Search This Blog

Thursday, March 3, 2016

படைப்புக்களும் விமர்சனங்களும்.

பதிவுகள் படைப்புக்கள் என்பது ஒரு பிரசவம்.அது முழுமையடைய நிச்சயம் விமர்சனங்கள் பாராட்டுக்கள் அவசியம்.இதை யாருமே மறுக்கமாட்டீர்கள்.ஒரு பதிவின் வெற்றியை அதன் விமர்சனங்களே வெளியில் கொண்டுவருகின்றன.அதுவே அந்தப் படைப்பின் வெற்றி.

ஒரு பார்வையாளன் தன் ரசனையை விரித்துக் கூறுகையில் படைப்பாளி தன்னை தன் எழுத்தை தான் தவறவிட்ட விஷயங்களை உணர்கிறான்.விமர்சகன் என்பவன் பெரிய அறிவாளியாக பட்டப்படிப்பு இல்லாவிட்டாலும் விருப்பு வெறுப்புகளுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட ஆசைகளைக் காட்டாது பார்க்கும் படைப்புகள் அத்தனைக்கும் படைப்பின் ரசனையோடு விமர்சனம் செய்தல் அவசியமாகும்.படைப்பாளிக்கு விமர்சனமே ஒரு ஆசானாக மாறும் தருணங்களும் இருக்கிறது.

விமர்சனமாவது படைப்பின் சிறப்பை சாதனையை மட்டும் புகழாது அதிலுள்ள குறைகளையும் எடுத்துச் சொல்ல தயங்கக்கூடாது.சில விமர்சனங்கள் நிராகரிப்பின் தொனி இருந்தாலும் கூட படைப்பாளியை அலட்சியப்படுத்துவதாகவோ அவர்களின் மதிப்பைக் குறைகூறுவதாகவோ இருக்காது.விமர்சனமானது ஊக்கம் கொடுப்பதோடு படைப்புகளின் பயனை சமூகம் பெறத்தக்கனவாகவும் உதவும்.

ஒவ்வொரு பதிவும் படைப்பாளியையைப் பொறுத்தமட்டில் முழுமையானதாகவே இருக்கும். பூரண திருப்தியோடுதான் பதிவைப் படைப்பான்.தவறுகளை உணரச் சந்தர்ப்பம் இல்லை. உணரும் தருணங்களில் தவறுகளைத் திருத்தியே பதிவிடுகிறான்.எனவே பதிவு முழுவெற்றியானதே அவனைப் பொறுத்தவரை.

ஆனால் பார்வையாளன் முதலில் ரசிகனாகி நன்மை தீமை பாதிப்பை எண்ணி குறைநிறைகளை சொல்ல நினைத்து விமர்சிக்கிறான்.அது படைப்பாளிக்கும் பார்வையாளனுக்கும் உதவியாகவே அமைகிறது.ஒவ்வொரு கலைக்கும் ஆர்வலர்கள் நிச்சயம் தேவை.அந்த ஆர்வலர்களாக விமர்சகர்கள் இருக்கவேண்டும்.

சும்மா சொல்லும் புகழும் ரசனையும் எந்த விதத்திலும் பயனில்லாதது.
மனதிலும் படைப்புப் பற்றிய சந்தேகமும் நீங்காமல் இருக்கும்.நாம் சில சமயங்களில் சுயசிந்தனையை அடகு வைத்து மற்றவர்களது ரசனைக்கே தலையாட்டுகிறோம்.

"ரசனை என்பது மேதாவித்தனம் சமூக அந்தஸ்தின் அடையாளம் என்றும் கருதப்படும்போது விளைந்த வேடிக்கையில் இதுவும் ஒன்று".

சில ஆண்டுகளுக்கு முன்னர் இலண்டனில் ஒரு கண்காட்சியில் ஏராளமான ஓவியங்கள் இடம்பெற்றிருந்தன.ஒரு குறிப்பிட்ட ஓவியத்திற்கு நிறையப்பேர்களின் ரசிப்பில் பாராட்டில் முதற்பரிசும் கிடைத்தது.மேகத்திலிருந்து ஒரு தேவதை வெளிவருவதுபோல இருந்த ஓவியம் அது.அதன்பின் அந்த ஓவியக் கண்காட்சியைப் பார்க்க வந்த ஒருவர் அது தலைகீழாக மாட்டப்பட்டு இருப்பதாக நிர்வாகிகளிடம் புகார் கொடுத்தார்.ஓவியத்துடன் வந்த குறிப்புக்களைப் பார்த்த நிர்வாகிகள் உண்மை என ஒப்புக்கொண்டனர்.

எனவே ஒரு விமர்சகன் படைப்பை ரசிக்கிறபோது மற்றவர் கருத்தை விடுத்து தன் கருத்தைச் சுயமாகக் கூர்ந்து கவனித்து உண்மை ரசனையைத் தானும் உணர்ந்து மற்றவர்களுக்கும் தந்து படைப்பாளிக்கும் முழுமையான தெளிவைக் கொடுக்கலாம்.விமர்சகன் என்பவன் கலை இலக்கியப் படைப்புக்களை அடித்தளமாகக் கொண்டு தனது வாழ்வை விசாரணை செய்துகொள்பவன்.அதன்மூலம் அவனுக்கென்று ஒரு கண்ணோட்டம் உருவாகி வரும். அதையே நாம் விமர்சனக் கோட்பாடு என்கிறோம்.நம் படைப்புக்களை அணுகும் விதத்தை மேலும் கூர்மைப்படுத்த உதவும்.

இந்தக் கோட்பாட்டை வைத்துக்கொண்டு படைப்புக்கள் வெளியாவதில்லை.படைப்பாளிக்குப் படைப்பே முக்கியமானதாகும்.பார்வையாளனே படைப்பையும் விமர்சனத்தையும் நோக்கவேண்டும்.விமர்சனத்தை மட்டும் முடிவாக எடுக்காமல் கூறப்பட்டுள்ள காரணங்களையும் நோக்க வேண்டும்.

விமர்சனங்கள் மீண்டும் விவாதிக்கப்பட்டு நிறைந்தவை நிராகரிக்கப்படு அதன் சிறிய சாரமே சமூகத்தால் ஏற்றுக்கொள்ளப்படுகிறது.இத்தகைய விவாதத்தால் மதிப்பீடுகள் கண்ணோட்டங்கள் உருவாகி மறுக்கப்பட்டு பலபுதிய நுணுக்கங்கள்கூடப் பிறக்கும். எனவே படைப்புக்களுக்கு நடுநிலையான சிறப்பான விமர்சனங்கள் படைப்பாளி உணரவும் பார்வையாளன் துல்லியமாக ரசிக்கவும் வழிகாட்டும்.

ஆனால் ரசிகர்கள் அதுவே இறுதி முடிவாகவும் எடுக்காமல் படைப்பாளியும் தன் படைப்பைக் குறைத்து மதிப்பிட்டிருப்பதாகக் கவலைப்படாமல் தவறுகளத் திருத்திப் படைப்புக்களை வெளிக் கொணரவேண்டும்.இவ்வாறாக ஒன்றுடன் ஒன்று தொடர்புள்ள கலைப்படைப்புக்கள் ரசனை விமர்சனம் ஆகியவற்றைப் படைப்பாளி பார்வையாளன் விமர்சகன் என்று எல்லோருமே கை கோர்த்தபடி கைக்கொண்டு சிறந்த படைப்புக்களை உருவாக்க வழி சமைக்க வேண்டும்.

எனக்கும் சேர்த்தேதான் இந்த விமர்சனம்.எனக்கும் சரியாக விமர்சனம் செய்யத் தெரிவதில்லை.அதற்காக ஒருவரிடமிருந்து வாங்கிக் கட்டிக்கொண்டதாலேயே இந்தக் கண்திறப்பு !
ஹேமா(சுவிஸ்)

No comments:

Post a Comment