Search This Blog

Friday, June 10, 2011

நைவேத்யம் (சிறுகதை)

நைவேத்யம் (சிறுகதை)

சரோஜா எழுந்திருக்கும் போது ஆறரை மணி ஆகி விட்டிருந்தது. அவள் அலாரம் எல்லாம் வைத்துக் கொள்வதில்லை. தினமும் சொல்லி வைத்த மாதிரி 'டான்' என்று ஆறு மணிக்கு முழிப்பு வந்து விடும்.இன்று தான் ஏனோ 'லேட்'.அவள் வீட்டில் கடிகாரம் எல்லாம் இல்லை..ஆறரை மணிக்கு பக்கத்து வீட்டு வள்ளியம்மா காய்கறி வண்டி 'வெங்காயம் தக்காளி முள்ளங்கி' என்று வழக்கமான பல்லவியுடன் கிளம்பியதும் தான் தனக்கு நேரமாகி விட்டது என்பதை உணர்ந்தாள் ..அவசர அவசரமாக குளிர்ந்த நீரில் முகத்தை அலம்பிக் கொண்டு கோபால் பல்பொடியில் பல் விளக்கி விட்டு மப்ளர் அணிந்து கொண்டு புறப்பட்டாள். அவள் கணவன் பாண்டி இன்னும் தூங்கிக் கொண்டிருந்தான். நாளெல்லாம் கை வண்டி இழுத்த அலுப்பா இல்லை ராத்திரி உள்ளே ஏற்றிய சரக்கின் மயக்கமா என்று அவளுக்கே சொல்வது கடினம்.

இரண்டு தெரு தள்ளி இருக்கும் அக்ரகாரத்துக்குள் நுழைந்தாள்..சரோஜாவுக்கு அக்ரகாரத்தில் பெயர் 'பாதி பிராமணத்தி' என்பது..இருபது வருடங்களாக அங்கே தான் அய்யர் வீடுகளில் பாத்திரம் தேய்ப்பது, துணி துவைப்பது, வாசல் தெளிப்பது என்று இவளுக்கு நிரந்தர வேலை..

அதிகாலை அக்ரகாரம் கொஞ்சம் சோம்பேறித் தனமாக விடிந்து கொண்டிருந்தது. வழக்கமாக மார்கழி மாதங்களில் தான் அங்கே காலை வேளைகள் சுறுசுறுப்புடன் விடியும்..சில மருமகப் பெண்கள் மாத்திரம் மாமியாருக்கு பயந்தோ என்னவோ ஒப்புக்கு வாசல் தெளித்து விட்டு ஆறுமுகக் கோலம் போட்டு விட்டு உள்ளே போனார்கள்.

சரோஜா 'ராகவேந்திரா சாமி' கோயிலை அடைந்து தொட்டியில் இருந்து நீரை அள்ளி வாசல் தெளித்தாள். கோலப் பொடியை அள்ளி தனக்குத் தெரிந்த மூன்று டிசைன்களில் ஒன்றை கோலமாகப் போட்டாள்.விளக்குமாறை எடுத்து சர் சர் என்று முற்றத்தை பெருக்கத் தொடங்கினாள்.

பின்னால் இருந்து நரசிம்மன் மாமாவின் குரல் கேட்டது

"என்ன சரோஜா, இன்னிக்கு லேட் ஆயிடுச்சு போல?"

அவள் அவசரமாகத் திரும்பி "ஆமாங்க சாமி..நேத்திக்கு திருப்பூர் போயிட்டு திரும்ப ராத்திரி பன்னண்டு ஆயிடுச்சு..பேச்சி ஊட்டுக் காரருக்கு கை முறிஞ்சு போய் கவருமெண்டு ஆஸ்பத்திரில இருக்காருல்ல " என்றாள்..

"அப்படியா? உனக்கு ஒண்ணு மாத்தி ஒண்ணு வந்துட்டே இருக்கு போ" என்றவர் பின்னர் "நாளைலே இருந்து மூணு நாளைக்கு நோம்பி..இன்னுக்கு ராத்திரியே பெரியய்யர் வீட்டுக்கு போய் சமையல் பாத்திரம் எல்லாம் எடுத்துட்டு வந்து வைச்சுடு " என்றார்..

அடுத்த மூன்று நாட்களுக்கு தேய்க்க வேண்டிய குண்டு குண்டு பாத்திரங்களை நினைக்கும் போது இப்போதே பயமாய் இருந்தது அவளுக்கு,...

சரோஜாவுக்கு ஐந்தும் பெண் பிள்ளைகள் தான். ஒரு பையன் இருந்திருந்தால் இப்படி வயதான காலத்தில் பத்துப் பாத்திரம் தேய்க்க விட்டிருக்க மாட்டானோ என்னவோ. ஐந்தையும் தன் சக்திக்கு மீறியே கல்யாணம் கட்டிக் கொடுத்திருக்கிறாள். புருஷன் ஒரு ஹிப்பி..
மொடாக்குடியன் ..மார்க்கெட்டில் கை வண்டி இழுப்பான்..மனசு இருந்தால் பணம் கொடுப்பான்..இல்லை என்றால் இல்லை.

பெண்களால் சரோஜாவுக்கு எப்போதும் பிரச்சினை தான்.ஒன்று மாற்றி ஒன்று வீட்டில் வந்து உட்கார்ந்து கொள்ளும். 'மாமியாக்காரி ரெண்டாயிரம் ரூபாய் கேக்கறா' 'அந்த மனுஷன் கீழ உழுந்து கால உடைச்சுக்கிட்டார் ' 'குழந்தைக்கு வயித்துல போகுது..தர்மாஸ்பத்திரிக்கு கூட்டிப் போணும்..' என்று 365 நாளும் பிரச்சனைகளுக்கா பஞ்சம் ? கோயிலிலும் அய்யர் வீடுகளிலும் மாதம் முழுவதும் பாத்திரங்களுடன் அவளும் தேய்ந்தால் தான் ஒரு மூன்றாயிரம் ரூபாய் கிடைக்கும். அதை வைத்து கொண்டு ஐந்து பெண்களின் பிரச்சனைகளைத் தீர்ப்பது அவளுக்கு பெரும்பாடாக இருந்தது.கோயில் ஆராதனை நாட்களில் மலை போல சமையல் பாத்திரங்களை தேய்த்து வைத்தால் நாள் ஒன்றுக்கு நூற்று ஐம்பது ரூபாய் கிடைக்கும்..அவ்வளவு தான்..இவ்வளவு பிரச்சனைகள் இருந்தாலும் ஒரு நாள் கூட அவள் சலித்துப் போய் உட்கார்ந்ததில்லை..புழுக்கமோ மழையோ குளிரோ காலை ஆறுமணிக்கெல்லாம் மப்ளர் கட்டிக் கொண்டு ராகவேந்திரா கோயிலுக்கு வாசல் தெளிக்க கிளம்பி விடுவாள். தினம் தினம் ராகவேந்திரரின் 'நிர்மால்ய தரிசனம்' இவளுக்கு தான் முதலில்...

அடுத்த நாள் ராகவேந்திர சுவாமிகளின் முதல் நாள் ஆராதனை தொடங்கியது. அந்த மூன்று நாள் மட்டும் அந்த கோயில் தனக்கு அன்னியமாகப் போய் விட்டதாக அவளுக்குத் தோன்றும்.எத்தனையோ நாள் தரை துடைக்கும் போது சாமியுடன் அவள் தனிமையில் உரையாடி இருக்கிறாள். அவளுக்கு ஸ்ரீ மத்வாச்சாரியாரின் த்வைத சித்தாந்தம் எல்லாம் தெரிந்திருக்க வாய்ப்பு இல்லை தான்,, படித்தது மூன்றாம் வகுப்பு..நான்காம் வகுப்புக்கு கட்டணம் கட்ட ரெண்டு ரூபாய் இல்லாததால் படிப்பை நிறுத்தி விட்டார் அவள் அப்பா. இப்படி இருக்கும் போது அவள் சாமியிடம் 'பஞ்ச பேத தார தம்யங்களை ' பற்றி எல்லாம் பேச முடியுமா என்ன? ஸ்ரீ ராகவேந்திரர் மற்றும் பின்னணியில் கோபால கிருஷ்ணர் குடிகொண்டிருக்கும் அந்த கோயிலில் அவள் வேண்டுதல் எல்லாம் இது தான் :"சாமி எல்லாரையும் நல்ல படியா காப்பாத்து , என் உசுரு போச்சுன்னா அது உன் கோயில் வாசல் தெளிக்கறப்பவே போகட்டும்..படுக்கையில படுத்து நாலு பேருக்கு கஷ்டம் கொடுக்கற நெலைமை எனக்கு வேண்டாம் சாமி' என்பது தான்..

மற்ற நாட்களில் நேரடியாகவே கோயிலுக்குள் அனுமதிக்கப்படும் அவள் அந்த ஆராதனை நாட்களில் மட்டும் கோயிலுக்கு இடப்புறம் உள்ள சந்து வழியாகவே கோயிலுக்கு பின்புறம் செல்ல வேண்டும் .பஞ்ச கச்சம் கட்டிக் கொண்டு உடம்பு முழுவதும் நாமம் தரித்துக் கொண்டு 'தாரி பிடி , தாரி பிடி ' (வழி விடுங்கள்) என்று அதட்டிக் கொண்டு ஆஜானுபாகுவாக எதிர்ப்படும் பிராமணர்களைப் பார்த்தாலே அவளுக்கு சப்த நாடியும் ஒடுங்கி விடும். சில சமயம் அவள் நினைத்துப் பார்ப்பதுண்டு "சாமிக்கு முன்னே ஏன் இவ்வளவு வேறுபாடு? இத்தனை நாள் எட்டிக் கூடப் பார்க்காமல் எங்கிருந்தோ மூன்று நாள் கூத்துக்காக வந்து இறங்கும் இந்த மனிதர்களுக்கு ராஜ மரியாதை..தினமும் கோயிலை சுத்தம் செய்து அதை தூசி படியாமல் பார்த்துக் கொள்ளும் இவள் மட்டும் தீண்டத் தகாதவள் மாதிரி சந்து வழியே உள்ளே வர வேண்டும்! ஆனால் இதை எல்லாம் அவள் பெரிதாக எடுத்துக் கொள்வதே இல்லை..ஒன்பது வித பக்திகளில் வாசல் தெளிப்பது, கோயில் சமையல் பாத்தரம் கழுவுவது இவையெல்லாம் இடம் பெறாவிட்டாலும் அவைகள் தான் அவளது பிராத்தனைகள்..வழிபாடுகள்..ஆம் அவளது உலகம் ரொம்ப சிறியது.

முதல் நாள் விழா இனிதே முடிந்தது. கோயில் கொஞ்சம் சிறியது என்பதால் மூன்று பந்திகள் முடியவே நாலு மணி ஆகி விட்டது. சாயங்காலம் ஐந்து மணிக்கெல்லாம் பாத்திரம் தேய்க்க கிளம்பி விட்டாள் சரோஜா. கூடவே ரெண்டு பேர் 'அச்சிஸ்டன்ட்கள் ' ..குவிந்திருந்த பாத்திரங்களைப் பார்த்த போது அவளுக்கு மலைப்பாக இருந்தது..இது அவளுக்கு ஒன்றும் பெரிதில்லை தான்.இருபது வருட வாடிக்கை.. 'வக வககா புஜியிஞ்சி' ! என்பதற்கேற்ப மனிதனின் அகோரப்பசியை ஒரு முறை நினைத்துப் பார்த்தாள் அவள் ..விறகு அடுப்பில் எரிந்து புடம் கருத்த பெரிய பெரிய பித்தளைப் பாத்திரங்கள்..சாம்பார், ரசம், பொரியல்,மோர் பரிமாறிய பக்கெட்டுகள், சாதம் வடித்த காது வைத்த அண்டாக்கள், இனிப்பு பரிமாறிய தட்டுகள், என்று எல்லாவற்றையும் தேய்த்து முடிக்க மூன்று மணி நேரம் ஆனது. இதில் கொடுமை என்னவென்றால் சில நேரங்களில் அத்திக்கடவு தண்ணீர் விடவில்லை என்றால் கோயில் கிணற்றில் நீர் இறைத்து பாத்திரம் கழுவ வேண்டும்..நல்ல வேளை இந்த முறை ஒரு தொட்டி நிரம்ப தண்ணீர் இருந்தது.கழுவி வைத்ததும் மறு நாள் அவற்றின் மீது 'மடித் தண்ணீர்' ஊற்றி மீண்டும் சமையலுக்குப் புழங்குவார்கள்..

எட்டு மணிக்கு வேலை முடிந்ததும் ஏதாவது மீந்து போனது இருக்கிறதா என்று சரோஜா நரசிம்மன் மாமாவைப் போய்க் கேட்டாள்.. கடைசி பந்தி முடிந்ததுமே அய்யர்மார்கள் எல்லாம் படையெடுத்து வந்து எல்லாவற்றையும் அள்ளிக் கொண்டு போய் விட்டார்களாம்.. அதுவும் அப்பளம் போட்ட பாயாசம் என்று ஒன்று இருக்கிறது. (அப்பள கரெத பாய்ஸ) அது எவ்வளவு தான் செய்தாலும் இருந்த இடம் தெரியாமல் நிமிடத்தில் காணாமல் போய் விடும். பிராமணர்களின் சாதுர்மாஸ்ய விரதம் முடிந்து விடுவதால் ராகவேந்திரரின் ஆராதனைக்கு விதம் விதமாக சமைத்து சாப்பிடுவார்கள்.மூன்று வருடங்களுக்கு முன்பு ஒரு முறை பங்கஜம் மாமி ஊரில் இல்லை..அவள் இருந்தால் அவள் எடுத்துக் கொண்டது போக தான் எல்லாருக்கும் கிடைக்கும் .கடைசி பந்தி மோர் ஊற்றிக் கொண்டிருக்கும் போதே பின் பக்கமாக யாருக்கும் தெரியாமல் அயிட்டங்கள் அவள் வீட்டுக்கு 'நைசாகக்' கடத்தப்படும் ..எனவே பங்கஜம் இல்லாததால்
அன்று மட்டும் சரோஜாவுக்கு நிறைய மீந்தது கிடைத்தது. போண்டா மாதிரி ஏதோ ஒன்று போட்ட மோர்க்குழம்பு,ஐகிரிமெண்டி எனப்படும் ஒரு வித இனிப்பு.கோசம்பரி, எல்லாம் கிடைத்தது. அதை டேஸ்ட் பண்ணிப் பார்த்த சரோஜா அசந்து போய் விட்டாள். அய்யர் வீட்டு சமையல் என்றால் அது தனி தான்.. 'எப்படியெல்லாம் விதம் விதமான ரசனையுடன் மனிதர்கள் சாப்பிடுகிறார்கள்? அவளுக்கு வாய்த்தது ரேஷனில் போடும் ஒரு ரூபாய் அரிசியும் பழைய கஞ்சியும் தான்..அக்ரகாரத்தில் வேலை செய்ய ஆரம்பித்ததில் இருந்து அவள் நான்-வெஜ்ஜையும் தொடுவதில்லை! பாண்டி தான் சில சமயங்களில் எங்கிருந்தோ கோழி பிடித்துக் கொண்டு வந்து அவனே குழம்பு வைத்து சாப்பிடுவான்.

இரண்டாம் நாள் உற்சவம் ...

இந்த மூன்று நாள் சரோஜா கோலம் போட வேண்டியது இல்லை..மற்ற நாட்களில் எட்டிப் பார்க்காத மாமிகள் அன்று மட்டும் வாசல் தெளித்து பெரிய பெரிய கோலங்கள் போட்டு செம்மண் பார்டர் இடுவார்கள்..

ஒன்பது மணி சுமாருக்கு சரோஜாவின் மூன்றாவது மகள் பேச்சி வீட்டுக்கு வந்திருந்தாள். கூடவே தன் இரண்டு வயது மகனையும் கூட்டி வந்திருந்தாள். இவள் கணவன் தான் கை உடைந்து ஆஸ்பத்திரியில் கிடக்கிறான்...

"அவருக்கு தேவலையா?" என்று கேட்டாள் சரோஜா

"எங்க..தர்மாஸ்பத்திரின்னு தான் பேரு..அங்கேயும் காசு அழவேண்டி இருக்கு..இந்த ஆம்பிளைக்கு ஸ்கூட்டர் ஒட்டலைன்னு யார் அழுதா? சைக்கிள்லையே ------- ட்டு போய் வரவேண்டியது தானே? தோஸ்து வண்டிய வாங்கி ஓட்டிப் பாத்துட்டு இப்ப கையும் முறிஞ்சு அந்த ஆளு வேற வண்டி வீல் மாத்த ஆயிரம் ரூபா கேக்கறான்..ஆத்தா உன்கிட்ட ஒரு ஆயிரம் இருக்குமா?
கோயில் அய்யர் கிட்ட அட்வான்ஸ் வேனா வாங்கி குடேன் " என்றாள் பேச்சி

சரோஜா எதுவும் பேசவில்லை..பட்டினி கிடந்தாலும் கடன் வாங்கக் கூடாது என்பது அவள் பாலிசி.."மழக் காலம் ஆரம்பமாயிருச்சு பேச்சி ..ஓடு வேற மாத்தணும்..வீடு கண்டமேனிக்கு ஒழுகுது " என்றாள் சூசகமாக

"சரி ஆத்தா..உன்னையும் கஷ்டப்படுத்த எனக்கு மனசு கேக்கலை..அதான் ராயர்பாலயத்துல சித்தாள் வேலைக்கு போகலாம்னு கெளம்பி வந்தேன்..பொழுது சாஞ்சதும் வந்து இவனை கூட்டிக்கிட்டு போறேன்..ஒரு பன்னு வாங்கித் தந்தா அலுங்காம உட்காந்திருப்பான்" என்று சொல்லி விட்டு பேச்சி கிளம்பினாள்

அந்த இரண்டு வயது சிறுவன் தன் அம்மாச்சியைப் பார்த்து புன்னகைத்தான்..அழுக்கேறிய சட்டையில் நடுபட்டன் மாத்திரம் போடப்பட்டிருந்தது. எண்ணெய் காணாத தலை..கோயிலில் பட்டுக் கச்சை கட்டிக் கொண்டு இங்கும் அங்கும் ஓடும் ஐயர் குழந்தைகளை ஒரு முறை அவள் நினைத்துப் பார்த்துக் கொண்டாள்..

காலை பதினொரு மணி வரை அவன் அழாமல் சமர்த்தாக இருந்தான்

பன்னிரண்டு மணிக்கு சரோஜாவுக்கு நரசிம்மன் மாமா ஆள் விட்டு அனுப்பினார்...வீட்டைப் பூட்டிக் கொண்டு குழந்தையை தூக்கிக் கொண்டு அவசர அவசரமாக கோயிலுக்கு வந்து சேர்ந்தாள்.கோயிலில் பஜனை சத்தம் காதை அடைத்தது..

"இன்னிக்கு கூட்டம் ஜாஸ்தி போல இருக்கு...பரிமாற பாத்திரம் பத்தாது..பெரியய்யர் வீட்ல இருந்து இன்னும் ஏழெட்டு பாத்திரம் கொண்டு வரணும்..கொஞ்சம் மேலாப்புல தேச்சுக் கொடுத்துடு" என்றார் நரசிம்மன் மாமா

வரும் வழியில் அய்யனார் (அவள் பேரன்) அழ ஆரம்பித்தான்..பசி போலிருக்கிறது..அண்ணாச்சி கடையில் பன் வாங்கலாம் என்று தன் சுருக்குப் பையை திறந்தாள்..அவள் கணக்குப் படி அதில் இருபது ரூபாய் இருக்க வேண்டும்..ஆனால் பை காலியாக இருந்தது..குடிகாரப் புருஷன் அதையும் நேற்று இரவு காலி செய்து விட்டிருக்கிறான்...

குழந்தையை எப்படியோ சமாதானப் படுத்தி சந்து வழியாக கோயில் பின்புறம் வந்தாள்..குழந்தை பசியில் இப்போது ஜோராக அழ ஆரம்பித்தான்..அவளுக்கு என்ன செய்வது என்று தெரியவில்லை..
சுருக்குப் பையில் எப்போதோ போடப்பட்டு கிடந்த சாக்லேட் ஒன்று அவன் பசிக்கு போதுமானதாக இல்லை...பாத்திரங்களை ஒரு முறை கழுவி விட்டு சமையல் கட்டுக்கு முன்னர் கவிழ்த்து வைத்தாள்..குழந்தை வீறிட்டு அழ ஆரம்பித்தது ..பின் பக்கம் ஒரு ஜீவன் கூட எட்டிப் பார்க்கவில்லை..

சமையல் அறை ஜன்னல் வழியே எதேச்சையாக எட்டிப் பார்த்தாள் சரோஜா. எல்லா அயிட்டங்களும் சமைக்கப்பட்டு பரிமாறுவதற்குத் தயாராக ஆவி பறக்க வைக்கப்பட்டிருந்தன.உள்ளே ஒருவர் கூட இருக்கவில்லை.சமையல் காரர்கள் எல்லாரும் மஹா மங்களாரத்தி பார்க்க போயிருக்கிறார்கள்.. அப்போது சரோஜா துணிந்து ஒரு காரியம் செய்தாள்.
சுற்று முற்றும் பார்த்து விட்டு சமையல் அறைக்குள் நுழைந்தாள். ஒரு வினாடி கண்களை மூடி மேலே பார்த்து கன்னத்தில் போட்டுக் கொண்டு ஒரு தட்டில் வைக்கப் பட்டிருந்த ஆம்படைகளில் (பருப்பு வடை)
நான்கைந்து அள்ளினாள்...அவள் இதயம் நிமிடத்திற்கு ஆயிரம் முறை துடித்துக் கொண்டு வெளியே சிதறி விடும் போல் இருந்தது..படு விரைவாக வெளியே ஓடி வந்து குழந்தையின் கைகளில் அவற்றைத் திணித்தாள்..குழந்தை இப்போது சிரித்தது..
யாராவது பார்த்திருந்தால் அங்கே ஒரு கொலையே விழுந்திருக்கும்..ஆராதனைக்கு வந்திருந்த பண்டிதர்கள் அபச்சாரம் நேர்ந்து விட்டது என்று பஸ் ஏறி இருப்பார்கள் !

கோயிலின் உள்ளே ஒரு வயது முதிர்ந்த உபன்யாசகர் 'நைவேத்தியத்தின்' சிறப்பு பற்றி பேசிக் கொண்டிருந்தார்.. எல்லாரும் சீரியஸான முகங்களுடன் அதைக் கேட்டுக் கொண்டிருந்தனர்.

"பகவத் பூஜையில் நைவேத்யம் ஒரு முக்கிய அம்சம்...பகவானுக்கு படைக்காமல் நாம் சாப்பிடுவது மிகப் பெரிய அபசாரம்..அவர்களுக்கு நிச்சயம் நரகம் தான்..பகவான் தான் நமக்கு எல்லாம் கொடுக்கிறான் ஆனாலும் அவனுக்கு ஏன் நாம்
நைவேத்யம் செய்ய வேண்டும் என்றால் குழந்தைக்கு தாய் சாதம் ஊட்டும் போது அந்தக் குழந்தை தன் பிஞ்சுக் கரங்களால் அதையே எடுத்து அம்மாவுக்கு ஊட்டினால் அவள் எவ்வளவு ஆனந்திப்பாள் ? அது மாதிரி தான் நாம் நிவேதனம் செய்யம் போது பகவான் ப்ரீதியாகிறான். நைவேத்யம் செய்வதற்கு முன் பகவானுக்கு முன்புறம் பசுவின் சாணத்தால்
சுதுரமான இரண்டு மண்டலங்கள் செய்து அதில் ஸ்ரீ: என்று எழுதி ஒன்றின் மீது சமையல் செய்த பதார்த்தங்களையும் மற்றொன்றின் மீது சுத்தமான ஜலம், நெய் , வெற்றிலை பாக்கு ,தேங்காய் இவைகளை வைத்து அவைகளுக்கு நெய்யினால் அபிகாரம் செய்ய வேண்டும். துளசியுடன் தான் பகவானுக்கு
நைவேத்யத்தை சமர்ப்பிக்க வேண்டும்.நைவேத்திய காலத்தில் ஸ்ரீமன் மத்வாசாரியாரால் இயற்றப்பட்ட த்வாதச ஸ்தோத்திரங்களை தவறாமல் சொல்ல வேண்டும்.சுத்தமான ஜலத்தை சங்கத்தில் போட்டுக் கொண்டு துளசி தளங்களுடன் ஓம் நமோ நாராயணாய என்று எட்டு முறை ஜபித்து சங்கில் உள்ள ஜலத்தால் நைவேத்ய பதார்த்தங்களுக்கு ப்ரோக்ஷனம் செய்ய வேண்டும்..பிறகு கருட, தேனு முத்திரைகளைக் காட்ட வேண்டும். பிராணனுக்கு அதிபதியான அநிருத்தனையும் , அபானனுக்கு அதிபதியான பிரத்யும்னனையும் உதானனுக்கு அதிபதியான வாசுதேவனையும் மந்திரங்களால் ஜபிக்க வேண்டும்.. ஓம் நமோ நாராயணாய ஓம் அன்னாதி நைவேத்யம் சமர்பயாமி என்ற மந்திரத்தை உச்சரித்து மேல் வஸ்திரத்தினால்முகத்தை மூடிக் கொண்டு ஓம் நமோ நாராயணாய ஓம் என்று 12 முறை ஜபிக்க வேண்டும். இந்த ஜப காலத்தில் பகவான் போஜனம் செய்வதாக பாவிக்க வேண்டும். பகவானுக்கு நைவேத்யம் ஆனதும் தாரதம்யத்தின் படி லக்ஷ்மி, முக்யப்ப்ராணர், பின்னர் ராயருக்கு என்று நைவேத்யம் வைத்து பின்னர் பிராமணோத்தமர்கள் சாப்பிட்ட பின்னரே நாம் புஜிக்க வேண்டும்.."

கர்ப்ப கிரகத்தில் இருக்கும் பகவான் கிருஷ்ணனுக்கு இந்த சலிப்பூட்டும் உபன்யாசங்களிலும் , நைவேத்யம் செய்வதற்கான நீண்ட நெடிய வழிமுறைகளிலும் விருப்பம் இல்லை போலும்..அவன் கோயிலை விட்டு வெளியேறி கொல்லைப் புறத்தில் கை நிறைய பருப்பு வடைகளுடன் ஒரு பூனைக் குட்டியை துரத்திப் பிடித்து விளையாடிக் கொண்டிருந்தான்..


முத்ரா

No comments:

Post a Comment