இருவரும் தனக்குத்தானே ஒரு தனி தர்க்கத்தை அமைத்துக் கொண்டு தன்னிச்சையின் பேரில் மக்கள்மீது வன்கொடுமைகளை அவிழ்த்துவிட்ட சர்வாதிகாரங்களை எதிர்த்துப் போராடியவர்கள்.
நல்ல கட்டமைப்புடன் இயங்கும் சர்வாதிகாரத்தில் மனிதர்களின் மனப்போக்கில் ஏற்படும் சிதைவுகளைப் புரிந்து கொள்ள இருவருக்கும் தோன்றிய பார்வைதான் 'சாம்பல் நிற இடைவெளி'. இந்த இடைவெளியின் சிறப்பே மனிதர்களின் செயல்களை எளிதில் நல்லதை வெள்ளை என்றும், தீயதை கறுப்பு என்று பிரித்துச் சொல்ல முடியாது என்பதுதான்.
நல்ல செயல்களைச் செய்கிறவர்கள் பல நேரங்களில் அல்பத்தனமான காரணங்களுக்காக அவற்றைச் செய்யக் கூடும். அதேபோல் மிகுந்த நல்ல எண்ணங்களைக் கொண்டவர்கள் மிகக் கொடுமையான செயல்களைச் செய்வதும் உண்டு. இப்போது முன்னது வெளுப்பா? பின்னது கறுப்பா?
முற்றிலும் நல்லதென்றும் சொல்ல முடியாமல் தீயதென்றும் தள்ள முடியாமல் இருக்கும் இந்தச் சாம்பல் இடைவெளியில் அறம் சிரிக்கிறது. அந்த ஒளிரும் சாம்பலின் மத்தியில் மெல்லிய புகையுருவங்களாக மனிதர்கள் நீதி கேட்டு நிற்கிறார்கள்.
தெருவில் போனவன் வார்த்தைக்காக ராமன் தொடர்ந்து சீதையைத் தீக்குளிக்கச் சொல்லிக் கொண்டிருக்கிறான். தன் கணவன் என்ற ஒற்றை மனிதனின் கொலைக்காகக் கண்ணகி மதுரையை (அந்தணர்கள், பெண்கள், பசுக்கள் நீங்கலாக) தீக்கரைக்காக்கிக் கொண்டிருக்கிறாள். குடிமக்களின் நன்மைக்காகத்தான் கொடுமைக்கார அரசுகளோடு சமரசம் செய்து கொண்டோம் என்று வரலாறு முழுக்க தூற்றப்பட்ட தலைவர்கள் மேடையில் பேசுகிறார்கள்.
ஹன்னா அரெண்ட் 'தீமையின் அல்பத்தனம்' என்கிறார். தீமை பெரும்பாலும் பிரம்மாண்டங்களிலும் சாகசங்களிலும் தன்னை வெளிக்காட்டிக் கொள்வதில்லை. நம்மைக் காட்டிக் கொடுக்கப் போகும் அடுத்து வீட்டுக்காரரின் கண்ஜாடை, ஒரு புருவ நெறிப்பு, பேச்சுக்கிடையே புகுத்தப்படும் நமுட்டுச் சிரிப்பு, பேச வேண்டிய நேரத்தில் காக்கப்படும் கள்ள மவுனம், புரிந்துணர்தலில் ஏற்பட்ட ஒரு சிறு கோளாறு - இவற்றில்தான் பெரும்தீமைகள் பெரும்பாலும் விளைகின்றன என்பது அரெண்ட்டின் கருத்து. இவரும் சர்வாதிகாரத்தால் பாதிக்கப்பட்டவர்.
அப்படியென்றால் 'அறத்தைப் பாதுகாக்க' என்ன செய்ய இருக்கிறது என்கிறீர்கள்? அறத்தைப் பாதுகாக்க முடியுமா தெரியவில்லை. ஆனால் காம்யூ சொல்வதைப்போல் நாம் சமூகத்தில் செய்யும் ஒவ்வொரு செயலிலும் அடிப்படை மனிதத்தன்மையோடும், பணிவன்போடும், மரியாதையோடும் நடந்து கொண்டால் போதும் என்றே தோன்றுகிறது.
அறத்தின் பெயரால் ஒருவனை வெட்டிக் கொலைகூட செய்துவிடலாம். அடிப்படை மரியாதையோடு நடந்து கொள்வதுதானே சிரமமாக இருக்கிறது.
No comments:
Post a Comment