Search This Blog

Thursday, February 23, 2023

குற்றமும் தண்டனையும் குறித்து ஜுடித் பட்லர் விளக்கியது

 ஒருவர் மற்றவருக்கு ஒரு தண்டனையைக் கொடுக்கும் போது உளவியல் அறம் சார்ந்த ‘பொறுப்பு’ ஏற்படுகிறது. அதில் தண்டனைக் கொடுப்பவர் கொள்ளும் இன்பம் குற்றத்திற்கு நிகரானதாகக் கொள்ளப்படுகிறது. குற்றம் இழைத்தவர் ஒரு விதியை மீறிவிட்டார் அல்லது சொன்ன சொல் தவறிவிட்டார் என்பதற்காக நிகழ்த்திய வினையாக மட்டும் தண்டனை இருக்கிறதா என்பதைக் கவனிக்கவேண்டும்.

தண்டனைக் கொடுத்து அதன் மூலம் குற்றம் இழைத்தவர் படும்பாட்டைத் தனது இன்பமாக தண்டனைக் கொடுப்பவர் அனுபவிப்பது அறமாகக் கருதப்படுவதற்கான காரணம் என்ன என ஆராயவேண்டும். குற்றம் இழைத்தவரின் குற்றத்திற்கு நிகரான தண்டனைக் கொடுப்பதாக மட்டும் சமாதானப்படுத்திக் கொண்டுவிடுவதற்கான அடிப்படை உளவியல் காரணிகள் என்ன என்பதை அறியவேண்டும்.
இதில் குற்றம் இழைத்தவர் ஒரு குறிப்பிட்ட உடன்படிக்கையில் இருக்கிறார். எடுத்துக்காட்டாக ஒரு குடும்பத்தில் ஆண்-பெண் இருவரும் மீறக்கூடாத விதி இருக்கிறது. அதை யார் ஒருவர் மீறும் போதும் அடுத்தவர் உடனே தண்டனையைப் பிரயோகிக்க நினைக்கிறார். இப்படிப்பட்ட உடன்படிக்கை மீறலுக்கு உளப்பூர்வமான அறம் குறித்த சிந்தனை தண்டனை கொடுக்கும் நிலைக்கு ஒருவரைத் தள்ளுகிறது.
இரு பால் உறவு என்ற நிறுவனத்தில் இருக்கும் விதிகளில் குற்றமும் தண்டனையும் கொண்டிருக்கும் உடன்படிக்கையும் மீறலும் பெரும்பாலும் உடல் சார்ந்ததாக இருக்கிறது. இரு பால் நிறுவனமய உறவுகள் சிக்கலில்லாமல் இயங்க இந்த உடன்படிக்கை உளப்பூர்வமாக உள்வாங்கப்பட்டிருக்கிறது.
அதனால் உடல் சார்ந்த மீறல்களுக்குத் தண்டனைகள் வழங்குவது அறத்தின் பாற்பட்ட நடவடிக்கையாகக் கொள்ளப்படுகிறது. குற்றத்தை வழங்கியவர் அதற்கான இன்பத்தை அனுபவிக்கும் அறத்தைக் கைக்கொள்கிறார். குற்றம் இழைத்தவர் உடன்படிக்கை மீறலுக்கான குற்ற உணர்வைக் கொள்கிறார். ஆன்ம சுத்தி என்பதுதான் அதன் அடிப்படை அம்சம்.
இந்த இடத்தில் ‘நான்’ என்ற சுயம் ஆணுக்கும் பெண்ணுக்கும் எத்தகைய ஆன்ம சுத்தியுடன் இருக்கவேண்டும் என்ற உடன்படிக்கையை இரு பால் உறவின் நிறுவனம் ஏற்படுத்தியுள்ளது என்பதைக் கவனிக்கவேண்டும். அது கடமை உணர்வாக மறுபெயரிடப்பட்டிருக்கிறது. கடமையை மீறுபவர்கள் சுயத்தின் மதிப்பை இழந்தவர்களாகிறார்கள். அவர்கள் மீது தண்டனை பிரயோகம் செய்வது அறமாகிறது. எனவே உடன்படிக்கையைக் கைக்கொள்ளாமல் அறத்தை மீறுபவர்களைத் தண்டிப்பதுதான் எல்லோருடைய சுயத்திலும் உள்வாங்கப்பட்ட திறமாக உள்ளது.
ஜுடித் பட்லர் தன் கோட்பாடுகள் குறித்து…
என் கோட்பாடுகள் அரசியல் புனைவு வகைமையைச் சார்ந்தவை அல்ல. உடல் சார்ந்த வாழ்வு குறித்தப் புரிதல்களை, சாத்தியங்களை மேம்படுத்த உருவாக்கப்பட்டவைதான் என் கோட்பாடுகள். பெண்ணியத்தில் தத்துவரீதியாகவும் உள்ளடக்க ரீதியாகவும் உடல் குறித்துச் சொல்லவேண்டிய அம்சங்கள் பெரும் சிக்கலில் உள்ளதாக நான் கருதியதால் இத்தகைய சிந்தனையை அடைந்தேன்.
சில உடல்கள் தவிர்க்கப்பட வேண்டியவையாகவும் சில உடல்களுக்கான அங்கீகாரம் தரப்படக்கூடாது எனவும் பாரபட்சம் காட்டப்பட்டதால் உடல்களின் அடிப்படை குறித்து ஆராயத் தலைப்பட்டேன். என் கோட்பாடுகள் எல்லாம் அவற்றுக்கான மருந்தோ, உத்தியோ, கற்பனையோ அல்ல. என் சிந்தனை வழியில் உடல்களைச் சமமாகப் பாவித்தலுக்கான தீர்வு குறித்த ஆலோசனை மட்டுமே நான் வழங்கியிருக்கிறேன்.
அதன் மூலம் உடல் மீதான அதிகாரத்தைக் குறித்த விழிப்புணர்வு ஏற்படும் என்று நம்புகிறேன்.
நாம் யார் என்ற கேள்வியின் பதிலாகத்தான் நாம் கட்டமைக்கப்படுகிறோம். பண்பாடு, சமூகம், இன்னபிற அம்சங்கள் உருவாக்கி வைத்திருப்பதை எதிரொலிப்பதாக ஏன் உடல்கள் மாறிப் போயின என்பதிலிருந்து இதற்கான விடையைத் தேடலாம்.
ஏனெனில் மொழிக்குள் பண்பாட்டுக்குள் சமூகத்திற்குள் செயல்படும் அதிகாரத்தின் விளைவாக நம் சிந்தனை வெளிப்படுகிறது.
இதில் வரையறுத்தல், அடையாளப்படுத்துதல், இனங்காட்டுதல்தான் நம்மைப் பற்றிய நம் தன்னிலை பற்றிய மற்றமையாக உள்ளது. அதனைப் புரிந்துகொள்வதற்கான அம்சங்களை நோக்கிப் போவதன் மூலம் உடல்களின் சிக்கல்களைத் தெளிவாக்கிக் கொள்ளலாம். அதனால் பாலினச் சிக்கலைத் தவிர்க்கலாம்.
ஜுடித்பட்லர்
Thanks

Mubeen Sadhika

No comments:

Post a Comment