ஈழத் தமிழர்கள் புராதன நாகரிகத்துக்கு சொந்தக் காரர்கள்.ஈழதேசத்தின் கிழக்கின் தொல்லியல் களஞ்சியமாய் விளங்கும் கொட்டியாரம் நம் முன்னோர்கள் வழி ...வரலாற்றை பறை சாற்றும் பல ஆதி கால சான்றுகள் நிறைந்து காணப்படுகிறது.
சேனையூர்,கட்டைபறிச்சான்,சம்பூர்,பள்ளிக்குடியிருப்பு,நல்லூர்,மல்லிகைத்தீவு,மூதூர்,இலங்கைத்துறை,கிளிவெட்டி,ஈச்சலம்பற்று,மேங்காமம்,கங்குவேலி ,வெருகல் என விரிந்திருக்கும் கிராமங்கள் தோறும் வரலாற்றுத் தடங்கள் விரவிக் கிடக்கின்றன.
சிந்து சமவெளி நாகரிகமாக மொகஞ்சதாரோ ஹரப்பா தமிழர் முது நாகரிகத்தை சொல்கிறது.தென்னக வைகைக் கரையில் நாம் சங்க இலக்கியத்தில் படித்த நாகரிகம் மிக்க தமிழர் வாழ்வை அண்மைக்கால கீழடி ஆய்வுகள் நிருபிக்கின்றன.
ஈழத் தமிழர் தொன்மை வாழ்வு மாவலி நதிக்கரையில் செழிப்போடு இருந்ததற்கான சான்றுகள் நமக்கு திருக்கரசை திருமங்கலாயில் ஆழப் புதைந்த பதிவுகள் கட்டிட இடிபாடுகளாய் நம் கண் முன் திருக்கரசை புராணம் இலக்கியமாய் ஈழத் தமிழர் தொன்மை நாகரிகத்தை எடுத்தியம்பும்.
இன்று கல் வெட்டுகளும் அடித்தள கட்டு மானங்களும் திருக்கரசையில் புதைந்து கிடக்கும் அந்த நாகரிகத்தை மீட்டெடுக்க வேண்டும்.
ஒரு பெரும் பழந்தமிழர் நகரமே இங்கு புதைந்து கிடக்கிறது இலங்கையில் பொலநறுவையும்,அனுராதபுரமும் புராதன நகரங்களாக கொண்டாடப் படுகின்றனவோ திருக்கரசை நகரும் கொண்டாடப்பட வேண்டும்.
ஒரு செழிப்பு மிகு நாகரிகம் இங்கு இரண்டாயிரம் வருசங்களுக்கு முன்பிருந்தே தொடர்கிறது என்பதை ஆரம்ப ஆய்வுகள் நிருபிக்கின்றன.இன்னும் நாம் மேலும் மேலும் அகழ்வாய்வுகளை மேற்கொள்கிற போது நம் நாகரிகத்தின் பழமையயை ஆணித்தரமாக உறுதிப் படுத்த முடியும்.
உலக வரலாறு நதிக்கரைகளையும் ஆற்று படுக்கைகளையும் அண்டியே வளர்ந்திருக்கிறது.திருக்கரசை பெரும் கங்கை சமவெளியாய் நீண்டு கிடக்கிறது மணல் படுக்கைகளாய் உறைந்து கிடக்கும் பெரு நகரம் ஒன்று மறைந்து கிடக்கும் திருக்கரசையின் பண்டைப் பண்பாட்டை நாம் மீட்டெடுக்க வேண்டும்.
No comments:
Post a Comment