Search This Blog

Tuesday, February 7, 2023

பாலினச் சிக்கல் ஜுடித் பட்லர் (Judith Butler)

 

ஜூடித் பட்லர் (Judith Butler, பெப்ரவரி 24, 1956) அமெரிக்க ஐரோப்பிய மெய்யியலாளரும் பாலினக் கோட்பாட்டாளரும் ஆவார். இவரது ஆய்வுகள் அரசியல் தத்துவம்நன்னெறிபெண்ணியக் கூறுகள்கோணல் கோட்பாடு[மற்றும் இலக்கியக் கோட்பாடுகளில் தாக்கமேற்படுத்தி உள்ளன.

’பெண்’ அல்லது ‘ஆண்’ என்ற சிக்கலற்ற ஒருமையின் அடையாளத்தின் ஒருமைப்பாட்டைக் குலைக்கும் வகையில் தன்னிலைக்குள் பால்(Sex), பாலினம்(gender) என்ற வேற்றுமை கொண்ட பிளவு அறிமுகமாகிறது. உயிரியல் ரீதியான அம்சமே இறுதியானது என்று கொண்டாலும் கூட பால் உயிரியல் ரீதியான கட்டுப்பாடுகளைக் கொண்டிருந்தாலும் பாலினம் சமூகத்தால் கட்டமைக்கப்பட்டது:

எனவே பாலினம், பாலின் தற்செயலான விளைவும் அல்ல பாலாக ஓர் உடலில் ஊன்றப்பட்டதும் அல்ல. (ஆண், பெண் மற்ற பாலினத்தாருக்கும் இது பொருந்தும் என்பதை நினைவில் கொள்ளவேண்டும்.)
எனவே பால், பாலினம் என ஒருங்கிணைந்த தன்னிலைக்குள் பாலினம் என்பது பாலின் பல்வேறு விளக்கங்களைக் கொண்டிருக்கிறது என்பதைத் தீவிரமாக அறியவேண்டும்.
ஓர் உடலின் பால், பண்பாட்டுப் பொருளைக் கொண்டு பாலினத்தை ஊகிக்கிறது என்றால் அந்த உடலின் பாலை ஒரே ஒரு வழியில் பாலினம் பின் தொடரமுடியாது. இதிலிருந்து என்ன தெரிகிறது என்றால் பால்/பாலினம் என்ற வேறுபாடு உயிரியலைக் கொண்டு அடையாளப்படுத்தப்பட்ட பாலை ஏற்ற உடல்களுக்கும் பண்பாட்டால் கட்டமைக்கப்பட்ட பாலினத்திற்கும் தீவிர தொடர்பின்மை இருப்பதைப் புரிந்துகொள்ள வேண்டியிருக்கிறது என்பதுதான்.
ஆண்பால், பெண்பால் என்ற இருமை பாலினம் ஆண் உடலில் ‘ஆணுக்குரிய’ கட்டமைப்புகளை மட்டுமே கொண்டிருக்கும் என்றோ ‘பெண்ணுக்குரிய’ கட்டமைப்புகளை மட்டுமே கொண்டிருக்கும் என்றோ சொல்ல முடியாது. ஒவ்வொரு உடலும் அந்தந்தப் பாலுக்குரிய தன்மையை மட்டுமே கொண்டிருக்கும் என்று உறுதியாக்கப்பட்டாலும் கூட அவை பாலினத்தையும் அவ்வாறே ஏற்றிருக்கும் என்பதை எந்த வகையிலும் உறுதிப்படுத்த முடியாது.
பெண்ணியக் கோட்பாட்டில் பெண்கள் அரசியல் ரீதியாகப் பிரதிநிதித்துவம் பெறுவது முதன்மையானதாகக் கருதப்படுகிறது. அரசியல், பிரதிநிதித்துவம் போன்ற சொற்கள் சர்ச்சைக்குரியவை. பிரதிநிதித்துவம் என்ற சொல் பெண்கள் அரசியல் தன்னிலைகளாகச் செயல்படுவதைக் குறிக்கிறது.
மொழியில் பிரதிநிதித்துவம் என்பது பெண்களைப் பற்றி எது உண்மை நிலையோ அதனை வெளிப்படுத்துவது அல்லது மறுப்பதாகும். எனவே மொழியின் வளர்ச்சி பெண்களை அரசியல் ரீதியாகப் பிரதிநிதித்துவப்படுத்துவதற்கு அத்தியாவசியமாகும். ஏனெனில் பெண்களின் வாழ்க்கை முரணாகச் சித்திரிக்கப்படுகிறது அல்லது சித்திரிக்கப்படுவதே இல்லை என்ற நிலையில் மொழியின் வளர்ச்சிக்கான தேவையைப் புரிந்துகொள்ள முடியும்.
ஃபூக்கோ சொல்வதை இங்கு நினைவுகூர வேண்டும். சட்ட அதிகார அமைப்பு, பிரதிநிதித்துவம் செய்யும் தன்னிலைகளை உற்பத்தி செய்கிறது என்கிறார் ஃபூக்கோ. சட்ட அதிகார அமைப்பு, எல்லை வகுப்பது, தடைவிதிப்பது, விதிமுறைப்படுத்துவது, தடுப்பது, தனிநபரைக் ‘காப்பது’ என்ற செயல்பாடுகளை அரசியல் அமைப்புக்கு ஏற்ப நடத்துகிறது. இப்படிப்பட்ட அமைப்பால் உருவாக்கப்படும் தன்னிலைகள் அந்த அமைப்புக்குள் மட்டும் தகவமைக்கப்படுகின்றன.
இதில் பெண்களின் ‘தன்னிலை’ எந்தச் சட்ட அதிகார அமைப்பால் உருவாக்கப்படுகிறது என்பதை விளங்கிக் கொள்ளலாம். மத சட்ட அமைப்பு, சமூக சட்ட அமைப்பு, அரசியல் சட்ட அமைப்பு எல்லாம் பல வகையான தடைகளை, தடுப்புகளை, விதிகளைக் கொண்டுதான் பெண் என்னும் தன்னிலையை உருவாக்குகின்றன. இந்தச் சட்ட அமைப்புகள்தான் பெண்களின் விடுதலையைப் பற்றியும் பேசுகின்றன என்பதையும் நினைவில் கொள்ளவேண்டும். இதே சட்ட அமைப்புகள்தான் ஆண்மை என்ற தன்னிலையையும் மேலாதிக்கம் செய்வதற்கு ஏற்பத் தகவமைத்து உருவாக்குகின்றன.
சட்ட அதிகார அமைப்பு தன்னிலைகளை உற்பத்தி செய்வதற்கான முழு உரிமையைக் கொண்டு செயல்படுகிறது. எனவே இத்தகைய தன்னிலைகள்தான் பிரதிநிதித்துவத்திற்கு உரியவை ஆகின்றன. சட்ட அமைப்பால் ஆளப்படுவதற்கும் ஆள்வதற்குமான பிரதிநிதித்துவமாக அது இருப்பதைக் குறித்து விழிப்புணர்வு கொள்ளாமல் வைத்துக்கொள்வதே இந்தத் தன்னிலைகளின் முதன்மைச் செயல்பாடாக இருக்கிறது.
ஜுடித் பட்லரின் நேர்காணல்கள்...
பாலினச் சிக்கல் நூல் வெளிவந்து 31 ஆண்டுகள் ஆகிவிட்டன. அதில் உங்கள் நோக்கம் என்னவாக இருந்தது?
இரு பாலின ஊகங்கள் குறித்த விமர்சனமாக அந்த நூல் இருந்தது. ஆனால் அது பாலின வகைமைகள் குறித்தாகவும் மாறிவிட்டது. எடுத்துக்காட்டாக, ஒவ்வொரு பத்தாண்டுகளுக்கு ஒரு முறை பெண் என்ற பதத்தின் பொருள் மாறிக் கொண்டே இருக்கிறது. பெண் என்ற வகைமை மாறிக் கொண்டேதான் இருக்கவேண்டும். அரசியல்பூர்வமாக, இன்னும் அதிகமான சுதந்திரத்துடன் பெண் இருக்க பல புதிய சாத்தியங்களைக் கண்டறிவது அவசியமாகிறது.
பாலினம் குறித்த வரலாற்றுப் புரிதல் மாறவேண்டியிருக்கிறது. ஏனெனில் அதன் விதிகள் மீண்டும் செயல்படுத்தப்பட்டு, மறுக்கப்பட்டு, உருவாக்கப்பட்டுக் கொண்டே இருக்கின்றன. பெண் என்ற வகைமையில் பெண்ணாக மாறியவர்களும் சேர்த்துக் கொள்ளப்படும் போது அதற்கு அதிர்ச்சியாவதோ எதிர்ப்பதோ நடக்காமல் போகலாம். ஆண்மைக்கான எதிர்காலமும் மாறிக் கொண்டிருப்பது பற்றி சிந்திக்கவேண்டியிருக்கிறது. அதே போல் ஆணாக மாறியவர்களும் ஆண் என்ற வகைமைக்குள் சேர்த்துக் கொள்ளப்படலாம்.
பாலினச் சிக்கல் நூலில் ‘நிகழ்த்துதல்’ என்பது குறித்த உங்கள் கருத்து பெரும் சர்ச்சைக்குள்ளானது. பாலினம் குறித்து என்ன நினைக்கிறீர்கள்?
அப்போது நான் கல்விப் புலத்தில் பேச்சு செயல்பாடுகளைக் குறித்து பல விவாதங்களில் பங்கெடுத்துக் கொண்டிருந்தேன். ’நிகழ்த்துதலில்’ வெளிப்படும் பேச்சு செயல்பாடுகள் புதிய உண்மையை வெளிக் கொண்டுவருவதாக அல்லது புதிய உண்மையை உருவாக்குவதாகத் தோன்றியது.
எடுத்துக்காட்டாக, ஒரு நீதிபதி ஒரு தண்டனையை வழங்கும் போது ஒரு புதிய உண்மை உற்பத்தியாகிறது. நீதிபதிகள் அந்த உண்மையை நடைமுறையில் பாவிக்கப்படுவதை உறுதி செய்கிறார்கள். அப்படி என்றால் நீதிபதி அத்தகைய முழுமையான அதிகாரம் கொண்டவர் எனக் கூறுவோமா? அல்லது நீதிபதி ஒரு சில மரபுகளை அல்லது நடைமுறைகளைப் பின் தொடர்கிறார் என்று சொல்வோமா? எனவே சில மரபுகளை, விதிகளைத்தான் நீதிபதி பின்தொடர்கிறார் என்று சொல்வோம். நீதிபதி தனக்கான அதிகாரம் எதுவும் இல்லாதவர். அவர் தனது ஆளுகையில் உள்ள அதிகாரத்தைப் பிரயோகிக்கிறார். அவர் அதிகாரம் சொல்லும் விதிகளைச் சுட்டுபவராகிறார். அவர் தீர்மானிக்கப்பட்ட நடைமுறையைப் பின்பற்றுபவர் ஆகிறார்.
அது எப்படி பாலினத்தோடு தொடர்புபடும்?
முப்பது ஆண்டுகளுக்கு முன் மக்கள் விழிப்புணர்வுடனோ விழிப்புணர்வு இல்லாமலோ பாலினத்தின் மரபுகளைச் சுட்டுகிறார்கள். அவர்கள் தங்களது உள்ளார்ந்த உண்மையை வெளிப்படுத்தும் போதும் தங்களைப் புதிதாக உருவாக்கிக் கொள்ளும் போதும் இப்படி அவர்கள் பாலின மரபைச் சுட்டுகிறார்கள்.
பண்பாட்டு விதிகளிலிருந்து நாம் யாருமே விடுபட்டிருக்க வாய்ப்பே இல்லை. அதே சமயத்தில், நாம் எல்லோருமே பண்பாட்டு விதிகளால் தீர்மானிக்கப்படுவதும் இல்லை. எனவே பாலினம் என்பது ஒரு பேச்சு வார்த்தை, ஒரு போராட்டம், வரலாற்றுத் தடைகளைக் கையாளும் அமைப்பு, புதிய உண்மைகளை உருவாக்கும் ஒன்று என்றாகிறது.
நாம் ‘சிறுமி’களாகும் போது பல்லாண்டு காலமாகக் கட்டிக்காத்து வைக்கப்பட்ட ‘சிறுமிகளுக்கான பண்பாட்டில்’ நுழைகிறோம். நாம் அதைத் தேர்வு செய்யவில்லை. அது நம் மீது திணிக்கப்படவும் இல்லை. ஆனால் சமூக உண்மை மாறக்கூடியது.
ஜுடித்பட்லர் thanks

Mubeen Sadhika

No comments:

Post a Comment