Search This Blog

Tuesday, September 23, 2014

மைதானத்து மரங்கள் - கந்தர்வன்

இவன் வீட்டை விட்டுத் திரும்பி நடந்தால் நூறடி தூரத்திலிருக்கிறது அந்த மைதானம். ஊரின் ஒரு கோடிக்கு ஒதுங்கி விட்ட இவன் வீட்டுக்கு ஒரே மரியாதை, அது அந்த மைதானத்திலிருக்கிறது என்பதுதான். புதியவர்கள் யாரும் இவனிடத்தில் வீட்டு முகவரி கேட்கும்போது இவன் இந்த மைதானத்தை அடையாளங் காட்டித்தான் சொல்லிக் கொள்வான். உலகத்தின் பெரிய பெரிய வாழ்க்கையிலிருந்தும் பெரிய பெரிய சம்பவங்களிலிருந்தும் இவன் ஒதுங்கி, ஒடுங்கியிருப்பது போல இந்த வீடும் நிசப்தத்தைத் திண்ணையில் விரித்துக்கொண்டு ஒடுங்கி ஒதுங்கிப் போயிருந்தது. அந்தப் பெரிய மைதானத்துக்கருகில் உள்ள வீடு என்பதால்  மைதானத்தின் கம்பீரம் லேசாய் வீட்டில் படிந்து இவன் குரலில் சில சமயங்களில் வெளிப்படும்.
    அம்மா கூடப்போய் பெண்கள் துறையில் குளிக்க வெட்கப்பட்டு அவளோடு சண்டை போட்டுkandharvan4இவன் தன்னோடு சேர்த்துக் குஞ்சு குளுவான்களோடு ஊருணிக்கு குளிக்கப் புறப்பட்ட காலத்திலிருந்து இந்த மைதானத்தோடு இவனுக்கு ரகசிய சம்பந்தம் உண்டு. அப்பா அம்மா கைகளை உதறிவிட்டு இவன் தானே நடக்கத் துவங்கி, கைகளை வீசி நடந்து வந்ததே அருகிலிருந்த இந்த மைதானத்திற்குத்தான். அப்போதிலிருந்து இந்த மைதானந்தான் இவனுக்கு ஆதரவு.
    மதுரை செல்லும் சாலையின் ஓரத்தில் இந்த மைதானம் பரந்து கிடந்தது. மைதானத்தின் சிறப்பு அதன் பரப்பளவினால் வந்ததல்ல. அதன் இவ்வளவு மகிமைக்கும் காரணம் அதன் கிழக்கு மேற்கு ஓரங்களில் ஆஜானுபாகுவாய்க் கிளைகள் விரித்து நிற்கும் அந்தப் பெரிய பெரிய மரங்கள்தான். அவைகளைச் சாதாரணமாய் மரங்கள் என்றழைப்பதே சிறுமைப்படுத்தியதாகிவிடும். நெடுநெடுவென்று வளர்ந்து வீடுகள்போல் தூர்கட்டி மைதானத்து ஓரங்களைக் கருகருவென்று இருள் போர்த்திக்கொண்டு பூவும் பிஞ்சும் காயும் பழங்களுமாய் நிற்கும் அந்தப் புளிய மரங்களை ‘விருட்சங்கள்’ என்றுதான் யதார்த்தமாக சொல்லவேண்டும்.
    ஊர் நடுவேயுள்ள உயர்நிலைப் பள்ளியின் சொந்த விளையாட்டு மைதானம் இது. அந்தப் பள்ளியின் முற்றத்திலேயே ஒரு சிறிய மைதானமும் உண்டு.  இடைஇடையே வரும் விளையாட்டுப் பீரியட்களில் மட்டுமே அந்தச் சிறிய மைதானத்தில் விளையாட்டு நடக்கும். ஒரு வகுப்பிற்கு மதிய இடவேளைக்கு முந்திய கடைசி பீரியட், விளையாட்டு பீரியடாக இருந்தாலோ அல்லது மாலையில் கடைசி பீரியடாக இருந்தாலோ பையன்கள் வரிசையாய் நடந்துவந்து இந்தப் பெரிய மைதானத்தில்தான் விளையாடவேண்டும். விளையாடி முடித்து உடற்பயிற்சிக் கல்வி ஆசிரியர் கழுத்தில் தொங்கும் பிகிலை ஊதி வீடுகளுக்கு விரட்டும்போது எல்லா மாணவர்களும் ஊருக்குள் இருக்கும் தங்கள் வீடுகளுக்கு அலுப்புடன் நடப்பார்கள். மதிய இடைவேளையாயிருந்தால் அவசரமாய் ஓடுவார்கள். இவனுக்கு அப்போதெல்லாம் ரொம்பப் பெருமையாயிருக்கும். இவன் வீடு இதோ நாலு பாகத்தில் இருக்கிறது.
    இவன் மட்டும் ஆற அமர ஒவ்வொரு மரமாய் ஓடி ஒடித் தொட்டுவிட்டு மைதானம் காலியானதும் ஒண்டியாய் நின்று இங்குள்ள எல்லாமே இவன் கவனிப்பில், மேற்பார்வையில் நடப்பதுபோல் காலி மைதானத்தை ஒருமுறை பார்த்துவிட்டு வீட்டிற்குப் போவான்.
    வெயில் தணிந்ததும் அப்போது புழக்கத்திலிருக்கும் கிட்டியோ பம்பரமோ கோலியோ எடுத்துக்கொண்டு மறுபடியும் மைதானத்திற்கு வருவான். ஆங்காங்கிருந்து ஒரு ஜமா சேர்ந்துவிடும். குழுக்களாகப் பிரிந்து விளையாட்டுத் துவங்கும். விளையாட்டின் போது எவ்வளவு கத்தினாலும் சத்தம் மைதானத்தை விட்டு வெளியே போகாது. மைதானமே சப்தங்களே விழுங்கிவிடும். இரண்டுபேர் மூன்று பேராக இளவட்டங்களும் வயசாளிகளும் வந்து மர நிழல்களில் உட்கார்ந்து ஊர்க்கதைகளைப் பேசுவார்கள். தனி ஆட்களாய் கண்ணிலுள்ள சோகத்தையெல்லாம் மைதானத்தில் பாய்ச்சிக்கொண்டு குத்துப்பார்வைகளோடு சிலர் உட்கார்ந்திருப்பார்கள்.
    சாலையைத் தாண்டிப் பச்சைக் காடாய்க் கிடக்கும் வயல் ஓரங்களில் மாடு மேய்க்க வரும் சிறிசுகள் முறைபோட்டுக்கொண்டு, சிலர் மாடுகளைப் பார்த்துக்கொண்டு மைதான மரப் பாதங்களில் வீடமைத்து ஆடுபுலி, தாயம் எல்லாம் ஆடுவார்கள். கந்தலும் பரட்டையுமாய் அவர்கள் ஒரு ஒதுங்கிப்போன மரத்தடியை எப்போதைக்குமாய் எடுத்துக்கொண்டார்கள். எவ்வளவோ காலம் ஆயிற்று அவர்கள் அந்த மரத்தடியை எடுத்துக்கொண்டு. காடு மாறிப் பொழப்பு மாறி எவ்வளவோ பேர் போய்விட்டார்கள். எண்ணிக்கையில் குறைவுபடாமல் புதிது புதிதாகவும் வருகிறார்கள். கந்தலும் பரட்டையும் மாறவில்லை. அவர்கள் பிடித்துக் கொண்டிருந்த மரத்தையும் மாற்றிக்கொள்ளவில்லை. விடிகாலைப் பொழுதில் கூட்டிப் பெருக்கி பளிச்சென்றிருக்கும்  வீட்டு முற்றம்போல்  எல்லாக் காலத்திலும் அந்த மரத்தடி மட்டும் சுத்தமாயிருக்கும். அடுத்தடுத்த மரத்தடிகளில் வெள்ளையுஞ் சுள்ளையுமாய் உட்கார்ந்து பேசிக் கொண்டிருப்பவர்களிடம் அஞ்சிக்கொண்டே விளையாடும் அந்த மாடு மேய்ப்பிகள் சப்தக் குறைவோடுதான் சம்பாஷித்துக் கொள்வார்கள்.
    கொஞ்சகாலம் முன்பு வரை இளவட்டங்கள் கூட்டமாக வந்து கேந்திரமான மரத்தடிகளில் உட்காருவார்கள். கண்டகண்ட பெண்களைப் பற்றியெல்லாம் அவர்கள் கதையளந்து கொண்டிருப்பார்கள். அவர்களெல்லாம் கல்யாணம் முடிந்து மனைவிகளுக்குக் கட்டுப்பட்டு வீடுகளில் முடங்கியிருப்பார்கள் போலும்! அந்த முகங்களில் ஒன்றிரண்டைத் தவிர அநேகம் பேரை இப்போதெல்லாம் இந்த மரத்தடிகளில் காண முடிவதில்லை. இப்போது வரும் இளவட்டங்கள் வந்து உட்கார்ந்தவுடன் அமர்க்களமாய்ப் பேசத்துவங்கினாலும் நேரம் ஆக ஆக சோகங்களையே பரிமாறிக் கொள்கிறார்கள். தூரத்துப் பட்டணங்களும், கை நிறையச் சம்பளம் வரும் உத்தியோகங்களும் நாதஸ்வரம் முழங்கக் கல்யாண ஊர்வலங்களும் அவர்களின் ஏக்கம் போலும். அவர்கள் ஒவ்வொரு நாளும் விட்டுச் செல்லும் பெரு மூச்சுகள் மரத்தடிகளைத் தாண்டி மைதானமெங்கும் விரிந்து செல்லும்.
    இவன் சிறுபிள்ளையாயிருந்தபோது மைதானத்து மரத்தடிகளில் அதிகமாய் உட்கார்ந்ததே இல்லை. இவனைக் கவர்ச்சித்ததெல்லாம் சூரியனை நேராகப் பார்த்துக் கிடந்த அந்த மைதான வெளிதான். மரத்தடி என்பது உட்காருபவர்களுக்குண்டானது. இவனால் அந்த வயதில் வாலைச் சுருட்டிக்கொண்டு ஐந்து நிமிடங்கள் கூடத் தொடர்ந்து ஒரு இடத்தில் உட்கார முடியாது. மைதான வெளியிலென்றால் ஆடிக்கொண்டேயிருக்கலாம். ஓடிக்கொண்டேயிருக்கலாம். 
    ஒவ்வொரு சமயம் விளையாட்டு உச்சத்திலிருக்கையில் மரத்தடியிலிருந்து ‘அப்படிப் போடுரா சபாசு’ என்ற உற்சாகக் குரல்கள் சிறுவர்களை எட்டும். அந்த நாட்களில் அவர்களின் அடுத்தடுத்த ஏவல் குரல்களுக்காகவும் உற்சாக ஒலிகளுக்காகவும் ஆட்டம் தூள்படும். இறங்கு வெயில், மஞ்சள் வெயில், லேசிருட்டு என்ற பொழுது மாற்றங்கள் ஆட்ட மும்முரத்தில் புத்திக்கு உறைக்காது. இருட்டுக் கனமாகி கனமாகி அடித்த கிட்டிப்பிள்ளையைத் தேடமுடியாமற் போனாலும் உருண்ட கோலிகளைக் குனிந்து குனிந்து கண்களை இடுக்கி இடுக்கிப் பார்த்தும் கண்டுபிடிக்க முடியாமற் போனாலும் ஆட்டத்தை மாற்றி வேறு விளையாட்டில் முனைவார்கள். கடைசியாய் ஓடி வருவது தெரியாமல் முட்டி மோதி எதிரே வருபவனை பெயர் மாற்றிக் கூப்பிட்டு எல்லோரும் அதற்காக ஓவென்று சிரித்து அந்தச் சிரிப்புகளிலும் அயர்ச்சி வந்து அப்புறந்தான் அந்த மைதான வெளியில் ஆட்டபாட்டங்கள் முடியும்.
****** 
    இவன் எட்டாம் வகுப்பு படிக்கையில்தான் முதன் முறையாக மைதான வெளியிலிருந்து ஒதுங்கி மரத்தடியில் உட்கார்ந்தான். அன்று அவன் காலையில் பள்ளிக்கூடம் போய் இறைவணக்கம் முடிந்து வரிசையில் வந்து வகுப்பில் உட்கார்ந்தான். ஆங்கிலம்தான் முதல் பீரியட். ஆங்கில ஆசிரியர்தான் வகுப்பாசிரியர். வெள்ளை பேண்ட்டும் வெள்ளை சட்டையும் வெள்ளை மனசுமாய் மிகுந்த கவர்ச்சியோடிருப்பார். வகுப்பிற்குள் நுழையும்போதே ஒரு காகிதத்தைக் கொண்டு வந்தார். அவர் முகத்தில் கவலை நிறைந்திருந்தது. நாற்காலியில் உட்காரு முன்பே அதைப் பார்த்துப் படிக்க ஆரம்பித்தார். “ இன்னும் ஸ்கூல் பீஸ் கட்டாதவர்கள் வகுப்பை விட்டு வெளியேற வேண்டும். பீஸ் கட்டி ரசீது வாங்கிக்கொண்டுதான் உள்ளே வரவேண்டும். இந்த வகுப்பில் இன்னும் பீஸ் கட்டாதவர்கள் ராகவன், முத்து...” அடுத்தடுத்த பெயர்கள் அவன் காதில் விழவில்லை. ‘முத்து... முத்து... முத்து...’ என்றுதான் எல்லாமே இவன் காதில் விழுந்தன.
அம்மாதான் வீட்டிலிருப்பாள். அப்பா வேலைக்குப் போயிருப்பார். ஆதீன ஆபிஸ் நாற்காலியைத் தேய்த்துக்கொண்டு உட்கார்ந்திருப்பார். பத்து நாளாய்ப் பன்னிப் பன்னிச் சொல்லியும் ‘இந்தா தாரேன், அந்தா தாரேன்’ என்று சொல்லிக்கொண்டே தினமும் ஓடிவிடுகிறார். அம்மாவோடு சண்டை போட்டுப் புண்ணியமில்லை. அஞ்சறைப் பெட்டியைத் தடவிப் பார்த்துவிட்டு மஞ்சள் சீரகம் இல்லையென்றாலும், சீசாவைப் பார்த்துவிட்டு எண்ணெய் இல்லையென்றாலும், தம்பி தங்கைகள் நேரங்கெட்ட நேரத்தில் ‘பசிக்கிறது’ என்றாலும் “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்றுதான் குரலெடுப்பாள். அவளிடம் இப்போதுபோய் பீஸ் கட்டப் பணம் கேட்டால் அவள் மறுபடி ஒருமுறை “என்னைக் கொண்டுக்கிட்டு சீக்கிரம் போயிரு ஈஸ்வரா” என்று குரலெடுப்பதைத் தவிர பீஸ் கட்டச்சொல்லிக் கொடுக்க அவளிடம் எதுவும் இருக்காது. அலுவலகத்திற்குப்போய் அப்பாவைக் கேட்கலாமென்றால் எரிந்து விழுவதைத் தவிர அவரும் உடனடியாக எதையும் ஏற்பாடு செய்துவிட மாட்டார்.
    அவன் அன்றுதான் மைதான வெளியை மறந்துவிட்டு மரத்தடியில் உட்கார்ந்து மைதானத்தை வெறித்து நோக்கினான். ஆங்காங்கு சில மரத்தடிகளில் அந்த வெயில் நேரத்தில் ஒன்றிரண்டுபேர் உட்கார்ந்திருந்தார்கள். வேளை கெட்ட வேளைகளில் இப்படி வந்து உட்காருபவர்கள் உளைச்சல் தாளாமல்தான் வருகிறார்கள் என்பது அவனுக்கு அருவலாய்ப்பட்டது. வகுப்பில்பட்ட அவமானம் இவன் உடலை நடுக்கியது. இவனால் செய்யக்கூடியது அப்போதைக்கு வேறெதுவுமிருப்பதாக அவனுக்குத் தோன்றவில்லை. வகுப்பை விட்டு வெளியே வருகையில் மாணவர்கள் இரக்கத்தோடு பார்த்த பார்வைகள் இன்னும் இவன் உடல் முழுதும் ஈக்களாய், எறும்புகளாய் மொய்த்துக் கிடந்தன. உக்கிப்போய் உட்கார்ந்திருந்தான்.
    சாலைகளும் மைதான வெளியும் ஊர் முழுவதும் வெயிலின் உக்கிரத்தில் கொப்பளித்துக் கொண்டிருக்கையில் உடல் நடுங்கி இவன் உட்கார்ந்த இந்த மரத்தடி மட்டும் இளங்காற்றுச் சிலுசிலுப்பும் இதமான நிழலுமாய் குளுகுளுவென்றிருந்தது. நெடுநேரம் அப்படியே சிலையாயிருந்தான். இந்தச் சிலுசிலுப்பும் குளுமையும் இவனின் மனப்பாரத்தை லேசு லேசாய் கரைத்துவிட்டன. இவன் மரத்தடியிலிருந்து எழுந்தபோது குழப்பமும் நடுக்கமும் குறைந்திருந்தன.
    இதன்பின் மைதான வெளியில் இவன் குறைவாகவே விளையாடினான். ஒவ்வொன்றாய் இவனைத் தாக்கிய ஒவ்வொரு அடிக்கும் மரத்தடியே இவனுக்கு மருத்துவமனையானது. படித்து முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் சில வருஷங்கள் எல்லாப் பொழுதுகளிலும் இவன் இந்த மரத்தடிகலிலேயே ரணங்களோடு கிடந்து எழுந்தான். இவன் தகப்பனார் காலமானதும் பண்டார சந்நிதிகளின் காலில் விழுந்து ஆதினத்திலேயே ஆகக் குறைந்த சம்பளத்தில் நாற்காலி தேய்க்கும் வேலையை வாங்கினான்.
    கல்யாணமாகிப் பிள்ளைகள் வந்து கூடவே தம்பி தங்கைகள் என்று இவன் சுமை அதிகரித்து ஒரு பழைய செல்லரித்துப்போன கப்பலாய் மாறிப்போனான். மனைவி, பிள்ளைகள், தம்பி, தங்கைகள் எல்லோருடைய தேவைகளுக்காகவும் நடக்கும் போராட்டங்கள் இவனை எதிரியாக்கியே நடந்தன. அப்போதும் இவன் அந்தச் சிலுசிலுவென்றும் குளுகுளுவென்றுமிருந்த மரத்தடிகளிலேயே மருந்து வாங்கித் தேய்த்துவிட்டான்.
    இந்தத் தேவைகளுக்காகவும் வேறு எதற்காகவுமோ ஊரில் எப்போதும் ஊர்வலங்கள் கூட்டங்களெல்லாம் நடக்கின்றன. அடிதடி ரகளையெல்லாம் நடக்கின்றன. இவனுக்கு அதிலெல்லாம் நாட்டமில்லை. சின்னசின்ன இலைகள் கூடி இவனுக்காகவே அமைத்தது போன்ற அந்த மரப்பந்தலின் கீழ் இவன் தன் அவலங்களையும் துக்கங்களையும் மறைத்துக் கொண்டான். அக்கம் பக்கத்தில் சொல்வார்கள், “ முத்துக்கு இந்த மைதானத்திலே பாதியாவது பள்ளிக்கூடக்காரக குடுத்திரணும். அனுபவ பாத்தியதைனு வந்தா பள்ளிக்கூடப் புள்ளைகளை விட இவந்தான் ரொம்ப இதை அனுபவிச்சுட்டான்.”
    இவன் மனைவி மட்டும் உக்கிரமான சண்டைகளுக்குப் பின் ஒவ்வொரு சமயம் இப்படிச்சொல்வாள், “ஆச்சு, எல்லாஞ் சொல்லி நானும் நாக்கைப் புடுங்கிக்கிட்டு சாகுறாப்பலே கேட்டுப்பிட்டேன். என்னடா இப்படி ஒரு பொம்பளை கேட்டுப்புட்டாளேனு ரோசம் வந்து நாலு பேருகிட்டப்போயிப் பாத்தடிச்சு செய்வோம்னு நல்ல ஆம்பிளையினா தோணனும். இங்க அதெல்லாம் தோணாது. சண்டை ஆச்சுன்னா சாமியார் மாதிரி மரத்தடிக்கு ஓடிற்றது. இருட்டினதும் சம்சாரின்னு ஞாபகம் வந்து இந்தக் கூட்டுக்குள்ள வந்து மொடங்கிக்கிறது. இப்படி வெவஸ்தை கெட்டுப் போயித் திரியுறதுக்குப் பதிலா அந்த மரத்துங்கள்ள ஒண்ணுல தூக்குப்போட்டுத் தொங்கலாம்”. இப்படிக் கேட்டவுடன் இவனுக்குக் கை பரபரவென்று வரும். முகமும் கண்களும் நடுங்கிச் சிவந்து அவளை இழுத்து நாலு சாத்து சாத்திவிட்டு மரத்தடிக்குப் போய் வருவான்.
    அன்று இவன் அலுவலகத்திலிருந்து சீக்கிரமாகவே வந்துவிட்டான். கடைசிப் பையன் அழுதுகொண்டிருந்தான். அவனைச் சமாதானப்படுத்திக் கையில் பிடித்துக் கொண்டு பொழுது இருட்டும் வேளையில் அவன் மைதானத்திற்குள் நுழைந்தபோது கண்ட நிகழ்ச்சியில் அதிர்ந்துபோய் அப்படியே நின்றுவிட்டான். மைதானமெங்கும் நின்ற பதினைந்து இருபது மரங்களில் ஏழெட்டு வெட்டப்பட்டு சாலைவரை புரண்டு கிடந்தன. கர்ப்ப ஸ்தீரிகள் சாய்ந்து மல்லாக்க விழுந்து கிடப்பதுபோல் அவை கிடந்து இவனைப் பரிதவிக்க வைத்தன. கோடாரிகளோடும் ரம்பங்களோடும் ஏராளமான ஆட்கள் விழுந்துகிடந்த மரங்களைச் சுற்றி நின்று கொண்டிருந்தனர். லாரிகளில் செங்கற்கள் வந்து மைதானத்தின் பல இடங்களில் இறக்கிக்கொண்டிருந்தனர்.
    இவனைப் போலவே அங்கே தினமும் வரும் பலரும் கவலை படிந்த கண்களோடு இவனுக்கு முன்னமேயே அங்கு வந்து நின்று மேலும் கவலையாகி நிற்பதைப் பார்த்தான். மாடு மேய்க்கும் சிறுசுகள் கந்தல்களோடும் பரட்டையோடும் கன்னங்களில் கையை வைத்து வேதனையோடு வேடிக்கை பார்த்தன. மெதுவாய்ப் போய் ஒருவரிடம் இவன் கேட்டான். “என்ன ஆச்சு? ஏன் இப்படித் திடீர்னு எல்லாத்தையும் வெட்டுறாக?” கொப்பும் கொலையுமாய்க் கிடந்த அந்தப் பச்சைப் பூதங்களைப் பார்த்துப் பெருமூச்சு விட்டபடி அவர் சொன்னார் “கனா மூனா இந்த இடத்தைப் பள்ளிக்கூடத்துக்காரக கிட்டேயிருந்து வாங்கிப்பிட்டாக. இதுக்குப் பதிலா பள்ளிக்கூடத்துக்குப் பக்கத்துலெ உள்ள அவரு காலி இடத்தைக் கொடுத்திட்டாராம். இதிலே சினிமாக் கொட்டகை கட்டப்போறாக. கதவு நெலைக்கெல்லாம் இந்த மரங்கதான்.”
    மைதானம் அலங்கோலமாகிவிட்டது. வெட்டுப்பட்ட மரங்களிலிருந்து வந்த பச்சைக் கவிச்சியும் மரவாசனையும் காற்று முழுதும் வியாபித்துக்கிடந்தது. இன்னும் வெட்டப்படாத மரங்களைச் சுற்றித் தூரைத் தோண்டுவதும் வெட்டுப்பட்ட மரங்களை ரம்பங்களால் அறுப்பதுவும் மும்முரமாய் நடந்துகொண்டிருந்தன. இரண்டு மூன்று பெட்ரோமாக்ஸ் விளக்குகள் வந்து இறங்கிக் கொண்டிருந்தன. பகிரங்கமாய் அங்குக் கொலைகள் நடந்து கொண்டிருப்பதாகவே இவனுக்குப்பட்டது. பாதம் முதல் தலை வரை உலுக்கியது. இவன் கவலைகளை இனி யார் வாங்குவார்கள்? மரங்கள் மழையை வருவிக்கும் என்று இவனுக்குத் தெரியும். இந்த மரக்கொலைகள் இவன் கண்களிலும் அப்படியே மழையை வரவைத்துவிட்டன. எல்லா அடிகளையும் வாங்கிகொண்டு இவன் உன்மத்தன்போல் இந்த மரத்தடிகளில் உட்கார்ந்திருந்தானே தவிர ஒரு நாளும் கண்ணீர் விட்டு அழுததில்லை. அன்றைக்கு முதன்முறையாகப் பொருமிப் பொருமி அழுதான். கைப்பிடியில் சிக்கி நின்ற குழந்தை ஒன்றும்புரியாமல் தகப்பனின் கேவலைக் கண்டு அதுவும் ஓவென்று மைதானமெங்கும் கேட்கும்படி அழுதது.
    இருட்டி வெகு நேரங்கழித்து வீட்டிற்கு வந்தான். உள்ளே நுழைந்ததும் மனைவி சொன்னாள், “இனி மேலாச்சும் ஊருலெ ஒவ்வொருத்தரும், நம்மளைப்போல எப்படிக் கஷ்டப்படுறாகன்னு நடந்து திரிஞ்சு பாருங்க”.  
    மறுநாள் பொழுது சாய்ந்த வேளையில் இவன் மைதான ஓரச்சாலை வழியாக ஊருக்குள் தன்னையொத்த ஜனங்களைத் தேடிப்பார்க்க முதன் முறையாய்க் கையை வீசி நடந்துகொண்டிருந்தான். மைதானத்தை ஒட்டிய ஓரங்களில் கண்டும் முண்டுமாய்த் துண்டுபட்ட மரங்கள் உயிரற்றுக்கிடந்தன. இவன் உயிரோடு அவைகளைத் தாண்டி தாண்டி நடந்தான்.

No comments:

Post a Comment