இன்னும் மூஸா தம் பணியாளிடம், “இரு கடல்களும் சேரும் இடத்தை அடையும் வரை நீங்காது நடப்பேன்; அல்லது வருடக் கணக்கில் நான் போய்க்கொண்டிருப்பேன்” என்று கூறியதை நீர் நினைவு படுத்துவீராக.
(அல்குர்ஆன் : 18:60)
அவர்கள் இருவரும் அவ்விரணடு (கடல்களு)க்கும் இடையே ஒன்று சேரும் இடத்தை அடைந்த போது; அவ்விருவருடைய மீனை அவ்விருவரும் மறந்து விட்டனர்; அது கடலில் தன்னுடைய வழியைச் சுரங்கம் போல் அமைத்துக்கொண்டு (நீந்திப் போய்) விட்டது.
(அல்குர்ஆன் : 18:61)
அவ்விருவரும், அப்புறம் அந்த இடத்தைக் கடந்த போது, தம் பணியாளை நோக்கி, “நம்முடைய காலை ஆகாரத்தைக் கொண்டுவா; இந்த நம் பிரயாணத்தில் நிச்சயமாக நாம் களைப்பைச் சந்திக்கிறோம்” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:62)
அதற்கு “அக்கற்பாறையில் நாம் தங்கிய சமயத்தில் நீங்கள் பார்த்தீர்களா? நிச்சயமாக நான் மீனை மறந்து விட்டேன்.” மேலும், அதை (உங்களிடம்) சொல்வதை ஷைத்தானையன்றி (வேறு எவனும்) என்னை மறக்கடிக்கவில்லை; மேலும் அது கடலுக்குள் தன் வழியை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது!” என்று பணியாள் கூறினார்.
(அல்குர்ஆன் : 18:63)
(அப்போது) மூஸா, “நாம் தேடிவந்த (இடம் அ)துதான்” என்று கூறி, இருவரும் தம் காலடிச் சுவடுகளைப் பின்பற்றி (வந்தவழியே) திரும்பிச் சென்றார்கள்.
(அல்குர்ஆன் : 18:64)
(இவ்வாறு) அவ்விருவரும் நம் அடியார்களில் ஒருவரைக் கண்டார்கள்; நாம் அவருக்கு நம்மிடமிருந்து கிருபை அருளியிருந்தோம்; இன்னும் நாம் அவருக்கு நம்மிடமிருந்து கல்வி ஞானத்தையும் கற்றுக் கொடுத்திருந்தோம்.
(அல்குர்ஆன் : 18:65)
“உங்களுக்குக் கற்றுக் கொடுக்கப்பட்ட நன்மையானவற்றை நீங்கள் எனக்குக் கற்பிக்கும் பொருட்டு, உங்களை நான் பின் தொடரட்டுமா? என்று அவரிடம் மூஸா கேட்டார்.
(அல்குர்ஆன் : 18:66)
(அதற்கவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலமாட்டீர்!” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 18:67)
“(ஏனெனில்) எதைப் பற்றி உமக்கு முழுமையான ஞானம் இல்லையோ, அதில் நீர் எவ்வாறு பொறுமையாயிருப்பீர்!” (என்று கேட்டார்.)
(அல்குர்ஆன் : 18:68)
(அதற்கு) மூஸா, “இன்ஷா அல்லாஹ்! நான் பொறுமையுள்ளவனாகவும், எவ்விஷயத்திலும் உமக்கு மாறு செய்யாதவனாகவும் நான் இருப்பதை நீங்கள் விரைவில் காண்பீர்கள்” என்று (மூஸா) சொன்னார்.
(அல்குர்ஆன் : 18:69)
(அதற்கு அவர்) “நீர் என்னைப்பின் தொடர்வதாயின், எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் - நானாகவே அதைப்பற்றி உமக்கு அறிவிக்கும் வரை - நீர் என்னிடம் கேட்கக் கூடாது” என்று சொன்னார்.
(அல்குர்ஆன் : 18:70)
பின்னர் இருவரும் ஒரு மரக்கலத்தில் ஏறும் வரையில் நடந்து சென்றனர், (மரக்கலம் கடலில் செல்லலானதும்;) அவர் அதில் ஓர் ஓட்டையைப் போட்டார்; “இதிலுள்ளவர்களை மூழ்கடிக்கவா நீங்கள் இதில் ஓர் ஓட்டையைப் போட்டீர்கள்? நிச்சயமாக நீங்கள் ஓர் (அபாயகரமான) பெருங் காரியத்தைச் செய்துவிட்டீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:71)
(அதற்கு அவர்,) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையைக் கடைப்பிடிக்க முடியாது என்று உமக்கு நான் சொல்லவில்லையா? என்றார்.
(அல்குர்ஆன் : 18:72)
“நான் மறந்து விட்டதைப் பற்றி நீங்கள் என்னை(க் குற்றம்) பிடிக்க வேண்டாம்; இன்னும் என் காரியத்தைச் சிரமமுடையதாக ஆக்கி விடாதீர்கள்” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:73)
பின்னர் (மரக்கலத்திலிருந்து இறங்கி) இருவரும் வழி நடக்கலானார்கள்; (வழியில்) ஒரு பையனை அவ்விருவரும் சந்தித்த போது, அவர் அவனைக் கொன்று விட்டார். (உடனே மூஸா) “கொலைக்குற்றமின்றி, பரிசுத்தமான ஜீவனைக் கொன்றுவிட்டீர்களே? நிச்சயமாக நீங்கள் பெருத்தக் கேடான ஒருகாரியத்தையே செய்து விட்டீர்கள்!” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:74)
(அதற்கு அவர்) “நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாக இருக்க இயலாது என்று உமக்கு நாம் சொல்லவில்லையா?” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 18:75)
இதன் பின்னர் நான் எந்த விஷயத்தைப் பற்றியாவது உங்களிடம் கேட்பேனாயின் நீங்கள் உங்கள் தோழனாக வைத்துக் கொள்ள வேண்டாம் - நிச்சயமாக நீங்கள் என்னிடமிருந்து தக்க மன்னிப்புக் கோருதலைப் பெற்றுக் கொண்டீர்கள்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 18:76)
பின்னர் அவ்விருவரும் வழி நடந்து, இருவரும் ஒரு கிராமத்தாரிடம் வந்து சேர்ந்தார்கள்; தங்களிருவருக்கும் உணவு தருமாறு அந்த கிராமத்தாரிடம் கேட்டார்கள்; ஆனால் அவ்விருவருக்கும் விருந்தளிக்க அவர்கள் மறுத்து விட்டார்கள்; அப்போது அங்கே இடிந்து அடியோடு விழும் நிலையிலிருந்த ஒரு சுவரை அவ்விருவரும் கண்டனர்; ஆகவே, அவர் (சரிசெய்து) நிமிர்த்து வைத்தார். (இதைக் கண்ட மூஸா) “நீங்கள் நாடியிருந்தால் இதற்கென ஒரு கூலியை பெற்றிருக்கலாமே” என்று (மூஸா) கூறினார்.
(அல்குர்ஆன் : 18:77)
“இது தான் எனக்கும், உமக்குமிடையே பிரிவு(க்குரிய நேரம்) ஆகும்; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ, அதன் விளக்கத்தையும் (இப்பொழுதே) உமக்குத் திட்டமாக அறிவித்து விடுகிறேன்” என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் : 18:78)
“அம்மரக்கலம் கடலில் வேலை செய்யும் ஏழைகள் சிலருக்குச் சொந்தமானது; எனவே நான் அதை (ஓட்டையிட்டு)ப் பழுதாக்க விரும்பினேன்; (ஏனெனில்) அவர்களுக்குப் பின்னால் (கொடுங்கோலனான) ஓர் அரசன் இருந்தான்; அவன் (பழுதில்லா) மரக்கலங்களையெல்லாம் பலவந்தமாக எடுத்துக் கொள்கிறான்.
(அல்குர்ஆன் : 18:79)
“(அடுத்து) அந்த சிறுவனுடைய தாய், தந்தையர் இருவரும் முஃமின்களாக இருக்கிறார்கள்; அவன் (வாலிபனாகி) அவ்விருவரையும் வழிகேட்டிலும், குஃப்ரிலும் சேர்த்து விடுவான் என்று நாம் பயந்தோம்.
(அல்குர்ஆன் : 18:80)
“இன்னும், அவ்விருவருக்கும், பரிசுத்தத்திலும் (பெற்றோரிடம்) அன்பு செலுத்துவதிலும் சிறந்திருக்க கூடிய (ஒரு மகனை) அவ்விருவருடைய இறைவன் (கொலையுண்டவனுக்குப்) பதிலாக கொடுப்பதை நாம் விரும்பினோம்.
(அல்குர்ஆன் : 18:81)
“இனி: (நான் நிமிர்த்து வைத்த) அந்த சுவர் அந்தப் பட்டிணத்திலுள்ள அநாதைச் சிறுவர் இருவருக்குரியது; அதன் அடியில் அவ்விருவருக்கும் சொந்தமான புதையல் உள்ளது; அவ்விருவருடைய தந்தை (ஸாலிஹான) நல்ல மனிதராக இருந்தார்; எனவே, அவ்விருவரும் தக்க பிராயமடைந்த தம்மிருவரின் புதையலையும் வெளிப்படுத்தி (எடுத்துக்) கொள்ள வேண்டும் என உம்முடைய இறைவன் நாடினான். (இவையெல்லாம்) உம் இறைவனுடைய ரஹ்மத்தில் நின்றும் உள்ளவை; என் விருப்பு, வெறுப்பின்படி எந்தக் காரியத்தையும் செய்யவில்லை; எதைப் பற்றி நீர் பொறுமையாக இருக்க முடியவில்லையோ அதன் விளக்கம் இது தான்” என்று கூறினார்.
(அல்குர்ஆன் : 18:82)
(ஹிள்ர்(அலை) அவர்களைச் சந்தித்த) மூஸா அலை அவர்கள், இஸ்ராவேலர்களின் நபியாக அனுப்பப்பட்ட மூஸா அல்லர்; அவர் வேறு மூஸா' என்று நவ்ஃபுல் பக்காலி என்பவர் கருதிக் கொண்டிருக்கிறாரே என்று இப்னு அப்பாஸ்(ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் 'இறைவனின் பகைவராகிய அவர் பொய் கூறுகிறார். எங்களுக்கு உபய்யுபின் கஅபு(ரலி), நபி(ஸல்) கூறினார்கள் என அறிவித்தாவது: (இறைவனின்) தூதராகிய மூஸா(அலை) அவர்கள் இஸ்ரவேலர்களுக்கிடையே உரையாற்ற நின்றார்கள். அப்போது 'மக்களில் பேரறிஞர் யார்?' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அதற்கு, தாமே பேரறிஞன் என்று அவர்கள் பதில் கூறிவிட்டார்கள். அவர்கள் இது பற்றிய ஞானம் அல்லாஹ்வுக்கே உரியது என்று கூறாதததால் அல்லாஹ் அவர்களைக் கண்டித்து, 'இரண்டு கடல்கள் சங்கமமாகும் இடத்தில் என் அடியார்களில் ஒருவர் இருக்கிறார். அவர் தாம் உம்மை விடப் பேரறிஞர்' என்று அவர்களுக்குச் செய்தி அறிவித்தான். அதற்கவர்கள் 'என் இறைவனே! அவரை நான் சந்திக்க என்ன வழி?' என்று கேட்டார்கள். 'கூடை ஒன்றில் ஒரு மீனைச் சுமந்து (பயணம்) செல்வீராக! அம்மீனை எங்கே தொலைத்து விடுகிறீரோ அங்கேதான் அவர் இருப்பார்' என்று அவர்களிடம் கூறப்பட்டது. உடனே அவர்கள் தம் பணியாளான யூஷஃ இப்னு நூன் என்பாருடன் ஒரு மீனைக் கூடையில் சுமந்து கொண்டு நடக்க ஆரம்பித்தார்கள். (நெடு நேரம் நடந்த களைப்பில்) இருவரும் ஒரு பாறையை அடைந்ததும் படுத்து உறங்கிவிட்டார்கள். உடனே கூடையிலிருந்த மீன் மெல்ல நழுவி கடலில் தன் வழியே நீந்திப் போக ஆரம்பித்துவிட்டது. (மீன் காணாமல் போனது மூஸாவுக்கும் அவரின் பணியாளுக்கும் வியப்பளித்தது. அவ்விருவரும் அன்றைய மீதிப்போது முழுவதும் நடந்து போய்க் கொண்டே இருந்தார்கள். பொழுது விடிந்ததும் (அது வரை களைப்பை உணராத) மூஸா(அலை) தம் பணியாளரிடம், 'இந்தப் பயணத்தின் மூலம் நாம் (மிகுந்த) சிரமத்தைச் சந்தித்து விட்டோம். எனவே நம்முடைய காலை உணவை எடுத்து வா?' என்றார்கள். (சந்திப்பதற்காகக்) கட்டளையிடப்பட்டிருந்த இடத்தைத் தாண்டும் வரை எந்த விதச் சிரமத்தையும் அவர்கள் உணரவில்லை. அப்போது பணியாளர் அவர்களிடம் 'பார்த்தீர்களா? நாம் அந்தப் பாறையில் தங்கியிருந்தபோது (தான் அந்த மீன் ஓடியிருக்க வேண்டும்) நானும் மீனை மறந்து விடடேன்' என்றார். '(அட!) அது தானே நாம் தேடி வந்த இடம்' என்று மூஸா(அலை) அவர்கள் கூறிவிட்டு, இருவருமாகத் தம் காலடிச் சுவடுகளைப் பின்தொடர்ந்தவர்களாய் (வந்தவழியே) திரும்பி வந்து கொண்டிருந்தார்கள். இருவரும் அந்தக் குறிப்பிட்ட பாறையைச் சென்றடைந்ததும் ஆடை போர்த்தியிருந்த ஒரு மனிதரைக் கண்டார்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் (அம்மனிதருக்கு) ஸலாம் கூறினார்கள். அப்போது ஹிள்ர் அவர்கள் 'உம்முடைய ஊரில் ஸலாம் (கூறும் பழக்கம்) ஏது?' என்று கேட்டார்கள். 'நான்தான் மூஸா' என்றார்கள். 'இஸ்ரவேலர்களுக்கு நபியாக அனுப்பப்பட்ட மூஸாவா?' என ஹிள்ர் அவர்கள் கேட்டார்கள். அதற்கு 'ஆம்!' என்று கூறினார்கள். 'உமக்கு (இறைவனால்) கற்றுத் தரப்பட்டதிலிருந்து எனக்குக் கற்றுத் தருவதற்காக உம்மை நான் பின்பற்றி வரட்டுமா?' என்று கேட்டார்கள். ஹிள்ர் (அலை) அவர்கள், 'நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர்! மூஸாவே! இறைவன் தன்னுடைய ஞானத்திலிருந்து எனக்குக் கற்றுத் தந்தது எனக்கிருக்கிறது. அதனை நீர் அறிய மாட்டீர். அவன் உமக்குக் கற்றுத் தந்திருக்கிற வேறொரு ஞானம் உமக்கிருக்கிறது. அதனை நான் அறிய மாட்டேன்' என்று கூறினார். அதற்கு மூஸா(அலை) அவர்கள், 'உம்முடைய உத்தரவை மீறாத முறையில் அல்லாஹ் நாடினால் என்னைப் பொறுமையாளனாகக் காண்பீர்!' என்றார்கள். (முடிவில்) இருவரும் கப்பல் எதுவும் கிடைக்காத நிலையில் கடற்கரை ஓரமாகவே நடந்து சென்றார்கள். அவ்விருவரையும் ஒரு கப்பல் கடந்து சென்றது. தங்களையும் (அக்கப்பலில்) ஏற்றிக் கொள்ளுமாறு கேட்டுக் கொண்டார்கள். அவர்கள் கிள்று அவர்களை அறிந்திருந்ததால் அவ்விருவரையும் கட்டணம் ஏதுமின்றிக் கப்பலில் ஏற்றினார்கள்.
ஒரு சிட்டுக்குருவி வந்து கப்பலின் ஓரத்தில் அமர்ந்து கடலில் ஒன்றிரண்டு முறை கொத்தியது. அப்போது கிள்று அவர்கள், 'மூஸா அவர்களே! இச்சிட்டுக் குருவி கொத்தியதால் கடலில் எவ்வளவு குறையுமோ அது போன்ற அளவுதான் என்னுடைய ஞானமும் அளவுதான் என்னுடைய ஞானமும் உம்முடைய ஞானமும் அல்லாஹ்வின் ஞானத்திலிருந்து குறைத்து விடும்' என்று கூறினார்கள். (சற்று நேரம் கழித்ததும்) கப்பலின் பலகைகளில் ஒன்றை கிள்று (அலை) கழற்றினார்கள். இதைக் கண்ட மூஸா(அலை) அவர்கள் 'நம்மைக் கட்டணம் ஏதுமின்றி ஏற்றிய இந்த மக்கள் மூழ்கட்டும் என்பதற்காக, வேண்டுமென்று கப்பலை உடைத்து விட்டீரே?' என்று கேட்டார்கள். 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையோடிருக்க ஆற்றல் பெறமாட்டீர் என்று நான் (முன்பே உமக்குச்) சொல்லவில்லையா? என்று கிள்று அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், 'நான் மறந்துவிட்டதற்காக என்னை நீர் (குற்றம்) பிடித்து விடாதீர்' என்று கேட்டுக் கொண்டார்கள். எனவே முதற் பிரச்சினை மூஸாவிடமிருந்து மறதியாக ஏற்பட்டுவிட்டது. (கடல் வழிப் பயணம் முடிந்து) மீண்டும் இருவரும் நடந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
அப்போது ஒரு சிறுவன் ஏனைய சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருந்தான். கிள்று அவர்கள் அதன் தலையை மேலிருந்து பிடித்து (இழுத்து)த் தம் கையால் (திரும்) தலையை முறித்துவிட்டர்கள். உடனே மூஸா(அலை) அவர்கள் 'யாரையும் கொலை செய்யாத (ஒரு பாவமும் அறியாத) தூய்மையான ஆத்மாவைக் கொன்று விட்டீரே?' என்று கேட்டார்கள். அதற்கு கிள்று அவர்கள் 'மூஸாவே! நிச்சயமாக நீர் என்னுடன் பொறுமையாயிருக்க முடியாது என்று உம்மிடம் நான் முன்பே சொல்லவில்லையா?' என்று கேட்டார்கள். இந்த வார்த்தை முந்திய வார்த்தையை விட மிக்க வலியுறுத்தலுடன் கூடியது என இந்த ஹதீஸ் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு உயைனா என்பவர் கூறுகிறார். மீண்டும் இருவரும் (சமாதானமாகி) நடந்து போய்க் கொண்டிருந்தார்கள். முடிவாக ஒரு கிராமத்தவரிடம் வந்து அவர்களிடம் உணவு கேட்டார்கள். அவ்வூரார் அவர்களுக்கு உணவளிக்க மறுத்துவிட்டார்கள். அப்போது அக்கிராமத்தில் ஒரு சுவர், கீழே விழுந்து விடும் நிலையிருக்கக் கண்டார்கள். உடனே கிள்று அவர்கள் தங்களின் கையால் அச்சுவரை நிலை நிறுத்தினார்கள். (இதைப் பார்த்துக் கொண்டிருந்த) மூஸா(அலை) அவர்கள் 'நீர் விரும்பியிருந்தால் இதற்காக ஏதாவது கூலி பெற்றிருக்கலாமே!' என்று அவர்களிடம் கேட்டார்கள். உடனே கிள்று அவர்கள், 'இதுதான் எனக்கும் உமக்கிடையே பிரிவினையாகும்' என்று கூறிவிட்டார்கள்.'
(இச்சம்பவத்தை) நபி(ஸல்) அவர்கள் (சொல்லிவிட்டு) 'மூஸா மாத்திரம் சற்றுப் பொறுமையாக இருந்திருந்தால் அவ்விருவரின் விஷயங்களிலிருந்தும் நமக்கு இன்னும் (நிறைய) வரலாறு கூறப்பட்டிருக்கும். அல்லாஹ் மூஸாவிற்கு அருள் புரிவானாக!' என்று கூறினார்கள்' என ஸயீது இப்னு ஜுபைர்(ரலி) அறிவித்தார்.
ஸஹீஹ் புகாரி : 122.
இனி அவர் ஹிள்ர் நபியுடன் பயணிக்க முடியாது. அவசரப்பட்டு அவர்கேட்ட மூன்று
சம்பவங்கள் குறித்தும் ஹிள்ர் நபிவிளக்கம் கூற ஆரம்பித்தார்.
“நான் நாம் ஏறிவந்த கப்பலில் துளையிட்டேன். அது அந்தக்கப்பல் காரர்களுக்கு அநியாயம் செய்வதற்காக செய்தது அல்ல. இவர்கள் போகும்வழியில் ஒரு அநியாயக்கார அரசன் இருக்கிறான். எந்தக் குறையும் இல்லாத கப்பலைக் கண்டால் அதை அவன்அபகரித்துக்கொள்வான். நான் கப்பலில் துளையிட்டதால் அவன் அபகரிக்கமாட்டான் . இந்தக்கப்பல் கடல் தொழில்செய்யும் ஏழைக்குரியது. எனவே கப்பல் அபகரிக்கப்படாமல் இருப்பதற்காகத்தான் கப்பலி துளையிட்டேன்” என்று கூறினார்.
ஆம் “கண்ணால்காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய், தீரவிசாரிப்பதேமெய்” என்பார்கள் அல்லவா? ஹிள்ர் நபியின் செயலைப்பார்த்தால் கப்பல்காரருக்கு அநியாயம் செய்வதுபோல் தான் தெரிந்தது. ஆனால் அவர் செய்ததது கப்பல் சொந்தக்காரருக்கு உதவிதான். இப்படித்தான் உங்கள் பெற்றோர், ஆசிரியர்கள் உங்களுக்காக நன்மை செய்யும் போது உங்களுக்கு அது கெடுதியாகத் தெரியலாம்.
அடுத்து ஒரு சிறுவனை ஹிள்ர் நபி கொலை செய்தார் அல்லவா? இது ஒரு கொடிய செயலாகத்தான் தெரிந்தது. ஆனால் அதுபற்றி அவர் கூறும்போது “அந்த சிறுவனின் தாய் தந்தையர் இருவரும் நல்லவர்கள். இந்த சிறுவர் பெரியவனானால் அவர்களது பெற்றோருக்கு அநியாயம் செய்வான். அவர்களை இறைநிராகரிப்பில் ஈடுபடுமாறு நிர்பந்திப்பான். எனவே இவனைக் கொன்றுவிட்டு அவர்களுக்கு பெற்றோரை மதிக்கக்கூடியநல்ல குழந்தையை வழங்க அல்லாஹ் நாடினான். எனவேதான் அந்த சிறுவனைக்கொன்றேன்” என்றார். நாம் பெற்றோருடன் நல்ல முறையில் நடக்காவிட்டால் நமக்குப் பாதுகாப்பில்லை பார்த்தீர்களா?
“அடுத்து நான் சரி செய்த வீட்டுச்சுவர் இரண்டு அனாதை பிள்ளைகளுக்குறியது. அந்தப்பிள்ளைகளின் தந்தை ஸாலிஹானவராவார். அந்த சுவற்றில் இந்த அனாதைப்பிள்ளைகளுக்கான ஒரு புதையல் உண்டு. இப்போது இந்த சுவர் இடிந்து விழுந்தால் அந்த புதையலை யாரவது எடுத்துக்கொள்வார்கள். இப்போது அந்த அனாதைப்பிள்ளைகள் சிறுவர்களாக உள்ளனர். அவர்கள் பெரியவர்களாகி இந்தப்புதையலை எடுக்கவேண்டும். அதற்காகத்தான் உடைந்து விழ இருந்த சுவற்றை நான் சரி செய்தேன்” என்று விரிவாக விளக்கினார்கள். அத்துடன் இவற்றை நான் என் விருப்பப்படி செய்யவில்லை. அல்லாஹ்வின் அனுமதிப்படி தான் செய்தேன் என்று கூறினார்.
மூஸாநபி, “நான்தான் இப்போது உலகில் உள்ளஅறிவாளி” என்று கூறியதற்காக அல்லாஹ் கற்றுக்கொடுத்த பாடம் இது.
நாமும் ஆணவம் கொள்ளக்கூடாது! பெருமை கொள்ளக்கூடாது! என்னைவிட அறிந்தவர்கள் இருப்பார்கள் என்று உணர்ந்து செயல்பட வேண்டும். கல்விக்குக்கட்டுப்பாடு அவசியம். ஹிள்ர் நபி மூஸா நபிக்குக்கட்டுப்பாடு போட்டார்கள் அல்லவா? ஹிள்ர் நபியை விட மூஸா நபி அந்தஸ்த்திலும் பொறுப்பிலும் கூடியவராவார்.
இருப்பினும் அவரிடம் இவர் கற்கவேண்டும் என்பது அல்லாஹ்வின் ஏற்பாடாகும். எனவே அறிவுயாரிடம் இருந்தாலும் நாம் கற்றுக்கொள்ளவேண்டும். இது போன்ற நல்ல படிப் பினைகளைத்தரும் இச்சம்பவத்தை திருக்குர்ஆனில்அத்தியாயத்தில் 60-82 வரையுள்ள வசனங்களில் காணலாம்.