Search This Blog

Sunday, September 30, 2018

வள்ளுவர் மேல் ஒரு வழக்கு


பழநி சோ முத்துமாணிக்கம்.
அன்று காலை பரபரப்பாகக் காணப்பட்டது அறம்கூறும் அவையம் (நீதிமன்றம்). வெளிநாடுகள் சென்று சுற்றுவதிலும் கேளிக்கைகளிலும் ஈடுபட்டுக் கொண்டிருந்த மன்னனும் மன்றத்துக்கு வருவதாகக் கூறினார்கள். அதனால் அமைச்சர்களும் ஒருவித அச்சத்துடன் காத்திருந்தார்கள்.
உலகமெல்லாம் எவருடைய நூலை உலகப் பொதுமறை என்று போற்றுகிறதோ, எவருடைய நூல் எல்லா மொழிகளிலும் மொழிபெயர்க்கப்பட்டுக் கடைப்பிடிக்கப்படுகிறதோ அந்த ஆன்றோர்மேல் தேசத்துரோகக் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.
மன்ற வாயில்முன் மக்கள் கூட்டத்தின் எழுச்சி முழக்கம் அறங்கூறவையத்தையே உலுக்கிக் கொண்டிருக்கிறது.“கைவைக்காதே.. கைவைக்காதே.. கருத்துரிமையின்மேல் கைவைக்காதே! வாழ்க்கைத் தத்துவம் வடித்துத் தந்த வள்ளுவர் மேலே பொய்வழக்குகள் போடாதே! மக்கள் ஆட்சியின் மாபெரும் உரிமை கருத்துரிமை என்பதைக் கவனத்தில் வை! அறிஞர்கள் வாய்க்குப் பூட்டுப் போட்டால் அழியும் ஆட்சி மறவாதே!” என்ற முழக்கங்களை எழுப்பிக் கொண்டு பல்லாயிரம் மக்கள் கையுயர்த்திக் கொண்டிருந்தார்கள்.
காவலர்கள் முன்னும் பின்னும்வர, வள்ளுவர் நீதிமன்றத்துக்குள் நுழைந்தார். பொங்கியெழும் மக்களைப் பார்த்துத் தலைமைக் காவலர் வெகுண்டார். “எல்லோரும் அமைதியாக இருங்கள். இல்லாவிட்டால் குறிபார்த்துத் தீ அம்புகளை வீசக்கூடிய வில்மறவர்கள் உங்களைக் கொல்லக் காத்திருக்கிறார்கள்” என்று சீறினார். அப்போதுதான் மக்கள் நாலாபுறமும் சுற்றிப் பார்த்தார்கள்.
எல்லாத் திசைகளிலும் யானைகளின் மேலும் குதிரைகளின் மேலும் அமர்ந்து வில்லும் கவணும் தீப்பந்துகளும் தாங்கிய வீரர்கள் இவர்களைக் குறிபார்த்துக் கொண்டிருந்தார்கள். மன்னரிடம் பரிசாகப் பொற்காசுப் பைகளைப் பெறுவதற்காக, எவ்விதக் காரணமும் இன்றி மக்களை நோக்கித் தீக்குண்டுகளை வீசக் காத்திருக்கிறார்கள்
காவலர்கள்.அமைச்சர்களும் படைப்பிரிவுத் தளபதிகளும் அறங்கூறவையத் தலைவரும் வள்ளுவர் நுழைந்தபோது தன்னெழுச்சியாய் எழுந்து நின்றார்கள். அடுத்த நொடியில், குற்றம் சாட்டப்பட்டவருக்காக எழுந்து நிற்பதை மன்னன் விரும்பவில்லை என்று தெரிந்தவுடன் அனைவரும் விரைந்து இருக்கைகளில் அமர்ந்தனர்.
‘தங்கள் மீது என்ன குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது என்பதை அறிவீர்களா வள்ளுவரே?’ தலைமை அமைச்சர் அவையின் அமைதியைக் கலைத்தார்.
புன்னகை தவழும் முகத்தோடு பேசினார் வள்ளுவர், ‘என் மீது குற்றச்சாட்டா? அறம்பேச வந்தவர்கள் குற்றவாளி என்றால் இந்த நாட்டில் வாழ்பவர்கள் அனைவருமே குற்றவாளிகள்தாம் அமைச்சர் பெருமானே! இறந்த பின் தான் புலவர்களுக்கு தமிழ் ரத்தினம், தமிழ்க்கடல் என்றெல்லாம் விருது கொடுப்பீர்கள். இருக்கும்போது அவர்களுடைய கருத்துரிமையை மதிக்கமாட்டீர்கள்.குற்றவாளியாக்கிக் களிப்பீர்கள். அது சரி.. நான் செய்த குற்றம் என்ன?‘.
‘நீங்கள் ஒரு தேசத் துரோகி’ அமைச்சரின் வினைக்கு எதிர்வினை பார்வையாளர் மாடத்தில் இருந்து வந்தது. ‘இது நீதியில்லை. முறையும் இல்லை’ உலகமெல்லாம் அன்பு தழைத்தோங்க வேண்டும் என்று குறளைப் படைத்த கோமான்மேல் இப்படியொரு குற்றம்சாட்ட உங்களுக்கு எப்படி மனம் வந்தது மக்கள் குமுறி எழுந்து குரல்முழக்கம் இட்டனர்.’அமைதி.. அமைதி.. வள்ளுவர் மேல் சாட்டப்பட்ட குற்றங்களை அமைச்சர் எடுத்துரைப்பார். பிறகு பேசுங்கள் எது சரி என்று’ மன்னனின் எச்சரிக்கையால் அமைதி அடைந்தனர் மக்கள்.
அமைச்சர் வினாக்கணைகளைத் தொடுக்கத் தொடங்கினார். ‘கடவுள் வாழ்த்தை எழுதியது நீங்கள்தானே?’
வள்ளுவர் விடையளித்தார், ‘அதற்கென்ன ஐயம்?’
“அதில் எந்தக் கடவுளரின் பெயரும் இல்லையே? வாலறிவன், மலர்மிசை ஏகினான், அறவாழி அந்தணன், எண்குணத்தான் என்று பெயர் சுட்டாமல் குறிப்பிடுகிறீர்களே, அந்த இரகசியக் குறியீட்டுக்கு என்ன பொருள்? அதன் பின்னணியில் என்ன சதி இருக்கிறது?
வள்ளுவருக்குச் சிரிப்பை அடக்க முடியவில்லை. ‘கடவுள் பெயரைச் சொல்லிச் சதிசெய்யும் வழக்கம் எமக்கில்லை. அவனுக்குப் பெயரில்லை; வடிவில்லை; நீங்களாக எந்த வடிவத்தையும் வைத்துக் கொள்ளலாம்: எந்தப் பெயரை வேண்டுமானாலும் சூட்டிக் கொள்ளலாம். அது மக்களின் நம்பிக்கையைப் பொறுத்தது’ என்றார்.
அமைச்சரின் முகம் எப்போதும் இப்படி இருண்டு போனதில்லை. வினாக்களை தொடர்ந்தார் .‘பரந்து கெடுக உலகுஇயற்றியான் எனக் கடவுளுக்கே சாபம் கொடுக்கிறீர்களோ? என்ன நெஞ்சழுத்தம் உங்களுக்கு’?
‘பிச்சை எடுத்துத்தான் ஒருவன் உயிர்வாழ வேண்டும் என்ற நிலை நாட்டில் நிலவினால் அப்படி அவனைப் படைத்தவன் ஒழியட்டும் என்று கூறினேன். இதில் என்ன தவறு?.
’ஓகோ.. கொலைசெய்யத் திட்டம் போட்டதாக உங்கள்மேல் குற்றம் பதியப்பட்டிருக்கிறது. அறிவீரா?
வள்ளுவர் விடைசொல்வதற்குள், அறநிலையத்துறை அமைச்சர் குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினார். “கடவுள் வழிபாட்டு முறைகளைப் பகடி செய்துள்ளீர்கள். கடவுளுக்காக மொட்டை அடிப்பதையும் தாடி வளர்ப்பதையும் எள்ளி நகையாடி இருக்கிறீர்கள். கற்புடைய பெண்கள் தெய்வத்தைத் தொழமாட்டார்கள் என்கிறீர். தவத்தொடு தானம் செய்பவரைவிட மனத்தோடு வாய்மை உரைப்பவர்கள் தாம் உயர்ந்தவர்கள் என்று கூறித் தவம் செய்பவர்களைத் தாழ்த்துகிறீர்கள். பிறர் சொல்லும் வசைமொழிகளைப் பொறுத்துக்கொள்பவர்கள், உண்ணாநோன்பிருக்கும் துறவிகளைவிடப் பெரியவர்கள் என்கிறீர். தாங்கள் நினைத்ததை எல்லாம் எழுதுவதற்கு இங்கே உரிமையில்லை.பொது அமைதிக்குக் கேடு விளைவித்ததாக உங்கள்மேல் குற்றம் சாட்டப்பட்டிருக்கிறது.”
“அமைச்சர் பெருமானே! ‘எப்பொருள் யார்யார்வாய்க் கேட்பினும் அப்பொருள், மெய்ப்பொருள் காண்பது அறிவு’ என்ற குறளையும் நீங்கள் படித்திருப்பீர்கள். அறனறிந்து ஆன்றமைந்த சொல்லான் என அமைச்சர் பண்பு நலன்களைப் பற்றியும் பாடியிருக்கிறேன். ஆனால் நீங்கள் கனியிருக்கக் காய்கவர்ந்தது போல் பேசுவது எமக்கு நகைப்பையே வரவழைக்கிறது. போகட்டும். கடவுள் நம்பிக்கையின் பெயரால் மடமைகள் பெருகிவிடக் கூடாதே என்ற தவிப்பால் நான் எழுதிய பாக்களுக்கு இப்படி எல்லாம் பொருள் கொள்வீர்கள் என எதிர்பார்க்கவே இல்லை.” வள்ளுவரின் துணிச்சலான பேச்சு மன்னனுக்குச் சினத்தையே தூண்டியது.
வள்ளுவரைப் பார்த்துச் சீறினான். ‘‘மன்னன் எப்படி இருக்க வேண்டும் என்பதற்கு இலக்கணம் கூறியிருக்கிறீர்கள். எம்மை எதிர்த்துப் பேசுவோர்க்கு ஆதரவாகச் செயல்படுகிறீர்களா? எம்மைப் பழிதூற்றிப் பேசினாலும் பொறுத்துப் போகவேண்டுமா? அதுதான் மன்னருக்கு அழகா? காட்சிக்கு எளியனாக இருக்கலாம்; கடுஞ்சொல் கூறாமல் எப்படி இருப்பது? இடித்துரைக்க ஆளில்லாவிட்டால் மன்னன் தானே கெடுவான் என எம்மையே எதிர்த்துப் பேசுகிறீர்களா? மன்னன் கொடியவன் என்று மக்கள் ஏச்சுக்கு ஆளானால், மன்னனுடைய அரசாட்சிக் காலம் விரைவில் முடியும் என்று கூற உமக்கு என்ன துணிச்சல்? மக்கள் நலத்துக்காகவே வரிக்குமேல் வரி போடுகிறோம்.அதை ஏளனம் செய்கிறீர்கள். வேலொடு நின்றான் இடுஎன்றது போலும் என்று எம்மை வழிப்பறிக்காரனாகச் சித்தரிக்கிறீர்கள். அப்படி வசூலிக்கும் வரியைக் கொடுக்க முடியாதவர்கள் கண்ணீர் சிந்தினால், அந்தக் கண்ணீரே எம்மை அழித்துவிடும் என அச்சமூட்டுகிறீர்கள். அழக்கொண்ட எல்லாம் அழப்போம் என முழக்கமா இடுகிறீர்கள்? அரசை எதிர்த்துப் பேசுவது பெரும் குற்றமில்லையா? மன்னரோடு பழக வேண்டியவர்கள் அகலாது அணுகாது தீக் காய்வோர்போல் இருக்க வேண்டும் என்கிறீர்களே? நான் என்ன விலங்கா அருகில் இருப்போரைக் கடித்துக் குதற!
‘‘மன்னர் பெருமானே நாடும் மக்களும் நலம் பெறவே குறளை எழுதினேன். எந்தச் செயலைச் செய்தாலும் பிறர் தம்மை எள்ளாத எண்ணிச் செயல்வேண்டும் என்று எச்சரிக்கவே இலக்கியம் படைத்தேன். மக்களுடைய வாழ்வைக் கெடுக்கிற அனைத்தையும் எதிர்ப்போம். எத்தனையோ திட்டங்களை உங்கள் அரசவையில் அறிவிக்கிறீர்கள். அது செயலுக்கு வருகிறதா என்று நீங்கள் எண்ணித் துணிகிறீர்களா? சரி புலவர்கள், அறங்கூறவையத்தார் ஆகியோர் நல்லாட்சிக்குத் தேவையானவற்றைச் சுட்டிக்காட்டும்போது, அதை ஏற்றுச் செயல்பட மறுக்கிறீர்கள். சொல்லுதல் யார்க்கும் எளிய.. ஆனால் அதைச் செயலாக்க நீங்கள் முனைவதில்லையே? ஏவவும் செய்கலான் தான் தேறான், அதாவது தானும் செய்யமாட்டான்; பிறர் எடுத்துரைத்தாலும் கேட்கமாட்டான் என்று மன்னரைப் பற்றி நான் பாடியது உண்மைதான். நான் பாடியபடி மன்னர்கள் இருக்கிறார்களா?” ஆவேசமாக வள்ளுவர் விடுத்த வினாக்களுக்கு விடைசொல்லத் தெரியாமல் மன்னன் தனக்குள் குமைந்து கொண்டிருந்தான்.‘‘அது சரி வள்ளுவரே, அரசின் திட்டங்களையெல்லாம் எதிர்த்து முழக்கமிட்டுக் கொண்டே இருக்கிறீர்களே..’’
அது சரியா?
‘‘எதை எதிர்த்தேன் மன்னா?’’
‘‘பனைநிறைந்த காடுகள்; பதனியொடு கள்சுரக்கும்; பருகிமக்கள் இன்பமுற அங்காடி பலதிறந்தோம்; அதை எதிர்த்துக் குரல்கொடுக்க அணிஅணியாய் மக்கள் எழ, வழிவகுத்தது உம் குறள் அல்லவா? கள்ளையும் சூதினையும் பொருட்பெண்டிரையும் சான்றோர் புறக்கணிப்பார்கள் என்று பட்டியல் போட்டீர். கள்ளுண்பார் நஞ்சுண்பார் என்றீர். சான்றோரால் எண்ணப்படாதவர்களே கள்ளுண்பார்கள் என்கிறீர். பனை வளர்க்கும் உழவர்க்கு எதிராகவும் செயல்படுகிறீர்கள். இந்த நாட்டின் பொருளாதாரத்துக்கே கேடு விளைவிக்கத் தாங்கள் மக்களைத் தூண்டி விடுகிறீர்கள். உங்கள் செயலுக்குப் பின்னணியில் எதிரிநாட்டு மன்னர்களின் சதி இருக்குமோ என நான் ஐயப்படுகிறேன்.”
‘‘மன்னா எங்களையும் மிஞ்சிவிட்டீர்கள் கற்பனை செய்வதில். மக்களின் அறிவை மயக்கி அவர்களுடைய உடலையும் குடும்பத்தையும் நாட்டையும் கெடுக்கும் மதுக்கடைகள் தான் உங்கள் அரசுப் பெட்டகத்தை நிறைக்கும் என்றால், உங்கள் அறிவின்மேல், பொருளாதாரத் திறமையின்மேல், தொழில் வளர்ச்சிச் சிந்தனையின் மேல் எனக்கு நம்பிக்கைபோய் விட்டது. அவையறிந்து ஆராய்ந்து சொல்லும் பண்பும் திறமும் உங்களிடம் இல்லை என்பதைப் புரிந்து கொண்டேன். உழவர்களைப் பற்றி ஏதோ சொன்னீர்களே.. வியர்வை சிந்தி உழைத்தும் வாழ்வில் மேலெழ இயலாமல் வெந்துகொண்டு இருக்கிறார்களே.. அவர்கள் நிலையை என்றைக்குச் சிந்தித்துப் பார்த்தீர்கள்? ஊருணி நீர் நிறைந்தற்றே எனப் பாடினேன். எத்தனை ஊருணிகளை அரண்மனைக் கேளிக்கைக் கூடங்களுக்காகக் காவு கொடுத்திருக்கிறீர்கள்? அரசுக்கு வேண்டிய பெருவணிகப் பெருமக்களுடைய நலனுக்காக, எத்தனை வயல்களைச் சூறையாடி அரசபாட்டையாக ஆக்கி இருக்கிறீர்கள்? மழை வந்தாலும் வேளாண்மைக்கு நீர் கிட்டவில்லை.இருபுனலும் வாய்ந்த மலையும் வருபுனலும் வல்லரணும் நல்ல நாட்டுக்கு வேண்டியன எனப் பாடினேனே! எத்தனை மலைகளை விழுங்கி உங்கள் சிங்கார மாளிகைகளுக்குள் சிலைகளாக நிறுத்தியிருப்பீர்கள்? தவறுகளைச் சுட்டுவது குற்றமா? எதிரிநாட்டுச் சதியா?’’
வள்ளுவருக்கும் சினம் மூளும் என்பதை மக்கள் அன்று கண்டார்கள்.தலைமை அமைச்சர் குறுக்கிட்டுப் பேசத் தொடங்கினார். தீர்ப்புச் சொல்லப் போகிறது அறம்கூறவையம். முன்னரே எழுதிவைக்கப்பட்ட தீர்ப்புகளைச் சொல்வதற்குத் தானே இந்த விசாரணை நாடகம் என்பதை மக்கள் நன்றாகவே அறிவார்கள். ‘‘
ஆகவே.. வள்ளுவரின் கூற்றிலிருந்து நாம் அறிவது என்னவென்றால், மன்னன் என்ன செய்தாலும் எதிர்க்கிறார். மக்கள் மறந்துபோய் இருக்கும் உரிமைகளை நினைவூட்டுகிறார். மக்கள் அரசுக்கு எதிராகப் பேசும் குற்றத்தை ஊக்குவிக்கிறார். மக்களுக்கு மன்னன் கடவுள் போன்றவன். மன்னனின் எண்ணத்துக்கு எதிராகப் பேசுபவர்கள் இந்த நாட்டின் எதிரிகள். அறிவாளிகள் சிந்திப்பதை மன்னன் தடுக்கவில்லை. அதே நேரத்தில் மன்னன் சிந்திப்பதைத்தான் அவர்கள் சிந்திக்கவேண்டும். மாறாகச் சிந்திப்பவர்கள் நாடு கடத்தப்படுவார்கள். அவர்கள் எதிரிநாட்டின் ஒற்றர்களாகக் கருதப்படுவார்கள்...” என்று தலைமை அமைச்சர் அறிவித்துக் கொண்டிருக்கும்போது...
மடைதிறந்த வெள்ளமென மக்கள் கூட்டம் மன்றத்துக்குள் புகுந்தது. வந்தோருள் இளையோர் சிலர் வள்ளுவரிடம் சென்று அவரைக் காப்பதுபோல் வட்ட அரணாக நின்று கொண்டனர்.கருத்துரிமைக்காகப் போராடும் வள்ளுவரா நாடு கடத்தப்பட வேண்டியவர்? தவறான தீர்ப்புக்கு வழிகாட்டிய இந்த அவையும் கொடுங்கோல் மன்னனும் தான் கடத்தப்பட வேண்டியவர்கள் என்று மக்கள் கூட்டத்தில் இருந்து அலைஅலையாய்க் குரல்கள்.. முழக்கங்கள்..அடுத்தநாள் பழைய அறங்கூறவையம் கலைக்கப்பட்டது. எங்கு நோக்கினும் திருக்குறளோடு இளைஞர் கூட்டம்..!
நன்றி : வண்ணக்கதிர் ,தீக்கதிர் , 30/09/2018

No comments:

Post a Comment