Search This Blog

Monday, March 31, 2014

எனக்கான வெளி

லறீனா அப்துல் ஹக்








என் வளாகத் தோழி வந்துவிட்டுப் போனாள். நீண்ட நாளைக்குப் பின் பழைய நினைவுகளை மீட்டி மகிழ்ந்தோம். நேரம் போனதே தெரியவில்லை. எவ்வளவோ வற்புறுத்தியும் பகலுணவுக்காகத் தாமதித்துச் செல்ல அவள் உடன்படவில்லை. போகும் போது மன்றாட்டமாய் அவள் குரல், 'கட்டாயம் வீட்டுக்கு வா. ஓரிரு நாட்கள் தங்கிப்போகவே வா, காலில் சுடுதண்ணி கொட்டிக்கொண்டது போல அரக்கப்பரக்க வராதே.' 'அண்ணா, உங்களுக்கு நேரமில்லாட்டில் அவளை மட்டுமாவது அனுப்பி வைங்களேன்' - இது என் கணவரிடம். அவர் புன்னகையோடு தலையசைக்கிறார்.
அன்றிரவு ஜன்னலோரம் நின்றபடி அகன்று விரிந்திருந்த வான்வெளியைப் பார்க்கின்றேன். என்வசம் சிறகுகள் இருக்கின்றன. கூடவே முழுமையான சுதந்திரமும். ஆனாலும் பறப்பதற்கான எனது 'வெளி' வரையறுக்கப்பட்டிருப்பதாக உணர்தலை என்னால் தவிர்க்க முடியவில்லை. எனக்கான 'வெளி'யை வரையறுத்தது யார்?
விழிகளைத் திருப்பிப் பார்க்கின்றேன். முன்னறையில் மடிக் கணினித் திரையில் கண்களைப் பதித்தபடி ஆழ்ந்த சிந்தனையில் என் கணவர். கிட்டத்தட்ட ஒருவகைத் தவநிலையில் அவர். மிக மெலிந்த தோற்றம். அந்தக் கண்களில் தூக்கக் கலக்கத்தை மீறிய கூர்மை. 'கண்மணி, உனக்குப் போகணும் போல இருந்தா போய் ரெண்டுநாள் தங்கிட்டு வாடா. பிள்ளைகளை நான் சமாளிக்கிறேன்' இரவுணவின்போது பரிவோடு ஒலித்த அவர் குரல் மீண்டும் ஒருமுறை என் காதுக்குள் ஒலிப்பதாய் உணர்கிறேன். எனக்குள் மெல்ல ஏதோ புரிவது போல்... எனக்கான வெளியை நானேதான் வரையறுத்துக் கொண்டிருக்கிறேனா? இது... இது... எப்படி சாத்தியமானது? மனசு என்னைக் குடைந்துகொண்டே இருந்தது.

அவருக்குப் புத்தளத்தில் வேலை. இங்கிருந்து மூன்று பஸ் மாறிப் போகவேண்டும். அதிகாலை நாலரை மணிக்கு வீட்டிலிருந்து கிளம்பினாரென்றால், வீடு திரும்ப எப்படியும் இரவு பத்து மணியாகிவிடும். அங்கே அவருக்குத் தங்குமிட வசதி உண்டுதான். எனினும், அவரால் என்னையும் பிள்ளைகளையும் பிரிந்திருக்க முடியவில்லை. எங்களுக்கும்தான். மாலையில் நான் அலுவலகத்திலிருந்து வீடுவரும்வரை வழிபார்த்திருந்து ஓடிவந்து காலைக் கட்டிக்கொள்ளும் பிள்ளைகளின் குதூகலம்... இரவில் அலுத்துக் களைத்து வீடுவந்துசேரும் என்னவர் முகத்தில் எங்களைக் கண்டதும் தோன்றும் மலர்ச்சி... இரவுணவின்போது எல்லோருமாய் அமர்ந்து சிரித்துப் பேசியபடி உணவருந்துகையில் ஏற்படும் கலகலப்பு... பிள்ளைகள் உறங்கியபின், என்னதான் களைப்பாக இருப்பினும் நான் கண்ணயரும் வரை என் கூந்தல் கோதிவிடும் என் இனியவரின் கைவிரல்கள் தரும் இதம்... என் மனசின் மெல்லிய பயங்கள், சின்னச் சின்ன கலக்கங்களைத் தட்டுத் தடுமாறி வார்த்தைகளால் வெளிப்படுத்தும் போதெல்லாம் வேலைப் பளுவுக்கு மத்தியிலும் செவிதாழ்த்திக் கேட்டு, என்னைத் தேற்றி 'நிமிர' வைக்கும் அந்தக் கனிவும் காதலும்... சின்னதாய் ஒரு தலைவலி வந்தாலும் துடித்துப் பதறும் அந்த ஆழ்ந்த நேசமும் பரிவும்... இவைதாம் நான் சிறகடித்துப் பறக்கவிழையும் எனக்கான வான்வெளியை நிர்ணயித்தனவா? எனக்கு அப்படித்தான் தோன்றுகின்றது.

'கண்மணி, என்னம்மா கடும் யோசனை?' என்னவரின் பரிவான குரல் மிக மிக அருகில் ஒலிக்கவே, விழிகள் பனிக்க அவரை ஏறிட்டேன். 'உங்களையெல்லாம் விட்டுட்டு எனக்கு மட்டும் அங்கே போகேலாது' –என் குரல் ஏன் இப்படித் தளுதளுக்கிறது?
'சரி, அதுக்கேண்டா இப்படிக் கலங்குறாய்? எனக்கு விளங்குது. என் கண்மணிக்கு அங்கே போகவும் வேணும். போகவும் மனசில்லை, அப்படித்தானே?' என் தலை மட்டும் அசைந்தது. அவர் அப்படியே தன் மார்போடு என்னை அணைத்துக் கொள்கிறார். எவ்வளவு இதமாக இருக்கிறது! இப்படியே... இந்தக் கணமே செத்துப்போய்விட்டாலும் பரவாயில்லை என்று தோன்றுகிறது, எனக்கு. எவ்வளவு காதலும் கனிவும் இவருக்கு என்மீது! அப்படியே வானத்தில் பறப்பதான பெருமித உணர்வு. அடுத்த கணத்தில்... 'யார் இது? ஏன் இப்படி என் தோளைப் பற்றி இவ்வளவு முரட்டுத்தனமாக உலுக்குகிறார்கள்? ஏன், என்ன நடந்துவிட்டது?' நான் அலங்க மலங்க விழிக்கிறேன்.

'ஏய், எழும்பு சீக்கிரம்! சின்னவனுக்கு லூஸ் மோஷனோ என்னவோ! கையோட காலோட பண்ணிக்கிட்டு நிற்கிறான், சீக்கிரமா அவனைக் கழுவி, அந்த இடத்தைக் க்ளீன் பண்ணிடு. ! சொல்ல மறந்துட்டேன், என்னோட அக்காவும் மச்சானும் இன்னைக்கி நம்ம வீட்டுக்கு விருந்துக்கு வர்றாங்களாம். ஸ்பெஷலா ஏதாவது பண்ணிவை' அவர் அடுக்கிக்கொண்டே முன்னறைப் பக்கம் நகர்ந்தார். படுக்கையிலிருந்து மெல்ல எழுந்திருக்க முனைந்த போதுதான் மீண்டும் அது! 'சுரீர்' என்று அடிவயிற்றுக்குள்ளிருந்து அந்தப் பாழாய்ப் போன வயிற்று வலி தன் இருப்பை எனக்கு உணர்த்திற்று. '!' என்று கத்தி அழவேண்டும் போல ஒரு வேதனை. நேரே நிமிர்ந்து நிற்கவும் முடியவில்லை. மீண்டும் தலையணையை வயிற்றில் இறுக்கிக்கொண்டு கைகால்களைக் குறுக்கிக்கொண்டு கட்டிலில் குப்புறக் கிடந்தேன். பற்கள் உதட்டை இறுகக் கடித்துக்கொள்ள...கண்களில் தாரை தாரையாக நீர் வழிந்தது. இந்தப் பாழும் வயிற்றுவலிக்கு இதுவரை பார்க்காத வைத்தியமில்லை. 'கல்யாணம் கட்டி ரெண்டு பிள்ளைகளைப் பெற்றால் எல்லாம் தானாகச் சரிவந்துடும்' என்றுதான் வைத்தியர்கள் சொன்னார்கள். இதோ கல்யாணம் முடிந்து இரண்டு பிள்ளைகளைப் பெற்ற பின்னரும் மாதமொருமுறை விடாது வதைக்கும் இந்தக் கொடிய வயிற்றுவலி. மீண்டும் 'சுரீர்!'. விலா என்புகளைக் குடைந்துகொண்டு அடிவயிற்றில் சம்மட்டி அடியாய் அந்த வலி... 'செத்துப் போய்விட்டால் எவ்வளவு நல்லது!'.

'ஏய், என்ன நீ? இன்னும் எழும்பாமல் கட்டிலில் புரண்டுகொண்டு என்ன பண்ணுறாய்? எல்லாம் சம்பாதிக்கிற திமிர்! வேறென்ன? நான் பாட்டுக்குக் கத்திக்கிட்டிருக்கேன், நீபாட்டுக்கு மகாராணி மாதிரி படுத்திட்டிருந்தா என்ன அர்த்தம், ?' அவர் காட்டுக்கத்தல் கத்தினார்.
'என்னங்க, கொஞ்சம் கூட புரிஞ்சிக்க மாட்டீங்களா? எனக்கு உடம்புக்கு முடியல்லைன்னு தெரியும்தானே? வயித்துவலி...அம்மோவ்!'
'ஆமாமா, இன்னைக்கு எங்கக்கா வர்றான்னதும் உனக்கு எல்லா வலியும் வரும் என்று எனக்கும் தெரியும்! சும்மா மாய்மாலம் காட்டாமல், எழும்பி சின்னவனைக் கழுவி விட்டுட்டு, சமையலை ஆரம்பி. ஏதோ உலகத்துலயே இவள் ஒருத்திதான் பொம்பிளையாப் பொறந்துட்டாவாம்! மற்றப் பொம்பிளையெல்லாம் இப்படி வயித்துவலின்னு இவளை மாதிரி கூப்பாடு போட்டுட்டா இருக்காங்க? என்னவோ இவளுக்கு மட்டும்தான்...' அவர் தயைதாட்சண்ணியமின்றிச் சொல்லிவிட்டுப் போனார்.
இதற்கு மேலும் எழுந்திருக்காவிட்டால் நிலைமை ரசாபாசமாகிவிடும் என்ற அச்சத்தில் ஒருவாறு பலத்தையெல்லாம் திரட்டி மெல்ல மெல்ல சுவரைப் பிடித்துக்கொண்டு எழுந்து நிற்கின்றேன். தலைசுற்றுவது போல் இருந்தது. பக்கத்து மேசை மேலிருந்த தம்ளரில் நீரை வார்த்துக் குடித்தேன். குளிர்ந்த நீர் தொண்டையை நனைத்துக்கொண்டு மெல்ல உள்ளிறங்கியதில் சற்று ஆசுவாசமாய் இருந்தது.

பெண்ணாகப் பிறந்துவிட்டதன் பலனை மாதந்தோறும் நான் அனுபவிக்கின்றேன். கூடவே இருந்து இத்தனை வருடம் வாழ்ந்தவனுக்கு மனைவியுடைய வலியும் கண்ணீரும் கொஞ்சம்கூட உறுத்துவதே இல்லையா? 'ஆண்' என்பதாலேயே இதயம் இப்படி இறுகித்தான் போயிருக்குமா? குடித்துவிட்டு வந்து அம்மாவை அடித்தும் உதைத்தும் கொடுமைப்படுத்திய அப்பாவோடு ஒப்பிடுகையில் இவர் ஆயிரம் மடங்கு மேலானவர்தான். ஆனால், அவருக்கு ஒன்றென்றால் துடித்துப்போய் பணிவிடை செய்பவளுக்கு மாதந்தோறும் ஏற்படும் இந்தத் தாளமுடியாத வேதனை நிமிஷங்களின்போது குறைந்தபட்சம் இதமாக நாலு வார்த்தைகள்... ஆறுதலாகவேனும்... ச்சே!
அவன் மெல்ல அவளருகே நெருங்கி வருகின்றான். கண்களில் அவள் இதற்கு முன்பு பார்த்திராத பரிவு. முதுகை மெல்லத் தடவி விடுகின்றான்.

'கண்மணி, என்னம்மா? ரொம்ப வலிக்குதா? மாத்திரை ஏதாவது போட்டுப் பாரேன்...'
அவளுக்கு வலி சற்றே குறைந்தது போலிருந்தது. மெல்லப் புன்னகைக்க முடிகின்றது. ! இந்தக் கனிவும் காதலும்... இன்னும் என்ன சந்தேகம்? எல்லாம் வெறும் கனவு! மனசு முழுக்க நிறைந்துள்ள ஏக்கமும் தவிப்பும் தன்னையறியாமலேயே கனவின் வடிவில்... 'ச்சே! நின்றுகொண்டே கனவு காணத் தொடங்கிவிட்டேனா?' என்னைச் சுதாகரித்துக்கொண்டு குளியலறையை நோக்கித் தள்ளாடியபடி நடக்கின்றேன்.
'மங்கையராய்ப் பிறப்பதற்கே மாதவம் செய்திருக்க வேண்டும்' என்று பாடினானாமே ஒரு கவிஞன்! அவன் தன் மனைவிக்கு மாதவிடாய் வந்துள்ள நேரத்தில் அவள்படும் பாட்டைக் கண்டிருந்தால் இப்படிப் பாடியிருப்பானா? எனக்கு வலியையும் மீறிக்கொண்டு சிரிப்பு வந்தது.

என்னதான் படித்திருந்தாலும் நல்லதொரு தொழில் பார்த்துக் கைநிறையச் சம்பாதித்தாலும் இந்த மாதிரியான சமயங்களில்... உயிரைப் பிழிவதான வேதனையில் தவிக்கும் தருணங்களில் இதமான நாலு வார்த்தைக்காய்... கனிவான ஒரு வருடலுக்காய்... கருணையான ஒரு பார்வைக்காய் ஏங்கித் தவிக்கும் ஒரு மனசும், அதில் மெல்லிய உணர்வுகளும் உள்ளனவே! அதை ஏன் என் கணவரால் புரிந்துகொள்ளவே முடியவில்லை? இன்பத்திலும் துன்பத்திலும் இணைந்திருப்போம் என்ற பரஸ்பர வாக்குறுதியில்... நம்பிக்கையில் காதலித்து மணந்த நமக்கிடையில் ஏன் இந்தக் கண்ணுக்குத் தெரியாத இடைவெளி? வலிகளும் வேதனையும் பெண்ணுக்கு வரவே கூடாதா? வந்தாலும் அவள் அவற்றை உணர்ந்து, உணர்த்துவது தப்புத்தானா? அல்லது... என்னதான் வேதனையில் துடித்துத் துவண்டாலும் அவள் அவற்றை வெளிக்காட்டாது தனித்துச் சகித்தபடி தன் அன்றாடப் பணிகளைச் செய்துதான் ஆகவேண்டுமா? கொஞ்சம் கால் வலி வந்துவிட்டால் 'ஆய்...ஊய்...! அந்தத் தைலத்தை எடுத்து என் காலில் தேய்ச்சுவிடு...இதமாய்ப் பிடிச்சுவிடு' என்றெல்லாம் கூப்பாடு போட்டு அவளிடம் பணிவிடையைக் கேட்டுப்பெறும் அவள் கணவனுக்கு, 'வலி' என்பது பெண்ணுக்கும் பொதுவானதுதான் என்பதோ, அதனை அவள் வெளிக்காட்டுவது இயல்பு என்பதோ ஏன் புரியவில்லை? மனைவி என்பதற்காக மேலதிகக் கரிசனையெல்லாம் தேவையில்லை. கூடவே உள்ள ஓர் 'உயிரி' என்றாவது... குறைந்தபட்ச மனிதாபிமானத்தோடு அன்பாக ஒரு வார்த்தைகூறித் தேற்றவேண்டும் என்றுகூடத் தோன்றாத அவனது மனசு... இவ்வளவுக்கும் அவன் நாய்க்குட்டிக்குக் காலில் சற்று அடிபட்டபோது துடித்துப் போனவன்... ஒருநாள் முழுக்க சாப்பிடாமல் 'உம்' என்று முகத்தைத் தூக்கிவைத்துக் கொண்டிருந்தவன்... அவனைப் பொறுத்தவரை 'அவளின் வலி' அந்த நாய்க்குட்டியின் காயத்தின் அளவுக்குக்கூட பெறுமானமற்றுப் போய்விட்டதா என்ன?
'பெண்ணென்றால் பேயும் இரங்குமென்பார்- கண்மணியே!
பேய்கள் இரங்கிடினும் மண்ணுலகில் பெண்மணந்த
புருஷன் இரங்குவனோ? நீ வலியில் துடித்திருக்க
பரிவுடன் தேற்றுவனோ? இன்சொல்லால் ஆற்றுவனோ?...'
எப்போதோ வளாகத்தில் இடம்பெற்ற வில்லுப்பாட்டில் கேட்ட வரிகள் காதோரம் ஒலிப்பதான பிரமை. தலையைச் சிலுப்பி தறிகெட்ட குதிரை போல் தாறுமாறாய் ஓடிக்கொண்டிருக்கும் நினைவுகளை உதறியெறிய முயற்சிக்கின்றேன். சின்ன மகனைக் கழுவி, அந்த இடத்தைச் சுத்தப்படுத்தினேன். சமையலறைக்கு விரைந்து குளிர்சாதனப் பெட்டியிலிருந்த கோழிப் பார்சலை எடுத்து வெந்நீரில் ஊறப்போட்டேன். மீண்டும் அடிவயிற்றில் 'சுரீர்!' என்று அதே வலி 'நான் இன்னும் உனக்குள் தான் இருக்கிறேன்' என்பதை எனக்கு நினைவூட்டியதுபழைய சுடிதாரின் துப்பட்டா ஒன்றை எடுத்து வயிற்றைச் சுற்றி இறுக்கிக் கட்டிக்கொண்டேன். கைகள் பரபரவென்று இயங்கத் தொடங்கின. பிரியாணி செய்தாயிற்று. வந்தவர்கள் ஒருகை பார்த்தனர்.

'ஆனாலும் மதினியின் கைப் பக்குவமே தனிதான்டா!' அவனின் அக்கா ஐஸ்வைத்தாள்.
'ஐயோ, மதினி உங்களுக்கு 'பீரியட்' வருத்தமா? தெரிந்திருந்தால் நானே உங்களுக்கும் சேர்த்து சமைச்சு எடுத்துட்டு வந்திருப்பேனே!'
'அதெல்லாம் என்ன பெரிய விஷயம்! நீ சும்மா கவலைப்படாதேக்கா. கண்மணிக்கு அதெல்லாம் ஒரு பொருட்டே இல்லை. எவ்வளவு காலத்துக்குப் பிறகு நீ நம்ம வீட்டுக்கு வந்திருக்கே? உனக்கும் மச்சானுக்கும் ஒரு நல்ல சாப்பாடு தராம நான் அனுப்பிடுவேனா, என்ன?' என்றவாறு கோழிக்காலை சுவைக்கிறான்.

எனது தொண்டைக்குள் ஏதோ ஒன்று வந்து அடைப்பதான உணர்வு. மனசின் மூலைக்குள் எழுந்த வலி உயிரின் வேர்வரை பரவுவதுபோல்... கண்களின் அணைகள் எந்தக் கணத்திலும் உடைந்து விடலாம். பிறகு இன்னும் அசிங்கமாய்ப் போய்விடும்.

'என்ன மதினி, எழும்பிப் போறீங்க? நீங்க சாப்பிடல்லையா? வாங்களேன்!'
'இல்லை... அவளுக்கு வாந்திக் குணமாயிருக்கும். இங்கே உட்கார்ந்து சாப்பிட்டு வாந்தி எடுத்துவச்சிட்டா, நாங்க ஒருத்தரும் நிம்மதியா சாப்பிடேலாமப் போயிடும். அதுதான் அவ போறா. அதெல்லாம் அவ பின்னாடி மெல்ல சாப்பிட்டுக்குவா. மச்சான் இன்னும் கொஞ்சம்...' அவன் வந்தவர்களை உற்சாகமாக உபசரிக்கலானான்.

நான் எழுந்துபோய் ஜன்னலருகில் நின்றபடி வெளியே வெறித்துப் பார்த்துக் கொண்டிருந்தேன். வானம் அகன்று பரந்திருந்தது எப்போதும் போல! அந்த மேகக்கூட்டத்தின் இடையே என்னுடைய குழந்தைகளின் கள்ளங்கபடமற்ற முகங்கள் பளிச்சிடுகின்றன. போதையிலேயே ஈரல் கருகி அற்ப ஆயுளில் போய்ச் சேர்ந்துவிட்ட அப்பா. அவரது கொடுமைகளால் நைந்து நொடிந்து போனாலும் மகளை நிம்மதியாகக் 'கரைசேர்த்து' விட்ட ஆசுவாசத்துடன் அம்மா. இன்னும்... மேகக்கூட்டம் கலைந்து நகர்ந்துசென்றுவிட்டது. நிர்மலமான வான்வெளி கம்பீரமாய் விரிந்து வியாபித்து... சிறகுகளை நான் இன்னும் இழந்துவிடவில்லைதான். ஆனால்... எனக்கான 'வெளி' மட்டும் கண்ணுக்குத் தெரியாத நூல்வேலிகளால் வரையறுக்கப்பட்டு... யாரால்? விடை எனக்குத் தெரியவில்லை. ஒரே குழப்பமாக இருந்தது.

'அம்மா, தம்பி என் கையைக் கடிச்சிவச்சிட்டான்... அம்...ம்...மா.. ...' அழுதுகொண்டுவந்த மகளை இழுத்து அணைத்துக் கொள்கின்றேன். நாளை பருவம் மலர்ந்தபின் இவளுக்கும் எனக்குப் போலவே அந்த வலி...? அவளுடைய வான் வெளியும்  வரையறைகளுடன்...?
'அம்மா நீங்க ஏன் அழுறீங்க?' மகள் என் கண்ணீரைத் தன் பிஞ்சுக் கரங்களால் துடைக்க முயல்கிறாள். ஆனால்... என் கண்ணீர் மட்டும் கட்டுடைத்த வெள்ளமாய்... கரைபுரண்டு....

No comments:

Post a Comment