ஒரு உச்சி வெயிலில் கடலோடித் திரும்பிய மீனவர் ஒருவர் தான் போட் ஜெட்டியில் அந்த சேதியைச் சொன்னார். தீவில் ஒரு திமிங்கலம் ஒதுங்கிக் கிடப்பதாக. சேதி கிராமத்தின் வழியாகச் செல்லும் பஸ்களிலும் லாரிகளிலும் நகரத்திற்கு அன்று மாலைக்குள் வந்து சேர்ந்துவிட்டது. நகரத்திலிருந்தும் வேறு எங்கிருந்தும் போட் ஜெட்டிக்கு பஸ்களில் வரவேண்டும். பிறகு முக்கால் மணி நேர படகு சவாரிக்குப் பின் தீவிற்குப் போகலாம் என்றார்கள்.
முதலில் சில ஆண்கள்தான் பஸ் பயணம். கடல் சவாரி வெறித்துக் கிடக்கும் தீவு என்று பயத்தை மறைத்தபடி நண்பர் குழமாய்ப் போய்ப் பார்த்துவிட்டு வந்தார்கள். வந்து அவர்கள் அளந்த அளப்பு மனைவி குழந்தைகளோடு இன்னொரு பயணம் என்றானது.
பத்திரிகைகளில் பெரிய செய்தியாகக் காலையிலும் மாலையிலும் வெளியிட்டார்கள். வானொலி தொலைக்காட்சியிலும் திமிங்கலத்தைக் காட்டி பிள்ளைகள் ஒரே குரலில் 'புறப்படு போகணும் ' என்றார்கள். தகவல் என்னவென்றால் பஸ்களிலும் போட் ஜெட்டியிலும் நெரிசல் தாளவில்லையென்றும் மாருதி சியல்லோ, 'டி ' போர்டு கார்கள் பகல் முழுதும் போட் ஜெட்டி வாசலில் கிடக்கின்றன என்பதாகும்.
திமிங்கலம் ஒதுங்கிய மூன்றாம் நாள்தான் அவன் குடும்பத்தோடு தீவுக்குப் பயணமானான் புறப்படுமுன் இரண்டு நாளாய்ப் பிள்ளைகள் விடிந்து எழுந்ததும் திமிங்கலம் குறித்து கூடிக் கூடி உட்கார்ந்து கற்பனையும் பேத்தல்களுமாய் வாயொழுகப் பேசித் திரிந்ததை அவள் அடிக்கடி பார்த்துவிட்டு வாய் பொத்தித் திரும்பிக்கொண்டு சிரித்து வைத்தாள். சிரிக்காமல் என்ன செய்வது விடிகாலையில் உட்கார்ந்து இரண்டும் இப்படிப் பேசிக்கொண்டிருந்தால்.
'அது மேலெ ஏறி ஏறிப்போனா மேகத்தையே தொட்டிரலாம் தெரியுமா ? '
'எனக்குத்தெரியுமே, அதோட ஒரு கால் நம்ம ஊர் அளவு பெரிசு. '
'எனக்குத் தெரியுமே நாமெல்லாம் பாத்தா இவ்ளூண்டு தூரம் தான் பாக்கமுடியும். அது கண்ணாலெ பாத்துச்சுன உலகமே தெரியும் தெரியுமா ? '
'நாம இங்கெ உக்காந்திருக்கிறதெல்லாமா ? '
'ஆமா அப்பா பேப்பர் படிக்கிறதெல்லாம் கூட. '
'எனக்குத்தெரியுமே ' ஆனா அதுக்கு ஒருகண்ணுதான். '
'போடி ரெண்டு கண்ணு '
'எனக்குத் தெரியும் தெரியும்றியே நீ எங்கே போய்ப் பாத்தெ ' '
'என்னை மட்டும் சித்தி வீட்டுக்கு அனுப்பியிருந்தாங்கள்ள அப்பொ நீ வல்லியே. அன்னிக்கு ஒருநாள் அங்கெ வந்திச்சி. நான் பாத்தேன். '
'புளுகாதெடா '
'நீதான் புளுகி. '
'டி வெண்டி தெளசண்ட் லீக் அண்டர் தி சீ ' என்று ஒன்பதாம் வகுப்பில் ஒரு நாண்டிடெய்ல் புத்தகத்த இங்கிலீஷ் பாடமாக வைத்திருந்தார்கள். கடலுக்கடியில் அதுவரை இல்லாத பெரிய சைஸில ஒரு ராட்சத திமிங்கலம் திரிவதாகவும் அதனால் கடலின் ஒரு பிராந்தியம் முழுதும் மீனவர்களின் வலை அறுந்ததையும் படகுகள் கவிழ்ந்ததையும் நாவல் சொல்லி வரும். கடல் நம்பிகள் பீதி கொண்டு திரிந்தார்கள். திமிங்கலம் அவ்வளவு பிரம்மாண்டமாகச் சொல்லப்படும்.
அந்தத் திமிங்கிலத்தை வேட்டையாடக் குறி பிசகாமல் உலகிலேயே சிறப்பாக ஈட்டி எறியும் பலசாலிகள் இருவரோடு ஆழ்கடலில் திமிங்கல வேட்டை நடக்கும். திமிங்கலத்தையும் காண்பார்கள். ஈட்டி எறிந்ததும் 'டய் ' என்று உலோகத்தின் மீது விழும் சத்தம் கேட்கும். அது முதன் முதலாக ரகசியமாய் செய்துவிடப்பட்ட நீர் மூழ்கிக் கப்பல் என்ற மர்ம முடிச்சு நாவலில் அவிழும் இடம் அந்த வயதில் பரவசமாயிருந்தது. பிள்ளைகளிடம் அந்தக் கதையைச் சொன்னதும் நடுக்கடல், திமிங்கலம், கடற்பயணம், பூதங்கள் உருவத்தில் ஈட்டி எறிபவர்கள் என்று இன்னும் அதிகக் கற்பனைகளோடு ஒன்றிடம் ஒன்று நிறைய பேத்திக் கொண்டிருந்தது. அவளும் இந்தக் கதை கேட்ட பின்னர் திமிங்கலம் பற்றிப் போகும்போது வரும்போது ஏதாவது கேட்டாள்.
'கடலும் கிழவனும் ' கதையை மறுநாள் ராத்திரி ஒன்பது மணி வாக்கில் சொன்னான். கிழவன் விடாப்பிடியாய் ராட்சத மீனோடு போராடியதை வெகு நேரம் சொல்லி முடித்ததும் பிள்ளைகள் கேட்டன 'இப்பவே போவமா திமிங்கலம் பாக்க ? ' என்று அவளுக்கே அப்படி ஒரு ஆர்வம் வந்து முகத்தில் நின்றது.
போட் ஜெட்டியில் கூட்டம் மிகுதியாக நின்றது. சுற்றுலா ஸ்தலங்களுக்குப் போகிறவர்கள் கொண்டு செல்லும் பொருள்கள் தின்பண்டங்களோடு நின்றார்கள். காமிராக்கள் நிறையத் தெரிந்தன. பிரயாணிகள் படகு என்று ஒன்றிரண்டுதான் நின்றன. மற்றவை எல்லாமே மீன்பிடிப் படகுகள்தான். அநேகமான படகுகள் கடந்த இரண்டு நாட்களாய் மீன் பிடிக்கப் போகவில்லை. இருட்டும் வரை தீவுக்குப் பிரயாணிகளைக் கொண்டுவிட, கூட்டி வர நல்ல வருமானம். போட் ஜெட்டியில் அவனைக் கவர்ந்த விஷயம் ஒன்று. அந்தக் கருங்கல் மேடையிலிருந்தும் படகுகள் ஏற எவ்வளவு வில்லங்கமான ஆளுக்கும், வாயாடிக்கும், பலசாலிக்கும், சவடால் காரனுக்கும் இன்னொரு கை உதவியாகத் தேவைப்பட்டது. பிள்ளைகள் போட் ஜெட்டியின் மேடையில் நின்று நீல நெடுங்கடல் பார்த்துக் குதித்தன. அவளே கடல் பார்த்து அடக்கமுடியாமல் பார்த்தபடி பேசினாள் அவனிடம்.
விசைப்படகின் முன்பக்கத்தில் அவன் குடும்பம் உட்கார்ந்து கொண்டது. கடலைக் கிழித்துக்கொண்டு படகு போவதைப் பார்க்க அதுதான் சரியான இடம் என்று சொல்லியபடி உட்கார்ந்தன பிள்ளைகள். அவர்களுக்கு முன்னாலும் பின்னாலும் படகுகள் வந்ததால் பிள்ளைகள் ஆரவாரித்துக் கையசைத்தார்கள்.
படகில் உட்கார்ந்து பார்க்கக் கடல் ஒரே நிறத்தில் எல்லா இடங்களிலும் இல்லை. தூரம் விட்டு தூரத்தில் அழுத்தமான நீலத்தில் வாலம் வாலமாய்க் கிடந்தது கடல். மேலே வானத்தின் நிறமும் கீழே கடலின் நிறமும் ஒரே மாதிரியாக இருந்ததிலும் இரண்டு பிரம்மாண்டங்களை ஒரே நேரத்தில் பார்த்ததிலும் மனதுகள் எவ்விப்பறந்தன. பிள்ளைகள் ஒன்றிடம் ஒன்று என்றோ பார்த்த யானைப் பற்றிப் பேசியது. இன்னொன்று பதிலுக்கு சறுக்கலில் பார் விளையாடியதைப் பார்த்தபோதுபயம் பயமாய் வந்ததைப் பற்றிப் பேசியது. அதிசயம் பார்த்து அனுபூதிக்கும் நேரங்களில் பிள்ளைகள் இப்படிப் பேசுவதைக் கேட்டு அவனுக்கு இப்போதுபழகிவிட்டது.
படகு போகும் ஓரங்களில் ஆங்காங்கே மிதவைகள் கிடந்தன. தீவுக்குப் பாதை போட்டுவிட்டார்கள். ஒரு முழுக்கை நீள மீன்கள் தூரத்தில் அவ்வப்போது வெட்டவெளிக்கு வந்து விட்டுக் கடலுக்குள் பாயும்போதெல்லாம் பிள்ளைகள் கைதட்டின. மண் மேட்டில் தாவரங்கள் மங்கலாய்த் தெரிந்தது. 'அதோ தீவு ' என்றன பிள்ளைகள். அடுத்தவர்கள் காதில் விழாமல் அவள் அவனிடம் சொன்னாள். 'இந்தப் புள்ளைக புண்ணியத்திலெ ஒரு ஆசையிலெ பாதி நிறைவேறுது இன்னிக்கு. '
'என்னது ? '
'வாழ்க்கையிலெ ஒரு தடவையாவது வெளிநாட்டுக்குப் போய் வரணுமினு அசட்டு நெனைப்பு அடிக்கடி வரும். நாலு பக்கமும் கடலா ஒரு மேட்டிலெ எறங்குறப்பொ நெனைச்சிக்க வேண்டியதுதான்.இது ஒரு நாடுனு. கடல் தாண்டி வர்ரோம்ல. '
அவளைப் பார்க்கப் பாவமாகவும் சிரிப்பாகவும் இருந்தது. கடற்கரை குளக்கரைபோல் மணற்பாங்காய் அழகாயிருந்தது. படகுத் துறைக்கருகில் கீழ்த்திசையில் ஒரு குடிசையும் அதில் கறுத்து மெலிந்த இரண்டு ஆட்களும் இருந்தனர். அவர்கள் படகுகளிலிருந்து இறங்கிப் போகும் ஆட்களை மிரட்சியோடு பார்த்துக் கொண்டு நின்றார்கள். அவர்களுக்கருகில் இரண்டு மெலிந்த செவல நாய்கள் நின்று கொண்டிருந்தன.
குடிசைக்கு நேராக கடலுக்குள் கம்புகள் ஊன்றி செயற்கை முத்துக்களை விளைவிக்கிறார்கள். நகரிலிருக்கும் ஒரு பெரிய நிறுவனம் அதை நடத்துகிறது. இரவுபகலாய் அதைப் பாதுகாக்க அந்தக் குடிசையும் மெலிந்த அந்தமனிதர்களும் நாய்களும் என்றார்கள்.
பிள்ளைகள் அவர்களை ஆச்சர்யத்தோடு பார்த்துவிட்டு ஒன்று கேட்டது 'அப்பா ராத்திரி எல்லாம் இவுங்க மட்டும் இந்தத் தீவிலெயே இருந்துக்குவாங்களா ? '
'ஆமா '
'பயமா இருக்காதா ? '
'கூட நாய் இருக்கில்ல '
'நாயும் மெலிஞ்சு போயிருக்கு. '
'தெனம் தெனம் வர்ரவங்கள்ளாம் போனப்புறம் திமிங்கலமும் இவங்களும் மட்டும்தான் தீவிலெ இருப்பாங்க. ஏப்பா ? '
'ஆமா ஆமா கீழெ பாத்து நட. '
தீவின் மறுபக்கம் தான் திமிங்கலம் ஒதுங்கிக் கிடப்பதாகச் சொன்னார்கள். படகுகளில் இறங்கி குடும்பங்கள் முன்னும் பின்னும் போய்க்கொண்டிருந்தன. இளைஞர்கள் குழாம் அட்டகாசம் பண்ணிக்கொண்டு வெகு பின்னால் வந்து கொண்டிருந்தது. தீவில் தாவரங்கள் எல்லாமே ஒரு தினுசாயிருந்தன. ஊரில் நீண்டு காய்க்கும் புடலை ஒரு சாணுக்குள் முடங்கிக் கிடந்தன. எந்தச் செடியின் இலையைப் பறித்து மென்றாலும் உப்புக் கரித்தது.
மக்கள் நடந்துபோன இந்த மூன்று நாட்களுக்குள் ஒற்றையடிப் பாதை உருவாகியிருந்தது. மித வெயிலும் அடர்ந்த புதர்களும் உடம்பையும் மனதையு லேசாக்கின. நடந்துபோகையில் அவன் பிள்ளைகள் கூட வரும் பல ஊர்ப் பிள்ளைகளோடு பேச்சுக்கொடுத்து நெருங்கிக்கொண்டன. ஓடிப்பிடித்து திரும்பப் பெற்றோரிடம் வந்து விழுந்து உற்சாகமாய் வந்தார்கள் பிள்ளைகள்.
வெகு தூரத்திலேயே தெரிந்தது. திமிங்கலம் கரைமேல் வண்னங்களில் ஜனங்கள் தெரிந்தார்கள். பிள்ளைகள் முன்னைவிட பாய்ச்சலில் போகவும் தொடர்ந்து அதே வேகத்தில் நடக்க சிரமமாயிருந்தது பெற்றோர்களுக்கு.
பனை மர நீளத்திலும் ஆலமர அகலத்திலும் திமிங்கலம் கிடந்தது. யானையின் வெளிர் கறுப்பில் வேலுடம்பும் கீழே வெள்ளையாயும் கிடந்தது. வாய் தரையில் கிடந்தது. உடம்பு முழுதும் சமுத்திரத்திற்குள் வயிற்றுப் பகுதியிலிருந்து ரத்தம் கசிந்தது; கசிந்தது என்ன ஒழுகிக் கலந்து கொண்டிருந்தது சமுத்திரத்தில்.
கப்பலில் மோதி அடிபட்டிருக்க வேண்டும்; பாறையில் மோதிக் காயம் வாங்கி ஒதுங்கியிருக்கவேண்டும் என்று பலவாறாகப் பேசிக் கொண்டார்கள். அந்திம காலத்தில் மனிதர்கள் வாய் வழியாய் மூச்சுவிட்டு அவஸ்தைப்படுவதுபோல் திறந்து திறந்து மூடியது வாய். அவ்விதமான ஒவ்வொரு தடவையிலும் சிரசிலிருக்கும் பெரிய துவாரம் வழியாய் கடல் நீர் ஆகாயத்தில் பீய்ச்சியடித்தது. மூச்சு விட்டு மூச்சிழுக்கும் போதெல்லாம் கடல் ஏறி இறங்கியது.
ரத்த ஒழுக்கைப் பார்க்கவும் திக்கித் திக்கி மூச்சு விடுவதைப் பார்க்கவும் பரிதாபமாயிருந்தது. இதுவரை பார்த்தறியாத பெரிய ஜீவராசியின் மரணப் படுக்கை என்பதால் சுவாரஸ்யமாகவும் பார்த்தார்கள்.
திமிங்கல வாலுக்கு வெகு அருகிலேயே வேர்க்கடலை, ஐஸ்க்ரீம், தயிர்சாதம், குளிர்பானங்கள் விற்பனையாகிக் கொண்டிருந்தன கடலுக்குள் போய் திமிங்கலத்தின் தலையைப் பார்க்க விரும்பி இருக்கிறார்கள் பிள்ளைகள். தலை கிடந்த இடம் வெகு ஆழம். விஷயம் அறிந்ததும் இரண்டு மூன்று சிறிய படகுகள் இதற்கென வந்துவிட்டன. பிள்ளைகளை ஏற்றித் திமிங்கலத்தைச் சுற்றிக் காண்பித்து இறக்கிவிட்டுப் பணம் பெற்றுக்கொண்டார்கள்.
அவர்கள் போன சமயத்தில் மீன் துறை அதிகாரிகள் கடலுக்குள் வெகுதூரத்தில் ஒரு படகிலிருந்துகொண்டு திமிங்கல வாய்க்கு நேராக முரட்டு மீன்களைத் தூக்கி எறிந்தார்கள். அவை திமிங்கலத்தின் திறந்த வாயருகே விழுந்தும் அவைகளை அது ஏறெடுத்தும் பார்க்கவில்லை. மூச்சு வாங்குவதையும் விடுவதையும் தவிர வேறுஞாபகங்கள் அற்றுப் போய்க் கிடந்தது. சிரசின் வழி ஆகாயத்திற்குப் பீய்ச்சும் தண்ணீர் மட்டும் அந்தச் சூழ்நிலையிலும் அதன் கம்பீரத்தைக் காட்டிக்கொண்டிருந்தது.
கரைதாண்டி மணல் மேட்டில் சிறிய இலைகளடர்ந்த பேர் தெரியா செடிகள் தூசி அப்பிக் கிடந்தன. அங்கு போய் நிழல் தேடினார்கள். உடம்பில் கால்வாசிக்குக்கிடைத்த செடி நிழல்களில் ஏற்கனவே மக்கள் நின்றும் உட்கார்ந்தும் தூரத்தில் திமிங்கலத்தின் ஓரத்தில் ஓடி ஓடிப் பார்த்துக் கொண்டிருந்த பிள்ளைகளை அதட்டிக் கொண்டிருந்தனர்.
கடல் நீரில் கால் நனைத்தபடி அவன் பிள்ளைகள் படகுக்காகக் காத்திருந்தார்கள். படகு கிடைத்ததும் அவர்களைக் கை தட்டி அழைத்தனர். குறுகி வந்திருந்த வால் பகுதியிலிருந்து தொடங்கிப் பருத்து விரிந்து வயிறு தாண்டிப் போய்க் கொண்டிருந்தது. கடல் மக்கள் எவ்வளவு பேர் இந்தப் பெரிய உருவத்திற்குப் பயந்து வால் சுருட்டி வாய் பொத்தி ஓடி ஒளிந்திருப்பார்கள் என்று பிள்ளைகள் விலாவரியாக விவாதித்துக் கொண்டு வந்தார்கள். படகில் பல ஊர்ப் பிள்ளைகள் இருந்ததால் புதுப் புது விவரங்களைப் பரிமாரிக் கொண்டார்கள்.
அவர்களுக்கு முன் சென்ற படகுக்காரர் படகை நிறுத்தி பிள்ளைகளைத் திமிங்கலத்தின் மீதி ஏற்றி விட்டார். கையில் கோன் ஐஸ்கிரீமுடன் பிள்ளைகள் படு உற்சாகமாய் திமிங்கலத்தின் முதுகிலேறினர். முதுகின் மீது நின்று குதித்தனர். சறுக்கிக் கீழே போய் மேலே வந்தனர். ஐஸ்கிரீமை திமிங்கிலத்தின் கரிய தோலில் தடவினர்.
எவ்வளவு அதட்டியும் அவன் பிள்ளைகள் கேட்பதாயில்லை. அவைகளும் திமிங்கலத்தின் மீதே விளையாண்டார்கள். ஐஸ்கிரீமால் தங்கள் பெயர்களை திமிங்கில முதுகில் இனிஷியலோடு எழுதினார்கள். எருமை மேய்க்கும் சிறுவர்கள் எருமை மீதமர்ந்து பக்கவாட்டில் எருமையின் வயிற்றைத் தட்டி விரைந்து நடக்கும்படி செய்வது போல் இவர்களும் திமிங்கல முதுகில் உட்கார்ந்து வயிற்றுக்கு எட்டிக் கையால் அடித்தார்கள்.
'என்ன வேகமாப் போகமாட்டேங்குதே '
'அதோ தெரியுது பார் இன்னொரு தீவு அங்கு போ ' என்று கத்தினார்கள் திமிங்கலத்திடம்.
கடலில் நீரோட்டம் ஆரம்பமாகியிருந்தது. மேற்கு நோக்கி ஆறுபோல் ஓடிய நீரில் சிவப்புக் கலந்திருந்தது. திமிங்கலத்தின் வயிற்றிலிருந்து ஒழுகிய ரத்தந்தான். படகின் அடிப்பகுதியெல்லாம் சிவப்பாகி இருந்தது. கடல் வாசமும் ரத்த வாசமும் கலந்த கவிச்சி வாடை கரை வரை வீசியது.
திமிங்கல சவாரியை விட்டுப் பிரிய அவர்களுக்கு மனமில்லை. பிள்ளைகளைப் பிடிவாதமாக இறக்க வேண்டியிருந்தது. அவர்கள் கரைக்கு வந்த பின்னும் மேலும் மேலும் ஜனங்கள் பிள்ளைகளோடு கடலில் இறங்கியபடி இருந்தார்கள். பிள்ளைகள் இப்போது ஐம்பது அறுபதுபேர் திமிங்கல முதுகில் உட்கார்ந்து குதித்துக் கொண்டிருந்தார்கள்.
தயிர்சாதம் பொட்டலங்களை வாங்கிக் கொண்டு கரை ஓர சிறு நிழல்கள் தாண்டித் தீவின் உட்புறத்தில் வளர்ந்து கிடந்த தாழம் புதரடியில் உட்கார்ந்து சாப்பிட்டார்கள்.பிள்ளைகள் தீவைச் சுற்றி வரவேண்டும் என்பதில் குறியாக நின்றார்கள். சாப்பிட்ட இலைகளைச் சுருட்டிக்கொண்டு எழுந்தபோது பார்த்தார்கள் பக்கத்துத் தாழம்புதர் நிழலில் பாட்டில் திறந்து வைத்து கமகமவென்று ஒரு கம்பெனி பத்துப் பேரோடு வட்டமாய் உட்கார்ந்து நடந்துகொண்டிருந்தது.
பிள்ளைகளோடு தீவின் கிழக்குப் பக்கமாய் கரையில் கால் நனைத்தபடி வெயிலுக்குள் நடந்தார்கள் திமிங்கலம் பார்க்க வந்த இளைஞர்கள். பலர் அநேக இடங்களில் கடலுக்குள் நீந்தி விளையாடிக் கொண்டிருந்தார்கள். ஒரு சிலர் கடலுக்குள் தூரத்தில் நின்ற பாறைகள் வரை அவற்றின் மேலேறி நின்று அலை அடித்த நீரை உடம்புகளின் மீது வாங்கிக் கொண்டிருந்தார்கள்.
கடல் நுரை ஒன்றை அவன் பிள்ளைகளிடம் எடுத்துக் கொடுத்தான். அவன் சிறுவனாயிருந்தபோது சிலேட்டை அழிக்க அந்தக் காய்ந்த நுரையைப் பயன்படுத்தியதைச் சொன்னபோது பிள்ளைகள் அந்த ஒட்டு நுரையில் நிறைய கால்ஷியம் இருப்பதாகவும் வீட்டில் வளர்க்கும் லவ்பேர்ட்ஸ்க்கு உண்ணக் கொடுக்கலாம் என்று சொல்லி பத்திரப்படுத்தினார்கள். கடல் அலைகளில் அடித்து வந்த பாசிகள் கடற்புல் என்று ஒதுங்கிக் கிடந்தத் தாவரங்களை சுகமாக மிதித்தபடி தீவையே வட்டமடித்துத் திமிங்கலம் கிடந்த இடத்திற்கு வந்தார்கள்.
இன்னும் ஐம்பது அடிதூரம் இருக்கையில் அவர்கள் கண்முன்னே அந்தப் பிரதேசமே நடுங்கும்படி அது நிகழ்ந்து கொண்டிருந்தது. ரத்தம் ஒழுகியவாறும் மூச்சு விடவும் சிரமப்பட்டுக்கொண்டிருந்த திமிங்கலம் சரேலென்று உதறிக்கொண்டு வெகு உயரத்திற்கு எழுந்தது. திமிங்கலத்தின் முதுகில் ஏறி விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகள் சிதறி விழுந்துகரை நோக்கி நீந்தியும் ஓடியும் வந்தார்கள். படகுகள் கவிழ்ந்துவிட்டன. படகுக்காரர்கள் கரை நோக்கி நீந்தினார்கள். படகுகளைப் போட்டுவிட்டு படகுகளில் திமிங்கல முதுகில் உட்கார்ந்து விளையாடிக் கொண்டிருந்த பிள்ளைகளுக்காகக் காத்திருந்த பெற்றோர்கள் பதறியபடி கடலுக்குள் விழுந்து கரைக்கு வந்து கொண்டிருந்தார்கள்.
துணிந்த சில பேர் ஓடி கடலுக்குள் தடுமாறியவர்களைப் பிடித்து இழுத்து வந்தனர். திமிங்கலம் அசைந்தபடி கிடந்தது. எல்லோரும் பீதியடையத் துவங்கினார்கள். அங்குமிங்கும் ஓடினார்கள். திமிங்கலத் தலைவழி பீய்ச்சும் கடல் நீர் அதிக அளவிலிருந்தது. அடுத்த ஒரு தாவலுக்கு அது முயல்வதாகப் பட்டது. பெற்றோர்கள் பிள்ளைகளை வைது கொண்டும் இழுத்துக் கொண்டும் தீவின் மறுபக்கமுள்ள படகுத் துறை நோக்கி ஓடினார்கள். திமிங்கலம் திரும்பி தீவுக்குள் விழுந்தால் 'நாமெல்லாம் சட்னி ' என்று சொல்லிக்கொண்டே ஓடினார் ஒருவர். கால் வலிக்க நடந்த அந்தத் தீவு இப்போது சின்ன நிலத்துண்டாகத் தெரிந்தது இப்போது.
திமிங்கலம் திரும்பி தீவுக்குள் விழுந்தால் தீவு கடலுக்குள் போய்விடும் என்றார் ஒரு பெண். இன்னும் நிறைய ஜனங்களும் பெரு நிலமுமாக இருந்தால் இந்தப் பயம் வந்திருக்காது என்று தோன்றியது அவனுக்கு. கடைசியாய் திமிங்கலத்தின் முதுகில் விளையாடி வெகு நேரம் வரை கீழே இறங்கமாட்டேனென்று பிடிவாதம் பிடித்த இரண்டு பிள்ளைகளை அவற்றின் அப்பா உடம்பு குன்றிப் போகும்படி அடித்தார். அவர்கள் எல்லோரும் முழுக்க நனைந்திருந்தார்கள்.
படகுத் துறையில் கூட்டம் ஒரு கட்டுக்குள் இல்லை. ஒருவரை ஒருவர் தள்ளிக்கொண்டும் மிதித்துக்கொண்டும் படகுகளில் ஏறினார்கள். பட்டுக்காரர்களின் எச்சரிக்கை மிரட்டல் எல்லாவற்றையும் மீறி படகுகளில் உட்கார்ந்துகொண்டு சீக்கிரம் புறப்படும்படி விரட்டினார்கள்.
படகுகள் திரும்பி வருவதற்காகக் காத்திருந்தபோது கடைசியாக வந்தவர்கள் சொன்னார்கள். 'திமிங்கலம் மறுபடி எவ்விப் பாஞ்சு மெல்ல மெல்லக் கடலுக்குள்ளெ போய்க்கிட்டிருக்கு. '
தூரத்தில் ஒருவர் ஓடி வந்துகொண்டிருப்பவர் சொன்னார். 'அதெல்லாம் பொய். அது மெல்ல மெல்ல செத்துக்கிட்டிருக்கு. '
அவள் முகம் வெளிறி நின்றாள். அடித்து பிடித்துப் படகில் ஏற எவ்வளவு முயன்றும் இரண்டாம் முறையாகவும் முடிய வில்லை. இதற்குள் படகுத்துறையில் பெரும் அலைகளைடிக்கத் துவங்கி திமிங்கலம் இந்தப் பக்கமாக வந்து கொண்டிருப்பதாகப் பிள்ளைகளோடு நின்றவர்கள் பயந்தபடி முணங்கத் துவங்கி இஷ்டதெய்வங்களைக் கூப்பிட்டுத் திசை நோக்கி வணங்கினார்கள்.
அவர்கள் ஏறியதுதான் கடைசிப்படகு. தீவு வெறிச்சோடிக் கிடந்தது. அந்த ஒரு குடிசையும் இரண்டு மெலிந்த ஆட்களும் வற்றிய இரண்டு நாய்களும் மட்டும் அந்தப் படகை வெறித்துப் பார்த்துக்கொண்டு நின்றார்கள்.

No comments:
Post a Comment