Search This Blog

Monday, November 11, 2013

அல்சர் அவதியா..? சித்த மருத்துவத்தில் சிறப்பான தீர்வு!

இரைப்பையில் சுரக்கும் அமிலங்கள்தான், நாம் உண்ணும் உணவின் செரிமானத்துக்கு உதவுகின்றன. இரைப்பை மற்றும் சிறுகுடலின் உட்பகுதியை மூடி உள்ள சளிச்சவ்வுகள் இந்த அமிலங்களின் தாக்குதலில் இருந்து இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதுகாக்கின்றன.
இந்த சளிச்சவ்வுகள் சரிவர செயல்படாதபோது அல்லது சளிச்சவ்வுகளின் தொடர்ச்சியில் இடைவெளி (breakdown)ஏற்படும்போது அமிலமானது இரைப்பை மற்றும் சிறுகுடலைப் பாதித்து சிவந்து வீக்கம் மற்றும் வலியுடன் கூடிய புண்ணை (ulcer) ஏற்படுத்துகிறது. புண் தீவிரமடையும்போது அது இரைப்பை மற்றும் சிறுகுடலில் துளையை ஏற்படுத்தி ரத்தக் கசிவையும் ஏற்படுத்துகிறது.

காரணங்கள்: அல்சரை உண்டாக்குவதில் ஹெலிகோபேக்டர் பைலோரி என்ற கிருமி முக்கியப் பங்கு வகிக்கிறது. தவிர, காரம், மசாலா நிறைந்த உணவுகளாலும் மதுபானம் அருந்துதல், புகையிலைப் பழக்கம், புகைப்பிடித்தல் மற்றும் கணையத்தில் ஏற்படும் கட்டியினாலும், மருத்துவக் கதிரியக்கத்திற்கு உட்படுத்துவதாலும், மனக்கவலை மற்றும் பரபரப்பினாலும் வயிற்றுப் புண் ஏற்படுகிறது.

அறிகுறிகள்:

குமட்டல், வயிற்றின் மேல் பகுதியில் வலி, உணவு சாப்பிட்ட ஓரிரு மணி நேரத்திற்குள் பசி, நோய் தீவிரமடையும்போது ரத்தம் கலந்த அல்லது கறுப்பு நிறத்தில் மலம் கழித்தல், நெஞ்சு வலி, ரத்த வாந்தி, சோர்வு, உடல் எடை குறைதல் காணப்படும்.

சித்த மருத்துவத்தில் எளிய தீர்வுகள்:

அரை ஸ்பூன் சுக்குத்தூளைக் கரும்புச்சாற்றில் கலந்து காலை வேளையில் அருந்தலாம்.

ஏலம், அதிமதுரம், நெல்லி வற்றல், சந்தனம் வால்மிளகு இவற்றைச் சம அளவு எடுத்துப் பொடித்து, அதைப்போல இரண்டு பங்கு சர்க்கரை சேர்த்து, 2 கிராம் வீதம் 3 வேளை உண்ணலாம்.

சீரகம், அதிமதுரம், தென்னம் பாளைப்பூ, சர்க்கரை சம அளவு எடுத்துப் பால்விட்டு அரைத்து, சிறு எலுமிச்சை அளவு எடுத்துப் பாலில் கலந்து பருகலாம்.

கறிவேப்பிலை, சீரகம், மிளகு, மஞ்சள், திப்பிலி, சுக்கு சம அளவு எடுத்துப் பொடித்து அதில் அரை ஸ்பூன் எடுத்து மோரில் கலந்து பருகலாம்.

வால்மிளகைப் பொடித்து அரை ஸ்பூன் எடுத்துப் பாலில் கலந்து உண்ணலாம்.

பிரண்டையின் இளந்தண்டை இலையுடன் உலர்த்திப் பொடித்து சம அளவு சுக்குத் தூள், மிளகுத் தூள் கலந்து அதில் அரை ஸ்பூன் எடுத்து வெண்ணெயில் கலந்து உண்ணலாம்.

கைப்பிடி அளவு வெண்நொச்சி இலையில் கல் உப்பைப் போட்டு வறுத்து, அடுப்பை அணைத்துவிட்டு சூடு இருக்கும்போதே அதில் மோரை ஊற்றி, தெளிவை இறுத்துப் பருகலாம்.

மணத்தக்காளிக் கீரையைப் பாசிப் பயிறு, நெய் சேர்த்துச் சமைத்து உண்ணலாம்.

பெருஞ்சீரகம், சுக்கு, மிளகு திப்பிலி, சம அளவு எடுத்துப் பொரித்து, 2 கிராம் எடுத்து, உணவிற்குப் பின் உண்ணலாம்.

சில்லிக்கீரை, பொன்னாங்கண்ணிக் கீரை இவற்றை அரைத்து, சுண்டைக்காய் அளவு எடுத்துக் கருப்பட்டி சேர்த்து வெள்ளாட்டுப் பாலில் கலந்து உண்ணலாம்.

சேர்க்க வேண்டியவை:

கோஸ், கேரட், வெண்பூசணி, தர்பூசணி, பப்பாளி, ஆப்பிள், நாவல், மாதுளம்பழம், வாழைப்பழம் தயிர், மோர். இள நுங்கு.

தவிர்க்க வேண்டியவை:

அதிகக் காரம், பொரித்த உணவுகள், அசைவ உணவுகள், தேன், புளி.

கடைப்பிடிக்க வேண்டியவை:

காலை உணவைத் தவிர்க்கக் கூடாது. உரிய நேரத்தில் உணவை உண்ண வேண்டும். பரபரப்பைத் தவிர்த்தல் அவசியம். தினமும் குறைந்தது 2 லிட்டர் தண்ணீர் அருந்த வேண்டும். சரியான நேரத்துக்குத் தூக்கம் அவசியம்.

No comments:

Post a Comment