அரசியல் கொலைகளைப் பற்றிய கதை. குறிப்பாக இடது சாரி வலது சாரி கட்சிகளுக்கு இடையே நடக்கும் பழிக்குப் பழி வாங்கும் களத்தை மையமாக்கி கதை சொல்லி இருக்கிறார்கள்.
தங்கள் தோழரைக் கொன்றவனைக் கொல்ல திட்டம் தீட்டப்படுகிறது. மூன்று தோழர்களிடம் அந்த காரியம் ஒப்படைக்கப்படுகிறது. திட்டமிட்டபடி கொலை செய்கிறார்கள். அதில் ஒருவன் மட்டும் போலீஸில் பேருக்கு சர்ண்டர் செய்யப்படுகிறான். ஆனால் அரசியல் கொலைகளின் மீது ஆத்திரம் கொண்ட ஒரு போலீஸ் அதிகாரியின் தலையீட்டால் நிலைமை தீவீரம் அடைகிறது. பிறகு என்ன ஆனது என்பது கதை.
கொலை செய்யப்பட்டவர்கள், கொலை செய்தவர்களின் குடும்பத்து மனிதர்களின் உணர்வுகளை காட்சிப்படுத்தி, வெளிச்சமற்ற அவர்களின் எதிர்காலத்தில் பார்வையாளர்களை உறைய வைக்கிறது.
“நீ ஒருநாளும் பத்திரிகை வாசித்ததைக் கூட நான் பார்த்ததில்லை. உலகத்தில் என்ன நடக்கிறது என்றே உனக்குத் தெரியாது. கொலை செய்யப்பட்டவன் மீது உனக்கு என்ன கோபம். என்ன வெறுப்பு. உன் கட்சியில் மேலே உள்ளவர் சொன்னதுக்காக கொலை செய்திருக்கிறாய். இது எப்படி சித்தாந்த ரீதியாக நீ செய்த கொலையாகும்?” என அந்த மூன்றில் ஒருவனை காதலித்து, திருமணம் செய்து, கர்ப்பிணியாய் இருக்கும் மனைவி கேட்பது உலுக்குகிறது.
என்ன அரசியல் காரணம், எதற்காக கொலை, என்ன பின்னணி, என சமூகத்தின் தாக்கங்கள் குறித்து இந்த படத்தில் எதுவும் பேசப்படவில்லை. தனி மனிதர்களின் வாழ்வில் இருக்கும் துயரங்களையும், வலிகளையும், வெறுமைகளையும் படம் பேசுகிறது. பார்வையாளர்களுக்கு இரண்டு அரசியலும் ஒரே மாதிரியாகவும், மக்களுக்கு விரோதமானதாகவும் காட்சிப்படுத்தப்பட்டிருக்கின்றன. அனைவரும் சிறப்பாக நடித்திருக்கின்றனர்.
மக்களுக்காகவும், மாற்றங்களுக்காகவும் போராடுகிற இயக்கங்கள், இந்தப் படம் சொல்லாததை சொல்ல வேண்டிய அவசியத்தை ஏற்படுத்தி இருக்கிறது. (அமேசானில் பார்க்கலாம்.)
No comments:
Post a Comment