Search This Blog

Thursday, March 9, 2023

அறிவிலிருந்து உண்மைக்கும்…உண்மையிலிருந்து அறிவுக்கும்-ஜிஜெக்கின்(Slavoj Zizek) விளக்கம்..

 

அறிவுக்கும் உண்மைக்கும் இடையில் இயங்கியல் இறுக்கம் நிலவும் கோணத்திலிருந்து இதை அணுகலாம். உளவியல் ‘புறவயமான’ அறிவுக்கும் ‘அகவயமான’ உண்மைக்கும் இடையில் இருக்கும் முரண் களனில் வினைபுரிகிறது. உண்மையின் போர்வையில் ஒருவர் பொய் சொல்லலாம் (அதீத கருத்து வெறி உடையவர்கள் தங்களின் விருப்பத்தை மறைத்துக் கொண்டு இதைத்தான் செய்துகொண்டிருக்கிறார்கள்) ஒருவர் பொய்யின் போர்வையில் உண்மையைச் சொல்லலாம் (மனயிசிவு நடைமுறை அல்லது நாக்குழறி சில சமயங்களில் விருப்பம் வெளிப்பட்டுவிடும்).
இந்த உண்மையும் பொய்யும் அமைப்புக்குள் எப்படி எல்லாம் புதிய வடிவங்கள் எடுக்கின்றன என்பதுதான் இப்போதிருக்கும் விவாதம். இதில் மத ரீதியான கட்டமைப்புக்குள்ளிருந்துதான் பெரும்பாலும் உண்மையும் பொய்மையும் பேசப்படுகின்றன. குறிப்பாக, கிறித்துவ மதம் சார்ந்த நம்பிக்கை உண்மையையும் பொய்மையையும் தொடர்ந்து கேள்விக்குள்ளாக்கிக் கொண்டிருக்கிறது.
கிறித்துவத்திற்கு முந்தைய மதங்கள் ‘ஞானத்தை’ச் சொல்லும் தளத்தில் இயங்கின. காலத்தின் உண்மையை இறைப்பொருளின் மெய்மைக்கு விட்டுக் கொடுப்பதில் கவனம் செலுத்தின. ஆனால் கிறித்துவமோ ஏசுகிறிஸ்துவை காலந்தோறும் அழியாத தனிமனிதனாக வரையறுத்தது. உயிர்த்தெழுதல் அமரத்துவமான உண்மைக்குரிய பாதையாகும் என்றது.
ஒட்டுமொத்தமாகப் பார்த்தால் கிறித்தவம் தன்னை ‘அன்பின் மதம்’ என்று சொல்கிறது. ஆனால் அப்படியான அன்புக்குரியவர்களைத் தனிமைப்படுத்தி வைத்துப் பார்க்கிறது கிறித்துவம். ஏனெனில் அதில் மதமாற்றமும் பாவமன்னிப்பும் குறிப்பிடத்தக்க விளைவை ஏற்படுத்தக் கூடியவையாக உள்ளன. மதமாற்றம் காலங்களைக் கடந்த வினை, நித்தியத்தை மாற்றக் கூடியது.
அதே போல் கிறித்தவம் குற்றத்தை ஒப்புக்கொள்ளுதல் என்ற விதிவிலக்கை வைத்ததால் அது பாவமன்னிப்புக்கு சான்றளிக்கிறது. உண்மையையும் பொய்மையையும் ஒரே எடையில் வைத்துப் பார்க்க அது உதவுகிறது. மேலும் கிறித்துவம் இறைவனுக்கு வடிவத்தை, முகத்தைக் கொடுத்துப் பார்க்கிறது. எந்த ஒரு மனிதனும் அன்புடையவனாக, கருணை கொண்டவனாக தன் சுற்றத்தைப் பாதுகாப்பவனாக இருக்கிறான் என்றால் அவன் கடவுளின் வடிவம் என்கிறது. அதனால் மனித வரலாற்றில்தான் கடவுள் தன்னை அறியமுடியும். மனிதனின் வாழ்வில்தான் கடவுள் வாழமுடியும்.

தன்னிலையாக்கம் குறித்த விளக்கம்-ஜிஜெக்
உடல், மனம் பிளவுபட்டிருப்பதாகக் கருதும் கார்ட்டீசிய ஆவியைத் கல்விப்புலத்தினர் துரத்துகின்றனர். இன்றைய தத்துவக் கல்விப் புலத்தில் பீடித்திருக்கும் ஆவியான கார்ட்டீசியத்தை ஓட்டுவதைப் பெரும்பாலும் எல்லா ஆய்வாளர்களும் செய்துவருகிறார்கள். உடல், மனம் பிளவுபட்டிருப்பதாக ரெனே டெக்கார்ட் சொன்னதை இப்போது யாரும் ஏற்கத் தயாராக இல்லை. அதில் உருவான சுயம் என்பது குறித்த விளக்கத்தைத் தர பலரும் பல தத்துவங்களை உருவாக்கிக் கொண்டே போகிறார்கள்.
ஆனால் எல்லோரும் கார்ட்டீசிய தன்னிலைதான் இதுவரை உருவாக்கப்பட்ட தன்னிலை குறித்த விளக்கங்களிலேயே அதிக ஆற்றல் வாய்ந்தது என்பதை ஒப்புக்கொள்கிறார்கள்.
அவர்கள் எல்லோரும் கார்ட்டீசிய தன்னிலைக்கு எதிரான விளக்கங்களை உருவாக்க முனைகிறார்கள். அவற்றை இப்போதாவது தெளிவாக்கவேண்டிய நேரம் வந்துவிட்டது.
ஊடுருவும் சுயம் என்ற விளக்கத்தை அடைவதற்கு கார்ட்டீசிய தன்னிலை உதவாது. அதற்கு மூன்று வகையான விளக்கங்கள் தேவைப்படுகின்றன. ஜெர்மன் கருத்தியல்வாதம், அல்தூஸரிய அரசியல் தத்துவம், பன்மைத்துவ தன்னிலைகளைக் கூறும் கட்டுடைக்கும் தத்துவம் ஆகிய மூன்று வகையான சிந்தனைகளினூடாக தன்னிலைக் குறித்த விளக்கம் அறியப்படவேண்டியிருக்கிறது.
முதலாவது சுயத்திற்குள் இருக்கும் பித்துநிலையை மீண்டும் சாதாரண நிலைக்குக் கொண்டுவர எடுக்கப்பட்ட முயற்சியாக இருந்தது. அது நனவிலியைத் தன்னிலைப் பிரதிபலிப்பதாகக் கொள்ளும் கருத்தாக உருவானது. அடுத்தது இன்றைய சர்வதேச முதலாளித்துவச் சூழலில் அரசியலாக்கப்பட்டத் தன்னிலைதான் சரியான விளக்கமாகக் கொள்ளப்படுகிறது. மூன்றாவது பன்முகத் தன்மைக் கொண்ட தன்னிலைதான் பின்நவீனத்துவ அரசியல் முகத்தைக் காட்டும் என்ற விளக்கத்தைத் தருகிறது.
- ஸ்லாவாய் ஜிஜெக்,
தற்காலத்தின் மிக முக்கியமான மார்க்ஸியச் சிந்தனையாளர்,
சமூக-அரசியல் விமர்சகர்.
Thanks

Mubeen Sadhika

No comments:

Post a Comment