Search This Blog

Showing posts with label Tamil. Show all posts
Showing posts with label Tamil. Show all posts

Wednesday, March 17, 2021

யார் தீர்க்க தரிசி ?

 





மில்க் வொயிற் என்பது பல வெளிநாட்டு நிறுவனங்களுடன் போட்டியிட்ட தமிழருடைய சோப்பு தயாரிக்கும் நிறுவனம். தனது விற்பனையினை பிற எந்த நிறுவனங்களை விடவும் மிக அதிகமாக அவரால் விரிவாக்க முடிந்தது. தனது பொருட்களை விற்க “உங்களுக்கு உதவ எங்களுக்கு உதவுங்கள்” என்று அவர் கூறி முன்னெடுத்திருக்கிறார்.
தமிழ் மீது இருந்த தீராத பற்றினால் திருவள்ளுவரின் குறளையோ பாரதியின் பாடல்களையோ பனை ஓலையில் அச்சடித்து தனது சோப்புகளுடன் விநி யோகித்திருக்கிறார். தனது தயாரிப்புகளையும் அவர் பொதிந்து கொடுக்க களிமண்ணில் செய்த அழகிய பேழைகளில் வைத்து இலவசமாக கொடுத்தா ர். நூற்பவர்களிடம் இருந்து பெற்ற துணிகளைக் கொண்டு தந்து சோப்பை பொதிந்து விற்பனை செய்திருக்கிறார். இவைகளின் மூலம் அவர் குயவர்களையும், நெசவாளர்களையும் ஆதரித்திருக்கிறார் என்பதை அறிந்துகொள்ள முடிகிறது.
மேலும் பனம்பழங்கள் கிடைக்கும் காலத்தில் தனது லாரி நிறை ய பனை விதைகளை எடுத்துக்கொண்டு தந்து பணியாளர்களைக்கொண்டு சாலைஓரங்களில் விசிறி எறியச் சொல்லுவாராம். பனை மீது மீளா க் காதல் கொண்ட பனைக் களப்போராளியான அவரது தயாரிப்புகள் இன்று வளர்ந்து வரும் தலைமுறையினருக்குத் தெரியாமலேயே போகப் போகிறது
உதிரும் வேப்பம் பழங்கள் பொத்துப் பொத்தென்று மண்ணில் விழும். இரண்டு விரல்களை வளையமாக்கி அதில் வைத்து ஊதி ஊதி மண்ணை நீக்கினால் வெளிநாட்டு ஒலிவ் பழம் தான் இப்போ நினைவை தட்டும் .
காய்ந்து உலர்ந்து போன வேப்பங்கொட்டைகளைக் குவித்து வைத்து அவற்றை இரவில் ஒரு சட்டி தணலில் போட்டு எரிக்கும் போது வெளிப்படும் புகை மண்டலம் வீட்டுக்குள் அழையா விருந்தாளிகளாக வரும் நுளம்புக் கூட்டத்தை விரட்டியடிக்கும்..
மருதடிப் பிள்ளையார் கோயிலிலும் நல்லூர்க் கந்தசுவாமி கோயிலிலும் திருவிழா நாட்களில் “மில்க்வைற்” நிறுவனம் கடை பரப்பியிருக்கும் . அப்போது ஒரு அறிவிப்பை அச்சிட்டுப் பகிர்ந்தார்கள். ஒரு கிலோ வேப்பம் கொட்டை கொடுத்தால் ஒரு மில்க்வைற் தொப்பி கிடைக்கும் என்பது தான்.
எத்தனைபேர் தங்களால் முடிந்த கொட்டைகளை சேர்த்துக் கொண்டே வெள்ளைத் தொப்பி வாங்கியிருக்கிறார்கள்
ஒரு கல்லில் இரு மாங்காய் அல்லவா ?
ஓன்று சுயமாக சிந்திக்க வைப்பது சுதேச உற்பத்திக்களை கூட்டுவது ,இரண்டாவது இயற்கையை நேசிக்க வைப்பது .
அப்போது யாழ்ப்பாணத்தில் சுதேச உற்பத்திகள் செழிப்போட்டு இருந்த நேரம் “மில்க்வைற் தொழிலகம்” தம் பங்குக்கு சோப் உற்பத்தியில் பெரும் தொழிற் புரட்சியை ஏற்படுத்தியிருந்தது. குளிக்க, உடுப்பு தோய்க்க என்றி வித விதமான சவர்க்காரங்கள். சுதேச உற்பத்திகளா கின .
பலரும் சேமித்துக் கொடுத்த வேப்பங் கொட்டைகளைச் சுத்தம் செய்து நுளம்பை விரட்ட மில்க்வைற் வேப்பங்கொட்டைகள் என்றும், அந்த வேப்பங்கொட்டைகளை மூலப் பொருளாக உபயோகித்து “நீம் சோப்” என்றும், வேப்பெண்ணெய் என்றும், “நீமியா” உரம் என்றும் மில்க்வைற் ஸ்தாபனத்தார் உற்பத்திகளை விரித்திருந்தனர்.
HAMMAM சோப்புக்கள் இதே பாணியில் தயாரிக்கப் படுபவையே .
மில்க்வைற் சோப் ஏழைகளின் தோழனாகவும், மத்திய வர்க்கத்தின் காவலனாகவும் அப்போது விளங்கியது..
எப்போதும் உள்ளூர் உற்பத்திக்கு மதிப்புக் கொடுப்பது குறைவு தானே .
பணக்கார வர்க்கம் எப்போதும் பகட்டுத்தானே . லக்ஸ் சோப், ராணி சோப் இவற்றில் தான்
பணத்தில் குளிப்போருக்கு மோகம் அதிகம். .
உடுப்புத் தோய்க்க சன் லைற் சவுக்காரம்,பத்து நீம் சோப் உறைகளை அனுப்பி ஒரு திருக்குறள் புத்தகத்தை வெல்லுங்கள், ஒரு தேகப்பியாசப் புத்தகத்தை வெல்லுங்கள். “பனையை வளர்ப்போம் பயனைப் பெறுவோம்” என்றெல்லாம் சவர்க்கார உறைகளில் அச்சிட்டு மில்க்வைற் காறர் உள்ளூர் மக்களைக் கவர்ந்தா ர்கள்.
ஆனால் பிரயோசனம் அடைந்தது .எல்லோரும் தான்
அரிவரியில் ஆனா ஆவன்னா எழுதிப் பழகப் பனையோலையில் அரிச்சுவடி செய்து பள்ளிக்கூடங்களுக்கும், கோயில்களுக்கும் அனுப்புவதில் இருந்து ஆத்திசூடி நீதி நூல் வாசகங்கள் கொண்ட ஸ்டிக்கர்களை அச்சிட்டு விநியோகிப்பது, “மில்க்வைற் செய்தி” என்ற சமூக, சமய, அறிவியல் சார்ந்த பத்திரிகையை வெளியிடுவது என்று மில்க்வைற் கனகராசா அவர்களின் பணி விரிந்தது அதனால் அவருக்குச் சிவ தர்ம வள்ளல் என்ற பட்டமும் கிட்டியது. அவருக்கு உறுதுணையாக எழுத்து முயற்சிகளுக்குப் பொறுப்பாக அறிஞர் க.சி.குலரத்தினம் விளங்கினார்.
இரண்டாம் கட்ட ஈழப் போர் கனத்த போது இலங்கை அரசின் பொருளாதாரத் தடை தமிழர் பிரதேசங்களுக்கு அமுலாகியது தொண்ணூறுகளின் முற்பகுதியில். பெற்றோல், டீசல் உட்பட ஐம்பத்துச் சொச்சம் பொருட்களைப் பட்டியலிட்டு இவை பயங்கரவாத நடவடிக்கையை முன்னிட்டுத் தடை செய்யப்படுகின்றன என்று
இலங்கை அரசின் பாதுகாப்பு அமைச்சு அறிவித்தது.
உடுப்புத் தோய்க்கும் சன் லைட் சோப்புக்கான காலம் போய் நோயாளிகளுக்கு என்று முத்திரை குத்தியிருந்த லைஃப் போய் சோப்புக்கும் மாறினர் . சோப்பைச் சின்னச் சின்னத் துண்டாக்கிப் பாவிப்பது, துணியில் சுருட்டிப் பாவிப்பது என்று சிக்கன நடவடிக்கைகள் அரங்கேறின. கொஞ்ச நாளில் இருப்பில் இருந்த எல்லா சோப்பும் கடைகளில் காலியாகின.
கையில்ருப்பில் இருந்த பகட்டான சவுக்காரங்கள் தீர்ந்து போக, தாய் வீடு தேடி வரும் மகள் போல எல்லாரும் மில்க்வைற் சோப் நோக்கி ஓடினார்கள் .
மில்க்வைற் சோப் விலை மலிவு என்றாலும் வேகமாகக் கரையக் கூடியது. . என்னதான் உள்ளூர் உற்பத்தியாக இருந்தாலும் சோப் தயாரிப்பதற்கான மூலப் பொருட்களுக்குத் தென்னிலங்கையையே தங்கியிருக்க வேண்டிய சூழல் நிலவியது இதனால்
மில்க்வைற் தொழிற்சாலையும் மெல்ல முடங்கிப் போக, இப்போது மில்க்வைற் சோப்பும் இல்லாத மாதங்களாக நீண்டன.
சுரக்காயைக் காய வைத்து அதன் உள் எலும்புக் கூட்டை எடுத்தால் ஸ்பொன்ச் மாதிரி இருக்கும். அதற்குள் சோப்புத் தண்ணியைக் கரைத்து ஊற்றி வெது வெதுவாக்கி குளிக்கும் போது சோப்புப் போடுவது போலப் போட்டுத் தேய்த்துக் குளிக்க ஆரம்பித்தார்கள்
தமிழன் படாத கஷ்டமா ? என்ன
சரி இப்பொழுது கனகராசா அவர்களின் அரசியல் .நாட்டுப்பற்று தொழில் பற்று பற்றி அறிந்து கொள்ளுங்கள்

யாழ்ப்பாணம் வண்ணார்பண்ணையில் இத் தொல்மரபுக்கமையச் சவர்க்காரம் செய்து வந்தோர் இருந்தனர்.
அவர்களில் சவர்க்காரம் கந்தையா இருந்தார். அவர் வளவில் குடிசைக் கைத்தொழிலாகச் சவர்க்காரம் செய்வார்கள்
.கந்தையா வழி வேதிப் பொருள்களைக் கைத்தொழிலாகத் தயாரித்தவர் கனகராசா.அவர்கள் .
கொழும்பில் ஆங்கிலேய lever Brothers சன் லைற் சவர்க்காரத்தைப் புகுத்தியதும் கனகராசா தம் பொருளுக்குச் சந்தை சேர்க்க
1950களின் தொடக்கத்தில் மில்க் வைற் சவர்க்காரம் எனப் பெயரிட்டதுடன் தொழிலகத்தையும் நவீன எந்திரமயமாக்கி ஆங்கிலேயக் கம்பனியாருடன் போட்டியிட்டு, தனக்கென இலங்கை முழுவதும் ஒரு சந்தை வலைப்பின்னலை உருவாக்கினார் .
சுதேச போராட்டம் இது .
1958 ஆனியில் இனக்கலவரம் கொழும்பில் வெடித்தது. சிங்களவர் தமிழரைத் தாக்கினர்
கலவரம் தொடங்கி நடந்த நாள்களில் கடையடைப்புக் கோரிக்கையுடன் திரு. கனகராசா தன் வண்டியில் நகரெங்கும் சுற்றிவந்து துண்டு விளம்பரம் கொடுத்துவந்தார் .
தமிழுணர்ச்சிப் பிழம்பாகத் திரு. கனகராசா யாழ்ப்பாணம் பெரிய கடை எங்கும் உலாவினார். கோபக் கனலுடன் அனைத்து வணிக நிலையங்களையும் இழுத்து மூடுவித்தார்.செயல்வேகத்தின் ஆளுமை அது .
யாழ்ப்பாணத்தில் 1973 ஆவணி தொடக்கம் 1974 தை வரை நான்காவது அனைத்துலகத் தமிழாராய்ச்சி மாநாட்டுப் பணிகளை த் தன் பணியாகக் கொண்டவர் திரு. கனகராசா.இது யாருக்கும் தெரியாத விடயமல்ல .
2 ம்திகதி கார்த்திகை 1927 ல் கந்தையா வீரகத்தி அவர்களுக்கும் மீனாட்சி அம்மாளுக்கும் மகனாகப் பிறந்தவர்,
செல்லையா மகள் நாகம்மா வை 1951 புரடாதிமாதம் பதினான்காம் திகதி மண ம் முடித்து இல்வாழ்வி ல் அடியெடுத்து வைத்தார்
1952 முதல், MILK WHite சவற்காரக் கம்பெனியின் ,உரிமையாளர் ஆகவும்
. தலைவர் Multi Oil Industries Ltd ஆகவும்
Multi Rice Industries ltd . தலைவர் ஆகவும்
Hatton National வங்கியின் ஆயுள் கால உறுப்பினராகவும்
இருந்தார்
1974 முதல் சமாதானநீ த வனாகவும் இருந்தார்
அன்று அவர் போட்ட விதைகள்
அந்தப் பனை மரங்கள்தான் வளர்ந்து இன்று பெரிய மரங்களாக வீதி ஓரமெல்லாம் காவல் வீரர்கள்போல நிற்கின்றன.
இதற்கெல்லாம் காரணமானவரை காலம் மறந்து விட்டது. காலம் மறந்து விட்டதா அல்லது அவற்றை எல்லாம் நினைத்துப் பார்க்கும் நிலையில் அங்குள்ள மக்கள் இல்லையா என்பதுகூடத் தெரியவில்லை.
சின்னவயது நினைவுகள் எனக்கு இப்பொழுதும் ஞாபகம் இருக்கிறது. எவ்வளவு தீர்க்க தரிசனத்தோடு அன்று அவர் செயற்பட்டார் என்பதை நினைக்ககூட அங்கெ மக்கள் சுயநலமிகள் ஆக இருக்கிறார்களா ?
‘உண்மையிலே புதிதாக நிறைய மரங்கள் வளர்க்க வேண்டும் என்ற எண்ணம் வரக்காரணம் யாழ்ப்பாணம் வானம் பார்த்தபூமி என்பதால்தான். ஆறுகள் இல்லாததால், இந்த மண்ணில் மழையை நம்பியே விவசாயம் நடந்தது. கிணற்றில் இருந்தே குடிநீர் பெற்றார்கள். உயர்ந்த மரங்கள் இருந்தால் மழை பெய்வதற்குச் சந்தர்ப்பம் அதிகமுண்டு என்று கருதித்தான் தீர்க்கதரிசனத்தோடு மரம் நாட்டும் முயற்சியில் அன்று ஈடுபட்டார்கள். ஆனால் அதுவே பிற்காலத்தில் எறிகணைகளில் இருந்து குடிமனைகளைக் காப்பாற்றும் பாதுகாப்பு கேடயமாக மாறிவிட்டது.’
‘நாங்கள் அதற்காகத் தொழிலதிபர் கனகராஜாவைத்தன் பாராட்ட வேண்டும்.
-மாணிக்க வாசகர் manikkavasagar.vaitialingam

Monday, January 11, 2021

யாழ்ப்பாண பல்கலைக்கழகமும் போலித் தமிழ் தேசியவாதிகளும்!

 

யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் உருவான வரலாறு தெரியாத பலர் இன்று அதைப்பற்றி எல்லாம் தெரிந்தவர்கள் போல கதைப்பதைப் பார்க்க சிரிப்புத்தான் வருகிறது.
யாழ்ப்பாணப் பல்கலைக்கழகம் தமிழரசுக் கட்சியின் கடும் எதிர்ப்புக்கு மத்தியில் 1974 ஓகஸ்ட் 01 ஆம் திகதி அப்போதைய பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க அவர்களால் வைபவரீதியாகத் திறந்து வைக்கப்பட்டது.
அதற்கு முதல் தமிழரசுக் கட்சி அமைக்க இருந்த கற்பனைத் தனித்தமிழ் நாட்டின் தலைநகரான திரிகோணமலையில் தமிழ் பல்கலைக் கழகம் ஒன்றை அமைப்பதற்கென தமிழரசுக் கட்சி தமிழ் பொது மக்களிடம் பெருந்தொகை பணத்தைத் திரட்டியதுடன் திரிகோணமலையில் பல ஏக்கர் காணியையும் கொள்வனவு செய்தது. ஆனால் இன்று வரையும் அந்தப் பணத்துக்கும் காணிக்கும் என்ன நடந்தது என யாருக்கும் தெரியாது. (தமிழரசுக் கட்சித் தலைவராகவும், பல வருடங்களாக திரிகோணமலைத் தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினராகவும் இருக்கும் இரா.சம்பந்தன்தான் இதற்கு விளக்கம் சொல்ல வேண்டும்)
தமிழரசு – தமிழ் காங்கிரஸ் கட்சிகள் தமிழ் பிரதேசத்தில் ஒரு பல்கலைக்கழகத்தை உருவாக்குவதில் உண்மையிலேயே அக்கறை கொண்டிருந்தால், அந்த இரு கட்சிகளும் 1965 இல் ஐக்கிய தேசியக் கட்சி அமைத்த அரசாங்கத்தில் சேர்ந்த பொழுதே அதைச் செய்திருக்க முடியும். ஆனால் என்ன செய்தார்கள்? தமிழரசு கட்சி தமிழ் பல்கலைக்கழகம்தான் அமைக்க வேண்டும் என்றும், தமிழ் காங்கிரஸ் கட்சி அமைவது இந்துப் பல்கலைக்கழகமாக இருக்க வேண்டும் என்றும் சண்டை போட்டதில், ஐ.தே.க. அரசாங்கம் அதைச் சாக்காக வைத்து தமிழ் பகுதிகளில் பல்கலைக்கழகம் அமைவதை சாதுரியமாகத் தட்டிக் கழித்துவிட்டது.
இந்த நிலைமையில்தான் 1970 இல் சிறீமாவோ பண்டாரநாயக்க தலைமையில் அமைந்த அரசாங்கத்தில் இணைந்த இடதுசாரிக் கட்சிகளான கம்யூனிஸ்ட் கட்சியினதும், லங்கா சமசமாஜக் கட்சியினதும் வற்புறுத்தலாலும், அரசில் இணைந்திருந்த அமைச்சர் செல்லையா குமாரசூரியர், யாழ் மாநகர முதல்வர் அல்பிரட் துரையப்பா போன்றோரினதும் மற்றும் இலங்கை முற்போக்கு எழுத்தாளர் சங்கத்தினதும் முயற்சிகளினாலும் அரசாங்கம் யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழக வளாகம் ஒன்றை அமைக்க முன்வந்தது.
தம்மால் முடியாமல் போனதை மற்றவர்களின் முயற்சியால் அமைப்பதா என்ற காழ்ப்புணர்வு காரணமாக தமிழரசுக் கட்சி யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைவதை ஆரம்பத்தில் இருந்தே எதிர்த்து வந்தது.
பல்கலைக்கழகம் அமைப்பதற்காக திருநெல்வேலியில் இருந்த பரமேஸ்வரா கல்லூரியினதும், மருதனாமடத்தில் அமைந்திருந்த இராமநாதன் மகளிர் கல்லூரியினதும் கட்டிடங்களை அரசாங்கம் சுவீகரித்தபோது, ‘ஐயோ சேர்.பொன்.இராமநாதன் தம்பதியினர் கட்டிய பாடசாலைகளை சிறீமாவோ அரசாங்கம் கபளீகரம் செய்கிறது’ எனத் தமிழரசுக் கட்சியினர் கூச்சல் போட்டனர். ஆனால் இராமநாதனின் அன்றைய வாரிசாகக் கருதப்பட்ட முன்னாள் செனட்டர் எஸ்.ஆர்.கனகநாயகம் (பிரபல சட்டத்தரணி) அவர்கள் இந்தக் கட்டிடங்களில் பல்கலைக்கழகம் அமைவதை முழுமனதுடன் ஆதரித்ததுடன், பின்னர் முற்போக்கு சக்திகளால் அமைக்கப்பட்ட ‘யாழ் பல்கலைக்கழக வளாக விஸ்தரிப்பு இயக்கம்’ என்னும் அமைப்புக்கு தலைவராகவும் பணியாற்றினார்.
பின்னர் தமிழரசுக்கட்சியினர், யாழ்ப்பாணத்தில் பல்கலைக்கழகம் அமைந்தால் தமிழர்களின் கலாச்சாரம் சீரழிந்துவிடும் என தமிழ் மக்களின் பழமைவாத சிந்தனைகளைக் கிளறி உசுப்பேத்தப் பார்த்தார்கள். அது எடுபடவில்லை. வட பகுதி கல்விமான்கள் மட்டுமின்றி, தமிழ் பொதுமக்களும் பல்கலைக்கழகம் அமைவதை முழுமனதுடன் வரவேற்றனர் என்பதை அதன் திறப்பு விழாவின் போதும், அதைத் தொடர்ந்து யாழ்.விளையாட்டு அரங்கில் நடைபெற்ற பொதுக்கூட்டத்தின் போதும் திரண்ட சனசமுத்திரம் எடுத்துக் காட்டியது.
தமிழரசுக் கட்சியினர் அகிம்சையே தமது வழி என்றும், தமது கட்சித் தலைவர் செல்வநாயகத்தை ‘ஈழத்துக் காந்தி’ என்றும் பேசி வந்தாலும், வன்முறைக்கும் தயங்காதவர்கள் என்பதை, யாழ் பல்கலைக்கழக வளாகத்தின் முதலாவது தலைவராக பேராசிரியர் க.கைலாசபதி நியமிக்கப்பட்டு, திறப்பு விழா ஏற்பாடுகளைக் கவனிப்பதற்காக அவர் யாழ்ப்பாணம் வந்து வண்ணார்பண்ணையில் உள்ள மைத்துனர் பொன்னம்பலம் (பின்னாளில் யாழ் அரசாங்க அதிபராக இருந்தவர்) தங்கியிருந்தபோது, அந்த வீட்டின் மீது ஒரு இரவு வேளையில் வீசிய கைக்குண்டு வீச்சுச் சம்பவம் எடுத்துக் காட்டியது.
இந்தச் சம்பவத்தைப் பற்றிய செய்தியை அடுத்த நாள் காலை யாழ்ப்பாணத்தில் வெளியாகும் ‘ஈழநாடு’ பத்திரிகையில் பார்த்துவிட்டு நானும் இன்னுமொரு தோழரும் கைலாசபதி அவர்களைப் பார்க்கச் சென்றபொழுது அவர் சிரித்துக்கொண்டே, “நானும் யாழ்ப்பாணத்து பனங்காட்டு நரிதான் என்பது இந்த மடையன்களுக்குத் தெரியாது போலும்” என அவர் சொன்னது இன்றும் எனது நினைவில் பசுமையாக உள்ளது.
தமிழரசுக் கட்சியினரின் இந்த வகையான மிரட்டல்கள் பயனற்றுப்போய் திட்டமிட்டபடி பல்கலைக்கழகம் திறப்பதற்கு ஏற்பாடு செய்யப்பட்டது. அதன் பின்னர் பல்கலைக்கழகத் திறப்புவிழாவையும், அதற்காக வருகை தரும் பிரதமர் சிறீமாவோ பண்டாரநாயக்க பங்குபற்றும் நிகழ்ச்சிகளையும் பகிஸ்கரிக்குமாறும், சிறீமாவோ யாழ்ப்பாணத்தில் தங்கி நிற்கும் இரண்டு நாட்களும் பொது மக்கள் பூரண ஹர்த்தால் அனுட்டித்து வெளியே வராமல் வீடுகளில் முடங்கிக் கிடக்க வேண்டும் என்றும் தமிழரசுக் கட்சி பொதுமக்களை வேண்டிக்கொண்டது. ஆனால் தமிழரசுக் கட்சி கேட்டுக்கொண்டதற்கு மாறாக, பல்லாயிரக்கணக்கான பொதுமக்கள் பல்கலைக்கழகத் திறப்பு விழா நிகழ்ச்சியிலும், சிறீமாவோ பங்கு பற்றிய நிகழ்ச்சிகளிலும் கலந்து கொண்டதுடன், அவர் சென்ற வீதிகளின் இருமருங்கிலும் திரண்டு நின்று கையசைத்து தமது வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொண்டனர்.
தமிழரசுக் கட்சியினர் பல்கலைக்கழகம் திறப்பதைத் தடுப்பதற்கு பல முயற்சிகளை மேற்கொண்டு தோல்விக்கு மேலே தோல்வி கண்டபோதும், ‘சற்றும் சளைக்காத விக்கிரமாதித்தன்’ போல தமது எதிர்ப்பு நடவடிககைகளைத் தொடர்ந்த வண்ணம் இருந்தனர். பல்கலைக்கழகத்தின் விஞ்ஞான பீடத்துக்கான புதிய கட்டிடங்கள் கட்டி முடிக்கப்படும் வரை அந்தப் பீடத்தை இயக்குவதற்கு வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியின் சில கட்டிடங்களை சுவீகரித்தபோது, அதற்கெதிராகவும் தமிழரசுக் கட்சி கூச்சல் போட்டதுடன், சில கிறிஸ்தவ மதகுருக்களையும் அழைத்துக் கொண்டுபோய் அரசாங்கத்தில் இருந்த செல்வாக்குமிக்க அமைச்சரான பீலிக்ஸ் டயஸ் பண்டாரநாயக்கவிடம் முறைப்பாடு செய்தனர். அதுவும் வெற்றியளிக்கவில்லை.
யாழ் பல்கலைக்கழகம் அமையவுள்ள சுற்றாடலில் வசிக்கும் மக்கள் மாணவர்களுக்கு, குறிப்பாக சிங்கள மாணவர்களுக்கு தமது வீடுகளில் அறைகள் வாடகைக்குக் கொடுக்கக்கூடாது என தமிழரசுக் கட்சியினர் செய்த பிரச்சாரமும் மக்களிடம் எடுபடவில்லை.
அதுமட்டுமின்றி, ஒரு சமயம் புதிதாக வந்த மாணவர்கள் மீது வெளியார் ஒருவர் மேற்கொண்ட பகிடிவதையால் பல்கலைக்கழகத்துக்கு முன்னால் மோட்டார் சைக்கில் திருத்தும் கடையொன்றில் தினவரி குழுமி நின்று வம்பளக்கும் உள்ளுர் வாலிபர்களுக்கும் பல்கலைக்கழக மாணவர்களுக்கும் இடையில் முறுகல் நிலை ஏற்பட்ட பொழுது, அதைப் பயன்படுத்திய தமிழரசுக் கட்சியினர், பல்கலைக்கழகத்தை இயங்கவிடாமல் செய்ததுடன், பல்கலைக்கழகத்தை சில வாரங்கள் மூடவும் வைத்தனர். அதன் காரணமாக பல்கலைக்கழக நிர்வாகம் பொலிஸ் பாதுகாப்புடன் 6 பஸ்களில் வெளியூர் மாணவர்களை அவர்களது சொந்த ஊருக்கு அனுப்ப வேண்டிய நிலை ஏற்பட்டது.
அந்த நேரத்தில் அந்தப் பகுதியில் வசித்த தமிழரசுக் கட்சியின் முன்னாள் மாநகர முதல்வர் சி.நாகராசா தலைமையில் தமிழரசுக் கட்சியினர் திரண்டு பல்கலைக்கழக (பரமேஸ்வரா) சந்தியிலுள்ள ஆலயத்துக்கு முன்னால் தெருவோரம் ஒரு கொட்டகை அமைத்து, அதற்குள் மணல் போட்டு, வாள்கள், கம்பிகள், பொல்லுகள் சகிதம் இரவு பகலாக மாணவர்கள் மீது வன்முறை பிரயோகிப்பதற்கு தயாராக இருந்தனர். அந்த நேரத்தில் அருகிலிருந்த வீதியால் சைக்கிளில் வந்த கல்வியன்காட்டைச் சேர்ந்த மாணவன் ஒருவரை கத்தியால் குத்தியதில் அவரது மண்ணீரல் பாதிப்புக்குள்ளானது.
தமிழரசுக் கட்சியினர் செய்த அட்டகாசங்கள் ஒருபுறமிருக்க, பின்னர் அவர்களால் உருவாக்கப்பட்ட புலிகள் யாழ் பல்கலைக்கழகம் மீது நடத்திய காட்டுமிராண்டித்தனம் கொஞ்சநஞ்சமல்ல.
புலிகளின் யாழ் மாவட்டத் தளபதியாக இருந்த கிட்டு, விஜிதரன் என்ற மாணவனைக் கடத்திச் சென்று சித்திரவதை செய்து கொலை செய்த சம்பவத்தை மறந்துவிட முடியாது. அதுமட்டுமல்ல, பல்கலைக்கழகத்தில் கல்வி பயின்று கொண்டிருந்த செல்வி, மனோகரன், படிப்பை முடித்திருந்த தில்லை போன்றோரை ஒரே நாளில் கடத்திச் சென்று தமது வதை முகாம்களில் பல மாதங்கள் வைத்து சித்திரவதை செய்து கொலை செய்தனர். விமலேஸ்வரன் என்ற மாணவனை நடுவீதியில் வைத்துச் சுட்டுக் கொன்றனர். அதுபோல மருத்துவ பீட பேராசிரியை ராஜினி திரணகமவை வீதியில் வைத்து பட்டப்பகலில் சுட்டுப் படுகொலை செய்தனர்.
இது தவிர, நாவாந்துறையைச் சேர்ந்த பீலிக்ஸ், இணுவிலைச் சேர்ந்த சண்முகநாதன் ஆகிய இரு பல்கலைக்கழக பாதுகாப்பு ஊழியர்களை ஈ.பி.ஆர்.எல்.எப். இயக்கத்துக்குச் சார்பானவர்கள் என்று சொல்லி கடத்திச் சென்று கொலை செய்தனர்.
1995 ஒக்ரோபரில் யாழ்ப்பாணம் இராணுவத்தால் கைப்பற்றப்பட்ட பொழுது, புலிகள் வன்னிக்குத் தப்பியோடிவிட, பல்கலைக்கழகத்தில் இருந்த அவர்களது சில ஆதரவாளர்கள் பல்கலைக்கழகத்தை மூடி வன்னிக்குக் கொண்டு சென்று இயக்குவதற்கு முயற்சி செய்தனர். (இறுதி யுத்தத்தின்போது வன்னியிலிருந்து தப்பியோடி தற்பொழுது தமிழ்நாட்டில் பதுங்கியிருக்கும் ஒருவர் இதில் முக்கியமானவர்) ஆனால் பெரும்பான்மையான பல்கலைக்கழக மாணவர்கள், ஆசிரியர்கள், ஊழியர்களின் எதிர்ப்பால் அந்த முயற்சி முறியடிக்கப்பட்டது.
இந்திய அமைதிப்படை வந்திருந்த காலத்தில் பல்கலைக்கழகம் மூடப்பட்டு, அதன் பிரதான கட்டிடத்திலும், பெண்கள் விடுதியிலும் அமைதிப்படையின் சென்னைப் படைப்பிரிவு நிலை கொண்டிருந்தது. அவர்களிடமிருந்து அதை விடுவித்து பல்கலைக்கழகத்தை இயங்க வைப்பதற்கான முயற்சிகள் எதனையும் தமிழர் விடுதலைக் கூட்டணித் தலைமையோ அல்லது அவர்களின் தீவிர ஆதரவாளரான அப்போதைய உப-வேந்தர் சு.வித்தியானந்தனோ செய்யவில்லை. ‘முறிந்த பனை’ நூலின் ஆசிரியர்களில் இருவர்களான ராஜினி திரணகமவும், கே.சிறீதரனுமே இந்திய அமைதிப்படையுடன் கதைத்து, அவர்களை அங்கிருந்து வெளியேறுவதற்கு வழிவகை செய்தார்கள்.
இப்படியே தமிழ் தேசியவாதத் தலைமைகள் யாழ் பல்கலைக்கழகத்துக்கு எதிராக மேற்கொண்ட கைங்கரியங்களை அடுக்கிக்கொண்டே போகலாம். முதலில் பல்கலைகழகம் வருவதை எதிர்த்தவர்கள், பின்னர் அதைத் தமது தேவைகளுக்குப் பயன்படுத்த ஆரம்பித்துவிட்டனர். அதாவது, இது ஒரு வகையில் ‘கறையான் புற்றெடுக்க பாம்பு குடிகொண்ட கதைதான்’. இதை தொடர்ந்து அனுமதிப்பது தமிழ் மக்கள் தங்களது தலையில் தாங்களே மண் அள்ளிப் போடுவதற்கு ஒப்பானது.
இன்று யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்துக்காக நீலிக்கண்ணீர் வடிப்பவர்களும், உண்மையில் வரலாறு தெரியாது அறிக்கை விடுபவர்களும் இந்த உண்மைகளைக் கொஞ்சமாவது கவனத்தில் எடுக்க வேண்டும் என்பதற்கே இப்பதிவு.
(1960 களில் சிறீலங்கா சுதந்திரக் கட்சி அரசு பாடசாலைகளைத் தேசியமயமாக்கியபோதும் தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சயுடனும், கிறிஸ்தவ மத பீடங்களுடனும் இணைந்து அதை எதிர்த்த ‘கீர்த்திமிக்க’ வரலாறும் அதற்கு உண்டு. யார் கண்டது, சி.டபிள்யு.டபிள்யு.கன்னங்கார இலவசக் கல்வியை அறிமுகம் செய்தபோது தமிழரசுக் கட்சி இருந்திருந்தால் அதையும் அவர்கள் எதிர்திருக்கக்கூடும். அவ்வளவு தூரம் அவர்களுக்கு கல்வி மீது ;பற்றுதல்’. இல்லாவிட்டால் மாணவர்கள் கல்வி கற்பதற்காக அரும்பாடுபட்டு உருவாக்கிய யாழ் பல்கலைக்கழகத்தை தமது சொந்த தேவைகளுக்காக அரசியல் சதுரங்க மேடையாக்குவார்களா ? )

Abdul Majeed 
யாழ்.பல்கலையின் மற்றொரு பக்கம் !(Whatsup பதிவொன்று)

Tuesday, November 17, 2020

“கடவுள் தொடங்கிய இடம்” அ. முத்துலிங்கம் தமிழ் நாவலொன்று உலகத் தரத்துடன் வந்திருக்கிறது

அ.முத்துலிங்கம் கதைகள் படிப்பதற்கு அலாதியானவை. அவர் கதைகளின் மிகப்பெரிய சிறப்பம்சம் அயர்ச்சியோ சலிப்போ ஏற்படாத வகையில் நாம் அவற்றைப் படிக்க முடியும் என்பதுதான். அவரது சரளமான நடையில் நாம் தங்குதடையின்றி சறுக்கி விளையாடலாம்.  நகைச்சுவை அவரது பலம். அவரது எந்தக் கதையையும் சிறு புன்னகை கூட வராமல் நாம் படிக்கவே முடியாது. அதனால்தான் ஜெயமோகன், “அ.முத்துலிங்கம் எனக்கு அளிப்பது ஒரு நுட்பமான வாழ்க்கை தரிசனத்தை. ‘இன்னல்களும் சிக்கல்களும் நிறைந்த, அர்த்தமற்ற பிரவாகமான இந்த மானுட வாழ்க்கைதான் எத்தனை வேடிக்கையானது’ என்று அவரது கதைகள் சொல்லிக்கொண்டே இருக்கின்றன. சிரித்தபடியே மானுடத் துயரை வாசிக்க நேர்வதென்பது ஒரு மகத்தான கவித்துவ அனுபவம். அபூர்வமான இலக்கியவாதிகளால் மட்டுமே தொடப்பட்ட ஒன்று. ஈழம் உருவாக்கிய மகத்தான கதைசொல்லி அவரே” என்கிறார்.

இன்று நான் வாசித்து முடித்த புத்தகம் – “கடவுள் தொடங்கிய இடம்” – அ. முத்துலிங்கம் எழுதியது. – ‘ஆனந்த விகடன்’ பிரசுரம்.
அதன் பதிப்புரையிலே குறிப்பிட்டிருப்பதைப் போன்று “தமிழ் நாவலொன்று உலகத் தரத்துடன் வந்திருக்கிறது” – இது மிகையான வார்த்தைகளல்ல…
பதிப்புரையில் மேலும் குறிப்பிடப்பட்டவாறு, “… உலகத்தரம் என்பது இதில் கையாளப்பட்டிருக்கும் உலகம் தழுவிய பிரச்சினைகளாலும்தான்…“



இது உண்மைகளும் கற்பனையும் இரண்டறக் கலந்த ஒரு நாவல் என்று நான் கூறுவேன். கனடாவில் தஞ்சமடைவதற்காக இலங்கையிலிருந்து புறப்பட்ட இளைஞனொருவனின் அனுபவங்கள்… அவன் சந்தித்த மனிதர்கள்… பார்த்த இடங்கள்… அவன் பிறழ்வடைந்த, பட்டை தீட்டப்பட்ட சந்தர்ப்பங்கள்…  என்று கதை சுவாரசியமாகவும், இலாவகமாகவும் கையாளப்பட்டுள்ளது. கதைமாந்தரோடு இரண்டறக் கலந்ததாக இடையிடையே தரப்படும் தகவல்களும் சுவாரசியமானவை.. எடுத்துக்காட்டாக, கொழும்பிலே நில அளவையாளராக வேலைசெய்து கனடாவுக்கு அகதியாகச் செல்லும் கனகலிங்கம் என்பவரது வாயிலிருந்து வருபவை இவை - ”எங்கள்  ஊரில் நில அளவையாளருக்கு மதிப்பில்லை… ஊருக்குள் நுழைந்தால் கள்ளரைப் பார்ப்பதுபோல் பார்ப்பார்கள்… தையல்காரர் உடல் அளவு எண்களை வைத்துக்கொண்டு அருமையான உடையைத் தைப்பது போல, அளவுகளை வைத்துக்கொண்டு கட்டிடத்துக்கு வேண்டிய நில வரைபடத்தை நான் தயாரித்து விடுவேன்… நாகரீகத்தை ஆரம்பித்து வைத்தது நில அளவைதான், தம்பி… எகிப்தில் 2000 ஆண்டுகளுக்கு முன்னரே தொடங்கி விட்டது… ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்னர் வில்லியம் என் அரசன் இங்கிலாந்து முழுவதையும் அளந்து எழுதி வைத்து விட்டான்… எத்தனை பெரிய வேலை அது… பதப்படுத்திய ஆட்டுத்தோலில் சிவப்பு கறுப்பு மைகளால் எழுதி, இன்றைக்கும் அது பாதுகாக்கப்படுகிறது… லண்டன் மியூசியத்தில் இருக்கிறது… அதை எப்படியும் இறந்து போவதற்குள் பார்த்துவிட வேண்டும் என்று எனக்கு ஒரு ஆசை…”
இடையிடையே இழைந்தோடும் நகைச்சுவையும் உண்டு – “… ஏஜன்ட் எச்சரிக்கை மிகுந்தவர்… நஞ்சைக் கூடக் குடிப்பதற்கு முன்னர் அதன் போத்தலில் முடிவு திகதியைச் சரிபார்ப்பவர்…“

ஜனரஞ்சக எழுத்ததாளர் சுஜாதாவுடன் போட்டி போடக்கூடிய நமது எழுத்தாளரான அ. முத்துலிங்கம் மிளிர்கிறார் என்றால் அது மிகையானதல்ல…
எனது பழைய முகநூல் பகிர்வொன்றில் அ. முத்துலிங்கம் அவர்களை பிரபல தொலைக்காட்சிப் பட்டிமன்றப் பேச்சாளர்கள் பாரதி பாஸ்கருக்கும், ராஜாவும் பேட்டி கண்டதைப் பகிர்ந்திருந்தேன்… அவர்கள் கேட்ட கேள்விகளும் அவற்றுக்கு திரு. முத்துலிங்கம் வழங்கிய பதில்களும் எனக்கு ஞாபகத்துக்கு வருகின்றன…. Pathmanathan Mahadevah

Sunday, November 15, 2020

இலக்கியம் ‘முரண்பட்டவனின் வெளிப்பாடு’

 எழுத்து என்பது எப்போதுமே ஓர் ஒவ்வாமையிலிருந்துதான் எழுகிறது.இன்றிருக்கும் சமூகச்சூழல், பண்பாட்டுச்சூழல், அரசியல்சூழல் பற்றிய ஆழமான ஓர் ஒவ்வாமை, ஓர் உடன்படாமை எழுத்தாளனுக்குள் உள்ளது. அதுதான் அவனை எழுதவைக்கிறது. ஒரே வரியில் இலக்கியத்தை ‘முரண்பட்டவனின் வெளிப்பாடு’ என்று சொல்லிவிடலாம்.

அது நேற்றும் அப்படித்தான் இருந்தது. நேற்றைய இலக்கியம் மெல்லமெல்ல அமைப்பின் பகுதியாகி ஏற்படைகிறது. தமிழின் ஈராயிரம் ஆண்டு இலக்கிய வரலாற்றை எண்ணிப்பாருங்கள். முடியுடை மூவேந்தருடன் முரண்பட்டு பாரியுடன் நின்று பாரிமகளிரை அழைத்துக்கொண்டு அலைந்த கபிலரின் இயல்பு என்ன?
தமிழ் என்றென்றும் போற்றும் பெருங்காவியத்தை எழுதியபின் ஒட்டக்கூத்தன் முதலிய அவைக்கவிஞர்களால் சிறுமைசெய்யப்பட்டு, அரசனிடம் பூசலிடு, சேரநாடு சென்று ஒளிந்துவாழ்ந்து, பிடிபட்டு அரசனால் கொல்லப்பட்ட கம்பனின் இயல்பு என்ன?
எட்டையபுரம் மன்னனிடமும் பிரிட்டிஷ் அரசிடமும் முரண்பட்டு தலைமறைவாக பாரதியை வாழச்செய்தது எது? நடிப்புச் சுதேசிகள் என தன் கட்சிக்காரரையே வசைபாடச் செய்தது எது?
மலையாளக் கவிஞர் வைலோப்பிள்ளி ஸ்ரீதரமேனோன் ஆரம்பகால முற்போக்கு இலக்கியவாதி. அவர் ஒருமுறை எழுதினார் “நல்ல நாளை ஒன்றுக்காக போராடுபவர்களுடன் நிற்பது என் கடமை. ஆனால் அப்படி உண்மையிலே பொன்னுலகு ஒன்று வந்தால்கூட நான் கோழிக்குஞ்சை பிடித்து கதறக்கதறக் கிழித்துச் சாப்பிடும் காகத்தைக் கண்டு கண்ணீருடன் மா நிஷாத என்று சொல்பவனாகவே நீடிப்பேன்”
பறவையிணையை கொல்லத்துணியும் வேட்டைக்காரனைக் கண்டு “நிறுத்து காட்டளனே” என்று கூவிய வால்மீகியே ஆதிகவி என்று நம் மரபு சொல்கிறது. தீது கண்டு அநீதி கண்டு எழும் கொந்தளிப்புதான் இலக்கியத்தின் அடிப்படையாக இருக்கமுடியும். அதற்கு இருக்கும் ஒரே தரப்பு அதுதானே ஒழிய, எந்த அரசியல் கருத்தியல் தரப்பும் அல்ல.
அந்த முரண்படும் இயல்பு, மீறல்தான் இலக்கியத்தின் அடிப்படை. அதையே புதுமைப்பித்தன் முதல் இன்று வரையிலான எழுத்தாளர்களிடம் காண்கிறோம். அவர்கள் சமூகமனநிலைக்கு எதிராக நிலைகொள்கிறார்கள். பண்பாட்டின் பொதுப்போக்கை எதிர்க்கிறார்கள். அரசை ஆதிக்கத்தை எதிர்க்கிறார்கள்.
- ஜெ
Thanks :

Karunakaran Sivarasa

Wednesday, November 4, 2020

பாண்டியப் பேரரசில் நகர வாழ்க்கை வாழ்ந்த தமிழர்கள்


கி.மு 580-ம் ஆண்டில் பயன்படுத்திய சுடுமண்ணால் செய்யப்பட்ட கழிவுநீர்போக்கி"பைப் லைன்"(Pipe line)! மற்றும்இரண்டடுக்கு கழிவு போக்கி!! ஒன்று மூடி வைக்கப்பட்டுள்ளது!!! மற்றொன்று திறந்த வடிகால்.....மேலும்,விரிவான படங்கள் கீழடியில் இருந்து கிடைப் பெற்றுள்ளன!!!!
உலகில், இன்றைய கால கட்டத்தில் கூட சிறந்த கழிவு நீர் போக்கிகளை அமைத்து செயல்படுத்தமுடியாமல் இருக்கும் சூழ்நிலையில்,மனிதன் நாடோடியாக திரிந்த காலத்தில் 2,600 வருடங்களுக்கு முன்னால் அறிவியலையும் மிஞ்சும் திட்டமிட்ட நகர அமைப்பு வாழ்க்கை முறையை என்னவென்று சொல்வது....
இன்று,உலகமே கீழடியில் தமிழர்களி்ன் நகர வாழக்கை அமைப்பை பார்த்து வியந்து அதிசயித்து நிற்கிறது....
கீழடித் தொல்பொருள்களின் காலம் கிமு ஆறாம் (கிமு 600) நூற்றாண்டு என்பது உறுதியாகிவிட்டது. அந்த உறுதிப்பாடு உயர்த்திப் பிடிக்கும் தமிழ்நிலத்தின் வரலாற்றுப் பெருஞ்சிறப்புகள் யாவை ?






**
1. அப்போது புத்தர் பிறந்திருக்கவில்லை. புத்தர் கிமு 563ஆம் ஆண்டுதான் பிறக்கிறார். கீழடித் தொல்லகம் புத்தர் காலத்திற்கும் முந்தி நிற்கிறது. இந்திய வரலாற்றின் முதற்பக்கங்கள் மொகஞ்சதாரோ, அரப்பா, அடுத்து புத்தர், மகாவீரர் என்று தொடங்கும். சான்றுகளைக் கேட்கும் வரலாறு இனி வாயடைத்து நிற்கும். இந்திய வரலாற்றின் முதற்பக்கங்களில் தமிழர் நாகரிகத்தைப் பற்றி இனிக் கூறியாகவேண்டும்.
2. அப்போது அஜந்தாக் குகைகள் குடையப்பட்டிருக்கவில்லை. அஜந்தாக் குகைகளில் புத்தமதச் செல்வாக்கு மிக்கிருப்பதால் அவை புத்தர் காலத்திற்குப் பிறகே பெரும்பாலும் குடையப்பட்டன. அதன் பழைமையான குகையினைக் கிமு இரண்டாம் நூற்றாண்டு வரைக்கும் ஏற்றுக்கொள்கின்றனர். கீழடிச் சான்றுகள் அவற்றுக்கும் முந்தியன.
3. கபாடபுரத்திற்கு நேர்ந்த கடல்கோளின் பின்னர் இன்றைய மதுரை நகரத்திற்குப் பாண்டியர்கள் இடம்பெயர்ந்தனர். அங்கே தோற்றுவித்து வளர்க்கப்பட்டதே கடைச்சங்கம். கடைச்சங்கத்தின் காலம் கிமு இரண்டாம் நூற்றாண்டு என்பதற்கே பலர் பல்வேறு குறுக்கு வழக்குகளோடு வருவர். சான்றெங்கே, ஆதாரம் எங்கே என்று நிற்பர். இப்போது கிமு ஆறாம் நூற்றாண்டுத் தமிழ் எழுத்துகள் தெளிந்த சான்றுகளாகிவிட்டன.
4. ஆதன், சாத்தன் ஆகிய பெயர்கள் நம் இலக்கண உரைகளில் தொடர்ந்து மேற்கோள் காட்டப்படுகின்றன.
ஆதனின் தந்தை ஆந்தை எனப்படுவார். சாத்தனின் தந்தை சாத்தந்தை எனப்படுவார். பிசிர் என்ற ஊரில் வாழ்ந்த ஆதனின் தந்தையே பிசிர் ஆந்தையார் எனப்பட்டார். அகநானூறு, புறநானூறு, நற்றிணை ஆகிய சங்க இலக்கிய நூல்களில் பிசிராந்தையார் பாடிய ஆறு பாடல்கள் இடம்பெற்றிருக்கின்றன. அவர் யாராயினும் ஆதன் என்ற பெயர் வைக்கும் பழக்கம் தொல் தமிழரிடையே பரந்திருந்தது என்பது வெள்ளிடைமலை. ஆதன் என்பதற்கு உயிர் என்று பொருள். உயிரன்.
5. ஒடிய மாநிலம் புவனேசுவரம் உதயகிரிக் குகைகளின் நெற்றியில் பொறிக்கப்பட்டுள்ள காரவேலனின் கல்வெட்டு பதின்மூன்று நூற்றாண்டுகளாய் நிலவிய சேர சோழ பாண்டியர்களின் கூட்டாட்சி வலிமையைக் கூறுகிறது. “தமிர தேக சங்காத்தம்” என்பது அக்கல்வெட்டினில் உள்ள தொடர். ஒடிய மன்னன் காரவேலன் அசோகருக்குப் பிறகு அப்பகுதியினை ஆண்டவன். கிமு இரண்டாம் நூற்றாண்டினைச் சேர்ந்தவன். “அக்கல்வெட்டினில் இருப்பது பதின்மூன்று நூற்றாண்டுகள் இல்லை, வெறும் பதின்மூன்று ஆண்டுகளாகத்தான் இருக்கவேண்டும்” என்ற வழக்கும் ஓடியது. கீழடியில் பெருந்தமிழர் நாகரிகம் செழித்து வளர்ந்திருக்கும் நிலைமையைக் காண்கையில் காரவேலன் கல்வெட்டு கூறுவது பதின்மூன்று நூற்றாண்டுகளாகவே இருக்க வேண்டும்.
6. வைகை ஆறு இரண்டாயிரம் ஆண்டுகட்கு முன்பு பேராறாக நிறைந்து ஓடியிருக்க வேண்டும். அதன் கரைவெளி எங்கும் பாண்டியப் பேரரசில் பெருவாழ்வு வாழ்ந்த குடிகளின் தடயங்களைக் கண்டெடுத்திருக்கிறோம்.
7. எழுத்துமுறை தோன்றுவதற்கு முன்பே பல்லாயிரம் ஆண்டுகளாகப் பேச்சுமுறை நிலவியிருக்க வேண்டும். மொழித்தோற்றத்தின் இளமைக் காலம் இன்னும் பல நூற்றாண்டுகள் பின்னோக்கிச் செல்லும். அனைத்தையும் கொண்டு கூட்டிப் பார்க்கையில் தமிழ் மொழியின் தொன்மையைப் பகரும் சான்றுகள் பல பல்லாயிரம் ஆண்டுகட்கு முந்தியவை என்பது தெளிவாக நம் கண்ணுக்கே தெரிகிறது.
8. கீழடியில் தங்க அணிகள் கிடைத்திருக்கின்றன. தொலைவுத் தேயங்களிலிருந்து வருவிக்கப்பட்ட மணிகள் கிடைத்திருக்கின்றன. மண்ணைக் கொண்டு பாண்டங்கள் செய்தல் என்னும் தொழில்நுட்பம் சிறப்படைந்திருக்கிறது. இருப்புப் பொருள்களும் பல்வேறு மாழைப் பொருள்களும் (உலோகம்) பயன்பாட்டுக்கு வந்திருக்கின்றன. தனிப்பான்மையான குடிவாழ்வின் தன்னிகரற்ற வரலாற்று வளர்ச்சி நிலைகள் இவை.
9. இன்றைய நிலைப்பாட்டிலிருந்து வரலாற்றினைப் பார்ப்பது தவறு. சாதிகள், பழக்கவழக்கங்கள், என இன்று நாம் பற்றிப் பழகியிருக்கும் சிறு கண்களைக்கொண்டு பழைமையில் தேடுவது நன்றன்று. ஒற்றை நிலையில் ஒரு நிலத்தின் வரலாறும் அமையாது. காலப்போக்கில் அது பல்வேறு நிலைகளுக்கு முகங்கொடுத்தாக வேண்டும். நம் வரலாறெங்கும் அவ்வாறே நிகழ்ந்தது.
எது எப்படியாயினும் அன்றைக்கும் இன்றைக்கும் இக்குடிவாழ்வின் பற்றுதலாக இருப்பது ஒன்றேயொன்று. அதுதான் முன்னைப் பழையதும் பின்னைப் புதியதுமான தமிழ்மொழி !

Monday, November 2, 2020

ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்


"ராஜகுரு சேனாதிபதி .''
நான் பிறந்தது சிலாபம் மருதங்குளத்தில். அப்பா பெயர் முத்தையா, அம்மா பொன்னம்மாள். அப்பா ராஜவம்சத்தை சேர்ந்தவர். தமிழ் நாட்டில் இருந்து வந்தவர். கோட்டையை ஆண்ட காளியங்கராயர் என்ற பட்டயம் ஒன்றும் எங்கள் வீட்டில் இருந்தது. ராஜகுரு சேனாதிபதி என்பது எங்கள் குடும்பத்தின் பரம்பரை பெயர்.

ராஜாவுக்கு குருவாகவும், சேணைக்கு அதிபதியாகவும் இருப்பவர்கள் என்பதுதான் அதன் பொருள். மதுரங்குளம் முழுவதும் என் தாத்தாவுக்கு சொந்தமான இடம் தான். ஆனால் தாத்தாவுக்கு போகும் இடமெல்லாம் மனைவிகள் இருந்திருக்கிறார்கள். அதனால் அவர் அங்கெல்லாம் ஒரு வீட்டை கட்டி அவர்களுக்கு கொடுத்திருக்கிறார். தாத்தாவின் அந்த வீடுகள் தாத்தாவுக்கு அந்தப்புரமாக இருந்திருக்கிறது. இப்போது அந்த இடங்களை அவர்கள் அனுபவிக்கிறார்கள். ஆனால் காணி தாத்தாவின் பெயரில் தான் இருக்கிறது.



“எங்கள் குடும்பத்தில் நான் ஏழாவது பிள்ளை. நான் பிறந்த வீட்டில் நாயக்கர் காலத்து தூண்கள் மாதிரி பெரிய பெரிய தூண்கள் இருக்கும். ஆனால் எனக்கு அந்த வீட்டில் தொடர்ந்து இருக்கக் கிடைக்கவில்லை. அப்பா அந்த வீட்டை அவரின் அண்ணணுக்கு எழுதி கொடுத்துவிட்டதால், நாங்கள் வேறு வீட்டிற்கு மாறி வந்து விட்டோம். ஆரம்பத்தில் என் பெயரை கனகரட்ணம் என்றுதான் எழுதி வந்தேன். ‘ராஜகுரு சேனாதிபதி என்று எழுதுவதை நான் விரும்பவில்லை.“எனக்கு சின்ன வயசிலேயே வானொலி என்றால் உயிர். அப்போ இப்போ மாதிரி வீட்டுக்கு வீடு வானொலி கிடையாது. எங்கேயோ ஒரு வீட்டில் தான் வானொலியைக் காண முடியும். ஒரு சில ஹோட்டல்களில் வானொலிகளை சத்தமாக போட்டிருப்பார்கள். நான் பாடசாலை செல்லும் நாட்களில் அந்த ஹோட்டல்களுக்கு அருகில் நின்று வானொலி ஒலிபரப்புகளை கேட்பேன். அப்போது என் குரலும் வானொலியில் ஒலிக்காதா என்ற ஆவல் எனக்குள் உருவாகி குதியாட்டம் போடும், நான் தனிமையில் இருக்கும்போது வானொலி அறிவிப்பாளர்கள் பேசுவது போல பேசி பயிற்சி எடுத்துக்கொள்வேன்.

இது இப்படி இருக்க அப்பாவுக்கும் எனக்கும் எப்போதும் கருத்து முரண்பாடு வந்து கொண்டே தான் இருந்தது. அப்பா எனக்கு எந்த உதவியையும் செய்ய முடியாது என்று கூறி 'வீட்டை விட்டு வெளியே போ' என்று விரட்டினார். அப்போது வேறு ஒருவரின் உதவியுடன் வானொலிக்குள் பிரவேசம் செய்ய முயற்சி செய்தேன். வர்த்தமானியில் வெளியான அறிவிப்பாளர்கள் தேவை என்ற விளம்பரத்தை பார்த்து விட்டு விண்ணப்பம் போட்டு விட்டு காத்திருந்தேன். பிறகு வரச் சொன்னார்கள்.

அதற்குப் பிறகு நேர்முகத் தேர்வுக்குச் சென்றேன். தேர்வானேன். முதல் நாள் ஒலிபரப்பிற்காக மைக் முன்னால் அமர்ந்தபோது எனக்கு நடுக்கமாக இருந்தது. எத்தனையோ ஆயிரக்கணக்கானோர் என் குரலைக் கேட்கப் போகிறார்களே என்ற பயமும் பரபரப்பும் தான் அந்த நடுக்கத்திற்குக் காரணம். அப்போது நமது வானொலி தமிழகத்திலும் தெளிவாக ஒலிபரப்பாகி வந்தது. அதனால் அவர்களும் கேட்க கோடிக்கணக்கான மக்களை எமது குரல் சென்றடைந்த காலம் அது. இலங்கை வானொலியில் நிறைய நிகழ்ச்சிகளை செய்திருக்கிறேன். பொதிகை தென்றல், காலைக்கதிர், பாட்டொன்று கேட்போம், இரவின் மடியில் உள்ளிட்ட பல நிகழ்ச்சிகளுக்கு நானே பெயரும் சூட்டினேன்.”
பாடல்: திருமலை மேலொருநாள்
பாடகர்கள்: ரி. கிருஷ்ணன், ஜெகதேவி விக்னேஷ்வரன்
இசை: எம். மோகன்ராஜ்
பாடல் வரிகள்: ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம்
தயாரிப்பு: இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபனம் - தமிழ்ச்சேவை


நீங்கள் வானொலி நட்சத்திரமானப் பின்னர் தங்களின் முதல் ரசிகை? முதல் காதல்?

“நான் வானொலி நட்சத்திரமானப் பிறகு எத்தனையோ பெண்களின் காதல் ரசம் சொட்டும் கடிதங்களைப் பார்த்திருக்கிறேன். இன்றும் அந்தக் காதல் கடிதங்களை மட்டும் பத்திரமாக வைத்திருக்கிறேன். ஆனால் எந்தப் பெண்ணும் என் மனசிலும் பதியவில்லை.

வாழ்க்கையிலும் துணையாகவில்லை. அது ஏனோ தெரியவில்லை. எனக்கு எந்தப் பெண்ணிலும் பிடிப்பு ஏற்படவில்லை. என்னை எத்தனையோ பெண்கள் சுற்றி வந்திருக்கிறார்கள். என் மீது உள்ள காதலை நேரிடையாகவே என்னிடம் சொல்லியிருக்கிறார்கள்.

ஆனால் என்னமோ தெரியவில்லை எனக்குதான் காதல் உணர்வே வரவில்லை. ஒரு முறை பெங்களூரிலிருந்து இலங்கைக்கு சுற்றுலா வந்தப் பெண் என்னைப் எப்படியோ தேடிக் கண்டுபிடித்து அவள் எனது தீவிர ரசிகை என்றும் அவள் என்னை விரும்புவதாகவும் சொல்லி கெஞ்சினாள்.

ஆனால் நான்தான் அவளோடு வந்த குடும்பத்தார்களிடம் கைகொடுத்து கும்பிட்டு அவளை அழைத்துச் செல்லும்படி சொன்னேன். இப்படியொரு மக்கனாக அந்தக் காலத்தில் நான் வாழ்ந்திருக்கிறேன். அந்தப்பெண்களின் சாபம் தானோ என்னவோ நான் இன்று தனிமையில் கஷ்டப்படுவதற்கு காரணமாக அமைந்துவிட்டது போலும்.பல ஆண்டுகளுக்கு முன் ஆனந்தவிகடன் இதழில் இவரது ராஜகுரு சேனதிபதி என்ற பெயரின் சிறப்பைக் குறிப்பிட்டு கட்டுரை எழுதியிருந்தார்கள்
இலங்கை இந்தியக் கூட்டுத் தயாரிப்பில் 1982 ஆம் ஆண்டில் வெளிவந்த இளையநிலா என்ற தமிழ்த் திரைப்படத்துக்கான பாடல்கள் அனைத்தையும் ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் எழுதியிருந்தார்

“ஒருமுறை நேரடியோ சிலோனில் நான் அறிவிப்பாளராக கடமையாற்றி கொண்டிருந்தபோது மறுபக்கத்தில் நந்தசேன என்பவர் ஒலிபரப்பிற்கு உதவியாக பணியாற்றிக்கொண்டிருந்தார். நிகழ்ச்சி முடிந்த பின் என்னை அழைத்த நந்தசேனை, மச்சான் உனக்கு புகை பிடிக்கும் பழக்கம் உண்டா? என்றார் நான் இல்லை என்றேன். தண்ணீ, பொண்ணு என்று கேட்க நான், இல்லவே இல்லை என்று மறுத்தேன்.

அப்போது நந்தசேன, நீயெல்லாம் ஏன்டா பூமியில பிறந்தாய்? என்று கேட்டார். நான் விக்கித்து நின்றேன்” என்று சொன்ன ராஜகுரு சேனாதிபதியிடம் அப்பாவிடம் அடிவாங்கி இருக்கிறீர்களா? என்று கேட்டோம்.

“அப்பாவிற்கு என்னை பிடிக்காது. அதனால் எப்போதும் என்னை அடிப்பார். சில நேரங்களில் என்னை அடித்து வீட்டை விட்டு துரத்திவிடுவார். நான் என் வீட்டுத் தோட்டத்திலுள்ள வாய்க்காலில் தென்னம் ஓலையை போட்டுப் படுத்து தூங்கிவிட்டு மறுநாள் காலையில் வருவேன். சில நாட்களில் மரத்தில் ஏறி அதன் உச்சியில் உள்ள கிளையில் அமர்ந்து அப்படியே தூங்கி விடுவேன்.

கீழே விழாமலிருக்க இடுப்பில் ஒரு கயிற்றை கட்டி மரத்தில் கட்டிவிட்டு தான் தூங்குவேன். ஒரு நாள் நானும் எனது நண்பர் பொன்னம்பலமும் மாலையில் சைக்கிளை எடுத்துக்கொண்டு சிலாபத்திற்கு சென்று நள்ளிரவில் வீட்டுக்குத் திரும்பி வந்தோம். வரும்போது வழியில் நான் கீழே விழுந்து காலில் நல்ல அடிபட்டுவிட்டது. காயத்தோடு வீட்டுக்கு வந்தபோது அப்பா என்னை வீட்டிற்கு வெளியே நின்ற மரத்தில் கட்டி வைத்து அடித்தார். இன்றும் அந்த சம்பவம் என் மனதில் அப்படியே இருக்கிறது.”

தனிமை உங்களுக்கு கொடுமையாகத் தெரியவில்லையா?

“இல்லை. அது ஆண்டவன் கொடுத்த வரம். தனிமையை இனிமையானதாகவே கருதுகிறேன். நானே சமைத்து சாப்பிடுகிறேன். எனக்கு இதுவரையும் எந்த நோயும் வந்ததில்லை. கடவுள் என்னோடு இருக்கிறார் என்பதற்கு இதைவிட வேறு சான்று தேவையில்லை. நான் வானொலி, தொலைக்காட்சி கேட்பதும் பார்ப்பதும் கிடையாது. உலகத்தில் என்ன நடக்கிறது என்பதைத் தெரிந்துகொள்ள திருச்சி வானொலியை மட்டும் தினமும் கேட்கிறேன்.”மறக்க முடியாத நபர்கள்?

நண்பர் நமசிவாயம், பெர்ணான்டோ, நெவில் ஜயவீர உள்ளிட்டோரை மறக்கவே முடியாது.

ம்... அது ஒரு காலம் என்று நீங்கள் ஏங்குவது?

“எங்கள் வீட்டுக்கு முன்னாடி இருந்த மதுரங்குளம் குளத்தில கரனம் போட்டு குதித்து, நீந்தி விளையாடிய அந்த நாட்கள்... இன்று அந்தக் குளத்தைப் பார்க்கும்போது ரொம்பவும் ஏக்கமாக இருக்கும். என்ன செய் வது இப்போது என்னால் கரணம் போட்டு அந்த குளத்தில் குதிக்கவோ, நீந்தவோ முடியாது. வீட்டு குளியலறையில் தான் குளிக்கிறேன்.

கடந்து வந்த வாழ்க்கையைப் பற்றி உங்கள் புரிதல் என்ன?

“நாம் கொண்டு வந்ததும் ஒன்றுமில்லை; கொண்டு போவதும் ஒன்றுமில்லை. குறிப்பிட்ட சில காலங்கள் இங்கே கொஞ்சம் தங்கியிருந்து விட்டு போகிறோம். அவ்வளவு தான். என்னைப் பொருத்தவரையில் நான் வாழ்ந்த வாழ்க்கை இனிமையானது என்றுதான் சொல்வேன்” என்று முடித்தார் கனகரட்ணம்.சுவாரசியமான சம்பவங்கள். அவர் தனியாக வாழ்ந்தார் என்பது இப்போது தான் தெரிகிறது. தனிமை கொடுமை! முதுமையில் அதனினும் கொடுமை!!.அடக்கமான, ஆனால் கம்பீரமான குரலுக்குச் சொந்தக்காரரான ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் அரச வம்சத்தைச் சேர்ந்தவர் என்பது எனக்குப் புதிய செய்தி. யார் இப்படிப் பெயர் வைத்திருப்பார்கள் என்று என் சிறிய வயதில் நான் நினைத்ததுண்டு. என் இளமைக்காலத்தில் அபிமான அறிவிப்பாளர்களில் அவரும் ஒருவர். ராஜகுரு சேனாதிபதி கனகரத்தினம் 2014 சூலை 29 இல் தனது 79வது அகவையில் சிலாபம் மருத்துவமனையில் காலமானார். அவர் நினைவுகள் வாழ்க .நன்றி தமிழ் முரசு

Friday, August 7, 2020

முருகனின் பெயருக்கு விளக்கம்!

 

1. ஆறுமுகம்: ஈசானம், தத்புருஷம், வாமதேவம், அகோரம், சத்யோஜாதம் என்ற ஐந்துடன் அதோமுகமும் சேர்ந்து ஆறுமுகமானது.

2. குகன்: குறிஞ்சி நிலத் தெய்வம், மலைக் குகைகளில் கோயில் கொண்டதால் குகன்.

3. குமரன்: மிக உயர்ந்தவன், இளமையை எப்போதும் உடையவன், பிரம்மச்சாரி ஆனவன்.

4. முருகன்: முருகு அழகு என்று பொருள், எனவே முருகன் ஒப்புமையற்ற பேரழகன்.

5. குருபரன்: கு அஞ்ஞான இருள், ரு நீக்குபவர், ஆன்மாக்களின் அறியாமை இருளை அகற்றுபவன் குரு சிவனுக்கும், அகத்தியருக்கும், அருணகிரிக்கும் குருவாய் நின்று பிரணவத்தை உபதேசிப்பவன் குருநாதன்.

6. காங்கேயன்: கங்கையின் மைந்தன்.

7. கார்த்திகேயன்: கார்த்திகைப் பெண்களால் வளர்ந்தவன்.

8. கந்தன்: கந்து யானை கட்டும் தறி. கந்தன் ஆன்மாக்களுக்குப் பற்றுக் கோடாய் இருப்பவன். பகைவர் வலிமையை அழிப்பவன் ஸ்கந்தன். தோள் வலிமை மிக்கவன். ஆறு திருமேனியும் ஒன்றானவன்.

9. கடம்பன்: கடம்ப மலர் மாலை அணிந்தவன்.

10. சரவணபவன்: சரம் நாணல், வனம் காடு, பவன் தோன்றியவன், நாணல் மிக்க தண்ணீர் உடைய காட்டில் தோன்றியவன்.

11. ஸ்வாமி: ஸ்வம் சொத்து, எல்லா உலகங்களையும், எல்லா உயிர்களையும் சொத்தாக உடையவன். சுவாமி என்ற பெயர் முருகனுக்கு மட்டுமே உரியது. சுவாமி உள்ள மலை சுவாமி மலை.

12. சுரேஷன்: தேவர் தலைவன் சுரேசன்.

13. செவ்வேள்: செந்நிறமுடையவன், ஞானச் செம்மை உடையவன்.

14. சேந்தன்: செந்தழல் பிழம்பாய் இருப்பவன்.

15. சேயோன்: சேய் குழந்தை, குழந்தை வடிவானவன்.

16. விசாகன்: விசாக நட்சத்திரத்தில் ஒளியாய் உதித்தவன்.

17. வேலவன், வேலன்: வெல்லும் வேல் உடையவன், அறிவாக, ஞான வடிவாக விளங்கும் வேல், கூர்மை, அகலம், ஆழம் என்னும் மூன்றும் உடையது.

18. முத்தையன்: பிறப்பிலேயே முத்து ஒளியுடையது. மற்ற மணிகள் பட்டை தீட்டினால் தான் ஒளிரும். எனவே இயல்பாகவே ஒளிர்பவன் முத்தையன்.

19. சோமாஸ்கந்தன்: ச உமா ஸ்கந்தன்: சிவன் உமை முருகன்; சத்து சிவம், சித்து உமை, ஆனந்தம் கந்தன், முருகன் ஆனந்த வடிவானவன்.

20. சுப்பிரமணியன்: சு மேலான பிரம்மம் பெரிய பொருளிலிருந்து, நியம் தோன்றி ஒளிர்வது. மேலான பெரிய பிரம்மத்தில் இருந்து தோன்றி ஒளிர்பவன்.

21. வள்ளற்பெருமான்: முருகன், மண்ணுலகில் அவதரித்த வள்ளி இச்சா சக்தி மூலம் இக நலன்களையும், விண்ணுலக மங்கை தெய்வானை கிரியா சக்தி மூலம் பரலோக நலன்களையும், வேலின் மூலம் ஞானசக்தியையும் ஆகிய மும்மை நலன்களையும், முக்தி நலன்களையும் வழங்குகிறார்கள்.

22. ஆறுபடை வீடுடையோன்: மூலாதாரம், சுவாதிஷ்டானம், மணிபூரகம், அநாகதம், விசுத்தி, ஆக்ஞை என்ற ஆறாதாரங்களை ஆறுபடை வீடுகளாய் உடையவன்.

23. மயில்வாகனன்: மயில் ஆணவம், யானை கன்மம், ஆடு மாயை இந்த மூன்றையும் அடக்கி வாகனமாய் கொண்டவன்.

24. தமிழ் என்றால் முருகன். முருகன் என்றால் தமிழ். இரண்டையும் பிரிக்க முடியாத அளவிற்கு இணைந்தே இருக்கும். உதாரணமாக 12 உயிரெழுத்து என்பது முருகனின் 12 தோள்களை குறிக்கும். 18 மெய்யெழுத்து என்பது முருகனின் 18 கண்கள் (முருகன் சிவனது நெற்றிப் பொறியிலிருந்து தோன்றியவர் என்பதால், இவரது ஒவ்வொரு முகத்திலும் இவருக்கும் நெற்றிக்கண் உண்டு) 6 இன எழுத்து என்பது 6 முகங்களை குறிக்கும். ஃ என்ற ஆயுத எழுத்து வேலை குறிக்கும். இந்த வேலை வணங்குவதையே வேலையாக கொண்டால் வாழ்வில் சகல சவுபாக்கியங்களும் கிடைக்கும்.

ஓம் சரவண பவ

Sunday, May 3, 2020

சூரியனை நேர்ந்து கொண்டிருப்பவள்


நான் எப்பொழுதும் காதலானவள்
இப்படித்தான் உணர்கிறேன்
வளர் இளம் பருவத்தில்
எத்தனை அன்பின் இடுகைகள்
அறிந்தும் அறியாமலும் வளர்ந்தேன்
வகுப்பறையில்
நண்பன் ஒருவன் மூங்கில் கழியினால்
அடிவாங்கிக்கொண்டிருக்கையில்
அதே செயலுக்காக
தப்பித்துக் கொண்டிருந்தேன்
தவறு செய்திருந்த போதும்
தண்டனைகளிருந்து
என்னைக் காக்க
ஓராயிரம் கண்களும்
ஓராயிரம் உதடுகளும் இருந்தன
சற்று வளர்ந்தேன்
இளமை
எனக்குப் பாதுகாப்பு வளையமாகவே
மாறியிருந்தது
இன்னும் வளர்ந்தேன்
வயது சுடர்கையில்
என்னைக் கைக்கொள்ள நினைத்தவர்
எத்தனை பேரென்று
நான் அறிந்திருக்கவில்லை
மென்காற்று வீசுகையில் மதர்த்தெழும்
என் அழகில் மயங்கிக் கிடந்த நான்
வானத்தையளக்கும் பறவையை
முற்றுமறிந்த கணத்தில்
பெண் என்பவள்
கையப்படுத்தப்படும் நிலம் அல்லவென
உணர்ந்து
நிமிர்ந்தேன்
நிலவு என் கைகளில்
என்னை வந்தடைந்த
நிலவை அணைத்தபடி
சூரியனை நோக்கி
நகர்ந்து கொண்டிருக்கிறேன் .
Sakthi Jothi
" சொல் எனும் தானியம்" தொகுப்பிலிருந்து. 

Wednesday, April 29, 2020

பாவேந்தர் பாரதிதாசன்


“தமிழுக்கும் அமுதென்று பேர், அந்தத் தமிழின்பத் தமிழெங்கள் உயிருக்கு நேர்” என்ற தேன் சுவைசொட்டும் பாடல் வரிகளுக்கு சொந்தக்காரர், ‘பாவேந்தர் பாரதிதாசன்’ அவர்கள். பெரும் புகழ் படைத்த பாவலரான பாரதிதாசன் அவர்கள், ‘புரட்சிக்கவி’ என்றும், ‘பாவேந்தர்’ என்றும் அழைக்கப்பட்டார். தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்று, தமிழ் மொழிக்கு அருட்தொண்டாற்றியவர், பாரதிதாசன் அவர்கள். தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி, திரைக் கதாசிரியர், எழுத்தாளர், கவிஞர், என்று பல்வேறு துறைகளில் தமிழ் மொழியின் இனிமையை மக்களிடம் எடுத்துச் சென்றவர் என்று சொன்னால் அது மிகையாகாது. தனது படைப்புகளுக்காக ‘சாஹித்ய அகாடமி விருது’ பெற்ற பாவேந்தர் பாரதிதாசன் அவர்களின் வாழ்க்கை வரலாறு மற்றும் தமிழ்மொழியில் இன்றளவும் நிலைத்துநிற்கும் அவரது தலைச்சிறந்த படைப்புகள் பற்றியறிய மேலும் தொடர்ந்து படிக்கவும்.

பிறப்பு: ஏப்ரல் 29, 1891

பிறப்பிடம்: புதுவை

இறப்பு: ஏப்ரல் 21, 1964

பணி: தமிழாசிரியர், கவிஞர், அரசியல்வாதி

நாட்டுரிமை: இந்தியன்



பிறப்பு

பாவேந்தர் பாரதிதாசன் அவர்கள், தென்னிந்தியாவில் இருக்கும் புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார். அவரது தந்தை, அவ்வூரில் பெரிய வணிகராக இருந்தார். பாரதிதாசன் அவர்களின் இயற்பெயர் சுப்புரத்தினம். அவரது தந்தையின் பெயரின் முதல் பாதியை, தன்னுடைய பெயரில் இணைத்து ‘கனகசுப்புரத்தினம்’ என்று அழைக்கப்பட்டார்.

ஆரம்ப வாழ்க்கையும், கல்வியும்

பாரதிதாசன் அவர்கள், தனது இளம் வயதிலிருந்தே தமிழ் மொழி மீது அதீத பற்றுடையவராகத் திகழ்ந்தார். இருப்பினும், புதுவையில் பிரெஞ்சுகாரர்களின் ஆதிக்கம் இருந்ததால், அவர் ஒரு பிரெஞ்சு பள்ளியிலே சேர்ந்தார். அவர் தனது தொடக்கக் கல்வியை, ஆசிரியர் திருப்புளிசாமி அய்யாவிடம் கற்றார். அவர் புகழ்பெற்ற அறிஞர்களின் மேற்பார்வையில் தமிழ் இலக்கியம், தமிழ் இலக்கணம் மற்றும் சைவ சித்தாந்த வேதாந்தங்களை முறையாகக் கற்றார். பின்னர், தமிழ் பயிலும் பள்ளியில் சேர அவருக்கு வாய்ப்பு கிடைத்ததால், அங்கு சேர்ந்து அவருக்கு விருப்பமானத் தமிழ் மொழியில் பாடங்களைக் கற்றார். சிறு வயதிலேயே சுவைமிக்க அழகானப் பாடல்களை, எழுதும் திறனும் பெற்றிருந்தார். பள்ளிப்படிப்பை நன்கு கற்றுத் தேர்ந்த அவர், தனது பதினாறாவது வயதில், புதுவையில் உள்ள கல்வே கல்லூரியில் சேர்ந்து, தமிழ் மொழியின் மீது அவர் வைத்திருந்த பற்றினையும், அவரது தமிழ்ப் புலமையை விரிவுப்படுத்தினார். தமிழறிவு நிறைந்தவராகவும், அவரது விடா முயற்சியாலும், தேர்வில் முழு கவனம் செலுத்தியதால், மூன்றாண்டுகள் பயிலக்கூடிய இளங்கலைப் பட்டத்தை, இரண்டு ஆண்டுகளிலேயே முடித்து கல்லூரியிலேயே முதலாவதாகத் தேர்ச்சிப் பெற்றார். மிகச்சிறிய வயதிலேயே இத்தகைய தமிழ் புலமை அவரிடம் இருந்ததால், கல்லூரிப் படிப்பு முடிந்தவுடனே அவர், 1919ல் காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

 இல்லற வாழ்க்கை

பாரதிதாசன் அவர்கள், தமிழாசிரியாராகப் பதவியேற்ற அடுத்த ஆண்டிலே அதாவது 1920ஆம் ஆண்டில் பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார். அவர்கள் இருவருக்கும் நவம்பர் மாதம் 3 ஆம் தேதி, 1928ஆம் ஆண்டில் மன்னர்மன்னன் என்ற மகன் பிறந்தான். அதன் பிறகு, சரஸ்வதி, வசந்தா மற்றும் ரமணி என்ற மகள்களும் பிறந்தனர்.

பாரதியார் மீது பற்று      

தமிழ்மொழி மீது பற்றுக் கொண்டவராக இருந்த பாரதிதாசன் அவர்கள், அவரது மானசீக குருவாக சுப்ரமணிய பாரதியாரைக் கருதினார். அவரது பாடலைத் தனது நண்பனின் திருமண நிகழ்வின் போது பாடிய அவர், பாரதியாரை நேரில் சந்திக்கவும் செய்தார். பாரதியிடமிருந்து பாராட்டுக்கள் பெற்றதோடு மட்டுமல்லாமல், அவரது நட்பும் கிடைத்தது அவருக்கு. அன்று முதல், அவர் தனது இயற்பெயரான கனகசுப்புரத்தினம் என்பதை ‘பாரதிதாசன்’ என்று மாற்றிக் கொண்டார்.

தொழில் வாழ்க்கை

பாரதியாரிடம் நட்பு கொண்ட அன்று முதல், பாரதிதாசன் என்ற பெயரிலே அவர் தனது படைப்புகளை வெளியிட்டார். அச்சமயத்தில், சுதந்திரப் போராட்ட சூழல் நிலவியதாலும், அவர் திராவிட இயக்கத்தின் தீவிர தொண்டன் என்பதாலும், தந்தை பெரியார் மற்றும் பல அரசியல் தலைவர்களுடன் இணைந்து பல போராட்டங்களில் ஈடுபட்டு பலமுறை சிறைக்குச் சென்றார். அவரது இலக்கிய நடையைக் கண்டு வியந்த அன்றைய திரைத் தயாரிப்பாளர்களும், இயக்குனர்களும் அவருக்கு வாய்ப்புகள் வழங்கியதால், அவர் திரைப்படங்களுக்கும் கதை-வசனம் எழுதியுள்ளார். பெருந்தலைவர்களான அண்ணாதுரை, மு. கருணாநிதி, மற்றும் எம்.ஜி. ராமச்சந்திரன் போன்றோர் அவருடைய படைப்புகளுக்காக அவரை ஊக்குவித்ததாலும், அவர் 1954ஆம் ஆண்டில் புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஐந்து ஆண்டுகள் செம்மையாக செயல்புரிந்த அவர், 1960ல் நடந்த சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

அவரது படைப்புகள்

எண்ணற்ற படைப்புகளை அவர் தமிழ்மொழிக்கு வழங்கி இருந்தாலும், சாதி மறுப்பு, கடவுள் எதிர்ப்பு போன்ற மூடநம்பிக்கைகளை மக்களின் மனதிலிருந்து அழிக்கும் விதமாகப் பல்வேறு படைப்புகளை வெளியிட்டார். அவரது மிகச்சிறந்த படைப்புகளில் சில:

‘பாண்டியன் பரிசு’, ‘எதிர்பாராத முத்தம்’, ‘குறிஞ்சித்திட்டு’, ‘குடும்ப விளக்கு’, ‘இருண்ட வீடு’, ‘அழகின் சிரிப்பு’, ‘தமிழ் இயக்கம்’, ‘இசையமுது’, ‘குயில்’, ‘தமிழச்சியின் கத்தி’, ‘பாண்டியன் பரிசு’, ‘பாரதிதாசன் ஆத்திசூடி’, ‘பெண்கள் விடுதலை’, ‘பிசிராந்தையார்’, ‘மயிலம் ஸ்ரீ சுப்பிரமணியர் துதியமுது’, ‘முல்லைக் காடு’, ‘கலை மன்றம்’, ‘விடுதலை வேட்கை’, மற்றும் பல.

விருதுகள் மற்றும் அங்கீகாரங்கள்

பாரதிதாசன் அவர்களுக்கு பெரியார், “புரட்சி கவிஞர்” என்ற பட்டமும், அறிஞர் அண்ணா, ‘புரட்சிக்கவி’ என்ற பட்டமும் வழங்கினர். தமிழ்நாடு மாநில அரசாங்கம், அவரது நினைவாக ஆண்டுதோறும் ஒரு தமிழ் கவிஞருக்கு ‘பாரதிதாசன் விருதினை’ வழங்கி வருகிறது மற்றும் ‘பாரதிதாசன் பல்கலைக்கழகம்’ என்ற பெயரில் ஒரு மாநில பல்கலைக்கழகம் திருச்சிராப்பள்ளியில் ​​நிறுவப்பட்டது.

1946 – அவரது “அமைதி-ஊமை” என்ற நாடகத்திற்காக அவர் ‘தங்கக் கிளி பரிசு’ வென்றார்.
1970 – அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது

2001 – அக்டோபர் மாதம் 9ஆம் தேதி, சென்னை தபால் துறை மூலமாக ஒரு நினைவு அஞ்சல்தலை அவரது பெயரில் வெளியிடப்பட்டது.

இறப்பு

எழுத்தாளர், திரைப்படக் கதாசிரியர், கவிஞர், அரசியல்வாதி என்று பன்முகம் கொண்ட பாரதிதாசன் அவர்கள், ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

காலவரிசை

1891: புதுவையில், ஏப்ரல் மாதம் 29 ஆம் தேதி, 1891 ஆம் ஆண்டில் கனகசபை முதலியார் மற்றும் இலக்குமி அம்மாள் தம்பதியருக்கு மகனாகப் பிறந்தார்.

1919: காரைக்காலைச் சேர்ந்த அரசினர் கல்லூரித் தமிழாசிரியாராகப் பதவியேற்றார்.

1920: பழநி அம்மையார் என்பவரை திருமணம் செய்து கொண்டார்.

1954: புதுச்சேரி சட்டமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

1960: சட்டமன்ற தேர்தலில் தோல்வியைத் தழுவினார்.

1964: ஏப்ரல் மாதம் 21ஆம் தேதி, 1964 ஆம் ஆண்டில் இயற்கை எய்தினார்.

1970: அவரது மரணத்திற்குப் பின், அவரது ‘பிசிராந்தையார்’ நாடகத்திற்காக அவருக்கு ‘சாஹித்ய அகாடமி விருது’ வழங்கப்பட்டது.
Thanks https://www.itstamil.com