All Quiet on the Western Front ( மேற்கு முனையில் எல்லாம் அமைதியாக இருக்கிறது) சினிமா 2022ல் மீண்டும் தயாரிக்கப்பட்டு Netflix-ல் காணமுடிகிறது. ஏற்கனவே 1930லும், 1979லும் தயாரிக்கப்பட்ட படம் இது.
இந்த நாவலை 1929ல் ரெமார்க்யூ எழுதினார். 1932ல் அவரது புத்தகம் தடை செய்யப்பட்டது. 'ஜெர்மனியே எழுந்திரு' என்று ஆவேசமாய்க் கூச்சலிட்டு ஹிட்லரின் வெறியர்கள் தெருக்களில் புத்தகத்தை தீ வைத்து எரித்தனர். அவரது வங்கிக் கணக்கு முடக்கப்பட்டது. அவரது படம் திரையிடப்பட்ட அரங்குகளுக்குள் எலிகளை பிடித்து விட்டனர். குண்டுகளை எறிந்தனர். ரெமார்க்யூ ஜெர்மனியிலிருந்து ஒரு அகதியாய் வெளியேற வேண்டியிருந்தது.
போருக்கும் ஒரு சாதாரண மனிதனுக்கும் என்ன உறவு என்று கேள்வி கேட்டு மனிதகுலத்தின் மீது ஒரு நீண்ட விசாரணையை இந்த நாவல் நடத்துகிறது. யார் வென்றாலும், யார் தோற்றாலும் எல்லாவற்றையும் இழக்கப் போவது இருதரப்பு மக்கள் என்பதை வெறுமை படர, படர உணர்த்தி விடுகிறது. இத்தனைக்கும் நடுவில் பருவங்கள் அதுபாட்டுக்கு வழக்கம்போல் மாறிக்கொண்டு இருப்பதை சுட்டிக்காட்டி 'போர் இயற்கைக்கு விரோதமானது' என்பதை குறிப்பறிய வைக்கிறது.
முன்பின் தெரியாத இன்னொரு நாட்டின் ஒரு வீரனை எந்த சம்பந்தமுமில்லாமல் கொல்ல வேண்டியிருக்கிறது. பிறிதொரு நேரத்தில் கொன்றவனும், கொல்லப்படுகிறவனும் மிகச் சிறந்த நண்பர்களாக இருந்திருக்கக்கூட முடியும் என்றெல்லாம் நாவல் நம்மிடம் உரையாடுகிறது. தேசம் என்றும், மண் என்றும் உருவேற்றி அதற்குள் தேசீயவாதம் என்னும் வெறியை ஊட்டி, வல்லரசு என்று இராணுவசக்தியை வளர்ப்பது யாருக்காக என்று அதிகாரத்தின் மீது கணைகளை இந்த நாவல் வீசியிருக்கிறது.
மிகச் சரியாக உணர முடிந்தால் இந்த நாவல் பகவத் கீதைக்கும் நேர் எதிரான கலகக்குரல். 'கடமையைச் செய், பலனை எதிர்பாராதே" என்று அர்ச்சுனனுக்கு உபதேசம் செய்த கிருஷ்ணனோடு இந்த நாவல் அனுபவத்தின் தளத்தில் நின்று எதிர்வாதம் செய்கிறது. இந்த அரசியலைப் புரிந்து கொண்டதால்தான் நாஜிக்கள் அந்த நாவலை தடை செய்திருந்தார்கள்.
மனித உயிர்களை ஒரு புழுவுக்கும் கூட மதிக்காமல், முன்வைக்கப்படும் தேசம் குறித்த பெருமிதம், தேசியம் பற்றிய கற்பிதங்கள், இராணுவ வீரன் குறித்த புளகாங்கிதங்கள் அனைத்தையும் இந்த நாவல் உடைக்கிறது.
1952ல் தடை நீங்கினாலும், நாவலில் வரும் பாமரின் கதாபாத்திரம் போல, ரெமார்க்யூ தனது சொந்த ஊருக்கு கடைசி வரை திரும்பவில்லை. 1970, செப்டம்பர் 25ல் ரிமார்க்யூ ரோமில் இறந்து போகிறார். அவர் பிறந்த ஜெர்மனியில் ஒரு வார இதழில் அஞ்சலி செலுத்தி கட்டுரை எழுதப்பட்டிருந்தது. அவரது புகழ்பெற்ற இந்த நாவல் பற்றி அதில் குறிப்பிடப்படவில்லை. ஆனால், அந்த நாவல் மட்டும் உலகம் முழுவதும் 80 லட்சம் பிரதிகள் இது வரை விற்பனையாகி இருக்கிறது.
"அவர்கள் உடல் ரீதியாக போர்களிலிருந்து தப்பியிருந்தாலும், உள்ளரீதியாக அழிக்கப்பட்டிருக்கின்றனர் என்பதை இன்றைய சந்ததியிடம் இந்த நாவல் பேச முயற்சிக்கும்." இப்படித்தான் நாவலைப்பற்றிய ஒரு வரி முன்னுரையாக ரெமார்க்யூ குறிப்பிட்டிருந்தார்.
இன்றைய சந்ததியினருக்கும் கொண்டு செல்வதற்காக மீண்டும் படமாக்கப்பட்டிருக்கிறது. நவீன தொழில்நுட்பத்திலும், கதையை காட்சிப்படுத்துவதிலும் தேர்ந்து இப்போது படம் அழுத்தமாக வெளிவந்திருக்கிறது. கூடவே ஒரு நாவலை எப்படி சினிமாக்குவது என்னும் பாடமும் எடுக்கப்பட்டிருக்கிறது.
(பதினைந்து ஆண்டுகளுக்கு முன்னர் இந்த நாவல் குறித்து நான் ‘புத்தகம் பேசுது’ இதழில் எழுதிய கட்டுரையின் சுட்டி முதல் கமெண்ட்டில்…..)
Thanks mathavaraj_cinema_experience
No comments:
Post a Comment