Karunakaran Sivarasa
கல்வி, பொதுப்பணிகள், பல்துறை ஈடுபாடு எல்லாவற்றிலும் சமாந்தரமாகச்
செயற்படுவோரில் முக்கியமானவர் அ.பங்கயற்செல்வன். இவை எல்லாம் ஒன்றுடன்
ஒன்று தொடர்பானவை என்ற விளக்கம் ஒருவருக்கிருந்தாலே இவற்றின் பெறுமதியை உணர
முடியும். அப்படிப் பெறுமதியைத் தெரியும்போதுதான் அவற்றில் ஈடுபடும்
ஆர்வம் ஏற்படும். பங்கைக்கு இதைப்பற்றிய புரிதலும் தெளிவும் உண்டு.
அதனால்தான் அவர் இவற்றில் தன்னை ஆர்வத்தோடு ஈடுபடுத்துகிறார். பங்கையின்
இந்த ஈடுபாடும் அதனால் உண்டாகும் செயற்பாட்டு விளைவுகளும் பல
ஆயிரக்கணக்கானோருக்குப் பயனாகின்றன.
பங்கயற்செல்வனின் கல்விப்
பணிகள் பாடசாலைகளில் மட்டும் உள்ளடங்கவில்லை. அதற்கப்பால் கிளிநொச்சி கல்வி
வளர்ச்சி அறக்கட்டளை (KEDT என்ற கல்வி அபிவிருத்தி மையத்தினூடாகவும்
நிகழ்கிறது. அதற்கப்பாலும் விரிந்தது.
பாடசாலையில் அவர் மிகச்
சிறப்பாகத் துலங்கும் ஆளுமை. அவர் பணியாற்றிய, பணியாற்றிக் கொண்டிருக்கின்ற
பாடசாலைகளில் இதை யாரும் காணலாம். அதிபராகவும் ஆசிரியராகவும் அவர் தன்னை
முத்திரை பதித்திருக்கிறார். செயற்திறனிலும் ஆளுமையிலும் கிளிநொச்சி
மாவட்டத்தின் முதல்தர அதிபராகக் கணிக்கப்பட்டவர். அவருடைய மாணவர்கள் இதை
நிரூபிக்கிறார்கள். அவரோடு இணைந்து பணியாற்றிய ஆசிரியர்கள் பங்கையின்
சிறப்பை எடுத்துரைக்கிறார்கள். அவரை அறிந்த பெற்றோர் தங்களன்பைச்
செலுத்தியளிக்கும் மதிப்பின் மூலம் வெளிப்படுத்துகிறார்கள்.
ஒருவர்
செல்லுமிடம் சிறக்குமென்றால் அவருடைய சிந்தனையும் செயலுமே அதை
விளைப்பதென்று பொருள்படும். பங்கயற்செல்வனின் பணிப்பரப்புகள் இத்தகையனவே.
இதனால்தான் அவர் கடந்த ஆண்டு கல்விச் சுற்றுலாவாக சீனாவரை பயணிக்க
வாய்த்தது. மாணவர்களை இளைய தலைமுறை என்ற புரிதலோடு அணுகுவதற்கு அடையாளம்,
புதிய எதிர்காலத்துக்கு அவர்களைத் தயார்ப்படுத்த வேண்டும் என்ற பங்கையின்
அக்கறையே. இதற்காக அவர் நவீனக் கற்கை முறையைத் தான் பணியாற்றும்
பாடசாலையில் (கிராமப்புறப்பாடசாலை இது) நடைமுறைப்படுத்தியிருக்கிறார்.
வட்டக்கச்சி ஆரம்ப வித்தியாலயம் இன்று இலங்கை முழுவதிலும்
கவனத்திற்குரியதொரு பாடசாலையாக கணிக்கப்படுவதற்கும்
அவதானிக்கப்படுவதற்குமான ஏது நிலை இந்தச் சிந்தனையின், செயற்பாட்டின்
விளைவே.
வளங்கள், வசதிகள் எல்லாவற்றையும் எதிர்பார்த்துக்
கொண்டிருக்காமல் அவற்றை நாம்தான் உருவாக்க வேணும். அதற்கான சாத்தியங்களைக்
கண்டறிய வேணும் என்ற புரிதலோடு பங்கை பல கதவுகளையும் தட்டுவதைப்
பார்த்திருக்கிறேன். “பொதுத் தேவைக்காக பிறருடைய ஆதரவையும் உதவிகளையும்
நாடுவது பல நல்லார்வலர்களை ஒருங்கிணைத்துப் பணிசெய்வதாகும். அவர்களுடைய
கனவுகளுக்கு நாம் வடிவங்களை ஏற்படுத்துகிறோம். இதனால் அவர்களுக்கும்
மகிழ்ச்சி. நமக்கும் பயன். இந்தப் பயனே எங்களுடைய மகிழ்ச்சி. ஆகவே
அவர்களையும் மகிழ வைத்து நாமும் மகிழ்கிறோம்.இதன் மூலமாக இருதரப்பும்
நிறைவடையக் கூடியாக இருக்கு. மற்றவர்களுக்கு முன்னுதாரணங்களையும் உருவாக்க
முடியுது” என்பார் பங்கை.
இது முக்கியமான ஒரு செயற்பாட்டு முறை
என்பதை நாம் கவனிக்க வேணும். போரினால் பாதிக்கப்பட்ட சமூகத்தைச் சேர்ந்த
எமக்கு இன்னமும் உரிய நீதியோ உரிய நிவாரணமோ கிடைக்கவில்லை. சரியான
உதவிகளும் ஊட்டமும் கூடக் கிட்டவில்லை. ஆகவே நாமாகத்தான் நம்மை
அடியாழத்திலிருந்து மேலுயர்த்த வேண்டியுள்ளது. இதற்கு “கேளுங்கள்
கிடைக்கும். தட்டுங்கள் திறக்கப்படும்” என்ற வகையில் செயற்படுவதே
ஓரளவுக்குப் பயனுடைய வழியாகும். ஆனால், இதைச் செய்வதற்கு அடிப்படையானது
வெளிப்படைத்தன்மையும் நேர்மையும் புதிய நற்சிந்தனைகளும் துரிதமான
செயற்பாடுகளுமாகும்.
நாம் எதை எப்படிச் சிந்திக்கிறோம். அதை
எப்படிச் செயற்படுத்துகிறோம் என்பதையே பிறர் அவதானிப்பர். அதுவே அவர்களுடைய
மனதில் நம்பிக்கையை உருவாக்கும். அந்த நம்பிக்கையை நாம் உருவாக்கிக்
கொண்டால் நமக்கு ஆதாரவளிப்பற்கும் உதவுவதற்கும் பலர் முன்வருவர். பல
கரங்கள் நீளும். பல மனங்கள் முன்னிற்கும். புதிய உறவு வட்டம் உருவாகி
விடும். அது பங்கேற்பாளர்களை உருவாக்கும். பங்கை இதில் வெற்றியடைந்த ஒரு
சாதனையாளர் என்று துணிந்து கூறுவேன். இதில் பங்கயற்செல்வன் நமக்கொரு
முன்னோடியே.
இதற்கு தொடர்பு சாதனங்களைப் பங்கை பயன்படுத்தும் விதம்
பற்றியும் குறிப்பிட வேணும். இன்று எல்லோருக்கும் இலகு சாத்தியங்களை
அளித்திருக்கும் முகப்புத்தகம் (FB) உள்ளிட்ட சமூக வலைத்தளங்களைத் தன்னுடைய
சிந்தனை, செயற்பாடு, தொடர்பாடல் எல்லாவற்றுக்கும் மிகச் சிறப்பாகப்
பயன்படுத்தி வருகிறார் பங்கை. இது பணிச்சாட்சியம் மட்டுமல்ல,
வெளிப்படைத்தன்மைக்குமானது. காட்சிப்படுத்தல் என்பது வெளிப்படுத்தலின்
சிறந்த வடிவாகும். கூடவே தொடர்பாடலையும் விரிவாக்குகிறது. விரைவாக்குகிறது.
இந்தக் காட்சிப்படுத்தலும் வெளிப்பாடும் தகவற் பகிர்வும் உலகெங்குமுள்ள
நல்லார்வலர்களிடம் தூண்டலை ஏற்படுத்துகிறது.
இன்று
பங்கயற்செல்வனின் செயற்பாடுகளுக்கு உலகளாவிய ஆதரவுண்டு என்றால் அது அவர்
உருவாக்கிய சாத்தியங்களின் வழி கிடைத்ததே. தனியே கல்விப் பணிமனையையும்
மாகாண, மத்திய அரசின் கல்விசார் உதவிகளுடன் மட்டும்
மட்டுப்படுத்தப்பட்டதல்ல. பாடத்திட்டங்களுக்குள் அடங்கிய கல்வி, சுற்று
நிருபங்களுக்குக் கட்டுப்பட்ட செயற்பாட்டு முறைமை என்பதோடு
வரையறைப்பட்டதல்ல. சமூகத்தை பாடசாலையோடு இணைப்பதற்கும் அப்பால் உலகத்தைப்
பாடசாலையோடு இணைத்தது என்பேன்.
இது தகவல் யுகம். (Information era)
தகவலைச் சரியாகவும் வெற்றிகரமாகவும் யார் பயன்படுத்துகிறார்ளோ அவர்களுக்கு
வெற்றிச் சாத்தியங்கள் அதிமாகின்றன. பங்கயற்செல்வன் தகவல் யுகத்தின்
போக்கையும் அதன் தன்மைகளையும் பெறுமதிகளையும் நன்கறிந்திருக்கிறார்.
என்றபடியால்தான் அதன் சாத்தியங்களை அவரால் பெறக் கூடியதாக இருக்கிறது.
கல்விக்கு அப்பால் பொதுப்பணிகளிலும் பங்கையின் ஆர்வமும் செயற்பாடும்
முக்கியமானது. நானறிந்த வரையில் பலரோடும் பல அமைப்புகளோடும் இணைந்து
பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரப் பணிகளைச் செய்திருக்கிறார். இன்னும்
செய்து வருகிறார். றோட்டரிக் கழகம் (Rotary club), (கிளிநொச்சி மாவட்ட மக்கள் அமைப்பு
(Kilipeople), கிளிநொச்சி கல்வி வளர்ச்சி அறக்கட்டளை உள்ளிட்ட பல
அமைப்புகளின் வழியாகவும் தனிநபர்களின் ஊடாகவும். நெருக்கடிக் காலம் மற்றும்
இடர் நிலை போன்றவற்றிலெல்லாம் ஒரு களப்பணியாளராக அவர் மாறிடுவதையும் நாம்
காணலாம்.
பங்கையிடம் நாம் காணக்கூடிய இன்னொரு சிறப்பியல்பு,
எதையும் Positive ஆக நோக்குவது. அவருடைய முன்னகர்வுக்கும் வெற்றிக்கும் இது
அடிப்படையானது என்று நம்புகிறேன். இந்த Positive நோக்கு மனப்பாங்கே அவர்
எல்லோருடனும் இணைந்து இயங்கவும் பிறரை இணைத்து இயக்கவும்
முடியுமாக்குகிறது. இதனால்தான் சில எதிர்மறைக்குணவியல்புடையோரினால்
அவருக்கெதிராகவெனப் பிரத்தியேகமாக ஒழுங்கமைக்கப்பட்ட இருட்படுத்தலையும்
நெருக்கடிகளையும் கடந்தும் தன்னை நிலைப்படுத்தவும் துலங்கவும் முடியுமென
வைத்தது. இந்தச் சந்தர்ப்பத்தில் இன்னொன்றையும் சொல்ல வேணும்.
சமூகத்திற்குப் பங்களித்த ஆளுமைகளைக் கவனம் கொண்டு அவர்களுக்கு மதிப்பளிக்க
வேணும். அவர்களைச் சமூகத்துக்கு அடையாளம் காட்ட வேணும் என்ற விரிந்த
எண்ணம் பங்கையிடம் எப்போதுமுண்டு. அண்மையில் அன்ரன் அன்பழகன், மருத்துவர்
சத்தியமூர்த்தி ஆகியோருக்கான மதிப்பளித்தலின் மையமும் சிந்தனைப்புள்ளியும்
பங்கையே. ஏனைய நண்பர்களோடு இணைந்து இதைச் சாத்தியப்படுத்தியமை அவருடைய
இன்னொரு வெற்றியாகும்.
கல்வி, பொதுப்பணி என்பவற்றோடு கலை,
இலக்கியத்திலும் பங்கயற்செல்வனின் ஆர்வமும் ஈடுபாடும் பெரிது. பல
நாடகங்களில் பங்கேற்று நடித்திருக்கிறார். புத்தகச் சேகரிப்பாளர். இலக்கிய
வாசிப்பாளர். மாணவர்களை வாசிப்பிலும் ஆற்றல் வெளிப்பாட்டில்
ஈடுபடுத்துவதிலு்ம கரிசனையுடையவர். இப்படிப் பன்முக ஈடுபாட்டாளுமையாக
இருக்கும் பங்கயற்செல்வனுக்கு இன்று பிறந்த நாள். இந்த நாளில் அவருக்கான
பரிசென்பது அவருடைய பணிகளையும் அவருடைய பங்களிப்புகளைக்குறித்தும் நாம்
பேசுவதே நன்றாக இருக்கும் என எண்ணுகிறேன். ஒரு சமூகத்தின் இயக்கத்திற்கும்
வளர்ச்சிக்கும் இந்த மாதிரிப் புத்தாக்குநர்களே கூடுதலாகப்
பங்களிக்கின்றனர்.
கிளிநொச்சியின் அடையாளமாக உள்ள மிகச் சில
ஆளுமைகளில் பங்கையும் ஒருவர். இந்த நிலையை எட்டுவதற்குப் பங்கயற்செல்வன்
தன் வாழ்வில் செலவிட்ட நேரம் மிக அதிகம். பாடுபட்டது அதை விட அதிகம்.
அவருடைய நோக்குக்கும் செயற்பாடுகளுக்கும் இடமளித்து ஒத்துழைக்கும்
குடும்பத்தினருக்கும் பங்கையோடு பயணிக்கும் சக நண்பர்களுக்கும் நன்றிகள்.
என்றும் சமனிலை தளும்பாத நிதானத்தோடு பங்கை செலுத்திக் கொண்டிருக்கும்
படகு வெற்றி இலக்கைத் தொடுவதற்கு அன்பு நிறைந்த வாழ்த்துகள்.
கூடியிருப்போம்
No comments:
Post a Comment