2015ம் ஆண்டில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை, கடந்த 2014ம் ஆண்டை விட 10,402 இனால் அதிகரித்துள்ளது.
அத்துடன் வன்னித் தேர்தல் மாவட்டத்தின் வாக்காளர் எண்ணிக்கை 1,705 இனால் அதிகரித்துள்ளது என யாழ்ப்பாணத் தேர்தல்கள் செயலக தகவல்கள் தெரிவிக்கின்றன.
2015ம் ஆண்டுக்குரிய வாக்காளர் பெயர்ப் பட்டியல் கடந்த வியாழக்கிழமை தேர்தல்கள் திணைக்களத்தினால் வெளியிடப்பட்டது. கடந்த 2014ம் ஆண்டு வாக்காளர் பெயர்ப் பட்டியலுடன் ஒப்பிடுகையில் யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டம் மற்றும் வன்னித் தேர்தல் மாவட்டம் என்பவற்றில் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தின், யாழ்ப்பாண நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு 4 இலட்சத்து 50 ஆயிரத்து 153 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ம் ஆண்டு 7 ஆயிரத்து 786 இனால் அதிகரித்து 4 இலட்சத்து 57 ஆயிரத்து 939 வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
கிளிநொச்சி நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 79 ஆயிரத்து 86 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 2 ஆயிரத்து 616 இனால் அதிகரித்து 81 ஆயிரத்து 702 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இதன் பிரகாரம் யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்கள் இணைந்த யாழ்ப்பாணத் தேர்தல் மாவட்டத்தில் 10 ஆயிரத்து 402 இனால் வாக்காளர்களின் எண்ணிக்கை அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது.
வன்னித் தேர்தல் மாவட்டத்தின், வவுனியா நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு ஒரு இலட்சத்து 9 ஆயிரத்து 695 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 107 இனால் அதிகரித்து, ஒரு இலட்சத்து 12 ஆயிரத்து 802 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
மன்னார் நிர்வாக மாவட்டத்தில் கடந்த 2014ஆம் ஆண்டு 83 ஆயிரத்து 224 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 4 ஆயிரத்து 731 இனால் குறைவடைந்து 78 ஆயிரத்து 493 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கடந்த 2014ம் ஆண்டு 63 ஆயிரத்து 840 வாக்காளர்கள் பதிவுசெய்யப்பட்டிருந்தனர். 2015ஆம் ஆண்டு 3 ஆயிரத்து 329 இனால் அதிகரித்து, 67 ஆயிரத்து 169 பேர் பதிவு செய்யப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில், மேற்படி மூன்று மாவட்டங்களும் இணைந்த வன்னித் தேர்தல் மாவட்டத்தில் ஆயிரத்து 705 வாக்காளர்களினால் அதிகரிப்பு ஏற்பட்டுள்ளது என தேர்தல்கள் செயலகத் தகவல்கள் குறிப்பிடுகின்றன.
No comments:
Post a Comment