முன்னுரை
தமிழர்கள் காலந்தோறும், இராமாயணம், மகாபாரதம், புராணக் கதைகள், கிராமியக் கதைகள், பஞ்சதந்திரக் கதைகள், மரியாதைராமன் கதைகள், தெனாலிராமன் கதைகள், விக்கிரமாதித்தன் கதைகள் என பல்வேறு கதைகளைக் கேட்டு வருகின்றனர். கதைகளின் வழியாக ஒழுக்கநெறிகள் அறிவுறுத்தப்பட்டிருக்கின்றன. அதன் படிநிலை வளர்ச்சியை இக்கட்டுரையில் காண்போம்.
தொல்காப்பியர் கூறும் கதை மரபு
கதை சொல்லும் மரபு தொன்றுதொட்டு இருந்து வந்த வழக்கம் என்பதைத் தொல்காப்பியர்,
‘பொருள் மரபில்லாப் பொய்ம்மொழி யானும்
பொருளோடு புணர்ந்த நகைமொழியானும்’ என்று உரைப்பார்.
சிறுகதைக்கான இலக்கணம்
அரைமணிமுதல் இரண்டு மணிநேரத்துக்குள் படித்து முடிக்கக்கூடியது சிறுகதை என்பர் எட்கார் ஆலன்போ. சுருங்கச் சொல்லுதலும், சுருக்கெனச் சொல்லுதலும் இதன் உத்திகளாகும். அதனால் நீண்ட வருணனைகளுக்கு இங்கு இடமில்லை. குதிரைப் பந்தையம் போலத் தொடக்கமும் முடிவும் சுவைமிக்கனவாக இருத்தல்வேண்டும் என்பர் செட்ஜ்விக். புதினம் புளியமரம் என்றால், சிறுகதை தென்னைமரம் என்பார் இராசாசி. செகாவிவ் என்பவர் தரமிக்க சிறுகதைகளைத் தந்து சிறுகதைப் படைப்புக்கான நோபல் பரிசைப் பெற்றார். .இவரைச் சிறுகதை உலகின் தந்தை என அழைப்பர்.
சிறுகதை தோன்றிய சூழல்
19ம் நூற்றாண்டின் ஆரம்பத்திலிருந்து, தமிழ் இலக்கியத்தின் பரப்பிலும் வடிவத்திலும் பல்வேறு மாற்றங்கள் ஏற்பட்டு வந்துள்ளன. அச்சுப்பொறியின் பயன்பாட்டினாலும், ஆங்கில மொழியின் செல்வாக்கினாலும் தமிழ்ச் சிறுகதை வழக்கில் ஒரு பெரும் மாற்றம் ஏற்பட்டது. வாய்மொழியாக வழங்கி வந்த கதைகள் பல நூல் வடிவில் அச்சுப் பெற்று வெளியிடப்பட்டன. இவ்வகையில் முதன்முதலில் அச்சில்வந்தது வீரமாமுனிவரின் ‘பரமார்த்த குருவின் கதை’ அதைத் தொடர்ந்து ஈசாப்பின் நீதிக்கதைகள்,திராவிட பூர்வகாலக்கதைகள், தெனாலிராமன் கதைகள் போன்றவைத் தமிழில் அச்சாயின. இதனால் தமிழ்நாட்டில் கதை கேட்பது மட்டுமல்ல படிக்கும் வழக்கமும் அதிகமானது.
தமிழ்ச்சிறுகதையின் முன்னோடிகள்
· வீராசாமி செட்டியார் (1855) தாம் எழுதிய உரைநடைக் கட்டுரைகளைத் தொகுத்து ‘வினோத ரசமஞ்சரி’என்று வெளியிட்டார்.
· வ. வே. சு. ஐயரின் ‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதையை முதன்முதலில் அறிமுகப் படுத்தியது விவேக போதினி ஆகும். இவரே தமிழ்ச் சிறுகதையின் தந்தை என அழைக்கப்பட்டார்.‘குளத்தங்கரை அரசமரம் சொன்ன கதை, மங்கையர்கரசியின் காதல் போன்ற கதைகளில் நிகழ்வு ஒருமை, கால ஒருமை, பாத்திர ஒருமை, உணர்வு ஒருமை என்ற சிறுகதைக்குரிய இலக்கணம் அனைத்தும் ஒருங்கே அமைந்திருப்பதைக் காணலாம்.
· செல்வகேசவராய முதலியாரின் அபிநவக் கதைகள் என்ற தொகுப்பு பெரிதும் பாராட்டப் பட்டது.
· ஆரம்ப காலச் சிறுகதை ஆசிரியர்களுள் மாதவைய்யா குறிப்பிடத்தக்கவர். இவரது ‘குசிகர் குட்டிக்கதைகள்’ ஆங்கிலத்திலும் தமிழிலும் வெளியானது. இவர் பிராமணச் சமூகத்தில் காணப்பட்ட குழந்தைத் திருமணம், விதவைகள் பட்ட துயர், வரதட்சனைக் கொடுமை முதலிய சீர்கேடுகளைப் பற்றித் தமது கதைகளின் மூலம் மிக வன்மையாகக் கண்டித்தவர்.
· மகாகவி சுப்பிரமணிய பாரதியார் வங்காள எழுத்தாளர் இரவீந்திரநாத் தாகூரின் 11 சிறுகதைகளை மொழிபெயர்த்து வெளியிட்டார்.
· கல்கி அவர்கள் சிறுகதைத் துறையில் கால்வைத்து, புதினங்களால் புகழடைந்து கல்கி இதழைத் தொடங்கினார். இவரது கதைகளில் கணையாழியின் கனவு, திருடன் மகன் திருடன், வீணை பவானி ஆகிய கதைகள் குறிப்பித்தக்கன.
· சொ.விருத்தாச்சலம் என்று அழைக்கப்பட்ட புதுமைப்பித்தன் அவர்கள் சிறுகதை மன்னன் என அழைக்கப்பட்டார். கேலியும்,கிண்டலும் கலந்த சமூகச் சாடல் இவரைத் தமிழுலகிற்கு அடையாளம் காட்டியது.சிறுகதைச் செல்வர் என்றும், தமிழ்நாட்டின் மாப்பசான் எனப் போற்றப்பட்டார். இவரது கதைகளில் கயிற்றரவு, சாபவிமோசனம், பொன்னகரம் ஆகியன காலத்தை வென்ற கதைகளாகும்.
· மௌனி என்ற புனைப் பெயரில் எழுதிய மணி அவர்களைப் புதுமைப்பித்தன் சிறுகதை உலகின் திருமூலர் என்று அழைப்பார்
இதழ்களால் வளர்ந்த சிறுகதை
தமிழ்ச்சிறுகதையில் மலர்ச்சிக்கு களம் அமைத்தது மணிக்கொடி சிற்றிதழாகும். இது டி. எஸ். சொக்கலிங்கம், ஸ்டாலின் சீனிவாசன் ஆகியோரால் நடத்தப்பட்டது. பின்னர் இதை முழுக்கமுழுக்க சிறுகதை இதழாக பி. எஸ். ராமையா வெளியிட்டார். இதில் புதுமைப்பித்தன், கு.ப.ராஜகோபாலன், ந.பிச்சமூர்த்தி, மௌனி போன்றவர்கள் சிறந்த சிறுகதைகளை எழுதினார்கள். இவர்கள் மணிக்கொடி தலைமுறை என்று சொல்லப்படுகிறார்கள். தமிழின் சிறந்த சிறுகதைகளை எழுதியவர்கள் என்று க.நா.சுப்ரமணியம்,சி. சு. செல்லப்பா, லா.ச.ராமாமிருதம், ஜெயகாந்தன், சுந்தரராமசாமி, கு அழகிரிசாமி, தி. ஜானகிராமன்], கி. ராஜநாராயணன், மு.வ, அகிலன் போன்றவர்கள் குறிப்பிடப்படுகிறார்கள்.
முடிவுரை
காலத்துக்கு ஏற்ப வளர்ந்து வந்த தமிழ்ச்சிறுகதை இன்றைய அவரசகாலத்துக்கு ஏற்ப ஒருபக்கக் கதை,அரைப்பக்கக் கதை, கால்பக்கக் கதை, மைக்ரோக் கதை என தன் வடிவத்தை மாற்றிக்கொண்டுள்ளது. உலகசிறுகதைகளுக்கு இணையாக தமிழ்ச்சிறுகதை இலக்கி்யத்தை வளர்தெடுத்த எழுத்தாளர்களைத் தமிழுலகம்என்றும் மறக்காது.
No comments:
Post a Comment