Search This Blog

Wednesday, December 18, 2013

நற்கிள்ளி (வரலாறு).


நற்கிள்ளி (வரலாறு).
================

ஊர் எனப்படுவது உறையூர் (தமிழகத்தில் உள்ள பழைமையான ஊர்களில் ஒன்று) ஆகும். இது, சோழ அரசர்களுடைய தலைநகரங்களுள் ஒன்று; மிகவும் பழையது; அறம் பிறழா அவையை உடையது; நீடு புகழ் பெற்றது.

இவ்வூரைச் சுற்றி மலை உண்டு; மதில் உண்டு, காவற்காடு உண்டு; வளம் நிறைந்த வயல்கள் உண்டு. மேலும், இவ்வூர்க் கோழி ஒன்று யானை யானை வென்ற நில மாண்பு உடையது. அதனால், கோழியூர் என்றும் இதனைக் கூறுவர்.

இத்தகைய வளம் மிக்க நகரில் இருந்து சோழப் பெருநாட்டை ஆண்ட அரசர்கள் பலர் ஆவர். அவர்களுள் ஒருவன் தித்தன் என்பவன்.

இவன் ஒரு பெரு ங்கொடைவள்ளல்; பெரும் படை உடையவன்; வீரன்; குடிமக்கள் குறை தவிர்க்கும் கொற்றவன்; மற்போர் புரிவதில் வல்லவன். இவருக்கு மக்கள் இருவர் இருந்தனர். மூத்தவள் ஐயை. அவளை அறிந்த அளவு அவன் தந்தையாகிய தித்தனை மக்கள் அறிந்திலர்.

தந்தையைச் சுட்டி மக்களை அறிமுகம் செய்து வைப்பதே உலகியல் மரபாகும். ஆனால், அதற்கு மாறாக, மகளைக் காட்டித் தந்தையை அறிமுகம் செய்து வைக்க வேண்டிய நிலை, ஐயை அழகால் ஏற்பட்டது. அதனால், அனைவரும், "ஐயை தந்தை தித்தன்" என அவனை அழைத்தனர்.

ஐயை அத்துணை உயர்ந்தவள்; சிறந்தவள்; பேரழகு மிக்கவள்; கவின் நிறை காட்சி உடையவள். இளையவன் போர்வைக் கோப்பெருநற்கிள்ளி.

பெருநற்கிள்ளி கவின் மிகு வனப்புடையவன்; பேராண்மை நிறைந்த இளைஞன்; மற்போர் புரிவதில் மாவீரன்; விற்போர் புரிவதிலும் வீரம்; நல்ல உடற்கட்டும் உடையவன்.

தித்தனுக்கு யாது காரணத்தாலோ தன் மகன் நற்கிள்ளி மீது வெறுப்பு உண்டாயிற்று. அதனால், இருவரிடையேயும் ஒற்றுமை குறைந்தது; வேற்றுமை விரிந்தது. பகைமை வளர்ந்தது.

தந்தையாரோடு பகை கொண்டான் நற்கிள்ளி. ஆயினும் அவரோடு போரிட்டு அவரை அழிக்க எண்ணினான் இல்லை. தந்தையைப் பிரிந்தான். நாட்டை விட்டு அகன்றான்; தொண்டை நாட்டின் ஒரு பகுதியாக விளங்கிய முக்காவல் என்னும் நாட்டைச் சேர்ந்த ஆமூரை அடைந்தான்; அங்கேயே தனித்து வாழ்ந்திருந்தான்.

ஆமூர் மற்போர் புரியும் மல்லர்க்கும் மற்போருக்கும் பேர் பெற்றது. அழகான அகழிகையும் அரிய காவலையும் உடையது.

அவ்வூரில் மல்லருள் சிறந்தவன் ஒருவன் இருந்தான். அவன் தனக்கு இணையாகப் போர் புரியக் கூடிய மல்லர் ஒருவரும் இக் கடல் சூழ் உலகமெங்கணும் இல்லை என்ற தருக்குடன் விளங்கினான்.

உள்ளபடியே அவன் புரிந்த மற்போர் அனைத்திலும் நிழல் போல் வெற்றி மகளே அவனைத் தொடர்ந்து திரிந்தாளே தவிர, தோல்வி மகள் அவனைத் தொட்டது கூட இல்லை. இத்தகைய மல்லனின் ஆற்றற் சிறப்பை அறிந்தனர் அவ்வூர் மக்கள். அதனால், அவனை, "ஆமூர் மல்லன்" என்று பெயரிட்டு அழைத்தனர்; பலவாறு புகழ்ந்தனர்.

ஆமூரை அடைந்த நற்கிள்ளி, அங்கு மல்லனொருவன் செருக்குற்றுத் திரிவதை கேள்விப்பட்டான்; அவன் மீது பகை கொண்டான்; உடனே, அவனது இருப்பிடம் தேடிச் சென்றான்; அவனைத் தன்னுடன் போர் புரிய வருமாறு அழைத்தான். இதைக் கேட்ட மல்லன் எள்ளல் நகை புரிந்தான்; இகழ்ந்து பேசினான்.

அவனுடைய பேச்சும் நகைப்பும் பெருநற்கிள்ளிக்கு உணர்ச்சியை எழுப்பின; கிளர்ச்சியை ஊட்டின. கண்கள் சிவந்து கோவைப்பழம் போல் ஆயின.

"இவற்றால் எல்லாம் உன் பெருமை விளங்கமாட்டா! நீ வல்லவனானால் வா, என்னுடன் போர் புரிய; இல்லையானால் உனக்குப் பேச்செதற்கு? நகைப்பெதற்கு? என்னைப் பணிந்து போ! அதுவே மேலானது" என்று வீர முழக்கமிட்டான் போர்வைக் கோப்பெரு நற்கிள்ளி.

பெருநற்கிள்ளி பேராண்மை யுடையவன் எனப் பலராலும் பாராட்டப்படுவதை முன்னரே ஆமூர் மல்லன் கேட்டிருந்தான். அவ்வாறு பாராட்டப்படுவதைக் கேட்கக் கேட்க அவன் மனம் பொறுமை இழந்தது. அதனால், அவன் மீது பகை கொண்டு அவனை அழிக்க ஏற்ற சமயத்தை எதிர்பார்த்திருந்தான். அதனால், அவன் மீது புலியெனப் பாய்ந்துவிட்டான் மல்லன்.

மல்லன் பாய்ந்ததைப் பெருநற்கிள்ளி வெறுமே பார்த்துக் கொண்டா இருப்பான்? அவனும் சிங்கமெனச் சீறி எழுந்தான். இருவரும் மற்போர் புரியலாயினர்.

ஊர் மக்கள் எல்லோரும் மற்போர் காண வெள்ளம் போல் ஒன்று திரண்டு கூடினர். ஒழுங்குற நின்று வேடிக்கை பார்த்தனர்.

இருவரும் போர்த்திறங்கள் பலவற்றை வரிசை வரிசையாகக் காட்டிப் போர் புரிந்தனர்; போர் நுணுக்கங்கள் பல வெளிப்படலாயின.

நற்கிள்ளி வேறு நாட்டவன்; முக்காவல் நாட்டினையோ, ஆமூரினையோ சேராதவன். ஆதலால், மக்கள் அவனது இயல்பும், தகுதியும், திறமையும் தெரியாது வியந்தனர்; போர் முடிவு பற்றிப் பல்வேறு கருத்துக்களை வெளியிட்டனர்.

உள்ளபடியே வெற்றி தோல்வி இன்னாருக்குத் தான் என்பதை உறுதிபடுத்த முடியாத அளவுக்குப் போரும் மிக மும்முரமாக நடந்து கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல மல்லன் சோர்வுறலானான். கிள்ளியின் கை ஓங்கியது. ஆற்றல் பெற்ற பெருநற்கிள்ளி ஆமூர் மல்லன் மீது பாய்ந்தான்; அவனது மார்பின் மீது முழங்கால் ஒன்றினை மண்டியிட்டு வைத்து ஊன்றி அழுத்தினான்; மற்றொரு காலை அவன் காலில் வைத்து, அவனைச் சிறிதும் அசைய இயலாவண்ணம் அமுக்கினான். மல்லன் ஆற்றல் குன்றினான்.

மல்லனுடைய காலும் தலையும் வேறு வேறு ஆயின! அவற்றை தூக்கி வீசி எறிந்தான். எல்லோரும் பெருமுழக்கம் செய்தனர். வெற்றி நற்கிள்ளிக்கே என ஆயிற்று. அவனை மக்கள் புகழ்ந்து பாராட்டினர். அதில் புலவர் ஒருவர் இருந்தார். அவர் பெயர் சாத்தந்தையார் என்பது. அவரும் ஆமூர் மக்களைப் போலவே பெருநற்கிள்ளியின் போர் வல்லமையை வியந்து பாராட்டினார்.

(புறம்-80)

ஓர் அழகான உவமையின் வழியாகக் கிள்ளியினுடைய கைகளின் விரைவினைப் படம் பிடித்துக் காட்டினார்.

"இன்கடுங் கள்ளின் ஆமூர் ஆங்கண்
மைந்துடை மல்லன் மதவலி முருக்கி
ஒருகால் மார்பொதுங் கின்றே; ஒருகால்
வருதார் தாங்கிப் பின்னொதுங் கின்றே;
நல்கினும் நல்கான் ஆயினும், வெல்போர்ப்

போர் அருந் தித்தன் காண்கதில் அம்ம
பசித்துப் பணைமுயலும் யானை போல
இருதலை ஒசிய எற்றிக்
களம்புகும் மல்லற் கடந்துஅடு நிலையே"

இதன் பொருள்:-

இனிமையும் புளிப்பும் கூடிய (அழன்ற ) கள்ளையுடைய ஆமூரில் வலிமை பொருந்திய மற்போர் வீரன் ஒருவனின் மிக்க வலிமையை அழித்து, ஒரு கால் அவன் மார்பிலும், மற்றொரு கால் அவன் சூழ்ச்சியைத் தடுக்கும் வகையில் அவன் முதுகிலும் வைத்துப் பசியோடு மூங்கிலைத் தின்ன முயலும் யானையைப்போல் தலையும் காலும் ஆகிய இரண்டும் முறிய மோதிப் போரவையில் மற்போர் புரிய வந்த மல்லனை எதிர்த்து நின்று அவனைக் கொன்ற நிலையை வெல்லும் போரினையுடைய பொருதற்கரிய இவன் தந்தையாகிய தித்தன் விரும்பியோ அல்லது விரும்பாமலோ காண்பானாக.

இதுவே சாத்தந்தையார் படம் பிடித்துக் காட்டிய கவிதை ஓவியம் ஆகும். இதனைக் கேள்விப் பட்ட மக்களிற் பலர், புலவரின் கவிதைத் திறத்தையும் உவமை அழகையும் பாராட்டி மகிழ்ந்தனர். வெற்றி பெற்ற பெருநற்கிள்ளி புலியைக் கொன்ற சிங்கம் போல காட்சியளித்தான்.

பிறகு பெருநற்கிள்ளி ஆமூரை விட்டு உறையூரை அடைந்தான். அந் நகர் வணிகன் மகன் ஒருத்தியை, நக்கண்ணை என்னும் பெயருடைய நல்லாளை, பல்லோர் வாழ்த்த வாழ்க்கைத் துணைவியாக ஏற்றுக் கொண்டான்.

பின்னர்த் தந்தையில்லாக் குறையைத் தவிர்த்து, மக்கள் பாராட்டச் சோழ நாட்டை ஆண்டு வரலாயினான்.

No comments:

Post a Comment