தந்தையார் குறிச்சி மாரிமுத்து. இவரது 4 வயதிலேயே தந்தை காலமாகிவிட்டதால் 6-ஆம் வகுப்பிற்கு மேல் படிப்பைத் தொடரமுடியவில்லை. தாயார் தமிழ், இலக்கிய ஆர்வலராக இருந்தபடியால் தாயாரிடமே தமிழும், ஆன்மீகமும் கற்றுக்கொண்டார்.
தனது 16-ஆவது வயதிலேயே சிறு கதைகளைத் தமிழ் வார மஞ்சரியில் எழுதிவந்தார். இவரது தமிழ் ஆர்வத்தைத் தெரிந்துகொண்ட சென்னைத் தமிழ் ஆசிரியர் ஒருவர் இவருக்குத் தமிழ் இலக்கணம் சொல்லிக் கொடுத்தார். பிரபல தமிழ்ப் பத்திரிகைகளான தமிழ் முரசு, தமிழ்க்குரல் போன்றவற்றில் வெளிவந்த இவரது கட்டுரைகளைப் பார்த்த அறிஞர் அண்ணாவின் பாராட்டை இவர் பெற்றார்.. 1945 இல் கோழும்பில் இருந்து வெளிவந்த வீரகேசரி நாளிதழில் துணை ஆசிரியராக இணைந்தார்.
1951-ஆம் ஆண்டு அறிஞர் அண்ணாவின் சொந்தத் தயாரிப்பான ‘ஓர் இரவு’ பாடல் சந்தர்ப்பம் இவருக்குக் கிடைத்தது. பெண்ணினத்தின் துன்பம் வெளிப்படுத்தும் வகையில் ’பெண்ணாக பிறந்தாலே வாழ்வில் எந்நாளும் துயர் தானோ’ என்ற பாடல் எழுதினார். 1952-இல் ஆர்.சுதர்சனத்தின் இசையில் ‘வேலைக்காரன்’ படத்தில் 5 பாடல்கள் எழுதினார். ’ஆனந்தமே ஆஹா ஆனந்தமே அறியாமல் மனதில் பொங்கும் ஆனந்தமே’ என்ற பாடல் எம்.எஸ்.ராஜேஸ்வரியின் குரலில் ஒலித்தது.
1953-இல் ஜி.ராமனாதனின் இசையில் ’இன்ஸ்பெக்டர்’ திரைப்படத்திற்காக எழுதினார், ‘மூடியிருந்த விழியில் வந்த மோகனக் கண்ணன் விளையாடினான் என்ற பாடல். 1954-இல் ‘ரத்த பாசம்’, 1955-இல் ‘செல்லப்பிள்ளை’க்காக 4 பாடல்கள் எழுதினார். ‘காவியக் காதல் வாழும் ஓவியம் நானே’ பாடல் சுதர்சனத்தின் இசையில் ஒலித்தது. ஜிக்கியின் குரலில் ’மதனா எழில் ராஜா நீ வாராயோ’ மிகப் பிரபலமான பாடல். இப்போதும் இலங்கை வானொலியில் கேட்கலாம். இப்பாடலில் பாடலின் இடையே கே.ஆர்.ராமசாமி, கே.சாவித்திரி, டி..எஸ்.பாலையா ஆகியோரின் குரல்களும் ஒலிப்பது சிறப்பு. இதே ஆண்டில் ‘கோமதியின் காதலன்’, ‘கணவனே கண் கண்ட தெய்வம்’, இந்தியிலிருந்து மொழி மாற்றம் செய்யப்பட்ட ’சாம்ராட்’ என்ற 3 படங்களில் பாடல்களை எழுதினார். பிற மொழிகளிலிருந்து தழுவி எடுக்கப்படும் படங்களுக்குப் பாடல்கள் எழுதுவது மிகவும் சிரமம். ‘இன்பக் கண்ணாளன் உனை நான் காணவில்லை, எந்தன் கண்ணோடு இமையே மூடவில்லை’ என்ற பாடலை அப்படத்திற்காக எழுதினார். இந்தியில் ஹேமந்த்குமார் இசையமைத்த அதே மெட்டில் அதே உச்சரிப்பை வெளிப்படுத்தும் வகையில் வார்த்தைகள் அமையவேண்டும். அதே வேளையில் பொருளும் விளங்கும் வகையில் இருக்கவேண்டும். கு.மா.பா. மிக அழகாக பாடல் வரிகளைத் தந்திருக்கிறார். அதற்கு உதாரணம் லக்ஷ்மி சங்கர் பாடிய ’நிலா வானிலே மேகமாய்’.
1951-இல் அறிமுகமான பிரபல பாடகி பி.சுசீலாவிற்கு 1955-இல் மிகப் பெரிய பெயர் வாங்கிக் கொடுத்த பாடல் ‘கணவனே கண் கண்ட தெய்வம்’ படத்தில் இடம்பெற்ற ‘உன்னைக் கண் தேடுதே’. 1955-இல் வெளிவந்த இப்படத்தில் அடப்பள்ளி ராமராவின் இசையில் அந்தப் பாடலை இயற்றியவர் கு.மா.பாலசுப்பிரமணியம். குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரை அனைவரையும் காந்தம்போல் கவர்ந்திழுத்த பாடல்கள் இது.
1957-இல் 3 படங்கள். ‘அம்பிகாபதி’,’சக்கரவர்த்தித் திருமகள்’, ‘தங்கமலை ரகசியம்’. அம்பிகாபதியில் ரி.எம்.சௌந்தரராஜன், பி.பானுமதி பாடிய ‘மாசில்லா நிலவே நம் காதலை மகிழ்வோடு மாநிலம் கொண்டாடுதே’ என்ற பாடலை அழகு தமிழ் கொஞ்சி விளையாட எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம். எஸ்.ராமனாதன் வித்தியாசமான முறையில் அக்காதல் கீதத்தை முஹாரி ராகத்தில் இசை வடிவம் கொடுத்திருந்தார். ‘சக்கரவர்த்தித் திருமகள்’ படத்தில் ‘காதல் என்னும் சோலையிலே ராதே ராதே’, ’எல்லையில்லா இன்பத்திலே’ பாடல்கள். 1958-இல் ‘சபாஷ் மீனா’, ‘உத்தம புத்திரன்’, ‘பூலோக ரம்பை’, ‘எங்கள் குடும்பம் பெரிசு’ என்ற படங்கள். ‘சபாஷ் மீனாவில் 3 பாடல்கள். ‘சித்திரம் பேசுதடி’, ’ஆணாக பிறந்ததெல்லாம்’ , ‘அலங்கார வல்லியே அல்லியே’ பாடல்கள் நேயர் நெஞ்சங்களில் சுவடுகள் பதித்த பாடல்கள்.
1959-இல் வீரபாண்டிய கட்டபொம்மன் படத்திற்காக ஜி.ராமனாதன் இசையில் பதினொரு பாடல்கள் எழுதினார் கு.மா.பாலசுப்பிரமணியம். அனைத்துப் பாடல்களும் ரசிகர்களிடத்தில் பெரும் வரவேற்பைப் பெற்றன. அதே ஆண்டில் மேலும் ஆறு படங்களுக்குப் பாடல்கள் எழுதும் சந்தர்ப்பம் கிடைத்தது கு.மா.பாலசுப்பிரமணியம் அவர்களுக்கு. அவை ‘கல்யாணிக்குக் கல்யாணம்’, ‘நல்ல தீர்ப்பு’, ‘பிரசிடெண்ட் பஞ்சாட்சரம்’, ’புதுமைப் பெண்’, ‘யானை வளர்த்த வானம்பாடி’, ‘மரகதம்’ ஆகிய படங்களில் இவரது பாடல்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. ‘மரகதம்’ படத்தில் ஜே.பி.சந்திரபாபு பாடிய ‘குங்குமப் பூவே கொஞ்சும் புறாவே. பாடல் ‘சபாஷ் மீனா’ படத்திற்காக கு.மா.பாலசுப்பிரமணியம் எழுதினார். ஆனால் அந்தப் பாடல் அப்படத்தில் இடம்பெறாமல் போனதால் சந்திரபாபு அப்பாடலை ‘மரகதம்’ படத்திற்கு சிபாரிசு செய்து அதில் பாடி நடித்தார்.
1960-இல் எட்டுப் படங்களில் அவரது பாடல்கள் இடம் பிடித்தன. அவை சவுக்கடி சந்திரகாந்தா, ’எல்லோரும் இந்நாட்டு மன்னர்கள்’, ’கடவுளின் குழந்தை’, ‘களத்தூர் கண்ணம்மா’ , ‘குழந்தைகள் கண்ட குடியரசு’, ’பெற்றவள் கண்ட பெரு வாழ்வு’, ‘சங்கிலித் தேவன்’ , ‘விடி வெள்ளி’ ஆகியன. 1961-ஆம் ஆண்டு அரசிளங்குமரி’, ’கானல் நீர்’ , ’திருடாதே’ படங்களில் ஒவ்வொரு பாடல்கள் எழுதினார். 1962-இல் ’தெய்வத்தின் தெய்வம்’, ‘கொஞ்சும் சலங்கை’ , ‘பட்டினத்தார்’ என 3 படங்களில் அவரது பாடல்கள் இடம்பிடித்தன. எஸ்.ஜானகிக்கு பெரும் புகழைப் பெற்றுக் கொடுத்த ‘சிங்கார வேலனே தேவா’ என்ற பாடலை எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம்.
புகழ் பெற்ற பாடல்களைப் பாடியவர்கள் பிரபலமடையும் அதே நேரம் பாடலுக்கு முகம் கொடுத்தவர்களை எவரும் கண்டுகொள்வதில்லையென்பது வருத்தப்பட வேண்டிய ஒரு விடையம்.
1963-இல் ‘சித்தூர் ராணி பத்மினி’, ‘நானும் ஒரு பெண்’ ஆகிய படங்கள். நானும் ஒரு பெண் படத்தில் ‘ஏமாறச் சொன்னது நானோ என் மீது கோபம் தானோ’ பாடலை எவரும் மறந்திருக்கமாட்டார்கள். 1964-இல் ‘சித்திராங்கி’, 1966-இல் ‘மகாகவி காளிதாஸ்’ படத்தில் மலரும் வான் நிலவும் சிந்தும் அழகெல்லாம் என்ற அற்புதமான பாடல். 1967-இல் ‘பக்த பிரகலாதா’ , 1980-இல் சலீல் சௌத்ரி இசையில் தூரத்து இடி முழக்கம் என்ற படத்திற்காக இவர் எழுதிய பாடல் ‘மணி விளக்கே’ என்று ஆரம்பிக்கும் பாடல்.
கு.மா.பாலசுப்பிரமணியம் கடைசியாக எழுதிய பாடல் ‘கனவுகள் கற்பனைகள்’ படத்தில் கங்கை அமரன் இசையில் ‘வெள்ளம் போலே துள்ளும் உள்ளங்களே’ என்று ஆரம்பிக்கும் பாடல். 54 படங்களில் 170 பாடல்களை எழுதியவர் கு.மா.பாலசுப்பிரமணியம்.
1975-ஆம் ஆண்டு தமிழக அரசினால் கலைமாமணி பட்டம் வழங்கி கௌரவிக்கப்பட்டார். 1994-ஆம் ஆண்டு நவம்பர் 4 அன்று இப்பூவுலகை நீத்தார். அவர் மறைந்தாலும் அவரது பாடல்களில் நம்மோடு வாழ்ந்துகொண்டுதானிருக்கிறார்.
இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் வர்த்தக சேவையில் ஒலிபரப்பாகும் ‘இன்னிசைச் சுவடுகள்’ நிகழ்ச்சியிலிருந்து விவரங்கள் திரட்டப்பட்டது. நிகழ்ச்சியை வழங்கியவர் சிரேஷ்ட அறிவிப்பாளர் திருமதி. விசாலாக்ஷி ஹமீத்’ அவர்கள். தயாரிப்பு:- திருமதி.ஜெயந்தி ஜெய்சங்கர் அவர்கள்.
No comments:
Post a Comment