Search This Blog

Wednesday, June 3, 2015

சினிமாக்காரர்களை தூக்கி கொண்டாடாதீர்கள்: நடிகை ரோகினி சுளீர்

படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

திருவாரூர்: சினிமாவை பார்ப்பதோடு விட்டு விடுங்கள். அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அவர்களை அரியணை மேல் தூக்கி வைத்து கொண்டாடாதீர்கள் என்று இளைஞர்களுக்கு நடிகை ரோகினி சுளீர் என அறிவுரை வழங்கினார்.
திருவாரூர் மாவட்டம், திருத்துறைப்பூண்டியில் உள்ள ஆதிரெங்கத்தில் நடந்த தேசிய அளவிலான நெல் திருவிழாவில் கலந்து கொண்ட நடிகை ரோகினி, பூச்சிகளும் நண்பர்களே எனும் நூலை வெளியிட்டு பேசுகையில், "இளைஞர்கள் சினிமா மாயைக்குள் மூழ்கி இருக்கின்றனர் என்பது கண்கூடாக பார்க்கக் கூடியதாக இருக்கிறது. சினிமாவில் பத்து பேரை சூர்யா அடிப்பதை ஏற்றுக் கொள்கிற இளைஞர்கள், அவர் நிஜ வாழ்கையில் அகரம் பவுண்டேசன் வைத்து அவர் செய்கிற செயல்களை ஏன் சீரியசாக எடுத்துக் கொள்ள மாட்டேன்குறாங்க?
சினிமா என்பது ஒரு பொழுதுபோக்குதான். காலையில் இருந்து மாலை வரை உழைத்து வரும் அவர்களை மகிழ்விப்பதற்கு தான் சினிமா. இதை பொழுதுபோக்காக மட்டும் பாருங்கள். நாலு பாட்டு பார்த்தோமா, நாலு சண்டை பார்த்தோமா சந்தோசமா இருந்தது. அதோடு விட்டு விடுங்கள். அதை சீரியசாக எடுத்துக் கொண்டு அவர்களுக்கு எல்லாம் தெரியும் என்று அரியணை மேல் தூக்கி வைத்து கொண்டாடுவது என்பதை செய்யாதீர்கள்.
காமிரா முன்னாடி பன்ச் வசனங்கள் பேசுவது எல்லாம் பெரிய பெரிய அறிஞர்கள் சொன்ன தத்துவங்களை பைஹார்ட் செய்து தான் உங்களிடம் தருகிறோம். அது எங்களுடையது கிடையாது. சினிமாவில் நாங்கள் அணிகிற புடவை, ஆடைகள் எல்லாமே எங்களுக்கு சொந்தம் கிடையாது. சூட்டிங் முடிந்தவுடன் அதை திருப்பித் தர வேண்டும். இவை எப்படி எங்களுக்குச் சொந்தம் கிடையாதோ? அதை போலவே தான் உங்களுக்குள் ஏற்படுத்துகிற உத்வேகமும், வசனங்களின் உள்நோக்கமும் எங்களுடையது கிடையாது. அவை உங்களுடைய கஷ்டங்களையும், உழைப்பையும் நன்றாக புரிந்தவர்கள் எழுதி இருக்கும் வசனங்கள்.
வீரபாண்டிய கட்டபொம்மனை நாம் பார்த்ததில்லை. ஆனால், சிவாஜி வீரபாண்டிய கட்டபொம்மனாக நடித்திருப்பார். சிவாஜி, வீரபாண்டிய கட்டபொம்மன் கிடையாது. அது அவருடைய நடிப்பு. இதை இளைஞர்களுக்கும் குழந்தைகளுக்கும் சொல்லுங்க, சினிமாவை எங்கே வைக்க வேண்டுமோ அங்க வைங்க?.
எழுதி இருக்கும் கருத்துகள், வசனங்கள் எல்லாம், வாழ்வின் வலியிலிருந்து உணர்விலிருந்து கொண்டு வந்தவை தான். அவை எல்லாவற்றையும் நடிக்கிறோமே தவிர, அதை நம்பி இவர்களை மேல கொண்டு போய் வச்சிராதீங்க. இதை எல்லாம் மீறி நாங்களும் மனுஷன் தான் என்று சினிமா துறையைச் சார்ந்தவர்கள் நினைக்கின்ற போது தான், பொது வாழ்வில் அடி எடுத்து வைக்கிறார்கள்.
நாங்கள் ஒலிப் பெருக்கியைப் போன்றவர்கள் தான், சாதாரண மக்கள் பேசுகிற போது கிடைக்கும் குவியத்தை (focus) விட, நாங்கள் ஒரு கருத்தை சொல்லும் போது கிடைக்கும் focus அதிகம் அவ்வளவு தான். இவை தாண்டி, இது போன்ற விழாக்களில் தான் கடவுளைக் காண முடிகிறது. இது தான் கடவுள், இது தான் கடவுள் வழிபாடு. இதைச் செய்யும் போது தான் இயற்கையின் சக்தி வெளிப்படுகிறது” என்றார்.
-த.க.தமிழ் பாரதன்
படங்கள்: க.சதீஷ்குமார் (மாணவ பத்திரிகையாளர்கள்)
.
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

No comments:

Post a Comment