எந்த ஒரு தொழில் செய்தாலும் அதில் வெற்றி பெற்று நிற்பதற்கு காரணம்
அதிர்ஷ்டம் என்று யாராவது சொன்னால் நம்பாதீர்கள். அந்த வெற்றிக்கு பின்னால்
ஒரு மிக சிறிய ஒரு யோசனையும், சரியான திட்டமிடலும், சரியான தரமும்,பெரிய
உழைப்பும் கண்டிப்பாய் இருக்கும்.
உதாரணமாய் நாம் எல்லோரும்
விரும்பும் ஒரு உணவகத்தை எடுத்துக் கொள்வோம். அந்த உணவகத்தை பற்றி பல
விஷயங்கள் விலை, தரம், அளவு பற்றி பல விமர்சனங்கள் இருக்கிறது,அது
மட்டுமில்லாமல் அதன் உரிமையாளரின் தனிமனித நடவடிக்கைககலால் கெட்டு
போயிருந்தாலும் இந்த நிமிடம் வரை அந்த உணவகத்தின் பெயரும், வியாபாரமும்,
இன்னும் கன ஜோராய் நடை பெற்று கொண்டுதானிருக்கிறது. ஏன் அந்த உணவத்தின்
சுவையை யாரும் குறை சொல்லாவிட்டாலும், அவர்கள் வாங்கும் காசுக்கு, தரும்
அளவைப் பற்றி பல விமர்சனங்கள் உண்டு. பல சமயங்களில் உண்மையும் கூட..
அவர்களின் வெற்றிக்கு பின்னால் நான் ஏற்கனவே சொன்ன யோசனை, திட்டமிடல்,
தரம், உழைப்பு மட்டுமில்லாமல், கஸ்டமர் சர்வீஸ் என்பதும் மிக முக்கியம். பல
வருடங்களுக்கு முன்னால் அந்த உணவகத்தின் ஒரு கிளையில் நான் புல் மீல்ஸ்
ஆர்டர் செய்துவிட்டு, சில பண்டங்களை நான் வைத்துவிட்டு போய் விட்டேன்.
பில்லை கொடுக்க நின்ற போது, பின்னாலேயே வந்த சூப்பர்வைசர்.. என்னை தனியாய்
அழைத்து.. “என்ன சார். டேஸ்ட் சரியில்லையா..?” என்று கேட்டார். நான்
சாப்பிடாமல் வைத்துவிட்டு வந்ததை பார்த்து கஸ்டமருக்கு பிடிக்க வில்லையோ
என்று ஆதங்கத்தில் அவர் கேட்டது என் மனதில் ஒரு இடத்தை அந்த உணவகத்துக்கு
கொடுக்க வேண்டியதாயிற்று.
அதற்கு அப்புறம் பல முறை பல விஷயஙக்ள்
அந்த உணவகத்தின் பல கிளைகளில் சாப்பிட்டு இருக்கிறேன். எங்கு
சாப்பிட்டாலும் அதே சுவை, தரம், சர்வீஸ் என்பது மாறவில்லை.
ஆனால்
நேற்று இரவு நான் அதே உணவகத்தின் துரித உணவு சேவையில் சாப்பிட்டு
கொண்டிருந்த போது நடந்த விஷயம் ஆச்சர்யமாகவும், அதிர்ச்சியாகவும்
போய்விட்டது. ரெண்டு பரோட்டாவில் ஒன்றை சாப்பிட்டுவிட்டு, இன்னொரு
பரோட்டாவுக்கான குருமாவை வாங்கி வர கவுண்டருக்கு போய் வருவதற்குள், என்
ப்ளேடடை காணவில்லை. என்னடாவென்று பார்த்தால க்ளினிங் பாய் என் ப்ளேட்டை
எடுத்து போய்விட்டான். சரியான பசியில் பதினோரு மணிக்கு பரக்க, பரக்க
சாப்பிட்டு கொண்டிருந்த எனக்கு கோபம் வந்தது. அந்த பையனை கூப்பிட்டு,
‘என்னடா தம்பி.. கொஞ்சம் பார்த்து கேட்டு எடுக்க கூடாதா..?” என்றதுக்க்கு அவன் அழுகிற நிலையில் வந்துவிட்டான்.
” சாரி..சார். என்றான்.
“ உன் சாரி.. என் முப்பது ரூபாய் பரோட்டாவை திரும்ப தருமா..? இனிமே கேட்டு
செய்ய.. என்று அவனுக்கு புத்திமதி் சொல்லிவிட்டு.. வேறு ஒன்றை வாங்க பில்
போட கிளம்பினேன். இருந்தாலும் என் மனம் கவர்ந்த உணவகத்தில் இப்படி நடந்து
விட்டதே என்ற வருத்தம் இல்லாமலில்லை. அந்த பையன் புதிதாய் வேலைக்கு
சேர்ந்திருப்பதால்.. அவனை பற்றி புகார் செய்யவும் மனமில்லை, வேறு எதையாவது
சாப்பிட பில் போட கிளம்புகையில், பின்னாடியே ஒருவர் வந்தார்.
சூப்பர்வைசர்.. கையில் இரண்டு பரோட்டா குருமாவுடன்.
இப்போது புரிகிறதா சரவணபவன் என்கிற அந்த உணவகம் ஏன் எவ்வளவு பிரச்சனையில் மாட்டிக் கொண்டாலும்.. தொடர்ந்து வெற்றி பெறுகிறதென்று..
Related Posts : Good to Read,
Management
No comments:
Post a Comment