Search This Blog

Friday, September 30, 2011

இஸ்லாமியருக்கு: இந்து மதத்தை எப்படிப் புரிந்துகொள்வது?muslim-woman-along-with-her-son-dressed-in-the-attire-of-hindu-lord-krishna
ரியாதைக்குரிய இஸ்லாமிய சகோதர சகோதரிகளே,
வணக்கம். 
சனாதன தர்மம் ஓரளவு எஞ்சி இருக்கும் இந்திய நாட்டில் இந்துக்களோடு நீங்கள் உறவாடுகிறீர்கள்.
அன்போடும் பாசத்தோடும் நம் உறவு பெரும்பாலும் இருக்கிறது. இந்தச் சூழலில் இந்து மதம் குறித்த கேள்விகள் உங்களுக்கு ஏற்படுகின்றன. முக்கியமாக, படைப்பும், படைப்பவளும் ஒன்றா வேறா என்பது போன்ற கேள்விகள்.
அவற்றுக்குப் பதில்கள் தர வேண்டிய கடமை, இந்துக்களுக்கு இருக்கிறது. எனவேதான், என் புரிதலின் அடிப்படையில் அமைந்த இந்தக் கடிதம்…
இந்துத் தொல்மரபுகளான அத்வைத, சைவ சித்தாந்த, விஸிஷ்டாத்வைத மரபுகளின்படி படைப்பவள், படைப்பாகவும் இருக்கிறாள். எனவே, படைப்பே படைப்பவளாகவும் இருக்கிறது.
த்வைத மரபின்படி படைப்பவளும், படைப்பும்  வேறுபட்டவை.
இஸ்லாமில் பெரும்பான்மைப் பிரிவினர் த்வைதத் தன்மை கொண்ட பிரிவுகளைச் சேர்ந்தவர்களே. அதே சமயம் சூஃபிக்கள் போன்ற இந்திய இஸ்லாமிய மரபுகளிலும் ஒரு சில பண்டை செமித்திய மரபுகளிலும் அத்வைதத் தன்மை ஏதோ ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளப்படுகிறது.
இந்த அத்வைதத் தன்மையை ஏற்றுக்கொள்ளும் இஸ்லாமியர்கள், படைப்பவளே படைப்பாகவும் இருக்கிறாள் என்ற கருத்தோடு இயைந்து போவார்கள். ஏற்காதவர்கள், இந்துக்களே ஆனாலும் மாறுபடுவார்கள்.
muslims-felicitate-modi
ஏற்காத இந்து அறிஞர், த்வைத மார்க்கத்தினை நம்புபவராக இருக்கலாம். உரையாடும்போது அதை அவரே வெளிப்படையாகச் சொல்லிவிட வேண்டும். அப்போது ஓர் இந்துவானவர், ஏன் இந்து மதப் புத்தகங்களில் இருந்து வேறுபடுகிறார் என்ற பின்னணி புரியும். அவரவர் வழி அவரவருக்கு. மாறுபடுவதால், ஜிஸியா வரி போடவேண்டியதில்லை. நரகத்திற்குப் போவார் எனத் தனிப்பட்ட அளவில் நம்ப வேண்டியதில்லை. இந்த மாறுபாட்டின் அடிப்படையில் சமூக அளவில் உயர்வு தாழ்வு போதிக்கப்பட வேண்டியதில்லை என்பது  மானுட உறவாடல்களின் மீது இந்து மதம் ஏற்படுத்திய முக்கியத் தாக்கங்களில் ஒன்று.
இந்து மத ஆன்மிக இலக்கியங்களில், குறிப்பிடும்படியான த்வைதத் தன்மை நிறைந்த விஷயங்கள் இருக்கின்றன. இஸ்லாமியர்கள் இந்துக்களிடம் இவற்றைச் சுட்டுகிறார்கள்.
சுட்டிக் காட்டும் அதே புத்தகத்தில் அத்வைதத் தன்மை நிறைந்த விஷயங்களும் இருக்கின்றன. அதே போல விஸிஷ்டாத்வைதமும் அதில் உண்டு. பேதா-அபேதவாதமும் உண்டு. புஷ்டிமார்க்கமும் உண்டு. இப்படி இருப்பதுதான் இந்து மதம்.
ஒரு தெருவின் ஒரு மூலையில் இருக்கும் ஒரு சிறிய செக்குமாட்டு எண்ணெய்க் கடையில் போய், பேனா வாங்க முடியாது. ஆனால், சந்தைக்குப் போனால் எண்ணையும் வாங்கலாம், பேனாவும் வாங்கலாம். இதுவரைக் கண்டறியாத புதிய பொருள்களையும் அறியலாம். இந்து மதம் தத்துவங்களின், நம்பிக்கைகளின், இலக்கியங்களின், சடங்குகளின் சந்தை. அங்கே எல்லாவகை மத விளக்கங்களும் கிடைக்கும்.
மற்றொரு சிறப்பும் இருக்கிறது. இந்தச் சந்தையில் ஒருவர் தனக்குப் பிடித்தமானதை வாங்கலாம். எதுவும் பிடிக்கவில்லை என்று வாங்காமலும் இருக்கலாம். சந்தைக்கே வராமலும் இருக்கலாம்.
ஒரு கடையை அந்தச் சந்தையில் திறந்து, இங்கே விற்பதற்கு எதுவும் இல்லை, வந்து வாங்கிக்கொள்ளுங்கள் என்றும்கூட அறிவிப்புப் பலகை தொங்கவிடலாம்.
janmashtamiஇந்தப் பன்மைத் தன்மையே இந்து மதமாக அறியப்படுகிறது. பன்மைத் தன்மைதான் இந்து மதம்.
இந்தச் சந்தையில் கிடைக்கும் பொருள்கள் குறித்த, அனுபவங்கள் குறித்த அறிதல்கள் ஒன்றோடு ஒன்று கலந்துரையாடும்போது சுவையான தகவல்கள், புதிய திறப்புகள் உருவாகின்றன. உண்மையைத் தேடும் வேட்கை உடையவர் புதிய திறப்புகளில் நுழைந்து சுவனத்தை அனுபவிக்கிறார்கள். சுவனப்பிரியனான ஓர் இஸ்லாமியரிடம் அந்த மேன்மையான குணம் இருக்கக் கூடும்.
நான் இதுவரை சொன்னவை ஓர் இஸ்லாமியர், இந்து மத இலக்கியங்கள் குறித்து எழுப்பும் கேள்விகளுக்கான நேரடிப் பதில்கள் இல்லை. ஆனால், பதில்கள் சொல்லப்படுவதற்கு முன்னர் சொல்லப்பட வேண்டியவை.

 ப்போது இந்து மத இலக்கியங்கள் குறித்து, இஸ்லாமியர் எழுப்பும் கேள்விகள் குறித்த பதில்கள்.
இந்து மத இலக்கியங்கள் இடுகுறிகள் (symbolism) நிறைந்தவை. (கம்பராமாயணம் போன்ற இதிகாச இலக்கியங்கள்கூட. கம்ப சூத்திரம் கேள்விப்பட்டிருப்பீர்கள்.) அங்கே இறை என்பதுகூட ஓர் அடையாளம் மட்டும்தான்.
அந்த இறை குறித்த விவரிப்புகள், வழிகாட்டுதல்கள் மட்டுமே. வழிகாட்டுதலைப் பயன்படுத்தி இறையை அறிந்தபின், சொல்லுக்கு அப்பாற்பட்டதாக அந்த அறிதல் அமைந்துவிடுகிறது.
ஆகவே, இந்து மதத்தில் வேதங்கள் கூட மட்டமானவையே. இறை அனுபவமே உயர்ந்தது. இறை அனுபவம் கொண்ட ஒருவரின் அணுக்கத்தில் வேதங்கள் வேண்டியதில்லை என இந்து மத ஆன்மிக இலக்கியங்களே, வேதங்களே சொல்லி விடுகின்றன.
islam_muslim_hindu_unityநிலவைச் சுட்டும் விரல்களே வேதங்கள். சுட்டுபவரின் வர்ணனை விரல் பற்றியதே. அவர் நோக்கம் நிலவு பற்றிய அனுபவத்தைப் பகிர்ந்துகொள்வது. அவர் நடத்தை அவரது அனுபவத்தை மற்றவரும் அடைந்தால் ஆனந்தம் கொள்வது.
“நான் எல்லாவற்றிலும் இருந்து வேறுபட்டவனாக இருக்கிறேன், மற்றவற்றை விலக்கி விட்டு என்னையே அறி” என பகவத் கீதையில் அல்லா சொல்லுவதுகூட புரிதலின் ஆரம்பத்தில் இருக்கும் மனிதனின் கவனத்தைத் தன் சுட்டுவிரல் நோக்கித் திருப்பும் விஷயமே.
அந்த இடுகுறிகள் பற்றிய புரிதலை நூல் தேர்ச்சி மட்டுமல்லாது, அவற்றுக்கேயான ஆன்மிகப் பயிற்சிகளோடு, அனுபவங்களோடு சேர்த்து அறிவதே ஒரு சரியான புரிதல் தரும்; ரிலேட்டிவிட்டி தியரம் போல; காதல் போல.
இரண்டாவதாக, இந்து மத இலக்கியங்களில் இறை குறித்துச் சொல்லப்படும், ”அவன் ஒருவனே” என்பதை இஸ்லாமியர் உள்ளிட்ட ஆபிரகாமியர் பலர், படைப்பில் இருந்து முற்றிலும் விலகிய “ஒருவன்” என்று புரிந்துகொள்கிறார்கள்.
ஆனால், அது “ஒருவன்” அல்ல. “ஒருமை”. அதாவது, One அல்ல; Oneness.
மேலும், இந்து மதப் புரிதலின்படி ஊழிக் காலத்துக்கு (இறுதி நாளுக்குப்) பின்னர் எஞ்சி இருப்பது இறை மட்டுமே. அந்த இறைக்குள் படைப்பும் உயிரினங்களும் ஒடுங்கிவிடுகின்றன. இந்து மதத்தில் உள்ள த்வைத மரபு உள்ளிட்ட அனைத்து மரபுகளும் இக்கருத்தைக் கொண்டிருக்கின்றன.
ஆனால், ஆபிரகாமிய மதங்களின் புரிதல் முற்றிலும் வேறுபட்டது. ஊழிக்குப் பின்னரும், படைப்புகள் படைத்தவனிடம் இருந்து வேறுபட்டே இருக்கின்றன.
எனவே, ஒரு த்வைத நம்பிக்கை உடைய ஓர் இந்துவின் படைப்பு குறித்த கேள்விக்கு, அத்வைத நம்பிக்கை உடைய ஓர் இந்து தரும் பதில் வேறு. அந்தப் பதில் த்வைத அணுகல் உள்ள ஓர் ஆபிரகாமிய நம்பிக்கையாளருக்கு அளிக்கப்படும் பதிலாகாது.
அதாவது, ஓர் ஆபிரகாமிய நம்பிக்கையாளரை  அவரது தளத்துக்குள் இருந்து உரையாடி, சனாதன தர்மம் குறித்த புரிதல்களை ஏற்படுத்திவிட முடியாது. முற்றிலும் வேறுபட்ட வேறு ஒரு தளமான, சனாதன தர்மத்துக்குள் ஆபிரகாமிய நம்பிக்கையாளரை அழைத்துச் சென்றுதான் புரிதலை ஏற்படுத்த முடியும்.
rss-and-indian-muslims
அதே சமயம் ஒரு சனாதன தர்மவாதி, ஆபிரகாமியத் தளத்திற்குள் நுழைந்து புரிதல்களைப் பெற முடியும். அவரைப் போல ஓர் ஆபிரகாமிய நம்பிக்கையாளரும், தன் தளத்தில் இருந்து விரிந்து சனாதன தர்மத் தளத்துக்குள் நுழைந்துதான் புரிதல்களைப் பெற முடியும்.
இப்போதைய நடைமுறை உறவாடல்களில், ஒரு விஷயம் எல்லாவற்றையும் விட முக்கியமாக நம்மைப் பாதிக்கிறது. தன் மதம் சரி என்று நிறுவ வேண்டும் எனும் அதீதமான ஆசையில் மற்ற மத நூல்களில் இல்லாதவற்றை இருப்பதாகச் சொல்லி ஆதரவு தேடும் போக்குத்தான் அது.
இந்தப் போக்கு எல்லா மதங்களிலும் இருக்கிறது. எல்லா மதங்களிலும் எல்லாவித மனிதர்களும் இருக்கிறார்கள்; முக்கியமாக அகங்காரம் மிகுந்தவர்கள்.
இவர்களே மதங்களின் தலைமைப் பதவியை விழைந்து பெறுகிறார்கள்.
இவர்கள் சொல்லும் மத விளக்கங்களில் வெளிப்படுவது இவர்களது அகங்காரங்களின் ஆபாச அனர்த்தங்களே.
hindu_islamic_jihad_poverty_peaceஇதைப் போன்ற அனர்த்தங்கள்தான் இஸ்லாமியர்களையும் அடைகின்றன. ரிக் வேதத்தில் இருப்பதாகவும் இதிகாச புராணங்களில் இருப்பதாகவும் தங்களுக்குத் தெரிவிக்கப்பட்டவற்றை அவர்கள் மேற்கோள் இடுகிறார்கள்.
பெரும்பாலும் அவர்கள் எடுத்துக் காட்டும் வரிகள் ரிக் வேதத்தில் இருப்பவை அல்ல. அவர்கள் வாசித்த புத்தகமே அந்த வரிகளை முதலில் உருவாக்கி இருக்கக் கூடும். அவர்கள் வாசித்த அந்த வரிகளின் கீழுள்ள “ருக் வேதம் (8:1:1) (10)” என்பது “ருக்கு பஷீரின் வேதம் (8:1:1) (10)” என்பதன் சுருக்கமாகவும் இருக்கலாம்.
இங்ஙனம் இல்லாதவற்றை இருப்பதாகச் சொல்லுவது, இருப்பவற்றைத் தவறாகத் திரிப்பது, தேர்ந்தெடுத்த வரிகளை மட்டும் எடுத்தாள்வது போன்றவை மதத்தன்மைக்கு எதிரானவை. ஆனால், மதத் தலைமைப் பீடாதிபதிகளுக்குப் பிரியமானவை.
இத்தகைய போக்கிற்கு எதிராகவே இந்து மதமானது ஓர் “அமைப்பு சாரா” மதமாக இருக்கிறது.
ஒரு மதம்,  “தன்னுடைய” மதமாக இருப்பதால் அந்த மதத்திற்கு ஆதரவு தேடும் போக்கு, தனிமனித அகங்காரத்தின் வெளிப்பாடே. அல்லா எனும் இறுதி உண்மையின்முன் அகங்காரம் அற்று இருந்தால்தான் அல்லா நம்மை ஏற்றுக்கொள்வான்.
இந்தியப் பார்வையில், தன் கருத்தை மற்றொரு மனிதனும் ஏற்றுக் கொள்ள வேண்டும் என விழைபவரே காஃபிர் ஆகிறார். அல்லா ஏற்றுக்கொள்ளும்படி தன்னை மாற்றிக்கொள்பவரே அல்லாவுக்குப் பிரியமானவர் ஆகிறார்.
முதல்வகை நபர் அடுத்தவரைத் திருத்த விழைகிறார்; இவர் அரசியல்வாதி. இரண்டாம் வகை நபர், தன்னைத் திருத்திக் கொள்ள விழைகிறார். இவர்தான் ஆன்மிகவாதி.
அகங்காரம் நிறைந்த ஒரு மௌல்வியைவிட, அகங்காரம் அற்ற சுவனப்பிரியர்களையே அல்லா சுவனத்தில் ஏற்றுக்கொள்வார் என்பது மதத்தன்மை மிகுந்த இஸ்லாமியரான உங்களுக்குத் தெரிந்ததுதான்.
அல்லா ஹோ அக்பர் !!    ஸத்யமேவ ஜயதே !!
இப்படிக்கு,ஒரு சனாதன தர்மவாதி.

No comments:

Post a Comment