Search This Blog

Tuesday, October 7, 2014

"பணி தீராத்த வீடு" என்றொரு மலையாளப் படம்

"பணி தீராத்த வீடு" என்றொரு மலையாளப் படம். நான் எஸ்.எஸ்.எல்.சி. படித்துக் கொண்டிருந்த போது ரிலீசாயிற்று. அப்போதெல்லாம் டிவி.கிடையாது. தியேட்டரில் சினிமா பார்க்கவெல்லாம் அனுமதி கிடைப்பதே குதிரைக் கொம்பு. என் பள்ளித்தோழி ராஜேஸ்வரி என்ற நாயர் பெண். அவள்தான் மலையாளப் படங்கள் பற்றி எனக்கு அப்டேட் பண்ணுவாள். சீன் பை சீன் கதை சொல்லுவாள். விடுமுறையில் ஊர்ப்பக்கம் சென்றவள் "பணி தீராத்த வீடு" பார்த்து விட்டு வந்தாக சொன்னாள். படம் எப்படி என்று கேட்டேன். அழுகாச்சி படம்.நசீர் நல்லா பண்ணி இருக்காரு. பாட்டெல்லாம் சூப்பர். என்றாள்.

கதை என்னன்னா என்று ஆரம்பித்தவளிடம், வேண்டாம் நானே பார்த்துக்கறேன். என்றேன். அதற்கு வாய்ப்பே இல்லை என்றாலும் கதை தெரிந்து கொள்ள விருப்பப் படவில்லை. அந்த படத்தின் பாடல்களை மட்டும் ரேடியோவின் மலையாள பாடல்கள் அலைவரிசையில் கேட்டதோடு சரி. சுப்ரபாதம் என்று ஆரம்பிக்கும் நீலகிரியுடே சகிககளே என்ற பாட்டு நான் எப்போதும் முணு முணுக்கும் பாடலாயிற்று.
அதற்குப் பிறகு பல வருடங்கள் கழித்து என் வீட்டில் தொலைக் காட்சி பெட்டி வாங்கின சில மாதங்களில் நேஷனல் அலைவரிசையில் விருது பெற்ற மொழி வாரி திரைப்படங்களின் வரிசையில் ஒரு நாள் "பணி தீராத் த வீடு" என்று பெயர் போட்ட போது நான் சந்தோஷத்தில் குதித்தேன். என் அப்பா , அம்மா, நாராயண்ணா (அத்தை பிள்ளை) மன்னி என்று ஒட்டு மொத்த பேருடன் அந்த படம் பார்த்தேன். படு நிசப்தம். அப்படி படத்தில் ஆழ்ந்து போனோம். சுப்ரபாதம் பாடல் ஆரம்பித்த போது உதகையின் அழகில் மலைத்துப் போனேன். (இசை எம்.எஸ்.வி.) அந்த மலை ரயில், மேகம் தவழும் மலை முகடுகள், ஏரியின் அமைதியான நீர்ப் பரப்பு, வண்ண மலர்கள் என்று மீண்டும் மீண்டும் அந்த பாடலைக் காண மனம் ஏங்கும்.
என்ன காரணம் என்று தெரியவில்லை. அந்த படம் என் மனசுக்குள் ஒரு பிரியமான இடத்தைப் பெற்று விட்டது. இளகிய மனம் கொண்ட அந்த ஹீரோ தன சொந்த ஊரில் முடிக்கப் படாமல் இருக்கும் தன வீட்டுப் பணிகளை முடிக்கத்தான் உதகைக்கு வேலையாக வருகிறான். ஆனால் அவனைச் சுற்றி இருக்கும் சக மனிதர்களின் வாழ்வில் நடக்கும் பல்வேறு அவலங்களால் பாதிக்கப் பட்டு தன் காதலும் கை கூடாமல், அவன் மனம் துயரத்தில் ஆழ்கிறது. வாழ்க்கை குறித்த அவன் பார்வை மாறுகிறது. எந்த பணியும் முழுமையடையாமல் அவன் ராணுவத்தில் பணியாற்ற முடிவு செய்து உதகையை விட்டு கிளம்புவான்.
பிரேம் நசீர் அற்புதமாக நடித்திருப்பார். படம் தேசிய, மாநில விருதுகளை குவித்தது. எனக்கு இந்த படம் அதில் சொல்லப் படாத வேறொரு விஷயத்தையும் யோசிக்க வைத்தது. இந்த உலக வாழ்வு கூட சிலருக்கு பணி தீர்வதற்கு முன்பே முடிந்துதான் போகிறதோ? சிலர் எல்லா வேலையும் முடித்து வா வா என்று காத்திருக்க, சிலர், எத்தனையோ பணிகள் வரிசை கட்டி காத்திருக்க எதையும் முடிக்காது அவசரமாய் சென்று விடுகின்றனர். அவர்களுக்கெல்லாம் இந்த உலக வாழ்வும் பணி தீராத்த வீடுதானோ?
சமீபத்தில் மாண்டலின் ஸ்ரீநிவாஸ் மறைந்த போது எனக்கு இந்தப் படம் நினைவுக்கு வந்தது. மீண்டும் அதைப் பார்க்கலாம் என்று தேடினால் யூ டியூபில் அது இல்லை. சுப்ரபாதம் பாட்டு மட்டும் கேட்டேன். அதன் லிங்க் கிடைத்தால் மகிழ்வேன்.
Vidya Subramaniam