பயங்கரவாதம் எனபதன் வரைவிலக்கணம்
இன்றைய உலகில் இலங்கையின் ஜனாதிபதி உரையாற்றினால் என்ன, உலகத் தலைவர்கள் எங்கேனும் பேசினால் என்ன, அவர்களின் பேச்சில் நிச்சயமாக பயங்கரவாதம் என்பதைப் பற்றிய ஏதோவொரு குறிப்பு இருப்பதைக்காணலாம். அந்தளவுக்கு பயங்கரவாதம் என்கின்ற விடயம் உலக அரசுகளின் கவனத்தை ஈர்த்திருக்கின்றது. இலங்கை அரசாங்கமும் பயங்கரவாதத்தை ஒழிக்கத்தான் யுத்தம் புரிகின்றோம் என்றல்லவா இதுவரைகாலமும் (2009ம் ஆண்டு) சொல்லி வந்தது? எனவேதான் பயங்கரவாதம் என்றால் என்ன என்பதை நாங்கள் விளங்கிக் கொள்ளுவது அவசியமாகின்றது.
அமெரிக்க அரசாங்கம் பயங்கரவாதத்துக்கு இவ்வாறு வரைவிலக்கணம் கொடுத்திருக்கின்றது:
' பயங்கரவாதம் என்பது ஏதும் அரசியல் அல்லது மதரீதியிலான, அல்லது கருத்தியலான குறிக்கோள்களை எய்துவதற்காக அரசாங்கங்களை அல்லது சமூகங்களை பயமுறுத்தவும் வற்புறுத்தவும் உதவும் சட்ட விரோதமான வன்முறைச் செயல்களாகும்.'
இந்த வரைவிலக்கணத்தில் 'சட்ட விரோதமான வன்முறைச் செயல்கள் ' என்கின்ற பதத்தைப் பார்த்திருப்பீர்கள். சட்ட விரோதமான வன்முறைச் செயல்கள் என்ற கருத்து இருக்கின்றது உண்மெயென்றால் சட்ட பூர்வமான வன்முறைச் செயல்களும் இருக்கின்றனவென்பதும் உண்மையாக வருமல்லவா? அரசுகள்தானே சட்டங்களை இயற்றுகின்றன. அதனால்தான் சட்ட பூர்வமான வன்முறையென்பது அரசுகள் மேற்கொள்கின்ற வன்முறையாக கருதப்படுகின்றது.. பொலிஸ் மற்றும் ஆயுதப்படைகளைக் கொண்டு அரசு மேற்கொள்ளுகின்ற வன்முறை சட்ட பூர்வமான வன்முறையாகும். அரசு அல்லாத குழுக்கள் அல்லது தனிநபர்கள் மேற்கொள்ளுகின்ற வன்முறையானது சட்ட விரோதமான வன்முறையாகும். உதாரணமாக, விடுதலைப்புலிகள் கொழும்பில் தற்கொலைக் குண்டுதாரியின் வழியாக வெடிகுண்டை வெடித்து அழிவுகள் ஏற்படுத்தினால் அதைப் பயங்கரவாதம் என்று உலகு சொல்லுகின்றது. ஆனால் கிபிர் ஜெட் கொண்டு அரசு வன்னியில் குண்டு வீச்சுக்களைப் புரிந்து வெற்றி கொண்டால் அதனை யுத்தம் என்கிறது. இதைக் கொண்டு பார்த்தால், அரசு அல்லாத எந்தக்குழுவும் வன்முறையில் இறங்கினால் அதனைப் பயங்கரவாதம் என்று சொல்லப்படுகின்றது எனவும் இந்தச் சொல்லை விளங்கிக் கொள்ளலாம். ஆனாலும், பயங்கரவாதத்துக்கு இது ஒரு பூரணமான விளக்கமல்ல.
பயங்கரவாதமும் கிளர்ச்சியும்
இன்றைய உலகில் அரசு அல்லாத குழுவினர் ஈடுபடும் வன்முறைகளை இரண்டு வகையில் நோக்கலாம்.
ஒரு அரசின் அதிகாரத்தைப் பகிர்ந்து கொள்ளும் முகமாகவோ அல்லது ஒரு நாட்டின் ஏதோவொரு பகுதியைக் கைப்பற்றும் முகமாகவோ பிரயோகிக்கப்படும் வன்முறை ஒரு வகையானது. இது கிளர்ச்சி என்று கூறப்படும். கிளர்ச்சி என்பது ஒரு நீண்ட காலமாக செயற்படும் இயக்கமாகும். இதற்காக மக்களையும் அணி திரட்டும்;. கிளர்ச்சியாளர்கள் அரச படையினருடன்தான் பிரதானமாக மோதுவார்கள். தங்கள் நோக்கங்களை அடைவதற்கு இவர்கள் பொதுமக்களை அல்லது பொதுச் சொத்துக்களைத்தாக்கியழிக்கும் யுக்திகளையும் உபயோகிக்க முடியும். ஆனால் கிளர்ச்சிவாதிகளுக்கு மக்கள் ஆதரவு இல்லாமல் செயற்படமுடியாது என்கின்ற படியால் இந்த யுக்தியை ஒரு வரையறைக்குள்தான், மக்களை அதிகம் தாக்காதவாறுதான் அவர்கள் பாவிக்க நிர்ப்பந்திக்கப்படுகிறார்கள்.
மக்களின் அபிப்பிராய மாற்றம், அல்லது ஏதோவொரு கொள்கை மாற்றம் அல்லது ஏதோவொரு சம்பவத்துக்கான பழிவாங்கல் நடவடிக்கைகள் இவையெல்லாம் இரண்டாவது வகையான வன்முறையாகும். இதில் ஈடுபடுவதற்கு ஒரு சிலரே போதுமானதாகும். உதாரணமாக, 1983ம் ஆண்டு மத்திய கிழக்கில் பெய்ரூட் சர்வதேச விமான நிலையத்தில் வந்திறங்கிய 241 அமெரிக்க இராணுவ வீரர்கள் ஒரு குண்டுத் தாக்குதலில் கொல்லப்பட்ட சம்பவத்தை எடுத்துக் கொள்ளலாம். இந்த நடவடிக்கையின் நோக்கம் பெய்ரூட்டில் அன்று நிலைகொண்டிருந்த அமெரிக்கப்படைகளை வீட்டுக்கு அனுப்புவதாகும் இந்தச் சம்பவத்தின் பின்னர் உடனேயே அமெரிக்க காங்கிரஸ் தீர்மானம் எடுத்து அமெரிக்கப்படைகளை வாபஸ் வாங்கியது. இதே போல், பலஸ்தீனிய அகதிகளின் நிலைகளை உலகின் கவனத்தக்குக் கொண்டுவர ஜேர்மனி மியூனிக் நகரத்தில் இஸ்ரேலிய ஒலிம்பிக் வீரர்களைக் கொன்ற சம்பவத்தினையும் கூறலாம். இந்த மாதிரியான வன்முறைகளில் ஈடுபடுபவர்கள் அரச படையினருடன் மோத மாட்டார்கள், அவர்களுக்கு பொது மக்கள்தான் போராட்ட களமாகும். இவர்களுக்கு மக்கள் ஆதரவும் தேவையில்லை. உண்மையில், இதனைத்தான்; பயங்கரவாதம் என்று நாம் வரைவிலக்கணம் கொடுக்கலாம்.
இவை தவிர்ந்த ஏனைய அர்த்தமற்ற வெகுசன கொலைகளை நாம் குற்றச் செயல்கள் என்கின்ற பிரிவுக்குக் கீழ் பார்க்கலாம். உதாரணமாக, அமெரிக்கப் பாடசாலையொன்றின் மாணவனொருவன் திடீரென்று ஒரநாள் காலை ஒரு தன்னியக்கத் துப்பாக்கியுடன் பாடசாலை வந்து அங்கு நூற்றுக்கணக்கான தனது சக மாணவர்களையும் ஆசிரியர்களையும் சுட்டு வீழ்த்தினான். அதற்கு ஏதுமொரு காரணம் இருந்ததாகத் தெரியவில்லை. இப்படியானவற்றைக் குற்றச் செயல்கள் என்று கூறலாமல்லவா?
ஆனால் இன்று உலக அரசாங்கங்கள் எல்லாம் இந்த மாதிரியாக வன்முறைகளை நுணுக்கமாக வேறுபடுத்திப் பார்க்க விரும்புவதில்லை. அரசு அல்லாத குழுக்களின் வன்முறைகள் ஏதோவொரு முறையில் ஏதோவொரு அரசினது அதிகாரத்துக்கு சவால் விடுவதனால், எல்லாவற்றையும் ஒட்டு மொத்தமாகக் குவித்து பயங்கரவாதம் என்கின்ற முத்திரை குத்தி வேரோடழிக்க அவை எத்தனிக்கின்றன. இதற்கான பல கூட்டுக்களை அமைக்கின்றன. தென்னாசிய நாடுகளின் கடந்த சார்க் மாநாட்டில் சகல நாடுகளும் பேசியது பயங்கரவாதம் என்கின்ற ஒரே பிரச்சினை பற்றித்தான். உலக அரசாங்கங்களின் இந்த முயற்சியில் மக்களின் பங்கு என்ன என்பதை நாம் விளங்கிக் கொள்வதற்கு பயங்கரவாதத்தின் அடிமூலம் என்ன என்பதை விளங்கிக் கொண்டேயாகவேண்டும்.
அரசு அல்லாத குழுக்களின் வன்முறைகளுக்குக் காரணம் என்ன?
ஆதி காலத்தில் மனிதர்கள் சிறு சிறு குடிகளாக வாழ்ந்து வந்தனர் என்று எங்களுக்குத் தெரியும். அப்பொழுதெல்லாம் ராசாக்கள் கிடையாதுதானே. ஆனால் குடிகள் பெருகப் பெருக சின்ன அவற்றின் தலைமைத்துவமாக சின்னச் சின்ன ராசாக்கள் உருவாகினர். இந்த ராசாக்களின் ஒரு படத்தை இங்கு பாருங்கள்.
அவர் ராசாவாக வந்தவுடனேயே அவருக்குக் காவலுக்கு ஈட்டியுடன் ஒருவர் நிற்கின்றார் அல்லவா? ஏன்? அன்று ஈட்டியுடன் நின்ற அரசர்கள் பிறகு காலம் செல்லச் செல்ல ஒரு காவலாளர் கூட்டத்துடனும் பெரிய படைகளுடனும் ஆட்சி செய்யத் தொடங்கினார்கள். இன்று பாதுகாப்பு அமைச்சும், ஆயுதப் படைகளும் இல்லாத எந்த நாடும் இருக்கின்றதா?
இதிலிருந்து ஏன்ன தெரிகிறது? மக்கள் மயப்படாத எந்த ஆட்சியாளரும் ஆயுதங்கள் கொண்டுதான் தன்னை நிலைநிறுத்துகின்றார், தனது ஆட்சியினைப் பாதுகாக்கின்றார். சுருங்கக் கூறினால் வன்முறையைப் பிரயோகிக்கும் வாய்ப்பை வைத்து பயமுறுத்திக் கொண்டுதான் எந்த அரசனோ எந்த அரசாங்கமோ மக்களை அடக்கிக் கொண்டு ஆட்சி செய்ய முடிகிறது. இன்று உலகில் நடக்கும் யுத்தங்களில் 99 வீதமானவை உள்நாட்டு யுத்தங்கள், அதாவது ஒரு அரசாங்கம் தனது பிரஜைகள் மீது செய்யும் யுத்தங்களாகும். அரசு ஆயுதம் கொண்டுதான் மக்களை அடக்கி ஆளுகின்ற படியினால், மக்களை ஆயுதம் தூக்க விடக்கூடாதுதானே. அதனால்தான் அரசு அல்லாத எவரும் ஆயுதம் பிரயோகிப்பதை சட்டத்துக்கு விரோதமான செயல் என்னும் சட்டங்களை இயற்றி விட்டிருக்கின்றன.
அரசுகள் ஆயுதபாணிகளாக இருப்பதனால்தான், அதன் அதிகாரத்துக்கு சவால் விடும் எந்தக் குழுவும் தானும் ஆயுதம் தூக்க வேண்டியதாக உள்ளது. இன்றைய அரசுகளின் அதிகாரங்களின் அளவுகளை யோசித்துப் பாருங்கள். அப்பப்பா. சொல்லி முடியாதே. அவை யாருக்கும் என்னவும் செய்யலாம் என்கின்ற அளவுக்குத் தங்களை மத்தியில்; பலப்படுத்திக்கொண்டு வந்திருக்கின்றன. இந்த அரசுகளை ஆட்டம் காண வைக்க வேண்டுமானால் வன்முறையைப் பிரயோகிப்பதைத் தவிர வேறு வழியில்லை என்றுதான் பலரும் நினைக்கின்றனர்.
அத்துடன், பேச்சுக்கு இல்லாத மதிப்பு வன்முறைக்கு உண்டல்லவா? எங்களது நாட்டில் ஏராளமான சிங்கள மக்கள் இனப்பிரச்சினை பிரபாகரனினால்தான் தோன்றியது என நம்புகின்றார்கள். ஆனால் பிரபாகரன் பிறக்க இருபது ஆண்டுகளுக்கு முன்னமேயே பிரச்சினை வலுப்பட்டுவிட்டது என்பதை அறியமாட்டார்கள். ஏனெனில் அப்போதெல்லாம் தமிழ் அரசியல் தலைவர்கள் வெறுமனே கதைத்துக் கொண்டிருந்தபடியால் சிங்கள மக்கள் அதைக் கவனிக்கவில்லை. பிரபாகரன் துப்பாக்கியைத் தூக்கியதும்தான் தமிழ் தேசிய பிரச்சினை என்று ஒன்றிருக்கின்றது என்று உலகமெல்லாம் அறிந்து கொண்டது. இந்தக் காரணங்களுக்கெல்லாம்தான் சாதாரண மக்கள் ஆயுதம் தூக்கக் கிளம்புகின்றனர்.
சமூகத்தில் சட்டத்தையும் ஒழுங்கையும் நிலைநாட்டத்தான் அரசாங்கங்கள் ஆயுதப்படைகளை வைத்திருக்கின்றன என்று சிலர் சொல்லலாம். உண்மைதான். ஆனால் ஆயுதப்படைகளின் மூலம் அடக்க வேண்டிய சட்டம் ஒழுங்குப் பிரச்சினைகள் அப்படித்தான் என்ன? யோசித்துப் பாருங்கள்.
மேலும், பயங்கரவாதப் பிரச்சினை இருப்பது அரசாங்கத்துக்கு அனுகூலமான காரியமாகும். பயங்கரவாதப் பிரச்சினையைக் காட்டிக் காட்டியே மக்களைப் பயத்துடன் வாழ வைத்து ஆட்சிக்கு அடங்கி நடக்க வைக்கலாம். அதைச் சாட்டியே ஜனநாயகமற்ற சட்டங்களைக் கொண்டுவரலாம். பயங்கரவாதத்தை ஒழிக்க வேண்டுமேயென்ற விசனத்தில் மக்கள் இம்மாதிரியான அநீதியான சட்டங்களுக்கு எதிர்ப்புத் தெரிவிக்க மாட்டார்கள். இச் சட்டங்கள் அமுலுக்கு வந்தபின்னர் அதை வைத்துக் கொண்டு தனக்கு எதிராகக் கிளம்பும் எல்லாவகையான எதிர்ப்புக்களையும் அரசாங்கம் அடக்க வெளிக்கிடும். எங்கள் நாட்டில் 1979ம் ஆண்டு அமுலுக்கு வந்த பயங்கரவாதத் தடைச்சட்டம் இதற்கு ஒரு நல்ல உதாரணமாகும். தமிழ் தேசியப் போராட்டத்தை அடக்குவதற்காகக் கொண்டுவரப்பட்ட சட்டம் பின்னர் தென்பகுதியில் ஜேவிபி கிளர்ச்சியாளர்களை அடக்கவும் 60,000க்கு மேற்பட்ட தென்னிலங்கை மக்களைக் கொன்று குவிக்கவும் உதவியது. பிறகு எதிர்க்கட்சிகளை மிரட்டி அடக்கவும் உதவியது.
இந்தச் சட்டத்தின் உதவியுடன்தான் இதுவரை, 30 வருட காலங்களாக நூற்றுக்கண்கானோர் விசாரணையின்றித் தடுத்து வைக்கப்படவும், தனி ஆயுதக்குழுக்களை அரசு வைத்துக் கொண்டு மக்களைக் கொலை செய்யவும், கடத்தவும், வெகுசன ஊடகங்களை மிரட்டவும், ஊடகவியலாளர்களை கொலை செய்யவும், கூட்டங்கள் நடைபெறுவதைத் தடுக்கவும் முடியுமாக இருந்திருக்கின்றது.
பயங்கரவாதப் பிரச்சினையும் மக்களும்
ஆயுதந்தூக்கி வன்முறையில் ஈடுபடுகின்ற மக்கள் குழுக்களை பயங்கரவாதிகள் என்று பயங்கரமான முத்திரை குத்தி அரசாங்கங்கள் செய்யும் பிரச்சாரத்திற்கு கண்ணை மூடிக்கொண்டு மக்கள் துணை போகக் கூடாது. எப்பொழுதும் எந்த வன்முறை நடவடிக்கைகளினதும் மூலங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மூலப் பிரச்சினையைத் தீர்க்க முயலவேண்டும். அதுதான் நிரந்தரமான அமைதியைக் கொண்டு வரும். ஒரு நாட்டில் அல்லது சமூகத்தில் அரசியல் நோக்கம் குறித்த வன்முறைகள் தலையெடுக்காமல் இருக்க வேண்டுமானால் பல நடவடிக்கைகள் எடுக்க வேண்டும்.
முதலாவதாக, நாட்டில் வாழும் சகல மக்களுக்கும் ஏதோவொரு முறையில் அதிகாரம் பகிர்ந்தளிக்கப்பட்டு அவர்கள் எல்லோரும் ஏதோவொரு அளவிலாவது தங்கள் தேவைகளைத் தாமே நிறைவேற்றுக்கூடிய கட்டமைப்புக்களைக் கொண்டு வரவேண்டும். இந்தத் தேவையை எங்கள் உள்ளுராட்சி மன்றங்களும் மாகாண சபைகளும் ஓரளவில் பூர்த்தி செய்கின்றன. இந்தக் கட்டமைப்புக்களுக்கு மென்மேலும் அதிகாரங்களை வழங்குமாறு நாம் வலியுறுத்திக்கொண்டேயிருக்க வேண்டும். இவற்றை மென்மேலும் அதிகார பூர்வமான கட்டமைப்புக்களாக மாற்ற முயலவேண்டும். ஒரு உள்ளுராட்சி மன்றமானது வெளியுறவு விவகாரம், தேசிய திட்டமிடல் நடவடிக்கை ஆகியவை தவிர்ந்த சகல விடயங்களையும் பார்க்கும் ஆற்றல் கொண்டது உங்களுக்குத் தெரியுமா?
இரண்டாவதாக, யாருக்கும் ஏதாவது குறைகள் இருந்தால், அவர்கள் கூறுவதை ஆட்சியாளர்கள் கவனமாகக் கேட்பதை உறுதி செய்ய வேண்டும். நான் துவக்குத் தூக்கினால்தான் இனி என்னை யாரும் கவனிப்பார்கள் என்று யாருமே சிந்திக்க இடமளிக்கப்படாது. இதில் எங்கள் வெகுசன ஊடகங்களுக்கு பெரும் பங்கு இருக்கின்றது. எந்தச் சின்னக் குழுவாக இருந்தாலும் அவர்களின் குறைகளைப் படம் போட்டு இவை காட்ட வேண்டும். அவர்களின் குரலைக் கேட்பது மட்டுமல்ல அவற்றைத் தீர்ப்பதற்கான பேச்சுவார்த்தைகள் வெளிப்படையாக, நீதியாக, காரண காரியங்களுடன் மேற்கொள்ளப்பட வேண்டும்.
மூன்றாவதாக, தனது பிரஜைகளுக்கெதிராக ஒரு அரசு வன்முறை பிரயோகிப்பதற்கு எந்தக் காரணம் கொண்டும் இடமளிக்கக்கூடாது. தனது பிரஜைகளின் அங்கீகாரத்துடன்தான் ஒரு அரசு ஆட்சி செய்கின்றது. அரசுகள் கொண்டுள்ள இறைமையானது, (அதாவது சுதந்திரமாக தன்னிச்சையாக செயற்படக்கூடிய தன்மை) அவற்றின் மக்களால்தான் வழங்கப்படுகின்றது. எனவே, தனக்கு அதிகாரம் வழங்கும் மக்களுக்கெதிராக ஒருபோதும் ஒரு அரசு அடக்குமுறையைப் பிரயோகிக்க இயலாது என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்ள வேண்டும். அந்த மாதிரியான சட்டங்களைக் கொண்டுவந்தாலும், தனது ஆயுதப் படைகளை மக்கள் மீது ஏவி விட்டாலும், நாங்கள் விழிப்பாக இருந்து அதனை நிற்பாட்டுவதற்கு சகல நடவடிக்கைகளையும் மேற்கொள்ள வேண்டும்.
நான்காவதாக, ஒரு அரசு எவ்வளவுதான் அதிகாரம் வாய்ந்ததாக இருந்தாலும் அதனை ஆட்டம் காண வைக்க மக்களால் முடியும் என்கின்ற நம்பிக்கையுடன் நாம் இருக்க வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மக்கள், கூட்டங்கள் கூட்டிப் பொதுப் பிரச்சினையை ஆராய்வதையும் கூட்டாக செயற்படுவதையும் கைவிடக்கூடாது. கூட்டங்கள் கூடுவதை எந்த உருவில் அரசு மறித்தாலும் அதனை எதிர்க்க வேண்டும். இன்று எங்கள் நாட்டில் பொதுக்கூட்டங்கள் கூடவேண்டுமானால் பொலிஸ் அனுமதி வேண்டும். ஒழுங்கை நிலைநாட்டுவதற்குத்தான் இந்த நடைமுறை என்று சொன்னாலும், மறைவில் தமக்கு ஒவ்வாத கூட்டங்களை தடை செய்வதற்கே இந்த ஆயுதம் பிரயோகிக்கப்படுகின்றது என்பது வெள்ளிடை மலையாகும். போதாக்குறைக்கு பிரதேசம் தோறும் சிவில் பாதுகாப்புக் குழுக்களையும் நிறுவி பொலிஸ் மூலமாக மக்களை வேவு பார்க்க அரசாங்கம் முயலுகின்றது. இதை நாங்கள் பார்த்தறிந்து கொள்ள வேண்டும். ஒன்று கூடி அதனை மாற்ற முயற்சிக்க வேண்டும்.
இப்படியான பல புதிய சட்டங்களையும் நடைமுறைகளையும் கொண்டு வந்துதான் ஐரோப்பா கனடா ஸ்வீடன் நோர்வே ஐஸ்லாந்து போன்ற நாடுகளில் வன்முறையையும் பூசல்களையும் இல்லாதொழித்திருக்கிறார்கள். இங்கள்ள ஆயுதப்படைகள் வரவர சடங்குகளுக்கான படைகளாக மாறிக்கொண்டு வருகின்றன. ஏனெனில் அவற்றுக்கான தேவை அநதச் சமூகங்களில் குறைந்து கொண்டு வருகின்றது. அவர்களுக்கு அதைச் செய்யலாமென்றால் எங்களுக்கும் முடியுந்தானே.
கலந்துரையாடலுக்கான வழிகாட்டல்:
1. எங்கள் நாட்டில் அல்லது சமூகத்தில் நடந்த வன்முறைச் சம்பவங்களை, கிளர்ச்சிவாதிகளின் வன்முறை, பயங்கரவாதிகளின் வன்முறை, அர்த்தமற்ற வன்முறைக் குற்றச் செயல்கள் என்று வகை பிரித்து ஆராய்ந்து பாருங்கள். இவற்றின் நோக்கங்கள் எவையாக இருந்தன? அப்பிரச்சினைகளின் மூலங்கள் என்ன?
2. பயங்கரவாதத்துக்கு எதிரான சட்டங்கள் என்னென்ன இருக்கின்றனவென்பது தெரியுமா?
3. தெரியாவிட்டால் அதனை அறிந்து கொள்ள என்ன நடவடிக்கை எடுப்பீர்?
Thanks விழுது, ஆற்றல் மேம்பாட்டு மையம்
No comments:
Post a Comment