“கடவுள் என்பவர் யார்?” எனக் கேள்வி கேட்ட முதல் பகுத்தறிவாளர் சாக்ரடீஸின் சிறப்பு பகிர்வு...
சாக்ரடீஸ்-பள்ளி போய் படிக்காத, குளிக்க ஆர்வமே இல்லாத, அழுக்காடை அணிந்த வெண்மையான சிந்தனைக்காரர் அவர் .இளைஞர்களை சிந்திக்க சொல்லித்தூண்டினார் . மதம், கடவுள், அரசு, நம்பிக்கைகள் எல்லாவற்றையும் மனித சிந்தனையின் ஆய்வுக்குரியவை என்றார் .எல்லாவற்றின் புனிதத்தையும் கேள்வி கேட்க சொன்னார் .
ஒருவருடன் பேசும் பொழுது வாதத்தை கேள்விகள் மூலம் எழுப்பி உண்மையை உணரும் முறையை உருவாக்கினார் ;இளைஞர்கள் அவர் இருக்கும் இடம் தேடி கூட்டம் கூட்டமாக போனார்கள் .உன்னையே நீ அறிவாய் என பகுத்தறிவை வலியுறுத்தினார் .டெல்பி ஆலய அசரீரி நாட்டிலேயே அறிவாளி யார் என்கிற கேள்விக்கு சாக்ரடீஸ் என பதில் சொன்னதும்,அதற்கு இவர் ,"எனக்கு எதுவுமே தெரியாது என்று எனக்கு தெளிவாக தெரியும் அதுவே காரணமாக இருக்கலாம் "என்றார் .
தெருவின் ஊடாக பல கடைகள் வழியாக போனார் ;எதிலும் எதையும் வாங்கவில்லை ."ஏன் "எனக்கேட்டதற்கு ,"எத்தனை பொருட்கள் இல்லாமல் நிறைவான வாழ்வு வாழமுடிகிறது என சோதித்து பார்த்தேன் ."என்றார் .அவரின் பேச்சுக்களை பிளாட்டோ முதலிய சீடர்கள் தொகுத்தார்கள் .
அரசாங்க விருந்தில் ஒரு பிரமுகருக்காக சாக்ரடீஸ் வெகுநேரம் காத்திருந்தார் .அவர் வருகிற மாதிரி தெரியவில்லை ;கிளம்ப எத்தனித்தார் அவர் .,நண்பரோ ,"அவர் கோவித்துக்கொள்வார் .அரசாங்க பகை வேண்டாம் ."என்றதும் ,"அரசாங்கம் என்னை கைது செய்ய முடிவு செய்துவிட்டால் தானே காரணங்களை கண்டுபிடித்து கொள்ளும் ."என்றுவிட்டு வெளியேறினார் .மதநம்பிக்கையை கேலி செய்கிறார் ,இளைஞர்களை தவறான பாதைக்கு தூண்டுகிறார் என இவர் மீது அனிடஸ் என்ற அரசியல்வாதியும், மெலிட்டஸ் என்ற கலைஞனும்,லைகோன் எனும் மேடைப் பேச்சாளனும் வழக்கு தொடுத்தனர் .
வழக்கின் பொழுது மக்களை சிந்திக்க தூண்டியது தவறு என நான் ஏற்றுக்கொள்ள மாட்டேன் ;கடவுளை அப்படியே ஏற்றுக்கொள்வது தான் நாத்திகம் ;ஆராய்ச்சிக்கு உட்படுத்தி பார்ப்பது அன்று என வாதிட்ட சாக்ரடீஸ் மன்னிப்பு கேட்டால் விடுதலை தருவதாக சொன்னார்கள் .கம்பீரமாக மறுத்தார். .மரண தண்டனைக்கு ஆதரவாக 281 ஓட்டும்,எதிராக 220 ஓட்டும் விழுந்தன .சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார். தப்பித்து போக நண்பர்கள் ஏற்பாடு செய்ய முற்பட்ட பொழுது ,"எனக்கும் அரசாங்கத்துக்கும் ஒரு சமூக ஒப்பந்தம் உண்டு. அந்த அமைப்புக்குள் இருந்து கொண்டு தான் நான் கேள்வி கேட்பேன். அதை மீறி சென்று நான் தவறான எடுத்துக்காட்டு ஆகமாட்டேன் !" என்றார் அவர்.
.ஹெம்லாக் மரத்து விஷம் குடித்து சாக வேண்டும் என்று தீர்ப்பு சொல்லப்பட்டு இருந்தது. .சிறையில் இசைக்கருவி வல்லுநர் ஒருவரிடம் இசை கற்றுக்கொண்டார் அவர் .சாகிற பொழுத எதற்கு இது ?என கேட்டதற்கு ,"சாவதற்கு முன் புதிதாக எதையாவது கற்க வேண்டும் !"என்றார் .
விஷம் கொடுக்கப்பட்டதும் ,வாங்கி சிரித்துக்கொண்டே அதை பதிவாக எழுத சொன்னார் ."அருந்திவிட்டேன் ;கால்கள் மரத்து போகிறது .இதயம் படபடக்கிறது .மயக்கமாக இருக்கிறது ;போர்வையை போர்த்தி படுத்துக்கொள்கிறேன் "என தன் மரணத்தை பதிவு செய்த முதல் ஆள் சாக்ரடீஸ் தான் .சாவதற்கு கொஞ்சம் முன்," எதிர்வீட்டுகாரனுக்கு கோழிக்குஞ்சு கடன் ,மறக்காமல் கொடுத்து விடு !"என மனைவியிடம் சொல்லி சாகும் பொழுது கூட கடன்காரனாக சாக விரும்பாமல் கம்பீரமாக இறந்த அவருக்கு கடன்பட்டிருக்கிறது இச்சமூகம்
- பூ.கொ.சரவணன்..
No comments:
Post a Comment