Search This Blog

Friday, March 20, 2020

இசைத்தமிழ்

தமிழ்மொழி அதன் பயன்பாட்டின் அடிப்படையில் மூன்றாக வகுக்கப்பட்டுள்ளது. அவையே முத்தமிழ் என்று வழங்கப்படும் இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ் என்பனவாகும். இயற்றமிழ் என்பது உரைநடையும் செய்யுட்களும் ஆகும். இலக்கண இலக்கியங்கள் அனைத்தும் இயற்றமிழ் என்கின்ற பிரிவின் கீழே வருகின்றன. இசைத்தமிழ் எனப்படுவது இசையும் தாளமும் அமைந்த பாடல்களாகும். நாடகத்தமிழ் என்பது நடிப்பும் பாட்டும் அல்லது நடிப்பும் உரைநடையும். முத்தமிழிலும் தித்திக்கும் தேன்பாகாக இனிப்பதும், எத்தமிழையும் அறியாதமக்களின் இதயங்களையும் கவர்ந்திழுப்பதும் இசைத்தமிழாகும்.

தமிழ் இசைக்கு இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியம் என்று அறிஞர்கள் சொல்கின்றார்கள். ஏனெனில் முத்தமிழுக்கும் இலக்கணம் வகுத்த முதல்நூல் அகத்தியமே என்று ஆராய்ச்சியாளர்கள் கூறுகின்றார்கள். ஆனால் அந்த அரிய நூல் இப்போது இல்லை. அதன் பின்னால் தோன்றிய இசை நூல்களான 
பெரு நாரை, 
பெருங்குருகு,
முதுநாரை, 
முதுகுருகு, 
பஞ்சமரபு, 
பஞ்சபாரதீயம், 
பதினாறுபடலம், 
வாய்ப்பியம், 
இந்திரகாளியம், 
குலோத்துங்கன் இசைநூல் 
போன்ற அற்புதமான நூல்களும் அழிந்து போய்விட்டன. எட்டுத்தொகை நூல்களில் ஒன்றான பரிபாடலே இப்போது கிடைக்கப்பெறும் மிகத்தொன்மையான இசை நூலாகக் கருதப்படுகின்றது. அதிலும்கூட அழிந்தவை போக எஞ்சியிருக்கும் இருபத்தியொரு பாடல்களே இப்போது கிடைக்கப் பெறுகின்றன. ஆனால் பிற்காலத்தில் தோன்றிய எண்ணற்ற இசை நூல்கள் தமிழிசையின் சிறப்புக்குச் சான்றாக அமைகின்றன. தெள்ளுதமிழ் தேன்பாகை அள்ளியிறைக்கும் திருமுறைகள், கல்லும் கசிந்துருகும் கனிவான பக்தி இசைப்பாடல்கள், முறையான பண்ணோடு அழகாகப் புனையப்பட்டுள்ள தொகையான தனிப்பாடல்கள் எல்லாமே இசைத்தமிழுக்கு இனிமை சேர்த்துக் கொண்டிருக்கின்றன. முத்தமிழ் வித்தகர் விபுலானந்த அடிகளாரின் யாழ்நூல் இருபதாம் நூற்றாண்டில் இசைத்தமிழுக்குச் சூட்டப்பட்ட மகுடமெனத் திகழ்கிறது.
இசையை ஏழுவகையாகப் பகுத்தவர்கள் தமிழர்களே. குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் என்பனவே அந்த ஏழு வகைகளாகும். ஏழு வகை இசையினையும் இடத்திற்கும், பாடலுக்கும், குணத்திற்கும், காலத்திற்கும் ஏற்றவாறு நான்காகப் பாகுபடுத்தினார்கள் நமது பண்டைத்தமிழ் மக்கள்.
முத்தமிழுக்கும் இனிமை சேர்ப்பது இசைத்தமிழ். ஆந்த இசைத்தமிழுக்கு இலக்கணம் வகுத்து, முறைப்படி பகுத்து, சிறப்புறத் தொகுத்து நம்முன்னோல் நமக்கு விட்டுச் சென்றிருக்கிறார்கள். அவற்றை நாம் அறிந்து கொள்ள வேண்டும். தமிழ் இசையினை முறையாகப் பயில வேண்டும். தமிழ்ப் பாடல்களைப் பாடவேண்டும். தமிழ் இசையின் மகத்துவத்தைத் தணியெங்கும் பரப்பிடத் தமிழர்களாகிய நாம் முயற்சி செய்யவேண்டும்.
இசைத்தமிழ் விளக்கம்: இயற்றமிழே பண்ணோடு கலந்து தாளத்தோடு நடைபெறின் அதுவே இசைத் தமிழாகின்றது. தொல்காப்பியம் இயற்றமிழ் இலக்கணத்தோடு இசைத் தமிழிலக்கணமும் இழையோடிக் கிடக்கின்றது. இவ்விரு தமிழும் வெவ்வேறாகப் பிரித்தறிய முடியாத வகையில் பின்னிப் பிணைந்து காணப்படுகின்றன.இசை பொருள்: இசை என்ற சொல்லுக்கு இசைவிப்பது, வயப்படுத்துவது ஆட்கொள்வது என்று பல பொருள் உண்டு. இசை என்ற சொல் மக்கள் மனதை வயப்படுத்துவது, அசைவிப்பது எனும் பொருளைத் தருகிறது என்பர் எம்.எம்.தண்டபாணி தேசிகர். இசை என்பது மிக்க மென்மையும், நுண்மையும் வாய்ந்து செவிப்புலனைக் குளிர்வித்து உள்ளத்தைக் கனிவிக்கும் இனிய ஓசையையேயாகும். இனிய ஒலிகள் செவி வழிப்புகுந்து, இதய நாடிகளைத் தடவி, உயிரினங்களை இசையவும், பொருந்தவும் வைக்கின்றள பொழுது அவை இசை என்ற பெயரைப் பெறுகின்றன என்பர் ச.வே. சுப்பிரமணியன் அவர்கள்.ஒலி, ஓசை, இசை:- இசைக்கு அடிப்படையாக இருப்பது ஒலி, ஒலியே உலகின் முதல் தோற்றம் என்பது சமயங்கள் உணர்த்தும் உண்மை. இவ்வுலகமே ஓங்கார ஒலித்திரளின் இருப்பாக உள்ளது என்பதும் ஒரு தத்துவம், மூலாதாரமான ஒலி வேறு ஓசை வேறு ஓசை ஒலியெலாம் ஆனாய் நீயே என இறையைப் பற்றிக் கூறும் அப்பரின் தேவார வரிகளிலருந்து ஓசை வேறாகவும், ஒலி வேறாகவும் கருதப்படுவதை உணர முடிகிறது. ஏழிசை ஏழ்நரம்பின் ஓசையே என்னும் தேவார அடிகள் நரம்பிலிருந்து எழும் ஓசையை ஏழிசையாக அமைகிறது என்று சுட்டுகின்றது. எனவே ஓசையே இசைக்கு அடிப்படை என்பதை உணர முடிகிறது. ஒலி என்பது ஒரு குறிப்பைக் கருதி எழுந்து, இனிதாய் அமைந்து சுவைப் பயப்பதாக இருக்க வேண்டும். காலக் கடப்பால் ஏற்பட்டுள்ள சொல் பயன்பாட்டை நோக்கும்போது இசையும் ஒலியும் சில இடங்களில் வேறுபாடு கருதாது பயன்படுத்தப்பட்டுள்ளதை அறிய முடிகிறது.ஓசை மற்றும், இனிதாய் அமைந்து சுவை பயப்பதாக இருப்பதான ஒலியின் அடிப்படையில தோன்றுவதான இசைக்கலை ஆயக்கலைகள் அறுபத்து நான்கனுள் ஒன்றான சிறப்புடைய சுவையாகும். இயல் தமிழைக் கற்றும், கேட்டும் அனுபவிக்கவும் சுவைக்கவும்க முடியும். ஆனால் இசையையோ செவிப்புலன் ஒன்றினால் மாத்திரமே சுவைக்க முடியும்.இசையும் இறையும்: இசையின் சிறப்புணர்ந்த நம் முன்னோர் ஆதிமூலமான ஆண்டவனும் இசையை விரும்புகின்றான், இசை பாடுகின்றான், என்பதுடன் இசையின் வடிவாகவும், இசையின் பயனாகவும் உள்ளான் என்று கண்டறிந்தனர்.துறைவாய் நுழைந்தனையோவற்றி யேழிகசைச்
சூழல் புக்கோ
இறைவா தடவரைத் தோட்கென்கொலாம் புகுந்த
தெய்தியோ - எனும் திருக்கோவையார் பாடல் ஏழிசைச் சூழலில் இறைவன் ஆட்பட்டான் என்பதைத் தெரிவிக்கின்றது. ஏழிசையாய் இசைப்பயனாய் என்று சுந்தரரும் எம்மிறை நல்வீணை வாசிக்குமே என்று அப்பரும் கூறியுள்ளமையும் நோக்கத் தக்கது.ஆதி மனிதனும் இசையும்: மொழியறியாது வாழ்ந்த மனிதன் இனம் புரியாத மகிழ்ச்சியிலும் துன்பத்திலும் எழுப்பிய ஓசையும் ஒலியுமே இசையாயிற்று. மகிழ்ச்சி மற்றும் துன்பப் பெருக்கின் உச்ச கட்டமாக அவன் கைதட்டி எழுப்பிய ஆரவாரமே தாளமாயிற்று. சிலை வளைத்துக் கணை தொடுத்து வேட்டையாட முற்பட்ட போது எழுந்த நாதமே இசைக்கருவிகளின் தோற்றத்திற்கு மூலமாயிற்று.இசையின் பழமைதொல்காப்பியம்: மனிதனின் உணர்ச்சிப் பெருக்கோடு ஒன்றி வளர்ந்த இசை பற்றி நமக்கு உணர்த்தும் முதல் நூலாக தமிழின் கருத்துக் கருவூலமான தொல்காப்பியத்தையே கொள்ளலாம்.அளபிறந் துயிர்த்தலும் ஒற்றிசை நீடலும்
உளவென மொழிய இசையோடு சிவனிய
நரம்பின் மறைய என்மனார் புலவர்எனும் தொல்காப்பியம் அடிகள் இசையில் பழமையை உணர்த்தும் தொல்காப்பியச் சொற்களின் ஓசையதிக்கு வண்ணம் என்று பெயரிட்டு," வண்ணந்தாமே நாலைந்தென்ப "என்று கூறுவதன் மூலம் அதனை இருபது வகைப்படுத்திக் கூறியுள்ளார். வண்ணங்கள் என்றால் சந்த வேறுபாடுகள்- என்பர் பேராசிரியர் இவ்விருபது வண்ணங்களையும் தேவாரம், திருப்புகழ், கீர்த்தனை, சிந்து, கண்ணி முதலிய பாடல்களில் தெளிவாகக் காணலாம்.எதுகை, மோனை, இயைபு, முதலிய தொடைகளின் இலக்கணம் இசைக் கீர்த்தனைக்கும் இசைப்பாடல்களாகிய தாண்டகம், நேரிசை, விருத்தம் முதலியவற்றிற்கும் இன்றியமையாது வேண்டப்படுபவனவாம். எதுகை, மோனை போன்ற தொடைகளில்லையேல் இசைப்பாடல்கள் இல்லை. இசைப்பாடலுக்குரிய யாப்பு வகைகளைத் தொல்காப்பியர் அழகாகவும் தெளிவாகவும் வகுத்தும் பகுத்தும் காட்டியுள்ளார்.செய்யுட்களின் சிறப்பிற்கு எதுகை, மோனை, முதலிய தொடை விகற்பங்கள் பெரிதும் துணைபுரிந்தமையினின்று இயற்றமிழும் இசையமைதி பெற்றிருப்பது புலனாகும். வெண்பா முதலிய பாக்கள் ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகையான இசையுடனேயே பண்டு தொட்டு ஓதப்படுகின்றன. அவற்றுள்ளும் கலிப்பா, பரிபாட்டு முதலியவற்றை இசைப்பாக்கள் என்றே பேராசிரியர் முதலிய பேருரையாளர்கள் கூறுவராயினர். வெண்பா முதலிய பாக்களுக்கு இனமாக வகுக்கப்பெற்ற தாழிசை துறை முதலியனவும் இசைப் பாக்களேயாதல் வேண்டும். தொல்காப்பியரே முதன்முதலில் எதுகை, மோனை ஆகியவற்றைப் பிரித்துக் கூறும் யாப்பிலக்கணத்தை அறிமுகப்படுத்தியவராவார். தொல்காப்பியர் கூறும் பண்வரிசை முறை தமிழக இசை முறைகளில் வழி வழியாகப் பண்களை வரிசையில் நிற்கச் செய்யும் முறைகட்கெல்லாம் முன்னோடி எனலாம்.தொல்காப்பியத்தின் வழியாக அறியப்படும் இசைச் செய்திகள்
1. நால்வகை நிலங்கட்குரிய பண்வகைகள்
2. பண்களுக்குரிய பெரும்பொழுது சிறுபொழுதும்,
3. பண்களை வரிசைப்படுத்தி நிறுத்தியது.
4. பாடலின் அமைப்பிற்கும் சிறப்பிற்கும் தேவையான எதுகைமோனை முதலிய தொடை வகைகள்
5. அம்போதரங்க அமைப்பு
6. இசை எழுத்துக்களின் மாத்திரை அளவும்
7. தாள நடை வகைகள்.இசைத் தமிழ் நூல்கள்

இசைத் தமிழ் விரிவானது. ஆழமானது. பல துறைகள் கொண்டது, இவ்விசைத் தமிழ் நூல்கள் சங்க காலத்திலேயே எண்ணற்றவை இருந்தன என்பதை இறையனார் களவியலுரை ஆசிரியரின் கூற்று வலியுறுத்தும், முதற் சங்க வரலாறு பற்றிக் கூறும் இவர், அவர்களால் பாடப்பட்டன எத்துணையோ பரிபாடலும், முதுநாரையும் முதுகுருகும், களரியாவிரையுமென இத்தொடக்கத்தன, என்றும் கடைச்சங்கம் பற்றிக் கூறுமிடத்து அவர்களாற் பாடப்பட்டன. நெடுந்தொகை நானூறும், ஐங்குறுநூறும், பதிற்றுப் பத்தும், நூற்றைம்பது கலியும், எழுபது பரிபாடலும், கூத்தும், வரியும், சிற்றிசையும், பேரிசையுமென இத்தொடக்கத்தன என்றும் குறிப்பிட்டுள்ளதிலிருந்து இசைத் தமிழில் பல தலைசிறந்த நூல்கள் முதற் சங்க காலத்திலேயே இருந்தன என்பதும், கடைச் சங்க காலத்து எழுந்த எட்டுத்தொகை நூல்களும் இசைத்தமிழ் தொடர்புடையன என்பதும் விளங்குகின்றது. பெருநாரை, தாளசமுத்திரம், தாளவகையோத்து, இசைத்தமிழ்ச் செய்யுட்டுரைக் கோவை போன்ற எண்ணற்ற இசைத் தமிழ் நூல்களும் வழக்கில் இருந்து, பின்னரே வழக்கு ஒழிந்ததோ, கடல்கோட்பட்டோ மறைந்திருத்தல் வேண்டும்.பரிபாடல்: இன்று நமக்கு கிடைத்திருக்கும் இசை பற்றிய குறிப்புகளில் பழமையான இலக்கியமாகத் திகழ்வது பரிபாடல். எட்டுத் தொகை நூல்களில் ஒன்றான இது கி.பி. முதல் நூற்றாண்டைச் சேர்ந்த நூலாகும். 70 பாடல்களைக் கொண்ட இந்நூலில் கழிந்தன போக இன்று எஞ்சியுள்ளவை 22 ஆகும். இவற்றுள் ஒவ்வொரு பாடலின் கீழும் அப்பாடலின் ஆசிரியர் பெயரும் அதற்கு இசை அமைத்தவர் பெயரும், அதற்குரிய யாழ், செந்துறை, தூக்கு வண்ணம் முதலியவும் குறிப்பிடப்பட்டுள்ளன. மேலும் பரிபாடலில் செய்யுள் ஒவ்வொன்றிற்கும் பாலையாழ், நோதிரம், காந்தாரம் எனப் பண்கள் குறிக்கப்பட்டுள்ளன. இசை வகுத்தோராகப் பதின்மர் பெயர்களும் அதில் காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப்பத்திலும் ஒவ்வொரு பாடலுக்கும் வண்ணம், தூக்கு, துறை, இசை பகுப்புகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.எட்டுத் தொகை நூல்களையடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் இசை பற்றியும், இசைக்கலைஞர்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, கூத்தராற்றுப்படை முதலியவை இசைக் கலைஞர்கள் பெயரால் அமைந்த நூல்களாகவே காணப்படுகின்றன. எட்டுத்தொகை நூல்களுள் பரிபாடலில் மாத்திரமின்றி பதிற்றுப் பத்திலும் ஒவ்வொரு பாடலுக்கும் வண்ணம், தூக்கு, துறை, இசை பகுப்புகள் போன்றவை குறிக்கப்பட்டுள்ளன.எட்டுத் தொகை நூல்களையடுத்து பத்துப்பாட்டில் உள்ள ஆற்றுப்படை நூல்களில் இசை பற்றியும், இசைக் கலைஞர்கள் பற்றியும் விரிவாகக் கூறப்பட்டுள்ளன. சிறுபாணாற்றுப்படை முதலியவை இசைக் கலைஞர்கள் பெயரால் அமைந்த நூல்களாகவே காணப்படுகின்றன. திருமுருகாற்றுப்படை தோற்கருவி, துளைக்கருவி, நரம்புக்கருவி, ஆடலாகிய கூத்து, கண்டமாகிய இசை மரபிற்கான பஞ்ச மரபினைப் பெற்று தமிழிசையின் சிறப்பை விளக்கவல்ல ஆற்றுப்படை நூலாகத் திகழக் காணலாம்.சிலப்பதிகாரம்: சங்க இலக்கியத்தை அடுத்த சிலப்பதிகாரத்தில் இசை பற்றி செய்திகள் மிகவும் பரந்து காணப்படுகின்றன. சிலம்பின் கதைப்பகுதிகளுடன் இசை இலக்கணம் பின்னிப் பிணைந்து இயற்றப்பட்டுள்ளன என்றே கூறலாம். தமிழிசை இலக்கணம் கூறும் பெருங்கடலில் சிலம்பு ஓர் ஓங்கி உயர்ந்த கலங்கரை விளக்கம். இது நல்கும் ஒளியின் உதவியால் இதற்குக் காலத்தால் முந்திய தொல்காப்பியம், எட்டுத் தொகை பத்துப்பாட்டு முதலிய சீரிய நூல்களில் தமிழ்ப் பேரறிஞர்கள் சுட்டியுள்ள ஏராளமான இசைக் குறிப்புகளை விளங்கிக் கொள்ளலாம்.சிலம்பின் ஆசிரியரும் சேரநன்னாட்டின் இளவரசருமான இளங்கோவடிகளை இந்திய நாடு கண்ட இசை மாமேதை என்றும், இசை இலக்கணத்தை அறிவியல் முறையில் அமைத்துத் தந்துள்ள இசை இலக்கணத் தந்தை என்றும் கூறலாம். இளங்கோவின் காலத்திற்கு முன் பல நூற்றாண்டுகளாக வழக்கில் இருந்து வழிவழி வந்த இசை இலக்கண மரபு சிலம்பில் காணப்படுகின்றமையின் தொல்காப்பிய இசைக் குறிப்புகளை நன்கு அறிந்து கொள்ள முடிகின்றது. தொல்காப்பிய இசைக் குறிப்புகளை விளக்குவது சிலம்பின் இசை இலக்கணமே - தமிழிசை இலக்கணம் சிலம்புதொட்டு இன்று வரை சங்கிலித் தொடர்போல் தொடர்ந்து வருகிறது என்பர் டாக்டர் எஸ். இராமநாதன்.தமிழில் ஒப்பற்ற இசைப்பாக்களாக நமக்குக் கிடைத்திருப்பன சிலப்பதிகாரத்தில் உள்ள கானல் வரி, வேட்டுவ வரி, ஆய்ச்சியர் குரவை, ஊர்குழ் வரி, குன்றக்குரவை, வாழ்த்துக்காதை எனும் ஆறு காதைகளும் ஆகும். இந்த ஆறு காதைகளுமே இசைப்பாக்களின் தொகுதியாகும்.உதயணன் கதையினைக் கூறும் பெருங்கதையிலும் யானையின் சீற்றத்தை சீவ சிந்தாமணியல் காந்தருவதத்தை யார் இலம்பகத்தில் இடைக்காலத் தமிழிசையினைப் பரக்கக் காண முடிகின்றது.இனி தமிழ் மக்கள் பண்டைக்காலம் தொட்டு இசையை எவ்வாறு போற்றி வந்தனர் என்பதைத் தமிழ் நூல்களின் துணை கொண்டு நோக்கலாம். தமிழின் தொன்மை நூலான தொல்காப்பியத்தில் இசை பற்றிய குறிப்புகளோடு இசைவாணர்கள் மற்றும் பண்கள் பற்றிய எண்ணற்ற செய்திகள் இடம் பெற்றுள்ளன. குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை எனும் ஐவகை நிலங்கட்கும் வெவ்வேறான யாழ், அல்லது பண் கூறப்படுவதினின்றும், அக்காலத்தில் இசைக்கலை பெற்றிருந்த சிறப்பும், ஐவகை நிலமக்களும் பெற்றிருந்த இசையுணர்ச்சியும் பெறப்படுகின்றது.இசையில் பண் என்றும் திறமென்றும் இருவகை உண்டு. பண்களாவன பாலையாழ் முதலிய நூற்று மூன்று என்னும் பரிமேலழகர் கூற்றிலிருந்து, தமிழ்ப் பண்கள் நூற்று மூன்று என்பது கொள்ளப்படுகின்றது. பண்கள் ஏழு நரம்புகளும் கொண்டவை. ஏழு நரம்புகளும் நிறைந்த ராகம் பண் எனப்படும். நரம்பு என்பது இங்கு ஸரி கம பத நீ என்றும் ஏழு ஸ்வரங்களைக் குறிக்கும். இந்த ஏழு ஸ்வரங்களை வடமொழியில் ஷட்ஜம், ரிஷபம், காந்தாராம், மத்தியமம், பஞ்சமம், தைவதம், நிஷாதம் என்று குறிப்பிடுவர். இதுவே தமிழில் குரல், துத்தம், கைக்கிளை, உழை, இளி, விளரி, தாரம் எனப்படும்.இவ்விசைகளின் ஓசைக்கு வண்டு, கிளி, குதிரை, யானை, குயில், தேனி, ஆடு ஆகியவையும், இவற்றின் சுவைக்கு முறையே தேன், தயிர், நெய், ஏலம், பால், வாழைக்கனி, மாதுளங்கனி, ஆகியவையும் உவமை கூறப்பட்டுள்ளதுடன், ஆ, ஈ, ஊ, ஏ, ஐ, ஓ, ஒள எனும் உயிர் நெட்டெழுத்துக்கள் ஏழும் இவற்றின் எழுத்தாகவும் குறிப்பிடப்பட்டுள்ளன.பண்வகை: பண்கள் பலவகைப்படும். குறிஞ்சி, முல்லை, மருதம், நெய்தல், பாலை, எனப் பண்கள் ஐந்து என்பர் - ந.சி. கந்தையாபிள்ளை. ஆனால் டாக்டர் சி. பாலசுப்பிரமணியன் பெரும்பண்களாவன குறிஞ்சி, முல்லை, மருதம், செவ்வழி, என்பனவாம் என்பர். இப்பண்கள் வடமொழியில் ராகம், என்று கூறப்படுகின்றன. இதனை மேளகர்த்தா, ராகம் அல்லது ஐனகராகம் என்றும் கூறுவர். பண்ணிலிருந்து திறங்கள் பிறக்கும்நிரை நரம்பிற்றே திறமெனப்படுமே என்ற திவாகரச் சூத்திரம் பண்கள், திறங்களின் இலக்கணத்தை விளக்கும் திறங்களே தற்போது ஜன்யராகம் என்று வழங்கப்படுகின்றன.

https://store.tamillexicon.com

No comments:

Post a Comment