திருஷ்யத்திற்கு முன்பே வெளியாகி வெற்றி பெற்று இருந்தாலும் நான் நேற்றுதான் இந்தப் படத்தைப் பார்த்தேன். த்ரிஷ்யத்திற்குப் பிறகு நான் ஆவென வாய் பிளந்து மலைத்துப் போய் கண்ணைக் கூட சிமிட்டாமல் பார்த்த படம் இதுவாகத்தான் இருக்கும். இதிலும் முதல் ஹீரோ யாரென்றால் அதன் ஸ்கிரிப்ட்தான். அதற்கு தங்கள் நடிப்பின் மூலம் உயிர் கொடுத்திருப்பது, ரகுமான், பிருத்திவிராஜ், ஜெயசூர்யா கூட்டணி. படம் பார்த்து முடித்த பிறகும் இரவு ரெண்டரை மணி வரை நாங்கள் இப்படம் குறித்து வியப்போடு டிஸ்கஸ் செய்து கொண்டிருந்தோம். அப்படி ஒரு தெளிவான திரைக்கதை, காட்சி அமைப்புகள்.
மலையாளத்தில் இன்வெஸ்டிகேஷன் படங்கள் அருமையாக இருப்பதன் காரணம், தேவையற்ற மசாலா காட்சிகள் இருக்காது. கதைதான் பிரதானமாக இருக்கும். படம் முழுக்க ஒரு சீரியஸ்நெஸ் இருக்கும். தமிழில் காமெடி ட்ராக் ஒன்று தனியே சேர்க்கப்படும். தேவையோ தேவையில்லையோ, நிச்சயம் ஒரு க்ளப் டான்ஸ் இருக்கும்.
திருஷ்யத்தில் யார் கொலை செய்தது எதனால் கொன்றார்கள் என்பது எவ்வித மர்மமுமின்றி ஆடியன்சுக்கு காட்டப்பட்டிருக்கும். அதன் பிறகு நடந்தவைகள்தான் அந்தப் படத்தை சிகரத்தில் தூக்கி நிறுத்தின. இந்தப் படத்திலும் கொலை நிகழ்கிறது. குற்றவாளியைக் கண்டு பிடித்து விட்ட போலீஸ் அதிகாரிக்கு எதிர்பாராதவிதமாக விபத்து நேரிட்டு அதன் பாதிப்பாக அனைத்தும் மறந்து போகும் நிலையும் ஏற்பட, கொன்றது யார்? எப்படி ? எதனால்? இக்கேள்விகளுக்கான புதிரை விடுவித்திருக்கும் விதம்தான் இந்தப் படத்தையும் தூக்கி நிறுத்துகிறது.
கதாநாயகி கிடையாது. வில்லன் கிடையாது. பாடல்கள் கிடையாது. ஓங்கி அடிச்சா ஒண்ற டன் வெயிட்டு! பாக்கறயா பாக்கறயான்னு ஹீரோயிஸ கூச்சல் கிடையாது. ஆயினும் அந்தப் புதிர் மெல்ல மெல்ல விடுவிக்கப்படும் போது, கொலைக்கான காரணமும் , கொலையாளி யாரென்பதும் அறியும் போது எனக்குள் ஏற்பட்ட திகைப்பு இன்னும் மாறவில்லை. இப்படிக் கூட ஒரு க்ரைம் த்ரில்லரை புதுவிதமாய் திரையில் சொல்ல முடியுமா? என்ற பிரம்மிப்பேற்பட்டது. இயக்குனர் ரோஷன் ஆண்ட்ருவின் நுணுக்கமான திரைக்கதை அமைப்பும், காட்சிகளும் சபாஷ் போட வைக்கிறது.
பிரித்திவிராஜ் மீது இந்தப் படத்திற்குப் பிறகு மரியாதை பலமடங்கு கூடி விட்டது. நுணுக்கமான முகபாவங்கள். நடிப்பு என்பது எவ்வித வரம்புக்குள்ளும் கட்டுப்படாது ஒரு கதா பாத்திரத்தை வெளிப்படுத்துவதேயன்றி தன்னை அசகாயசூரனாகக் காட்டிக் கொள்ளும் ஹீரோவாக மட்டும் இருப்பதல்ல. தமிழில் எந்த ஹீரோவும் இதற்குத் துணிய மாட்டார்கள்.
இந்தப் படத்தில் என்னை மிக மிக கவர்ந்தவர் ரகுமான். மனிதர் தன் கம்பீர நடிப்பால் அசத்தி விட்டார். அவரது கெரியரில் இது அவரது மிகச்சிறந்த படமாக இருக்கும். ஜெயசூர்யா கொஞ்சமே வந்தாலும் தன் இயல்பான sense of humour ஐ வெளிப்படுத்தி கலகலப்பைப் பரவ விடுகிறார். மொத்தத்தில் Brilliant movie.
ஒரு வித்தியாசமான இன்வெஸ்டிகேஷன் படம் பார்க்க வேண்டும் என நினைப்பவர்கள் தேடிப் பிடித்துப் பாருங்கள்.
No comments:
Post a Comment