அவமானங்கள்தான் வாழ்க்கையின் ஆசான். அவமானம் கத்துக்கொடுப்பது மாதிரியான பாடத்தை எந்த மகத்தான புத்தகமும் கத்துக்கொடுக்காது.அவமானங்களைத் தன்மானத்தோடு எதிர்கொள்வதே வெகுமானம்தான் .
அவமானங்களே ஒரு மனிதனை வெற்றியின் அரியாசனத்தில் அமர்த்தும். அவமானம் என்பது ஒரு மனிதனுக்கு தூண்டுகோள்தான்.
மனிதனின் மனம் அவமானங்களை கண்டால் முதலில் துவண்டாலும், வைராக்கியம் மனதில் உருவாகும்.
அதுவே முயற்சியில் வேகத்தை கொடுத்து வெற்றிக்கு வழி வகுக்கும்.
ஒருவனது அவமானங்கள்தான் அவனை கடினமாக உழைக்க வைக்கிறது.
ஒருவனது அவமானங்கள்தான் கடுமையாய் முன்னேற வேண்டும் என்கின்ற வெறியை தூண்டுகிறது.
ஒருவனது அவமானம்தான் வாழ்கையில் மிகப்பெரிய வெற்றியாக உருமாற்றுகிறது. ஒரு சின்ன அவமானம் கூட இல்லாமல் யாரும் உயர்ந்துவிட முடியாது.
அவமானப் படுத்துகிறவர்களை நாம் அவமானப்படுத்தினாலோ அல்லது அவர்கள்மீது ஆத்திரமடைந்தாலோ அவமானப்பட்டதாகக் காட்டிக் கொண்டாலோ அவமானப்படுத்தியவனைப் பொருட்படுத்தியதாகிவிடும். அதற்காகத்தானே அவர்கள் ஆசைப்படுகிறார்கள். அவர்களை நாம் உதாசீனப்படுத்துவது தான் நல்லது. நாம் ஆத்திரமடையும்போது உள்ளத்தளவு மட்டுமல்ல உடலளவும் பாதிக்கப்படுகிறோம்.
அமெரிக்க ஜனாதிபதியாக ஆப்ரகாம் லிங்கன் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்முறையாக நாடாளுமன்றத்தில் பேச எழுகிறார். அப்போது உறுப்பினர் ஒருவர் அவரை அவமானப்படுத்த வேண்டும் என்பதற்காக எழுந்து “நான் அணிந்திருக்கும் செருப்பை உங்களுடைய தந்தையார் தான் தைத்துத் தந்தார்; நன்றாக இருக்கிறது. அதற்கு நன்றி” என்றதும் தன்னை ஒரு செருப்பு தைக்கும் தொழிலாளியின் மகன் என்று இழிவுபடுத்தியதாகக் கருதி ஆத்திரப்படாமல் “மகிழ்ச்சி. அந்த செருப்பில் ஏதாவது பழுது ஏற்பட்டால் கொண்டு வாருங்கள்… நான் திருத்தித் தைத்துத் தருகிறேன். எனக்கும் செருப்புத் தைக்கும் தொழில் தெரியும்” என்று கூறினாராம். சராசரி மனிதர்கள் சினந்து சிவப்பார்கள். சரித்திரம் படைப்போர் எதற்கும் சலனப்பட மாட்டார்கள்.அவமானப் படுகிறவர்கள்தான் அதிகமாக வெற்றியாளர்கள் ஆகிறார்கள். அவமானங்களை உடைத்தெறிய வேண்டுமொனால் அவமானப்படுத்தியவனிடம் மோதிக் கொண்டிருப்பதைவிடத் தாம் பெறுகிற வெற்றிகளால் அவர்களை வெட்கித் தலைகுனியச் செய்யவேண்டும். சார்லி சாப்ளின் படாத அவமானங்களா? அவரது தோற்றம் கேலிக்குரியதாக இருந்திருக்கிறது அவரது வறுமை அவரை அவமானப் படுத்தியிருக்கிறது. அவற்றை உடைத்தெறிந்து உயர்ந்தார்.சிவாஜிகணேசன் வானொலி குரல் தேர்வுக்குச் சென்றபோது தேர்ந்தெடுக்கப்படவில்லை. ஆனால் பின்னாளில் அவர் 'சிம்மக்குரலோன்'. அதுபோல அமிதாப்பச்சன் நடிக்கவந்த நேரம் நிராகரிக்கப்பட்டவர். பின்னாளில் அவர் சூப்பர் ஸ்டார்.
மறக்கக்கூடாது
அவமதித்தவர்களை மறந்துவிட வேண்டும். ஆனால் அவமானங்களை மறக்கக்கூடாது. அதை அடுத்தடுத்த தளங்களுக்கான வெற்றிப் பயணத்தின் பாதையாக்கிக் கொள்ளவேண்டும்.வந்தனா சைனி என்ற சிந்தனையாளர் “அவமானங்களை மறவாதீர் உங்கள் வெற்றிக்கான விதைகள் அவற்றில் உள்ளன” என்பார்.அவமானங்களில் வெற்றிக்கான விதைகள் இருக்கின்றன என்பது உண்மைதான். அதற்காக வெற்றிபெற வேண்டுமானால் அவமானப்பட வேண்டும் என்றும் அர்த்தப்படுத்திக் கொள்ளக்கூடாது. “நான் வெற்றியாளனாக வேண்டும். தயவு செய்து யாராவது வந்து கொஞ்சம் அவமானப்படுத்துங்கள்” என்று கேட்டுக் கொண்டிருக்க முடியாது. அவமானங்களைத் தாங்கிக் கொள்ளுங்கள் என்பதுதான் நம் அறிவுரையே தவிர அவமானங்களைக் கேட்டு வாங்கிக் கொள்ளுங்கள் என்பது அல்ல.
தாங்கி கொள்ளுங்கள்
அவமானத்தைத் தாங்கிக் கொள்வதோடு நின்றுவிட வேண்டும். அதற்காகப் பழிவாங்கும் எண்ணம் வளர்த்துக் கொள்வது நல்லதல்ல. நேரம் வரும் வரைக் காத்திருந்து அவமானப்படுத்தியவரை அவமானப்படுத்த நினைப்பது கேவலமானது. அதுவரை அந்தக் குப்பையை மனத்தில் வைத்துக்கொள்வதும் தீதானது.நாம் அவமானப் படுத்தப்பட்டபோது எப்படி உணர்ந்தோமோ அப்படித்தானே நம்மால் அவமானப் படுத்தப்பட்டவர்களும் உணர்வார்கள் என எண்ணவேண்டும்.ஆறுதல் பெறுவற்காகவோ ஆத்திரத்தை தீர்த்துக் கொள்வதற்காகவோ நமக்கு நேர்ந்த அவமானத்தை மற்றவர்களிடம் பகிர்ந்து கொள்வது கூடாது. அப்படிச் செய்வதின் மூலம் நமது அவமானத்திற்குப் பிரமாதமான விளம்பரத்தை நாமே தேடிக் கொண்டிருக்கிறோம் என்பதோடு, மீண்டும் நம்மை நாமே அவமானம் செய்து கொள்கிறோம். அவமானங்களை மறந்துவிடுவதோடு, அவமதிப்பவர்களை மன்னித்து விடுங்கள்.அவமானங்களைத் தவிர்த்துக் கொண்டும் தாங்கிக் கொண்டும் அடுத்தடுத்த வெற்றிப் பயணங்களுக்கு ஆயத்தமாகுங்கள். அவமானம் உங்களுக்கு ஒரு வெகுமானமாகும்.- ஏர்வாடி எஸ். இராதாகிருஷ்ணன்எழுத்தாளர், சென்னை94441 07879
Thanks https://www.dinamalar.com/
No comments:
Post a Comment